திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆதி சங்கரரின் காச நோயை குணப்படுத்திய திருச்செந்தூர் முருகன்
ஒரு சமயம், ஆதிசங்கரர் வடநாட்டு திக்விஜயத்தை மேற்கொண்டபோது அபிநவகுப்தர் என்பவர் ஆதி சங்கரருடன் வாதம் செய்து தோல்வியுற்றார்.வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர், அபிசார வேள்வி செய்து, ஆதிசங்கரருக்குக் காச நோயை உண்டாக்கினான். ஆதிசங்கரர் தீராத காச நோயால் அல்லல்பட்டார். ஆதிசங்கரர் திருக்கோகரணத்தில் சிவபெருமானை வழிபடும்போது, 'என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான ஜெயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்' என சிவபெருமான் உணர்த்தினார். பிறகு, ஆதிசங்கரர் சிவபெருமானின் கட்டளைப்படி, ஆகாய மார்க்கமாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார். திருச்செந்தூரில் ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியப்படைந்தார். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில், 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றி, முருகன் அருளால் காச நோய் நீங்கப் பெற்றார். அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி நெக்குருகி பாடியுள்ளார். 'சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும்' என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் இலை விபூதியின் பெருமையை சொல்லி இருக்கிறார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
இஸ்லாமிய பக்தரின் கடனை அடைத்த செந்திலாண்டவன்
திருச்செந்தூர் அருகே இருக்கும், 'காலன் குடியிருப்பு' என்னும் ஊரில் மீராக் கண்ணு என்ற இஸ்லாமிய புலவர் வாழ்ந்து வந்தார். திருச்செந்தூர் முருகன் மீது பக்தி கொண்டவர். இவரை வறுமை மிகவும் வாட்டியது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமம் ஏற்பட்டதால், மதுரையில் இருந்த வணிகர் ஒருவரிடம், வட்டிக்கு கடன் பெற்று இருந்தார்.
மீராக் கண்ணு நீண்ட நாட்களாகியும் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராததால் வணிகர் பலமுறை வலியுறுத்தினார். ஆனால், மீராக் கண்ணுவால் பணத்தைத் திரும்பத் தர முடியவில்லை. இதனால், கோபமடைந்த வணிகர், சேவகர்னை அனுப்பி மீராக்கண்ணுவைச் சிறைப் பிடித்து வரச்சொன்னார். சேவகன் மாலையில் வந்து சேதியைச் சொன்னதும் மீராக்கண்ணு உறக்கமில்லாமல், இரவு முழுவதும் திருச்செந்தூர் முருகனை மனதில் எண்ணி, பதிகம் பாடி உருகினார். இரவு முழுவதும் தூங்காத களைப்பில் விடியற்காலையில் உறங்கிப்போனார். அப்போது முருகப்பெருமான் அவரது கனவில் தோன்றி, 'நாளை உமது கடனை வட்டியும் முதலுமாக யாமே அடைப்போம்' என்று கூறி மறைந்தார். இதே போல் சேவகனின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், 'கோயிலில் சுவாமிதரிசனம் செய்து முடித்து வந்ததும் தங்கள் பணம் உங்கள் கைக்கு வந்துசேரும்' என்று கூறி மறைந்தார்.
அப்போது திருச்செந்தூர் பகுதியை உள்ளடக்கிய குலசேகரப்பட்டனத்தை ஆண்ட குறுநில மன்னர் கனவில் செந்திலாண்டவர் தோன்றி, 'என்னுடைய பக்தன் மீராக்கண்ணு மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றான். நாளை காலையில் திருச்செந்தூர் கோவில் உண்டியலைத் திறந்து அதிலிருக்கும் பணத்தை அப்படியே அவனுக்கு வழங்கி அவனது கடனை அடைத்துவிடுங்கள்' எனக் கூறிச் சென்றார்.
பொழுது புலர்ந்ததும் புலவர் மீராக்கண்ணு, சேவகன் இருவரும் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு முன்னதாகவே அங்கு வந்து மன்னர் காத்திருந்தார். பரஸ்பரம் மூவரும் சந்தித்துக்கொண்டனர்.
இறைவன் கனவில் கூறியபடியே எல்லாம் சிறப்பாக நிகழ்ந்தன. இதில் குறிப்பிடப்படவேண்டிய ஆச்சர்யமான விஷயம், புலவர் வணிகருக்குச் செலுத்த வேண்டிய தொகையை மீறி அதில் ஒரு பைசாவும் மீதம் இல்லை என்பதுதான். திருச்செந்தூர் ஆண்டவன் செந்திலாண்டவனின் கருணையை எண்ணி ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருமே கசிந்துருகினர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் திருச்செந்தூர் இராஜகோபுரம்
முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார்.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. இந்த இராஜகோபுரம் முருகப்பெருமானுக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில், நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த இராஜகோபுரம் வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
157அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரத்தைக் கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகள். இவர் கோபுரம் கட்டும்போது, பணியாளர்களுக்கு கூலியாக பன்னீர் இலை விபூதி தருவார். இலையைப் பிரித்துப் பார்த்தால், அதில் வேலைக்குரிய கூலி இருக்குமாம். ஒரு நாள் இந்த அதிசயம் நடப்பது நின்று போனது. தேசிக சுவாமிகள் முருகனிடம் முறையிட்டார். அவரது கனவில் தோன்றிய முருகன், 'காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதியிடம் சென்று உதவி பெற்று கோபுரத்தைக் கட்டி முடி' என்றார். சுவாமிகள் சீதக்காதியைச் சந்தித்தார். அவர் ஒரு மூட்டை உப்பு கொடுத்தார். அதைக் கோவிலுக்குக் கொண்டு வந்து பிரித்துப் பார்த்தபோது தங்கக் காசுகளாக மாறிவிட்டிருந்தன. கோபுர வேலையும் இனிதே முடிந்தது.
