
நத்தம் வாலீஸ்வரர் கோவில்
தலை சடை விரித்த கோலத்தில் இருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.
இக்கோவிலில் இறைவன் கருவறையின் சுற்று சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, தன் தலை சடையை விரித்த கோலத்தில் காட்சி அளிப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். இதற்கு பின்னணியில் உள்ள சம்பவம் என்னவென்றால், தேவர்கள் சிவபெருமானிடம் தாட்சாயணியின் மறைவுக்குப் பின் தங்களுக்கு சக்தி இல்லையே என்று வினவியபோது, சிவபெருமான் என்னிடம் கங்கா சக்தி உள்ளது என்று சடா முடியிலிருந்து கங்கையை விடுவித்து, கங்கையின் பிரவாக சக்தியைக் தேவர்களுக்கு காட்டினார். அந்தக் கோலத்தில் தான் நாம் அவரை இக்கோவிலில் தரிசிக்கிறோம்.

நந்திவனம் நந்திநாதப் பெருமாள் கோவில்
நந்தி தேவர் வழிபட்ட பெருமாள் கோவில்
கும்பகோணத்தில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில், மருதாநல்லூர் அருகில் அமைந்துள்ளது நந்திவனம் நந்திநாதப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் செண்பகவல்லி. இக்கோவில் 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் மூலவர் நந்திநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நந்தி தேவர் வழிபட்ட தலம் இது. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவக் கவிஞர் காளமேகப் புலவர் இக்கோவிலில் வழிபட்டார்.
சிவபெருமானை சாந்தப்படுத்துவதற்குத் தீர்வு காணும் பொருட்டு விஷ்ணுவை வழிபட நந்தி தேவர் இங்கு வந்தார். நந்தி தேவர் விஷ்ணுவிடம் இங்கேயே தங்கி தனது (நந்தியின்) பெயரை விஷ்ணுவின் சொந்த பெயரின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளுமாறு வேண்டினார். எனவே இத்தலத்து பெருமாள் நந்தி நாத பெருமாள் என்று பெயர் பெற்றார். இந்த இடத்திற்கு நந்திவனம் என்ற பெயரும் ஏற்பட்டது.
நந்தியாவட்டை பூ முதலில் தோன்றிய தலம்
இங்குள்ள நந்திநாதப் பெருமாளுக்கு, நந்தி தேவர் விண்ணுலகின் நந்திமணி மலரால் பூஜை செய்தார். இந்தப் பூ பூமியில் நிலைத்திருந்து, இன்று தமிழில் 'நந்தியாவட்டை' (பின்வீல் பூ) என்று அழைக்கப்படுகிறது.

திருமயிலாடி சுந்தரேசுவரர் கோவில்
முருகனின் பாதத்தின் கீழ் மயில் இருக்கும் அரிய காட்சி
சிதம்பரம் - சீர்காழி சாலையில் அமைந்துள்ள புத்தூர் எனும் சிற்றூரில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள தலம் திருமயிலாடி சுந்தரேசுவரர் கோவில். மயிலாடி புண்ணிய இத்தலம், சீர்காழியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இத்தலத்தில் பார்வதி தேவி சிவபெருமானுக்கு அழகிய மயில் வடிவில் காட்சி தந்தபோது, சிவபெருமானும் அழகிய கோலத்தில் காட்சி கொடுத்ததால் இந்தத் தலத்துக்கு திருமயிலாடி என்ற பெயரும், சிவபெருமானுக்கு சுந்தரேசுவரர் என்ற திருநாமமும் ஏற்பட்டது.
திருமயிலாடி தலத்தில் சிறப்பாக பார்க்கப்படுவது, இவ்வாலய முருகப்பெருமானாகும். இவருடைய திருநாமம் பாலசுப்ரமணிய சுவாமி. பெரும்பாலான கோவில்களில் முருகப்பெருமான் மேற்கு பிரகாரத்தில் கருவறைக்கு பின்னாலிருந்து கீழ்திசை நோக்கி காட்சியளிப்பார். ஆனால் இவ்வாலய முருகன் வடதிசை நோக்கி தவக்கோலத்தில் மகாமண்டபத்திலேயே தரிசனம் தருகிறார். இவர் பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவர்- அசுரர் யுத்தம் முடிந்த பின்னர், சூரனின் வேண்டுகோளுக்கிணங்க, அவனை தனது மயில் வாகனமாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான். பின் மயில்மீது அமர்ந்து திருமயிலாடி தலத்துக்கு எழுந்தருளினார். ஆணவமலத்தின் வடிவமாகிய சூரன் மயிலாக நின்று அவரைத் தாங்குகின்றான். ஆணவ மலத்தை அழிக்க முடியாது, அடக்கத்தான் முடியும், அடங்கியிருந்தாலும் ஆணவம் அவ்வப்போது தன் முனைப்பை காட்டிக் கொண்டிருக்கும் என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவது போல முருகப்பெருமானின் உற்சவதிருமேனி இத்தலத்தில் அமைந்துள்ளது. சூரபத்மனாகிய ஆணவமயில் முருகன்பாதத்தில் பாதரட்சையாக தன் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறது. இடதுகால் பெருவிரலுக்கும் அடுத்தவிரலுக்கும் இடையே தலையை தூக்கி முருகப்பெருமானின் முகத்தை எழுச்சியுடன் பார்த்தவண்ணம் தோற்றமளிக்கிறது. மற்றொரு பாதத்தில் பாதரட்சை காணப்படுகின்றது. இத்தனை எழிலார்ந்த தத்துவ பேருண்மை பொதிந்த உற்சவ மூர்த்தியை திருமயிலாடியில் மட்டுமே நாம் தரிசிக்க முடியும். பாலசுப்பிரமணியர், மயிலை தன்னடியில் வைத்திருப்பதால் மயிலடி என்ற பெயரும் இத்தலத்துக்கு உண்டு.
