திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆதி சங்கரரின் காச நோயை குணப்படுத்திய திருச்செந்தூர் முருகன்
ஒரு சமயம், ஆதிசங்கரர் வடநாட்டு திக்விஜயத்தை மேற்கொண்டபோது அபிநவகுப்தர் என்பவர் ஆதி சங்கரருடன் வாதம் செய்து தோல்வியுற்றார்.வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர், அபிசார வேள்வி செய்து, ஆதிசங்கரருக்குக் காச நோயை உண்டாக்கினான். ஆதிசங்கரர் தீராத காச நோயால் அல்லல்பட்டார். ஆதிசங்கரர் திருக்கோகரணத்தில் சிவபெருமானை வழிபடும்போது, 'என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான ஜெயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்' என சிவபெருமான் உணர்த்தினார்.
பிறகு, ஆதிசங்கரர் சிவபெருமானின் கட்டளைப்படி, ஆகாய மார்க்கமாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார். திருச்செந்தூரில் ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியப்படைந்தார். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில், 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றி, முருகன் அருளால் காச நோய் நீங்கப் பெற்றார். அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி நெக்குருகி பாடியுள்ளார். 'சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும்' என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் இலை விபூதியின் பெருமையை சொல்லி இருக்கிறார்.