தீராத வயிற்றுவலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கந்தசஷ்டி கவசம் பாடினால் குணமாகும் என்று பால தேவராய சுவாமிகள் கூறியிருக்கிறார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
திருச்செந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதியின் சிறப்பு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீராக திகழ்வது திருச்செந்தூர். முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த தலம் இது.
ஒவ்வொரு கோவிலுக்கு என்று தனி சிறப்பு உண்டு. அது அங்கு வீற்றிருக்கும் இறை சக்தி முதற்கொண்டு அங்கு வழங்கப்படும் பிரசாதங்கள் வரை அடங்கும். இதே போல் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் ஒரு சிறப்பு உண்டு. வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனி சிறப்பாக, திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம், தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூரில் சூரபத்மாதியர்களை வதம் செய்து விட்டு,வெற்றி வீரனாக, தேவ சேனாதிபதியாக நின்ற முருகப் பெருமானின் பெருமைகளை துதித்த வேதங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலாண்டவரின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக தோன்றின. எனவே இவற்றின் இலைகளும், வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் இந்த வேத மந்திர சக்திகள் நிறைந்து இருக்கிறது என்பது நம்பிக்கை.
முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன். அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும், ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னிருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னிருத் திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது. இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.
அம்பாசமுத்திரம் புருஷோத்தம பெருமாள் கோவில்
நித்திய கருட சேவை சாதிக்கும் பெருமாள்
திருநெல்வேலி – பாபநாசம் மாநில நெடுஞ்சாலை சாலையில், 35 கி.மீ தூரத்தில் உள்ள அம்பாசமுத்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது புருஷோத்தம பெருமாள் கோவில். தாயார் திருநாமம் அலர்மேல் மங்கை. இத்தலத்தில் பெருமாள் ஒரு தாயாருடன் காட்சி தருவதால், 'புருஷோத்தமர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, 'ஏகபத்தினி விரதர்' என்றும் பெயருண்டு.
பொதுவாக பெருமாள் திருவிழா காலங்களில் தான் கருடன் மீது எழுந்தருளி காட்சி தருவார். ஆனால், இக்கோவிலில், மூலஸ்தானத்திலேயே பெருமாள் கருட சேவை சாதிக்கிறார். கருவறையின் நடுவில் சதுர பீடமும், அதன் மத்தியில் மலர்ந்த தாமரை மலரும் அதன்மேல் ஆதிசேஷனின் அடிபாகமும், அதில் கருட பகவான் ஒருகாலை மடித்து, மறுகாலை ஊன்றித் திகழ, அவரின் ஒரு கை பெருமாளின் வலது திருப்பாதத்தைத் தாங்கியவாறும், மற்றொரு கை மலர்ந்த தாமரை மலரை கையில் கொண்டும் இருக்கிறது. கருடன் தோளின்மேல் உள்ள பீடத்தில் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் இடதுகாலை மடித்து, வலது காலை கருட பகவானின் கையில் வைத்தவாறும், பிராட்டியை தன் இடது மடியில் அமர்த்தி, ஆதிசேஷன் ஏழு தலைகளுடன் குடைபிடிக்க, வரதஹஸ்தம் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில், நித்திய கருட சேவை சாதிக்கிறார். தாயார் இடது கையில் தாமரை மலருடன், கருடனின் கையில் உள்ள தாமரை மலர் மீது திருப்பாதங்கள் வைத்து மலர்ந்த முகத்துடன் தரிசனம் தருகிறார். இந்த சிலை ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது என்பது தனிச்சிறப்பு. பெருமாள் அஷ்ட திருக்கரங்களுடன் எழுந்தருளியிருப்பதால், இவரை அஷ்டபுயகரப்பெருமாள் என கூறுகின்றனர். பெருமாளின் இந்த நித்திய கருட சேவை இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
இரண்டு சங்கு இரண்டு சக்கரம் ஏந்திய அபூர்வ பெருமாள்
பொதுவாக பெருமாள் எல்லாத் தலங்களிலும் ஒரு சங்கு, ஒரு சக்கரம் ஏங்கிய நிலையில்தான் காட்சி தருவார். ஆனால் மூலவர் புருஷோத்தம
பெருமாள் கைகளில் இரண்டு சங்கு இரண்டு சக்கரம் ஏந்தி அருள் பாலிக்கிறார். இந்த அமைப்புடன் பெருமாளை தரிசிப்பது அபூர்வம் ஆகும்.
பிரார்த்தனை
இத்தலத்து பெருமாள் ஏகபத்தினி விரதர் என்பதால், புதுமணத் தம்பதியர்கள், தாயாரையும் பெருமாளையும் வணங்கினால் வாழ்க்கை முழுவதும் இணைபிரியாமல் இருப்பர் என்பது நம்பிக்கை. கடன் தொல்லை உள்ளவர்கள் இப்பெருமாளை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அரிகேசநல்லூர் அரியநாதர் கோவில்
தீபாவளி அன்று வழிபட வேண்டிய குபேரத் தலம்
செல்வச் செழிப்பை அருளும் தலம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி - அம்பாசமுத்திரம் சாலையில் வீரவநல்லூருக்கும் முக்கூடலுக்கும் இடையே, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது
அரிகேசநல்லூர். இறைவன் திருநாமம் அரியநாதர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இக்கோவில் 1,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் இந்த ஆலயத்தைக் கட்டியதால், மன்னன் பெயரால் இவ்வூர் அரிகேசநல்லூர் என்றழைக்கப்படுகிறது.