இழுப்பு நோய் எனும் FITS நோயை குணப்படுத்தும் முருகப்பெருமான்
சில குழந்தைகளுக்கு அடிக்கடி ஜுரம் வருவதுண்டு. ஜுரம் அதிகரிக்கும் பொழுது அது இழுப்பு நோய் எனும் FITS நோயாக மாறி குழந்தைகள் அதிகமான துன்பத்தை அனுபவிக்கின்றனர். இவர்களின் துயரைத் துடைக்க பாலசுப்ரமணிய சுவாமி அருள் புரிகிறார்.
இங்கு பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் தங்களுடைய கைகளால் அரைத்த சந்தனத்தைக் கொண்டு முருகப்பெருமானை சந்தனக் காப்பு சார்த்தி வழிபட்டு, ஏழைகளுக்கு இளநீரும், தேங்காய் சாதமும் தானமாக அளித்து வர, இழுப்பு நோய் அண்டாமல் நிவர்த்தி பெறலாம். குழந்தை நல மருத்துவர்கள் (Pediatrician) அடிக்கடி இந்த முருகப்பெருமானை வணங்கி, வழிபட்டு வர குழந்தைகளின் பிணிகளை நீக்கும் மருத்துவ குணநல சக்திகள் கிடைக்கப் பெறுவார்கள்.

இரும்பை மாகாளேசுவரர் கோவில்
மூன்று பாகங்களாக பிளந்து, மூன்று முகங்களுடன் இருக்கும் அபூர்வ சிவலிங்கம்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம், இரும்பை மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மதுரசுந்தர நாயகி. இத்தலம் திண்டிவனத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது
முற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார் அவர் கிழக்கே வந்தபோது இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சுவாமியும் 'மகாகாளநாதர்' என்ற பெயர் பெற்றார்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் சிவலிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து மூன்று முகங்களுடன் இருக்கிறது இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர் இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூரத்திகளை குறிப்பிடுகின்றன. சிவபெருமானின் இந்த மும்மூர்த்தி தரிசனம் மிகவும் அபூர்வமானது.

குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்
சங்கீத வித்வான்கள் அவசியம் காண வேண்டிய கோவில்
எங்கும் காண முடியாத இசைக் கல்வெட்டு
புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து, 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்.
குடைவரைக் கோவில் அமைப்பைச் சேர்ந்த இக்கோவிலில், எங்கும் காண முடியாத இசையின் வடிவத்தை விளக்கும் வண்ணம் அமைந்த இசைக் கல்வெட்டு ஒரு தனி சிறப்பாகும். ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இது கருதப்படுகிறது. இங்குள்ள பாறைச் சரிவு ஒன்றில், 13 அடி x 14 அடி இடப்பகுதியில், இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு தேவநாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் இறுதியில் சில தமிழ்ச் சொற்களும் உள்ளன.
சங்கீதக் கலை வித்தகர்கள் நிச்சயம் காணவேண்டிய, இசைத் தகவல்களைக் கொண்ட கல்வெட்டு இது. இங்குள்ள பாறைச் சரிவு ஒன்றில், 13 அடி x 14 அடி இடப்பகுதியில், இக்கல்வெட்டு அமைந்துள்ளது. தேவநாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டின் இறுதியில் சில தமிழ்ச் சொற்களும் உள்ளன.
இந்தக் கல்வெட்டு 38 கிடையாக அமைந்த இசைக் குறியீடுகளைக் கொண்ட வரிகளைக் கொண்டது. இடமிருந்து வலமாக வாசிக்கப்படக்கூடிய ஒவ்வொரு வரியிலும் 64 எழுத்துக்கள் உள்ளன. இந்த எழுத்துக்கள் 16 குழுக்களாக அமையும் வகையில் ஒவ்வொரு நான்கு எழுத்துக்களுக்கும் அடுத்து ஒரு சிறு இடைவெளி விடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு வரிகள் கிடைக் கோடுகளால் 7 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு முதல் ஏழு வரையான வரிகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டில் ஏழு இராகங்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. ருத்ராச்சாரியார் என்பவரின் சீடரான பரம மகேஸ்வரன் என்ற மன்னன் இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ராகங்களைப் பாடியுள்ளதாக வரலாறு கூறுகிறது.இசைக் குறியீடுகளுக்கு 34 வெவ்வேறு எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில்
சனி, செவ்வாய் தோஷங்களுக்கான பரிகார தலம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருந்து, 25 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
ஒருமுறை, சனி பகவானும் செவ்வாய் பகவானும், சூரிய சந்திரர்களால் சபிக்கப்பெற்று, அதன் காரணமாக எலும்புருக்கி நோய்க்கு செவ்வாய் பகவானும், பெருநோய்க்கு சனி பகவானும் ஆளாகினர். செவ்வாய், சனி இருவரும் பிரம்மாவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட நிலைக்கு விமோசனம் கிடைக்க வழி கூறும்படி கேட்டனர். பிரம்மாவின் அறிவுரைப்படி, இருவரும் பூலோகம் வந்து பல சிவத்தலங்களில் சிவபெருமானை வழிபட்டனர். இறுதியாக இத்தலம் வந்து கடும் தவம் புரிந்து இறைவனை வழிபட்டு தங்கள் தோஷமும், சாபமும் நீங்கப் பெற்றனர்.
