சுப்பிரமணிய சுவாமி கோவில்
போர் வீரன் கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்
மதுரையில் இருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உசிலம்பட்டிக்கு அருகில் (சுமார் 2 கி.மீ.) அமைந்திருக்கிறது புத்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். இப்பகுதியில் பாம்பு புற்றுகள் நிறைந்திருந்ததால் 'புத்தூர்' என்ற பெயர் ஏற்பட்டது.
பல நூற்றாண்டுகளுக்கு முன், நாகாசுரன் என்ற கொள்ளையன் இப்பகுதி மக்களைத் துன்புறுத்தி வந்தான். இப்பகுதியை ஆண்ட மன்னரால், அவனை அழிக்க முடியவில்லை. முருக பக்தரான அம்மன்னர், அவனை அழிக்கும்படி முருகனிடம் முறையிட்டார். ஒருமுறை நாகாசுரன் மக்களின் உடைமைகளைச் சூறையாடினான். அப்போது, முருகப்பெருமான் ஒரு இளைஞனின் வடிவில் காலணி மற்றும் வீரதண்டை அணிந்து, வாள் மற்றும் கத்தியுடன் அங்கு போர் வீரன் கோலத்தில் வந்து அவனைத் தடுத்தார். கோபமடைந்த நாகாசுரன், அவரைத் தாக்க முயன்றான். முருகன் அவனை வீழ்த்தினார். மக்கள் தங்களைக் காத்த இளைஞனை மன்னரிடத்தில் கூட்டிச் சென்ற போது, அவர் மறைந்து விட்டார். தான் வணங்கிய முருகப்பெருமானே இளைஞனாக வந்து, நாகாசுரனை அழித்தார் என்பதை உணர்ந்த மன்னர், இவ்விடத்தில் அவருக்கு கோயில் கட்டினார்.
கோவில் கருவறையில்m மூலவர் சுப்பிரமணியர் போர் வீரன் கோலத்தில், இடுப்பில் கத்தி, பாதத்தில் காலணி, காலில் போர் வீரர்கள் அணியும் தண்டை அணிந்து காட்சி தருகிறார். இத்தகைய முருகனின் கோலம் வேறு எந்த தலத்திலும் காணக் கிடைக்காத ஒன்றாகும். முதலில் சுப்பிரமணியர் உக்கிரமாக இருந்தார். திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இவரது உக்கிரத்தைக் குறைப்பதற்காக இவருடன் வள்ளி, தெய்வானையைப் பிரதிஷ்டை செய்தனர். அப்போது முருகனின் கையில் இருந்த வில்லுக்கு பதிலாக வேலைப் பிரதிஷ்டை செய்தனர்.
பயந்த சுபாவம், மனக்குழப்பம் உள்ளவர்கள், அக்குறை நீங்க இத்தல முருகனைப் பிரார்த்திக்கிறார்கள்.