குபேரன் இத்தலத்து இறைவனை வழிபட்டு, தான் இழந்த செல்வங்களைத் திரும்பப் பெற்றதால், இத்தலம் மிகவும் சிறப்புக்குரியது. ராவணன் தனது சகோதரன் குபேரனிடம் இருந்த செல்வங்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டு, அவனது புஷ்பக விமானத்தையும் அபகரித்துக் கொண்டு துரத்தியடித்தபோது, அவர் அரிகேசநல்லூர் வந்து சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டார். அவர் ஸ்தாபித்த லிங்கம்தான் அரிகேசநல்லூர் சிவனாவார். குபேரன் இந்த சிவனை பூஜித்து, தான் இழந்த செல்வங்களையெல்லாம் திரும்பப் பெற்ற தலம் என்பதால், இந்த அரிகேசநல்லூர் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகக் திகழ்கிறது. கடன் தொல்லை இருப்பவர்கள், செல்வ வளம் வேண்டுபவர்கள் இங்கு வந்து குபேரன் பூஜித்த சிவனை வழிபாடு செய்தால் செல்வச் செழிப்பு உண்டாகி, வாழ்வில் எல்லா வளங்களும் உண்டாகும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில், இறைவன் சன்னிதிக்கு வடகிழக்கே செல்வத்தின் அதிபதியான குபேரனின் மிகப்பெரிய கற்சிலை காணப்படுகிறது. வலக்கையில் கதையை ஏந்தி, இடக்கையை மடித்த காலின் மீது வைத்துக் கொண்டு சுமார் 4 அடி உயரத்தில் மிகப்பெரிய உருவமாக குபேரன் காட்சியளிக்கிறார். இங்கே குபேரன் எழுந்தருளியிருக்கும் காரணத்தால் ஒரு காலத்தில் இந்த ஊர் அழகாபுரி என்னும் பெயரால் கூட அழைக்கப்பட்டதாம். இந்த குபேரனுக்கு தீபாவளி மற்றும் அட்சய திருதியை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் வெளியூரிலிருந்தெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து இங்கே வழிபாடு செய்கின்றனர்.
கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
பக்தனுக்கு தீபாவளி அன்று சிரார்த்தம் செய்யும் சாரங்கபாணி பெருமாள்
கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுபடுகிறது. மூலவர் சாரங்கபாணி, தலையை தனது வலது கையில் வைத்தவாறு, சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். தாயார் திருநாமம் கோமளவல்லி.
ஒருசமயம், கும்பகோணத்தில் லட்சுமி நாராயணசாமி என்னும் பெருமாள் பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் கும்பகோணம் சாரங்கபாணி மீது தீராத பக்தி கொண்டிருந்தார்.இவர்தான் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோபுரத்தைக் கட்டியவர்.
ஒரு தீபாவளியன்று லட்சுமி நாராயணசாமி பெருமாளின் திருவடியை அடைந்தார். சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி. இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்த போது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன்பக்தனுக்கு ஈமக்கிரியை செய்துவைத்து கருணைக்கடலாக விளங்கினார். தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால், அதை பக்தர்கள் பார்க்க முடியாது.
இதில் நெகிழ்ச்சியான இன்னொரு விஷயம் என்னவென்றால், அன்றைய தினம், பெருமாளுக்கு நிவேதனம் செய்வது அன்றைய சிராத்தத்துக்காகத் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைத்தான்; வழக்கமான பிரசாதங்களை அல்ல
தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
சிவப்பு நிற கல்லால் ஆன அபூர்வ நந்தி
இரு முன்கால்களையும் மடக்கி வைத்திருக்கும் அரிய தோற்றம்
திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி. இக்கோவில் திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தேவார வைப்பு தலமாகும்.
இக்கோவில் நந்தியம்பெருமான் பல சிறப்புகளைப் பெற்றவர். இவருடைய திருமேனியானது வழக்கத்திற்கு மாறாக, கருப்பு நிற கல்லுக்கு பதிலாக சிவப்பு நிற நிற கல்லால் ஆனது. வழக்கமாக சிவாலயங்களில் நந்தியம்பெருமான் மூன்று கால்களை மடக்கியும், ஒரு காலை மட்டும் நிமர்த்தியும் அமர்ந்த கோலத்தில் இருப்பார். ஆனால், இக்கோவிலில் நந்தியம்பெருமான் தன் இரு முன்கால்களையும் மடக்கி வைத்திருக்கின்றார். இது ஒரு அரிதான காட்சியாகும். மேலும் அவரது வலது காதும் மடிந்து காணப்படுவதும் சிறப்புக்குரியதாகும். அவர் தன் தலையை சற்றே சாயத்து தன் காதை இறைவன் பக்கம் திருப்பி இருப்பதும் ஒரு வித்தியாசமான தோற்றம் ஆகும்
தொடர்ந்து 11 பிரதோஷங்களில் பங்கேற்று, நந்தியெம்பெருமானை மனமுருகி வேண்டினால், நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும் என்பது பக்தர்களின் கூற்றாக உள்ளது.
தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
தென் கேதார்நாத் என்று போற்றப்படும் தலம்
வேதங்கள், நான்கு தூண்களாக இறைவனின் அருகில் இருக்கும் அபூர்வ அமைப்பு
திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி.