சனி பகவானும் செவ்வாய் பகவானும் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில் சிவ பூஜை செய்து வழிபட்டதால், சனி தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தலத்து தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபட்டால், அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். இத்தல விருட்சமான ஆலமரம் மக நட்சத்திரத்துக்கு உரிய மரமாகும். ஆகவே, மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில்
சூரசம்ஹாரம் நடைபெறாத முருகன் தலம்
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு திருத்தணி ஆகும். முருகப் பெருமான் சூரனை வதம் செய்தப் பின்னர் சினம் தணிந்து இத் தலத்தில் வந்து அமர்ந்ததால் 'திருத்தணிகை' என்று அழைக்கப்பட்டு, பிறகு மருவி 'திருத்தணி' ஆனது.
முருகப்பெருமான் திருச்செந்தூரில், அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில் முருகத்தலங்களில், கந்தசஷ்டியின்போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும்.
ஆனால் திருத்தணி,முருகன், சினம் தணிந்து ஓய்வெடுத்த தலம் என்பதால் இங்கு சூரசம்ஹார பெருவிழா நடைபெறுவதில்லை. மேலும் முருகப் பெருமானின் திருக்கரத்தில் வேல் இல்லாமல் வஜ்ராயுதம் தாங்கியிருக்கிற திருக்கோலத்தை காணமுடியும். திருத்தணி கோவிலில் சூரசம்ஹாரத்தன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது.
திருச்செந்தூரின் இலை விபூதி போன்று திருத்தணியிலும் சிறப்பு பிரசாதம் ஒன்று உண்டு. இரண்டாம் பிராகாரத்தில் யாக சாலைக்கு எதிரில் உள்ள சந்தனக் கல்லில் அரைக்கப்படும் சந்தனமே சுவாமிக்கு சார்த்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சர்வரோக நிவாரணியான இந்த பிரசாதத்தை 'ஸ்ரீபாதரேணு' என்கிறார்கள்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
கடத்தப்பட்ட தன் விக்ரகத்தை கடலில் கண்டெடுக்க உதவிய கந்தப் பெருமான்
திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையும் சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடையும் அணிவிக்கப்படுகிறது.சுமார் 370 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியை, வடமலையப்பப் பிள்ளை என்பவர் திருமலை நாயக்கரின் பிரதிநிதியாக இருந்து நிர்வகித்து வந்தார். 1648 ஆம் ஆண்டு நம் நாட்டிற்கு வந்த டச்சுக்காரர்கள், நம் கோவில்களில் உள்ள ஐம்பொன் விக்கிரங்களை கடத்திச் சென்றால் அதிக பொருள் ஈட்டலாம் என்று திட்டமிட்டனர். அவர்கள் திருநள்ளாறு தலத்திற்குச் சென்று அங்குள்ள நடராஜர் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு கப்பல் மூலம் கடல் வழியாகத் திருச்செந்தூர் வந்தனர். திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சண்முகர் விக்கிரகத்தை கடத்திக்கொண்டு தங்கள் நாட்டுக்குக் கப்பல் மூலம் செல்ல ஆரம்பித்தனர். அந்த நேரம், கடல் கொந்தளித்து, கப்பல் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. கப்பலில் இருந்த டச்சுக்காரர்கள் 'நாம் இந்த சிலைகளைத் திருடிக் கொண்டு வந்ததால்தான் கடல் கொந்தளிக்கிறது. எனவே சிலைகளைக் கடலில் போட்டு விடுவோம்' என்ற முடிவுக்கு வந்தனர். சிலைகளைக் கடலில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.வடமலையப்ப பிள்ளை, சண்முகர் விக்கிரகம் களவு போன செய்தியை அறிந்து மனம் வருந்தினார். திருச்செந்தூரில் முருகன் சிலை இல்லை என்பதால் மனம் கலங்கி சாப்பிடாமல் பல நாட்கள் இருந்தார். மேலும் புதிதாக முருகன் விக்கிரகம் ஒன்றை செய்து அதனைத் திருச்செந்தூர் கோவிலில் வைக்கவும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அப்போது வடமலையப்ப பிள்ளையின் கனவில் முருகப் பெருமான் தோன்றினார். 'வடமலையப்பரே! என்னைக் காணவில்லை என நீர் வருத்தப்பட வேண்டாம். நான் திருச்செந்தூர் கோவிலுக்குச் சற்று தொலைவில் கடலுக்குள்தான் உள்ளேன். நீர் படகின்மூலம் கடலில் பயணம் செய்தால் கடலில் ஓர் எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அந்த இடத்தில் கடலுக்கடியில் நான் இருக்கிறேன். எலுமிச்சம்பழம் மிதக்கும் இடத்திற்குமேல் ஒரு கருடன் வட்டமிடும். அந்தக் கருடன் பறக்கும் இடத்தை வைத்தே நீர் என்னைக் கண்டுகொள்ளலாம்” - எனக் கூறினார்.