அம்பாசமுத்திரம் புருஷோத்தம பெருமாள் கோவில்
நித்திய கருட சேவை சாதிக்கும் பெருமாள்
திருநெல்வேலி – பாபநாசம் மாநில நெடுஞ்சாலை சாலையில், 35 கி.மீ தூரத்தில் உள்ள அம்பாசமுத்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது புருஷோத்தம பெருமாள் கோவில். தாயார் திருநாமம் அலர்மேல் மங்கை. இத்தலத்தில் பெருமாள் ஒரு தாயாருடன் காட்சி தருவதால், 'புருஷோத்தமர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, 'ஏகபத்தினி விரதர்' என்றும் பெயருண்டு.
பொதுவாக பெருமாள் திருவிழா காலங்களில் தான் கருடன் மீது எழுந்தருளி காட்சி தருவார். ஆனால், இக்கோவிலில், மூலஸ்தானத்திலேயே பெருமாள் கருட சேவை சாதிக்கிறார். கருவறையின் நடுவில் சதுர பீடமும், அதன் மத்தியில் மலர்ந்த தாமரை மலரும் அதன்மேல் ஆதிசேஷனின் அடிபாகமும், அதில் கருட பகவான் ஒருகாலை மடித்து, மறுகாலை ஊன்றித் திகழ, அவரின் ஒரு கை பெருமாளின் வலது திருப்பாதத்தைத் தாங்கியவாறும், மற்றொரு கை மலர்ந்த தாமரை மலரை கையில் கொண்டும் இருக்கிறது. கருடன் தோளின்மேல் உள்ள பீடத்தில் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் இடதுகாலை மடித்து, வலது காலை கருட பகவானின் கையில் வைத்தவாறும், பிராட்டியை தன் இடது மடியில் அமர்த்தி, ஆதிசேஷன் ஏழு தலைகளுடன் குடைபிடிக்க, வரதஹஸ்தம் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில், நித்திய கருட சேவை சாதிக்கிறார். தாயார் இடது கையில் தாமரை மலருடன், கருடனின் கையில் உள்ள தாமரை மலர் மீது திருப்பாதங்கள் வைத்து மலர்ந்த முகத்துடன் தரிசனம் தருகிறார். இந்த சிலை ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது என்பது தனிச்சிறப்பு. பெருமாள் அஷ்ட திருக்கரங்களுடன் எழுந்தருளியிருப்பதால், இவரை அஷ்டபுயகரப்பெருமாள் என கூறுகின்றனர். பெருமாளின் இந்த நித்திய கருட சேவை இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
இரண்டு சங்கு இரண்டு சக்கரம் ஏந்திய அபூர்வ பெருமாள்
பொதுவாக பெருமாள் எல்லாத் தலங்களிலும் ஒரு சங்கு, ஒரு சக்கரம் ஏங்கிய நிலையில்தான் காட்சி தருவார். ஆனால் மூலவர் புருஷோத்தம
பெருமாள் கைகளில் இரண்டு சங்கு இரண்டு சக்கரம் ஏந்தி அருள் பாலிக்கிறார். இந்த அமைப்புடன் பெருமாளை தரிசிப்பது அபூர்வம் ஆகும்.
பிரார்த்தனை
இத்தலத்து பெருமாள் ஏகபத்தினி விரதர் என்பதால், புதுமணத் தம்பதியர்கள், தாயாரையும் பெருமாளையும் வணங்கினால் வாழ்க்கை முழுவதும் இணைபிரியாமல் இருப்பர் என்பது நம்பிக்கை. கடன் தொல்லை உள்ளவர்கள் இப்பெருமாளை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.