இமயமலை கேதார்நாத் தலத்தில் உள்ள கேதாரீசுவரரை வழிபட்டால் என்ன பலனோ அதே பலன் தரக்கூடிய தலம், தின்னக்கோணம். இத்தலத்து இறைவனின் சிவலிங்கத் திருமேனியானது பசு வடிவில் சுயம்பாக கிழக்கு மேற்காக 7.5 அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்டது. பசுவுக்கு நெற்றியில் திருநீற்றுப்பட்டை, நிறைய மாலைகள், ஆபரணங்கள், வஸ்திரங்கள் உடலை சுற்றி சார்த்தி படுத்திருந்தால் எப்படி இருக்குமோ, அது போல் தான் பசுபதீஸ்வரர் சுயம்புவாக பசு உருவில் காட்சி தருகிறார். மூலவர் பசுபதீசுவரர், கேதார்நாத் இறைவனைப் போல பசுவின் திருமேனி கொண்டு முகவாயைத் தரையில் வைத்து படுத்திருக்கும் நிலையில் அமைந்துள்ளதால், இத்தலம் தென் கேதார்நாத் என்று போற்றப்படுகின்றது. எனவே கேதார்நாத் சிவாலாயத்துக்குச் செல்ல முடியாதவர்கள், தின்னக்கோணம் கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டால், கேதார்நாத் சென்று வந்ததன் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கேதார்நாத் இறைவனைப் போல அமைந்துள்ளதால், இத்தலம் தென் கேதார்நாத் என்று போற்றப்படுகின்றது.
இறைவன் பசுபதீசுவரரின் வலது பக்கத்தில் நான்கு தூண்கள் ஒரே வரிசையில் அமைந்துள்ளன. இப்படி மூலவரின் பக்கத்தில் தூண்கள் அமைந்திருப்பதை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது. இந்த அமைப்பு இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். வேதங்களின் பொருளை சிவபெருமான் விளக்கிக் கொண்டிருந்தபோது பார்வதி தேவியின் கவனம், அருகில் இருந்த காமதேனுவின் மீது சென்றது. அதனால் சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவி, இத்தலத்தில் தவமிருந்து மீண்டும் இறைவனை அடைந்தார். அந்த வகையில் நான்கு வேதங்களின் பெருமைகளையும் உணர்த்தும் வகையில், இக்கோவிலின் கருவறைத் தூண்கள் நான்கும், வேதங்கள் நான்கை எடுத்துரைப்பதாகக் கூறப்படுகின்றன.
பிராத்தனை
பித்ருக்களால் விடப்பட்ட சாபம், தோஷம், களத்ர தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும் பரிகாரத்தலமாக திண்ணக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோவில் விளங்குகிறது. பசுக்கு எதாவது தீங்கு இழைத்து அதனால் சாபம் பெற்றவர்கள், பசுவும் கன்றும் தானம் வழங்க வேண்டிய தலம் இது. திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இங்கு வந்து வழிபடலாம்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
கலை நயம் மிக்க நுணுக்கமான சிற்பங்கள் கொண்ட திருப்பரங்குன்றம் கோவில்
மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகும். முருகன் தெய்வானையை திருமணம் புரிந்த தலம் இது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில், ஆன்மீக பக்தர்களுக்கு மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு முக்கிய ஈர்ப்பு தலமாகும். இக்கோவிலில் கலை நயம் மிக்க நுணுக்கமான சிற்பங்கள் பார்ப்பவர்களின் கண்ணுக்கு விருந்தாக அமைகின்றது.
கோவில் வாயிலை அடுத்து உள்ளே அமைந்துள்ளது ஆஸ்தான மண்டபம். இம்மண்டபம் சுந்தர பாண்டியன் மண்டபம் என்றும் வழங்கப்படுகிறது. அழகிய கண்கவர் கலை நயம் கொண்ட சிற்பங்களுடன், 48 தூண்களுடன் இம்மண்டபம் இராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது..
மண்டபத் தூண்களில் யாளிகள், குதிரை வீரர்கள், பத்திரகாளி, துர்க்கை, நர்த்தன விநாயகர், வீரபாகு, சிவனார் திரிபுரம் எரிக்கும் காட்சி, திருமால் மற்றும் மகா லட்சுமியின் சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் செதுக்கப் பெற்றுள்ளன.
பிரம்மன் வேள்வி வளர்த்துத் திருமணச் சடங்குகள் நடத்த, இந்திரன் தேவயானையை முருகனுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க, தேவயானையைக் கைத்தலம் பற்றிய பெருமிதத்துடன், அதே வேளையில் நாணம் கலந்த மகிழ்ச்சியுடன் இருப்பது போன்று முருகப் பெருமானின் திருமணக் கோலம் எழிலுற வடிவமைக்கப் பெற்றுள்ளது.
இக்கோவிலில் திருவாட்சி மண்டபம் என்னும் பெரிய கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்திற்கு ஆறுகால் மண்டபம் என்ற பெயரும் உண்டு. இம்மண்டபத்தின் முன் புறம் ஏறும் படிகளின் இரு பக்கங்களிலும் தேர் இழுக்கும் இரு குதிரைகள் உள்ளன. இவை ஒரே கல்லில் செய்யப்பட்டு கலை நயத்துடன் விளங்குகின்றன. இந்த குதிரைகளின் உடலில் காணப்படும் அணிகலன்கள் மிகுந்த நுணுக்கத்துடன் செய்யப்பட்டுள்ளன.
இம்மண்டபத்தின் தூண்களில் மீனாட்சி அம்மனின் திக்விஜயம், ஹயக்ரீவர், நரசிம்மர், ஆஞ்சநேயர், மன்மதன், ஆலவாய் அன்னல், வராகிஅம்மன் என்று பல்வேறு அழகிய, தெய்வீக சிற்ப சிலைகள் உள்ளன.
இறைவன் சத்தியகிரீசுவரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்பு கலையம்சங்களும், இதர சிற்ப அம்சங்களும் பிரமிக்கத்தக்கவையாக உள்ளன.