வடமலையப்ப பிள்ளை தன்னுடன் ஆட்களை அழைத்துக்கொண்டு, ஒரு சிறிய படகில் கடலுக்குள் சென்றார். முருகப் பெருமான் கூறியபடி கருடன் வானத்தில் வட்டமடித்தது. அந்தக் கருடன் பறக்கும் இடத்திற்குக் கீழே கடலில் ஒரு எலுமிச்சம்பழம் மிதந்தது. அந்த இடத்தில் கடலுக்குள் குதித்து சண்முகர் விக்கிரகத்தை தேடினார்கள். முதலில் திருநள்ளாறு நடராஜர் விக்கிரகமும், பின்னர் சண்முகர் விக்கிரகமும் கிடைத்தது. பின்னர் 1653ஆம் ஆண்டு தை 29ஆம் தேதி சண்முகர் விக்கிரகத்தை கோவிலில் பிரதிஷ்டை செய்தார்கள். கடலில் சிலகாலம் இந்த விக்கிரகம் இருந்ததால், கடல் நீர் அரித்த நிலையை இன்றும் சண்முகரின் முகத்தில் காணலாம். எம் ரென்னல் எனும் பிரெஞ்ச் எழுத்தாளர் தன்னுடைய நூலில், சண்முக விக்கிரக கொள்ளையில் சம்மந்தப்பட்ட டச்சுக்காரர் ஒருவரே தன்னிடம் இந்த தகவலை கூறியதாக பதிவு செய்துள்ளார்

சிக்கல் நவநீதேசுவரர் கோவில்
முருகப்பெருமான் முகத்தில் வேர்வை துளிர்க்கும் அதிசயம்
ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவில், ஐந்தாம் நாளன்று முருகப்பெருமான் தன் அன்னையிடம் வேல் வாங்கும் திருவிழாவும், அவர் ஆறாம் நாளன்று சூரசம்ஹாரம் செய்வதும் மிகவும் பிரசித்தமானது. நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கலில், முருகப்பெருமான் அத்தலத்து இறைவியான, வேல் நெடுங்கண்ணி அம்மனிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்தார். இதனைத்தான் சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்று கூறுவார்கள்.சிக்கல் தலத்து முருகப் பெருமானின் திருநாமம் சிங்கார வேலர். இவரது உற்சவத் திருமேனி ஐம்பொன்னால் ஆனது. சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் வேல் நெடுங்கண்ணி அம்மனிடம் ஆசி பெறச் சென்றபோது, அம்மன், தன் தவ வலிமையால் சக்தி வேல் ஒன்றை உருவாக்கி முருகனுக்கு அளித்தார். இந்த சக்திவேல், மிகுந்த வீரியம் மிக்கது.அதனால் சிங்காரவேலன் வேல் வாங்கும் நேரம் அவரது முகத்தில் வேர்வை துளிகள் அரும்பி ஆறாய் வழிந்து ஓடும். இப்படி பொங்கிப் பெருகும் வேர்வை துளிகளை, கோவில் அர்ச்சகர்கள் ஒரு பட்டுத் துணியால் தொடர்ந்து துடைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த வேர்வைப் பெருக்கானது, சிங்காரவேலன் தன் சன்னதிக்கு திரும்பும் வரை இருந்து கொண்டே இருக்கும். இப்படி ஐம்பொன்னாலான உற்சவர் திருமேனியிலிருந்து வேர்வைப் பெருகுவது ஒரு அதிசய நிகழ்வாகும்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆதி சங்கரரின் காச நோயை குணப்படுத்திய திருச்செந்தூர் முருகன்
ஒரு சமயம், ஆதிசங்கரர் வடநாட்டு திக்விஜயத்தை மேற்கொண்டபோது அபிநவகுப்தர் என்பவர் ஆதி சங்கரருடன் வாதம் செய்து தோல்வியுற்றார்.வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர், அபிசார வேள்வி செய்து, ஆதிசங்கரருக்குக் காச நோயை உண்டாக்கினான். ஆதிசங்கரர் தீராத காச நோயால் அல்லல்பட்டார். ஆதிசங்கரர் திருக்கோகரணத்தில் சிவபெருமானை வழிபடும்போது, 'என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான ஜெயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்' என சிவபெருமான் உணர்த்தினார். பிறகு, ஆதிசங்கரர் சிவபெருமானின் கட்டளைப்படி, ஆகாய மார்க்கமாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார். திருச்செந்தூரில் ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியப்படைந்தார். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில், 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றி, முருகன் அருளால் காச நோய் நீங்கப் பெற்றார். அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி நெக்குருகி பாடியுள்ளார். 'சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும்' என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் இலை விபூதியின் பெருமையை சொல்லி இருக்கிறார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
இஸ்லாமிய பக்தரின் கடனை அடைத்த செந்திலாண்டவன்
திருச்செந்தூர் அருகே இருக்கும், 'காலன் குடியிருப்பு' என்னும் ஊரில் மீராக் கண்ணு என்ற இஸ்லாமிய புலவர் வாழ்ந்து வந்தார். திருச்செந்தூர் முருகன் மீது பக்தி கொண்டவர். இவரை வறுமை மிகவும் வாட்டியது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமம் ஏற்பட்டதால், மதுரையில் இருந்த வணிகர் ஒருவரிடம், வட்டிக்கு கடன் பெற்று இருந்தார்.