படவேடு யோகராமசந்திர மூர்த்தி கோவில்
ஒரே கல்லில், ஒரே பீடத்தில் அமர்ந்தபடி இருக்கும் அரிய ராமர், சீதை சிலை
ஆஞ்சநேயருக்கு ஆசிரியராக இருந்து உபதேசம் செய்யும் யோகராமர்
திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே, நடந்துசெல்லும் தூரத்தில் உள்ள வீரக்கோயில் கிராமத்தில் அமைந்துள்ளது யோகராமசந்திர மூர்த்தி கோவில். படவேடு ரேணுகாதேவி கோவில் இணைப்புக் கோவிலாக யோகராமசந்திர மூர்த்தி கோவில் இருக்கிறது.
வால்மீகி இயற்றிய ராமாயணத்தின் முதல் ஸ்லோகத்தில், ராமபிரான் யோக ராமச்சந்திரனாக இருக்கும் அமைப்பைப் பற்றி பாடியுள்ளார். இந்த ஸ்லோகத்தின் பொருளை உணர்த்தும்விதமாக அமைந்த கோவில் இது.
இத்தலத்தில் ராமபிரான் புஷ்பக விமானத்தின் கீழ், வீராசனத்தில் அமர்ந்து, சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்து யோக நிலையில், மாணவனுக்கு பாடம் போதிக்கிற பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். இது போன்ற அமைப்பை காண்பது அரிதாகும். ராமர், சீதை இருவரின் சிலையும் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் அமர்ந்தபடி வடிக்கப்பட்டுள்ளது.
சுவாமிக்கு அருகில், ஆஞ்சநேயர் அமர்ந்து கையில் அடக்க ஒடுக்கமாக அமர்ந்த நிலையில், பனை ஓலைகளை கொத்தாக கையில் பிடித்து, ஓலைச் சுவடியை படிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். ஆஞ்சநேயருக்கு ஆசிரியராக இருந்து உபதேசம் செய்தவர் என்பதால், ராமபிரான் இங்கு குரு அம்சமாக போற்றப்படுகிறார். எனவே, சக்கரவர்த்திக்குரிய போர் ஆயுதங்கள் எதுவும் எதுவும் இல்லை. ஆனால், இளையபெருமாளான லட்சுமணன் வில்லும் கையுமாக நிற்கிறார்.
யோகராமர் உலகின் நிரந்தரமான மெய்ஞான நிலையை உணர்த்தும் கோலத்தில் இருப்பவர் என்பதால், நிலையான இன்பமான மோட்சம் கிடைக்க மட்டுமே இவரை வழிபடுகிறார்கள். இதனால், இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிக்கு விசேஷ பூஜை மட்டும் நடக்கும்.
கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக இத்தல ராமரை வழிபட்டு பலனடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருமாகாளம் மாகாளேசுவரர் கோவில்.
மறுபிறவியை தவிர்க்கும் அம்மனின் நெய்க்குளம் தரிசனம்
திருமணத்தடை நீங்க அரளி மாலை வழிபாடு
திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அருகில் உள்ள தேவார தலம் திருமாகாளம் மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பட்சயாம்பிகை (அச்சம் தவிர்த்த நாயகி). காளி அம்பன், அம்பாசூரன் என்னும் அசுரர்களை வதைத்த தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டதால், அவருக்கு மாகாளநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் தான் சோமாசிமாற நாயனார் சோம யாகம் செய்தார்.
மாகாளம் என்ற பெயர் பெற்ற சிவதலங்கள் இந்தியாவில் மூன்று இடங்களில் இருக்கின்றன. அவை வட இந்தியாவிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், தொண்டை நாட்டுத் தலமான இரும்பை மாகாளம், மற்றும் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான அம்பர் மாகாளம் என்ற இத்தலம்.
இத்தலத்து அம்பாள் பட்சயாம்பிகை (அச்சம் தவிர்த்த நாயகி), பக்தர்களின் மன துயரத்தையும், மனதில் உள்ள அச்சத்தையும் தீர்க்கும் நாயகியாக போற்றப்படுகிறார்.
இத்தலத்தில் அம்பாள் அச்சம் தீர்த்த நாயகிக்கு நெய் குளம் தரிசனமும் அன்ன பாவாடை சேவையும் மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. கருவறைக்கு முன்பாக 15அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர். அத்துடன் புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர்.
அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது. இதனால் இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இத்தலம் வந்து சிவப்பு அரளிப்பூ மாலைகள் இரண்டு தொடுத்து அதை இறைவன், இறைவிக்கு சார்த்தி ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டு, பின்பு ஒரு மாலையைப் பெற்று கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும்.
பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவில்
காசியைப் போல் அஷ்ட பைரவர்கள் அருள் பாலிக்கும் தலம்
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் இருந்து வடக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சியம்மன். காசியில், அஷ்ட பைரவர்களுக்கும் தனித்தனி கோயில்கள் அமைந்துள்ளன. தமிழகத்திலும் அஷ்ட பைரவர்கள் அருளும் ஒரு திருத்தலம் தான் பிளாஞ்சேரி. இங்கே தனித்தனி சன்னதிகளில் அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்க, சரபசூலினியும் குடிக் கொண்டிருக்கிறாள்.
சிவபெருமானின் திருவடிவங்களில் ஒன்று ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இரண்யகசிபுவை வதைத்த நரசிம்ம மூர்த்தியின் ஆக்ரோஷத்தைத் தணிக்க, சிவபெருமான் எடுத்த திருவடிவே ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இந்த மூர்த்தியின் வலப்புற இறக்கையில் இருந்து தோன்றியவளே ஸ்ரீசரப சூலினி. இந்தத் தலத்தில் ஸ்ரீசரப சூலினிக்குக் காவலாக எட்டு பைரவர்கள் தனித் தனிச் சன்னதிகளில் காட்சி தருகிறார்கள். சரபசூலினிக்கு மட்டுமல்ல, இங்கு வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கும் காவலாக இருந்து அருள்பாலிக்கிறார்கள் இந்த அஷ்ட பைரவர்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள். இவர்கள் எண்மரையும் வழிபட்டால், எட்டுவிதமான பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
எட்டு பேறுகள் அருளும் அஷ்ட பைரவர்கள்
அசிதாங்க பைரவர்: அன்ன வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் இவர், நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புக்தி நடைபெறும் அன்பர்களும் ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். இவரை வழிபட்டால் கல்வி, கலை, செல்வம், பேச்சாற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம். கலைத் துறையினர் இவரை வழிபட்டால் மகத்தான வெற்றிகளைப் பெறலாம்.