மீராக் கண்ணு நீண்ட நாட்களாகியும் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராததால் வணிகர் பலமுறை வலியுறுத்தினார். ஆனால், மீராக் கண்ணுவால் பணத்தைத் திரும்பத் தர முடியவில்லை. இதனால், கோபமடைந்த வணிகர், சேவகர்னை அனுப்பி மீராக்கண்ணுவைச் சிறைப் பிடித்து வரச்சொன்னார். சேவகன் மாலையில் வந்து சேதியைச் சொன்னதும் மீராக்கண்ணு உறக்கமில்லாமல், இரவு முழுவதும் திருச்செந்தூர் முருகனை மனதில் எண்ணி, பதிகம் பாடி உருகினார். இரவு முழுவதும் தூங்காத களைப்பில் விடியற்காலையில் உறங்கிப்போனார். அப்போது முருகப்பெருமான் அவரது கனவில் தோன்றி, 'நாளை உமது கடனை வட்டியும் முதலுமாக யாமே அடைப்போம்' என்று கூறி மறைந்தார். இதே போல் சேவகனின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், 'கோயிலில் சுவாமிதரிசனம் செய்து முடித்து வந்ததும் தங்கள் பணம் உங்கள் கைக்கு வந்துசேரும்' என்று கூறி மறைந்தார்.
அப்போது திருச்செந்தூர் பகுதியை உள்ளடக்கிய குலசேகரப்பட்டனத்தை ஆண்ட குறுநில மன்னர் கனவில் செந்திலாண்டவர் தோன்றி, 'என்னுடைய பக்தன் மீராக்கண்ணு மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றான். நாளை காலையில் திருச்செந்தூர் கோவில் உண்டியலைத் திறந்து அதிலிருக்கும் பணத்தை அப்படியே அவனுக்கு வழங்கி அவனது கடனை அடைத்துவிடுங்கள்' எனக் கூறிச் சென்றார்.
பொழுது புலர்ந்ததும் புலவர் மீராக்கண்ணு, சேவகன் இருவரும் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு முன்னதாகவே அங்கு வந்து மன்னர் காத்திருந்தார். பரஸ்பரம் மூவரும் சந்தித்துக்கொண்டனர்.
இறைவன் கனவில் கூறியபடியே எல்லாம் சிறப்பாக நிகழ்ந்தன. இதில் குறிப்பிடப்படவேண்டிய ஆச்சர்யமான விஷயம், புலவர் வணிகருக்குச் செலுத்த வேண்டிய தொகையை மீறி அதில் ஒரு பைசாவும் மீதம் இல்லை என்பதுதான். திருச்செந்தூர் ஆண்டவன் செந்திலாண்டவனின் கருணையை எண்ணி ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருமே கசிந்துருகினர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் திருச்செந்தூர் இராஜகோபுரம்
முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார்.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. இந்த இராஜகோபுரம் முருகப்பெருமானுக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில், நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த இராஜகோபுரம் வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
157அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரத்தைக் கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகள். இவர் கோபுரம் கட்டும்போது, பணியாளர்களுக்கு கூலியாக பன்னீர் இலை விபூதி தருவார். இலையைப் பிரித்துப் பார்த்தால், அதில் வேலைக்குரிய கூலி இருக்குமாம். ஒரு நாள் இந்த அதிசயம் நடப்பது நின்று போனது. தேசிக சுவாமிகள் முருகனிடம் முறையிட்டார். அவரது கனவில் தோன்றிய முருகன், 'காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதியிடம் சென்று உதவி பெற்று கோபுரத்தைக் கட்டி முடி' என்றார். சுவாமிகள் சீதக்காதியைச் சந்தித்தார். அவர் ஒரு மூட்டை உப்பு கொடுத்தார். அதைக் கோவிலுக்குக் கொண்டு வந்து பிரித்துப் பார்த்தபோது தங்கக் காசுகளாக மாறிவிட்டிருந்தன. கோபுர வேலையும் இனிதே முடிந்தது.
தீராத வயிற்றுவலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கந்தசஷ்டி கவசம் பாடினால் குணமாகும் என்று பால தேவராய சுவாமிகள் கூறியிருக்கிறார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
திருச்செந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதியின் சிறப்பு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீராக திகழ்வது திருச்செந்தூர். முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த தலம் இது.
ஒவ்வொரு கோவிலுக்கு என்று தனி சிறப்பு உண்டு. அது அங்கு வீற்றிருக்கும் இறை சக்தி முதற்கொண்டு அங்கு வழங்கப்படும் பிரசாதங்கள் வரை அடங்கும். இதே போல் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் ஒரு சிறப்பு உண்டு. வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனி சிறப்பாக, திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம், தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூரில் சூரபத்மாதியர்களை வதம் செய்து விட்டு,வெற்றி வீரனாக, தேவ சேனாதிபதியாக நின்ற முருகப் பெருமானின் பெருமைகளை துதித்த வேதங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலாண்டவரின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக தோன்றின. எனவே இவற்றின் இலைகளும், வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் இந்த வேத மந்திர சக்திகள் நிறைந்து இருக்கிறது என்பது நம்பிக்கை.
முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன். அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும், ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னிருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னிருத் திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது. இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.

அம்பாசமுத்திரம் புருஷோத்தம பெருமாள் கோவில்
நித்திய கருட சேவை சாதிக்கும் பெருமாள்
திருநெல்வேலி – பாபநாசம் மாநில நெடுஞ்சாலை சாலையில், 35 கி.மீ தூரத்தில் உள்ள அம்பாசமுத்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது புருஷோத்தம பெருமாள் கோவில். தாயார் திருநாமம் அலர்மேல் மங்கை. இத்தலத்தில் பெருமாள் ஒரு தாயாருடன் காட்சி தருவதால், 'புருஷோத்தமர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, 'ஏகபத்தினி விரதர்' என்றும் பெயருண்டு.