குரு பைரவர்: ரிஷப வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். சூரிய திசை, சூரிய புக்தி நடைபெறும் ஜாதகர்களும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். பித்ரு தோஷங்கள் நீங்கவும், திருமணத் தடைகள் விலகவும், கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் நீங்கிக் குடும்ப ஒற்றுமை ஏற்படவும் இவரை வழிபட வேண்டும்.
சண்ட பைரவர்: மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி நடைபெறும் ஜாதகர்களும் அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர். காரியத் தடைகள் அகலவும், துன்பங்கள் நீங்கவும், ரத்தம் சம்பந்தமான வியாதிகளில் இருந்து விடுபடவும் இவரை வழிபடுவது, விசேஷம்.
குரோதன பைரவர்: கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். புதன் திசை, புதன் புக்தி நடைபெறும் ஜாதகர்களும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். கடன்தொல்லை தீரவும், செல்வம் பெருகவும், தோல் வியாதிகள் விலகவும் இவரை வழிபடவேண்டும்.
உன்மத்த பைரவர்: குதிரை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். கேது திசை, கேது புக்தி நடைபெறும் ஜாதகர்களும் அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். சகலவிதமான திருஷ்டி தோஷங்கள் நீங்கவும், ஏவல், பில்லி-சூன்யம் போன்ற தீவினைகள் விலகவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறவும் இவரை வழிபடவேண்டும்.
கபால பைரவர்: யானை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களுடன் திகழ்பவர். சுக்கிர திசை, சுக்கிர புக்தி நடைபெறும் ஜாதகர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய மூர்த்தி இவர். இவரை வழிபட்டால் ஜனவசியம், ஆட்சி-அதிகாரம், அரசியலில் உயர் பதவிகள் ஆகியவை வாய்க்கும்.
பீஷண பைரவர்: சிம்ம வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். குரு திசை, குரு புக்தி நடைபெறும் ஜாதகர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், இதயம் தொடர்பான பிணிகள், பக்கவாதம் ஆகியவை விலகவும் இவரை வழிபடவேண்டும்.
சம்ஹார பைரவர்: நாய் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். பத்து திருக்கரங்களைக் கொண்டவர். சனி திசை-சனி புக்தி மற்றும் ராகு திசை-ராகு புத்தி நடைபெறும் ஜாதகர்களும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய பைரவர் இவர். சத்ரு உபாதைகள் நீங்கவும், கண்டங்களிலிருந்து தப்பிக்கவும், விபத்துகளில் சிக்காதிருக்கவும், வாக்குப் பலிதம் வாய்க்கவும் இவரை வழிபட்டு பலன் பெறலாம்.
ஆயுள் கண்டம் இருப்பவர்கள் வழிபட வேண்டிய பரிகார தலம்
ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் (உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கும் சிறந்த பரிகாரத் தலம் இது. அவர்கள், தேய்பிறை அஷ்டமியன்று மாலை 6 மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
பெருமாள் மீசையோடு காட்சி தரும் திவ்ய தேசம்
சென்னை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திவ்ய தேசம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசம். கருவறையில் மூலவர் பார்த்தசாரதி பெருமாள், தன் குடும்ப சமேதராக காட்சியளிக்கிறார். இந்தப் பெருமாள் ,அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால்,அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள். வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர்.
அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்ததால் இந்தப் பெருமாள் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். ஒன்பது அடி உயரம் உள்ள இந்த பெருமாள், சாரதிக்குரிய மீசையோடு காட்சியளிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். அதற்கு காரணம் மகாபாரதப் போரின் தொடக்கத்தில், இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார். இங்கு உற்சவ மூர்த்தி தன் கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் காட்சி தருகிறார்.
திருப்பதி லட்டு, உப்பிலியப்பன் கோவில் உப்பில்லா சாதம், மதுரை கள்ளழகர் கோவில் தோசை ஆகிய பிரசாதங்கள் பிரசித்தி பெற்றிருப்பதைபோல, இக்கோவிலில் சர்க்கரைப்பொங்கல் பிரசித்தி பெற்ற பிரசாதமாகும்.
உத்திரகோசமங்கை வராகி அம்மன் கோவில்
உலகின் முதல் வராகி அம்மன் கோவில்
காளியம்மன் போல் அமர்ந்திருக்கும் வராகி அம்மனின் வித்தியாசமான தோற்றம்
ராமநாதபுரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ளது மிகவும் பழமையான சுயம்பு வராகி அம்மன் கோவில். இந்த வராகி அம்மனுக்கு மங்கை மாகாளியம்மன் என்ற பெயரும் உண்டு. உலகின் முதல் சிவாலயம் என்று கருதப்படும் உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலின் காவல் தெய்வம் இந்த வாராகி அம்மன். இந்த இரு கோவில்களும், சதுர் யுகங்களையும் கடந்த பழமையான கோவில்கள் ஆகும். 'மண் முந்தியதோ, மங்கை முந்தியதோ' என்ற சொற்றொடர் இத்தலத்தின் தொன்மையினைக் குறிக்கும். எனவே இந்த வராகி அம்மன், உலகின் முதன்மையான வராகி அம்மன் என்று போற்றப்படுகின்றாள்.