பொதுவாக பெருமாள் திருவிழா காலங்களில் தான் கருடன் மீது எழுந்தருளி காட்சி தருவார். ஆனால், இக்கோவிலில், மூலஸ்தானத்திலேயே பெருமாள் கருட சேவை சாதிக்கிறார். கருவறையின் நடுவில் சதுர பீடமும், அதன் மத்தியில் மலர்ந்த தாமரை மலரும் அதன்மேல் ஆதிசேஷனின் அடிபாகமும், அதில் கருட பகவான் ஒருகாலை மடித்து, மறுகாலை ஊன்றித் திகழ, அவரின் ஒரு கை பெருமாளின் வலது திருப்பாதத்தைத் தாங்கியவாறும், மற்றொரு கை மலர்ந்த தாமரை மலரை கையில் கொண்டும் இருக்கிறது. கருடன் தோளின்மேல் உள்ள பீடத்தில் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் இடதுகாலை மடித்து, வலது காலை கருட பகவானின் கையில் வைத்தவாறும், பிராட்டியை தன் இடது மடியில் அமர்த்தி, ஆதிசேஷன் ஏழு தலைகளுடன் குடைபிடிக்க, வரதஹஸ்தம் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில், நித்திய கருட சேவை சாதிக்கிறார். தாயார் இடது கையில் தாமரை மலருடன், கருடனின் கையில் உள்ள தாமரை மலர் மீது திருப்பாதங்கள் வைத்து மலர்ந்த முகத்துடன் தரிசனம் தருகிறார். இந்த சிலை ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது என்பது தனிச்சிறப்பு. பெருமாள் அஷ்ட திருக்கரங்களுடன் எழுந்தருளியிருப்பதால், இவரை அஷ்டபுயகரப்பெருமாள் என கூறுகின்றனர். பெருமாளின் இந்த நித்திய கருட சேவை இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
இரண்டு சங்கு இரண்டு சக்கரம் ஏந்திய அபூர்வ பெருமாள்
பொதுவாக பெருமாள் எல்லாத் தலங்களிலும் ஒரு சங்கு, ஒரு சக்கரம் ஏங்கிய நிலையில்தான் காட்சி தருவார். ஆனால் மூலவர் புருஷோத்தம
பெருமாள் கைகளில் இரண்டு சங்கு இரண்டு சக்கரம் ஏந்தி அருள் பாலிக்கிறார். இந்த அமைப்புடன் பெருமாளை தரிசிப்பது அபூர்வம் ஆகும்.
பிரார்த்தனை
இத்தலத்து பெருமாள் ஏகபத்தினி விரதர் என்பதால், புதுமணத் தம்பதியர்கள், தாயாரையும் பெருமாளையும் வணங்கினால் வாழ்க்கை முழுவதும் இணைபிரியாமல் இருப்பர் என்பது நம்பிக்கை. கடன் தொல்லை உள்ளவர்கள் இப்பெருமாளை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அரிகேசநல்லூர் அரியநாதர் கோவில்
தீபாவளி அன்று வழிபட வேண்டிய குபேரத் தலம்
செல்வச் செழிப்பை அருளும் தலம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி - அம்பாசமுத்திரம் சாலையில் வீரவநல்லூருக்கும் முக்கூடலுக்கும் இடையே, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது
அரிகேசநல்லூர். இறைவன் திருநாமம் அரியநாதர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இக்கோவில் 1,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் இந்த ஆலயத்தைக் கட்டியதால், மன்னன் பெயரால் இவ்வூர் அரிகேசநல்லூர் என்றழைக்கப்படுகிறது.
குபேரன் இத்தலத்து இறைவனை வழிபட்டு, தான் இழந்த செல்வங்களைத் திரும்பப் பெற்றதால், இத்தலம் மிகவும் சிறப்புக்குரியது. ராவணன் தனது சகோதரன் குபேரனிடம் இருந்த செல்வங்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டு, அவனது புஷ்பக விமானத்தையும் அபகரித்துக் கொண்டு துரத்தியடித்தபோது, அவர் அரிகேசநல்லூர் வந்து சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டார். அவர் ஸ்தாபித்த லிங்கம்தான் அரிகேசநல்லூர் சிவனாவார். குபேரன் இந்த சிவனை பூஜித்து, தான் இழந்த செல்வங்களையெல்லாம் திரும்பப் பெற்ற தலம் என்பதால், இந்த அரிகேசநல்லூர் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகக் திகழ்கிறது. கடன் தொல்லை இருப்பவர்கள், செல்வ வளம் வேண்டுபவர்கள் இங்கு வந்து குபேரன் பூஜித்த சிவனை வழிபாடு செய்தால் செல்வச் செழிப்பு உண்டாகி, வாழ்வில் எல்லா வளங்களும் உண்டாகும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில், இறைவன் சன்னிதிக்கு வடகிழக்கே செல்வத்தின் அதிபதியான குபேரனின் மிகப்பெரிய கற்சிலை காணப்படுகிறது. வலக்கையில் கதையை ஏந்தி, இடக்கையை மடித்த காலின் மீது வைத்துக் கொண்டு சுமார் 4 அடி உயரத்தில் மிகப்பெரிய உருவமாக குபேரன் காட்சியளிக்கிறார். இங்கே குபேரன் எழுந்தருளியிருக்கும் காரணத்தால் ஒரு காலத்தில் இந்த ஊர் அழகாபுரி என்னும் பெயரால் கூட அழைக்கப்பட்டதாம். இந்த குபேரனுக்கு தீபாவளி மற்றும் அட்சய திருதியை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் வெளியூரிலிருந்தெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து இங்கே வழிபாடு செய்கின்றனர்.

கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
பக்தனுக்கு தீபாவளி அன்று சிரார்த்தம் செய்யும் சாரங்கபாணி பெருமாள்
கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுபடுகிறது. மூலவர் சாரங்கபாணி, தலையை தனது வலது கையில் வைத்தவாறு, சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். தாயார் திருநாமம் கோமளவல்லி.
ஒருசமயம், கும்பகோணத்தில் லட்சுமி நாராயணசாமி என்னும் பெருமாள் பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் கும்பகோணம் சாரங்கபாணி மீது தீராத பக்தி கொண்டிருந்தார்.இவர்தான் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோபுரத்தைக் கட்டியவர்.
ஒரு தீபாவளியன்று லட்சுமி நாராயணசாமி பெருமாளின் திருவடியை அடைந்தார். சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி. இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்த போது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன்பக்தனுக்கு ஈமக்கிரியை செய்துவைத்து கருணைக்கடலாக விளங்கினார். தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால், அதை பக்தர்கள் பார்க்க முடியாது.
இதில் நெகிழ்ச்சியான இன்னொரு விஷயம் என்னவென்றால், அன்றைய தினம், பெருமாளுக்கு நிவேதனம் செய்வது அன்றைய சிராத்தத்துக்காகத் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைத்தான்; வழக்கமான பிரசாதங்களை அல்ல

தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
சிவப்பு நிற கல்லால் ஆன அபூர்வ நந்தி
இரு முன்கால்களையும் மடக்கி வைத்திருக்கும் அரிய தோற்றம்
திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி. இக்கோவில் திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தேவார வைப்பு தலமாகும்.
இக்கோவில் நந்தியம்பெருமான் பல சிறப்புகளைப் பெற்றவர். இவருடைய திருமேனியானது வழக்கத்திற்கு மாறாக, கருப்பு நிற கல்லுக்கு பதிலாக சிவப்பு நிற நிற கல்லால் ஆனது. வழக்கமாக சிவாலயங்களில் நந்தியம்பெருமான் மூன்று கால்களை மடக்கியும், ஒரு காலை மட்டும் நிமர்த்தியும் அமர்ந்த கோலத்தில் இருப்பார். ஆனால், இக்கோவிலில் நந்தியம்பெருமான் தன் இரு முன்கால்களையும் மடக்கி வைத்திருக்கின்றார். இது ஒரு அரிதான காட்சியாகும். மேலும் அவரது வலது காதும் மடிந்து காணப்படுவதும் சிறப்புக்குரியதாகும். அவர் தன் தலையை சற்றே சாயத்து தன் காதை இறைவன் பக்கம் திருப்பி இருப்பதும் ஒரு வித்தியாசமான தோற்றம் ஆகும்
தொடர்ந்து 11 பிரதோஷங்களில் பங்கேற்று, நந்தியெம்பெருமானை மனமுருகி வேண்டினால், நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும் என்பது பக்தர்களின் கூற்றாக உள்ளது.

தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
மானுட உருவம் கொண்டு அம்பிகை இறைவனை பூஜை செய்த தலம்
திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி. கோவிந்தவல்லி என்றால் உயிர்களுக்கெல்லாம் தலைவி என பொருள் உண்டாம். இந்த அம்பிகைக்கு சிவகாமசுந்தரி, கோவர்த்தனாம்பிகை அம்மன் போன்ற பல்வேறு பெயர்களும் உண்டு.
ஒரு சமயம் கைலாயத்தில் சிவபெருமான், பார்வதிதேவிக்கு வேதசிவாகமப் பொருளை உணர்த்திக் கொண்டிருந்தபோது, அம்பிகையின் கவனம் மாறும்படியாக காமதேனு அவ்வழியே செல்ல, தேவியின் கவனம் அந்த காமதேனு மீது மாறுவதை உணர்ந்து கோபமடைந்த சிவபெருமான், அம்பிகையை நோக்கி 'பூலோகத்தில் திண்ணக்கோணம் அடைந்து பங்குனி மாத வளர்பிறையில் வரும் வசந்த நவராத்திரி என்னும் ஒன்பது ராத்திரி நாள்கள் நீ தவமிருக்கும்போது, நான் பசுவாக உனக்கு காட்சியளிப்பேன். அதன் பின் என்னை வந்து நீ அடைவாயாக' என்று பார்வதி தேவிக்கு சாபமிட்டு அதற்கான விமோசனத்தையும் அருளினார். அதன்படி மானுட உருவம் கொண்டு இடையர் குலத்தில் அம்பிகை பிறந்து, சிவபெருமானை நோக்கி தவமிருந்து வரம் பெற்று மீண்டும் அடைந்தது இந்தக் கோவிலில்தான்.
சிவபெருமானால் சாபம் விட்டு, மானுட வேடம் பூண்டு, பின்னர் தவமிருந்து தேவி அவரிடம் இணைந்த திருக்கோயில் என்பதால், பங்குனி மாத வளர்பிறையில் வசந்த நவராத்திரி உற்சவம் இறைவிக்கு நடத்தப்படுகிறது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
கலை நயம் மிக்க நுணுக்கமான சிற்பங்கள் கொண்ட திருப்பரங்குன்றம் கோவில்
மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகும். முருகன் தெய்வானையை திருமணம் புரிந்த தலம் இது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில், ஆன்மீக பக்தர்களுக்கு மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு முக்கிய ஈர்ப்பு தலமாகும். இக்கோவிலில் கலை நயம் மிக்க நுணுக்கமான சிற்பங்கள் பார்ப்பவர்களின் கண்ணுக்கு விருந்தாக அமைகின்றது.
கோவில் வாயிலை அடுத்து உள்ளே அமைந்துள்ளது ஆஸ்தான மண்டபம். இம்மண்டபம் சுந்தர பாண்டியன் மண்டபம் என்றும் வழங்கப்படுகிறது. அழகிய கண்கவர் கலை நயம் கொண்ட சிற்பங்களுடன், 48 தூண்களுடன் இம்மண்டபம் இராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது..
மண்டபத் தூண்களில் யாளிகள், குதிரை வீரர்கள், பத்திரகாளி, துர்க்கை, நர்த்தன விநாயகர், வீரபாகு, சிவனார் திரிபுரம் எரிக்கும் காட்சி, திருமால் மற்றும் மகா லட்சுமியின் சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் செதுக்கப் பெற்றுள்ளன.
பிரம்மன் வேள்வி வளர்த்துத் திருமணச் சடங்குகள் நடத்த, இந்திரன் தேவயானையை முருகனுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க, தேவயானையைக் கைத்தலம் பற்றிய பெருமிதத்துடன், அதே வேளையில் நாணம் கலந்த மகிழ்ச்சியுடன் இருப்பது போன்று முருகப் பெருமானின் திருமணக் கோலம் எழிலுற வடிவமைக்கப் பெற்றுள்ளது.
இக்கோவிலில் திருவாட்சி மண்டபம் என்னும் பெரிய கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்திற்கு ஆறுகால் மண்டபம் என்ற பெயரும் உண்டு. இம்மண்டபத்தின் முன் புறம் ஏறும் படிகளின் இரு பக்கங்களிலும் தேர் இழுக்கும் இரு குதிரைகள் உள்ளன. இவை ஒரே கல்லில் செய்யப்பட்டு கலை நயத்துடன் விளங்குகின்றன. இந்த குதிரைகளின் உடலில் காணப்படும் அணிகலன்கள் மிகுந்த நுணுக்கத்துடன் செய்யப்பட்டுள்ளன.
இம்மண்டபத்தின் தூண்களில் மீனாட்சி அம்மனின் திக்விஜயம், ஹயக்ரீவர், நரசிம்மர், ஆஞ்சநேயர், மன்மதன், ஆலவாய் அன்னல், வராகிஅம்மன் என்று பல்வேறு அழகிய, தெய்வீக சிற்ப சிலைகள் உள்ளன.
இறைவன் சத்தியகிரீசுவரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்பு கலையம்சங்களும், இதர சிற்ப அம்சங்களும் பிரமிக்கத்தக்கவையாக உள்ளன.

படவேடு யோகராமசந்திர மூர்த்தி கோவில்
ஒரே கல்லில், ஒரே பீடத்தில் அமர்ந்தபடி இருக்கும் அரிய ராமர், சீதை சிலை
ஆஞ்சநேயருக்கு ஆசிரியராக இருந்து உபதேசம் செய்யும் யோகராமர்
திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே, நடந்துசெல்லும் தூரத்தில் உள்ள வீரக்கோயில் கிராமத்தில் அமைந்துள்ளது யோகராமசந்திர மூர்த்தி கோவில். படவேடு ரேணுகாதேவி கோவில் இணைப்புக் கோவிலாக யோகராமசந்திர மூர்த்தி கோவில் இருக்கிறது.
வால்மீகி இயற்றிய ராமாயணத்தின் முதல் ஸ்லோகத்தில், ராமபிரான் யோக ராமச்சந்திரனாக இருக்கும் அமைப்பைப் பற்றி பாடியுள்ளார். இந்த ஸ்லோகத்தின் பொருளை உணர்த்தும்விதமாக அமைந்த கோவில் இது.
இத்தலத்தில் ராமபிரான் புஷ்பக விமானத்தின் கீழ், வீராசனத்தில் அமர்ந்து, சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்து யோக நிலையில், மாணவனுக்கு பாடம் போதிக்கிற பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். இது போன்ற அமைப்பை காண்பது அரிதாகும். ராமர், சீதை இருவரின் சிலையும் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் அமர்ந்தபடி வடிக்கப்பட்டுள்ளது.
சுவாமிக்கு அருகில், ஆஞ்சநேயர் அமர்ந்து கையில் அடக்க ஒடுக்கமாக அமர்ந்த நிலையில், பனை ஓலைகளை கொத்தாக கையில் பிடித்து, ஓலைச் சுவடியை படிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். ஆஞ்சநேயருக்கு ஆசிரியராக இருந்து உபதேசம் செய்தவர் என்பதால், ராமபிரான் இங்கு குரு அம்சமாக போற்றப்படுகிறார். எனவே, சக்கரவர்த்திக்குரிய போர் ஆயுதங்கள் எதுவும் எதுவும் இல்லை. ஆனால், இளையபெருமாளான லட்சுமணன் வில்லும் கையுமாக நிற்கிறார்.
யோகராமர் உலகின் நிரந்தரமான மெய்ஞான நிலையை உணர்த்தும் கோலத்தில் இருப்பவர் என்பதால், நிலையான இன்பமான மோட்சம் கிடைக்க மட்டுமே இவரை வழிபடுகிறார்கள். இதனால், இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிக்கு விசேஷ பூஜை மட்டும் நடக்கும்.
கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக இத்தல ராமரை வழிபட்டு பலனடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.