இந்தியாவில் வராகி அம்மனுக்கு உத்தரகோசமங்கை, தஞ்சாவூர், காசி உள்ளிட்ட சில இடங்களில்தான் முதலில் கோவில்கள்/ சன்னதிகள் ஏற்பட்டன. அவற்றில் மிக மிக பழமையானது தான் உத்தரகோசமங்கையில் உள்ள மங்கை மாகாளி என்ற சுயம்பு வராகி அம்மன் கோவில்.
ஆறடி உயரத்தில் எட்டு திருக்கரங்களுடன் மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தரும் சுயம்பு வராகி அம்மன், வலது கரம் அபயம் அளிக்க, இடது கரம் வரதம் காட்ட, மற்ற கரங்களில் சங்கு, சக்கரம், ஏர்கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம் தாங்கிட, காளியம்மன் போல வலது காலை குத்த வைத்து, இடது காலை தொங்கவிட்டு உக்கிரமாக அமர்ந்த கோலத்தில் வராகி அன்னை இருக்கிறாள். வடக்கு திசை நோக்கி இருக்கும் அவள் காலடியில் பஞ்ச பூதங்களும் அடக்கம். இதனைக் குறிக்கும் வகையில் 5 பூதகணங்கள் அவள் காலடியில் உள்ளனர்.
அன்னையின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு அவளது இடது பக்கம் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார். இவர் அம்பாளின் கோபத்தை பெற்றுக் கொண்டு, பக்தர்களுக்கு அருள் மட்டும் கிடைக்க வழிவகை செய்கிறார். இப்படி விநாயகர் அருகில் இருக்கும் வராகி அம்மனை, வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது
வராகி அம்மனுக்கு மஞ்சளை அரைத்து சாத்தும் பரிகாரம்
வராகி அம்மனுக்கு மஞ்சள் அரைத்து சாத்துவது இந்த கோவிலில் சிறந்த பரிகாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஏனென்றால் அன்னையின் முகம் காட்டுப்பன்றி வடிவம் கொண்டது. பன்றிகள் பொதுவாக பூமியை கிளறி கிழங்கு வகைகளை உண்ணும். மஞ்சளும் பூமிக்கடியில் விளையும் ஒரு கிழங்கு வகை என்பதாலும், அதோடு மங்களகரமான பொருள் என்பதாலும் வராகி அம்மனுக்கு மஞ்சளை அரைத்து சாத்தும் வழக்கம் ஏற்பட்டது.
திருமணம், குழந்தை பேறு, வேலைவாய்ப்பு, தொழில் அபிவிருத்தி, பணம் மற்றும் சொத்து பிரச்சினை, வழக்கு மற்றும் நோய் நொடிகள் தீர பக்தர்கள் மஞ்சளை அரைத்து அம்பாளின் பாதத்தில் சாத்தி கோரிக்கைகளை சொல்லி வழிபடுவார்கள். அன்னையின் பாதத்தில் சாத்திய மஞ்சளை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். அதனை சிறிதளவு எடுத்து 3 நாட்கள் சாப்பிட வேண்டும். பெண்கள் உடலுக்கு பூசியும் குளிக்கலாம்.
பக்தர்கள் மஞ்சள் அரைத்து சாத்துவதற்கு மஞ்சள் பொடியை பயன்படுத்தக் கூடாது. கோவிலுக்கு வந்து தான் மஞ்சள் கிழங்கை அரைத்து கொடுக்க வேண்டும். இதற்காக கோவில் வளாகத்தில் 180 அம்மிகற்கள் வைக்கப்பட்டு உள்ளன.
மற்றொரு சிறப்பு பரிகாரமாக தேங்காய் விளக்கு ஏற்றுதலும் செய்யப்படுகிறது.
வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி திதியில் வராகி அம்மனை விரதமிருந்து வழிபட நல்ல பலன் கிடைக்கும். வராகி அம்மனிடம் மேற்கண்ட பரிகாரங்கள் மூலம் வைக்கும் வேண்டுதல்கள் யாவும் 3 முதல் 6 மாத காலத்தில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
முத்தாலங்குறிச்சி முக்குறுணி அரிசி விநாயகர் கோவில்
பிரம்மாண்டமான முக்குறுணி அரிசி விநாயகர்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில், தாமிரபரணி நதிக்கரையில் மிகவும் பழமையான, பிரம்மாண்டமான முக்குறுணி அரிசி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமான தோற்றத்துடன் காட்சி அளிக்கும் இவர் ஐந்தரை அடி உயர திருமேனி உடையவர் முப்புரி நூல் அணிந்து, பேழை வயிற்றுடன் அமர்ந்து இருக்கிறார். கூரையில்லாமல் வேப்பமரத்தடியில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் இந்த விநாயகருக்கு கூரை போட முயற்சிக்கையில் பல தடங்கல்கள் ஏற்பட்டன. அதனால் கூரை போடுவதற்கு அமைக்கப்பட்ட நான்கு கல் தூண்கள் அப்படியே இன்றளவும் உள்ளன. இந்தப் பிள்ளையாருக்கு எண்ணெய்க் காப்பு செய்ய வேண்டும் என்றால் பத்து லிட்டர் எண்ணெய் தேவைப்படும். வஸ்திரம் அணிவிக்க எட்டுமுழ வேஷ்டி வேண்டும். இரண்டு பேர் சேர்ந்துதான் வஸ்திரம் சாத்துவார்கள்.
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த விநாயகருக்கு, முக்குறுணி (18 படி) அளவு அரிசியை மாவாக்கி, பெரிய அளவில் ஒரே ஒரு மோதகம் செய்து படைப்பார்கள்.
அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில்
அனுமனின் தாகத்தை தீர்த்த முருகப்பெருமான்
கோவையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் மேல் இருக்கிறது, அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில். மலையின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல 586 படிக்கட்டுகள் உள்ளன.
அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிட்டு இந்த மலை வழியாக வரும் போது, அவருக்கு தாகம் ஏற்பட்டதால், அப்போது அவர் இம்மலையில் உள்ள முருகனை வேண்டியதால், அவர் தனது வேல் கொண்டு ஒரு சுனையை உருவாக்கி அனுமனின் தாகத்தை தீர்த்தார். இங்கு அனுமார் தீர்த்தம் உள்ளதால் இந்த பகுதி அனுமார்வாவி என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி அனுவாவி என்று அழைக்கப்பட்டு வருகிறது. அனுமனுக்கு குமரன் அருள்பாலித்ததால் 'அனுமக்குமரன் மலை' என்ற பெயரும் உண்டு.
கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண கோலத்தில் காட்சியளிப்பதால், திருமணம் ஆகாதவர்கள் இங்கு சென்று வேண்டினால் உடனடியாக திருமணம் ஆகும் என்றும், குழந்தை இல்லாதவர்கள் வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், இங்குள்ள அனுமன் குளத்தில் அதிகாலையில் குளித்தால் சகல நோயும் உடனடியாக குணமாகும் என்பது ஐதீகம்.
களக்காடு வரதராஜ பெருமாள் கோவில்
மூலிகைகளாலும், படாச்சாரமும் கலந்து தயார் செய்யப்பட்ட பெருமாள் விக்கிரகம்
வரதராஜப் பெருமாளும், வெங்கடாஜலபதியும் கருட சேவை சாதிக்கும் சிறப்பு
திருநெல்வேலியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள, களக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் கோவில். தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற வைணவ தலமாகத் திகழும் இக்கோவில். சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இங்கு மூலவராக வீற்றிருக்கும் வரதராஜ பெருமாள் சிலை மூலிகைகளாலும், படாச்சாரமும் அதாவது மரமும் கலந்து தயார் செய்யப்பட்ட விக்கிரகமாகும். 6 அடி உயரமுள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார். வரதராஜ பெருமாள் சன்னதிக்குத் தென்புறம் ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் அலமேலுமங்கை, பத்மாவதி தாயாருடன் கிழக்கு நோக்கியே தனி சன்னதி கொண்டிருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்புகளில் ஒன்றாகும். இந்தத் தலத்தில் ராஜகோபுரம் இல்லை அதற்குப் பதிலாக வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கடாஜலபதி சன்னதிகளில் இரு கோபுரங்கள் காணப்படுகின்றன.
இக்கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை அன்றும், பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழாவின் 5ம் நாள் இரவிலும், 2 கருட வாகனங்களில் தனித்தனியாக வரதராஜப் பெருமாளும், வெங்கடாஜலபதியும் வீதி உலா வருவது இத்தலத்தின் மற்றும் ஒரு தனிச்சிறப்பாகும்.
அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளியம்மன் கோவில்
அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளியம்மன்
வெள்ளைத் துணி அணிவிக்கப்படும் காளியம்மன்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில், சனி பகவான் திருத்தலமான திருநள்ளாறிலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அம்பகரத்தூர் என்னும் தலத்தில் அமைந்துள்ளது, அஷ்டபுஜ பத்ரகாளியம்மன் கோவில். தமிழக எல்லையில் அமைந்துள்ள இத்தலம், பேரளம் என்ற ஊரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது..உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் இக்கோவில், வட இந்தியாவுக்கு அடுத்த இரண்டாவது காளியம்மன் தலமாக விளங்குகின்றது.
அம்பர் மாகாளத்தில் அம்பன், அம்பராசுரன் என்ற இரண்டு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் மக்களை துன்பப்படுத்தி வந்தனர். அனைவரும் சிவபெருமானை வணங்கி காத்தருள வேண்டிக்கொண்டனர். அம்பிகையின் திருவருளால் அம்பராசுரனை அம்பன் கொன்று விட்டான். பின்னர் அவன் தேவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்க உடனே காளியாக மாறி அம்பனை விரட்டுகிறாள். ஓடிக்கொண்டு இருக்கும் போது அந்த அசுரன் கிடாமங்கலம் என்று ஊரில் எருமை கிடாவாக மாறுகிறான். அம்பகரத்தூரில்தான் அவன் காளியால் சம்ஹாரம் செய்யப்படுகிறான்.
அரக்கனை சம்ஹாரம் செய்த உடன் காளிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு இரண்டு அசுர முகமானது தலையில் ஒன்றும் காதில் ஒன்றும் தோன்றி விடுகிறது. இதனால் எம்பெருமானிடம் சென்று முறையிட்டுகிறாள். அவர் உபதேசித்தப்படி அம்பகரத்தூரில் இருந்து கோவில் திருமாகாளம் சென்று தனது திருக்கரங்களால் சிவலிங்கம் பிடித்து வைத்து பூஜை செய்து தோஷ நிவர்த்தி பெறுகிறார்.
ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் இங்கு திருவிழா நடக்கும். மகிஷாசுரன் சம்ஹார நினைவு வைபவம் மிகவும் முக்கியமான நிகழ்வாக கொண்டாடப்படும். ஏராளமான பக்தர்கள் பல ஊர்களில் இருந்து திரண்டு வருவார்கள்.
கருவறையில், காளியம்மன் வடதிசை நோக்கிக் காட்சி தருகிறாள். நீண்ட பற்கள், கோபமுகம். வலக்கரங்கள் நான்கில் சூலம், கத்தி, உடுக்கை, கிளி; இடக்கரங்கள் நான்கில் பாசம், கேடயம், மணி, கபாலம் ஏந்தியுள்ளாள். வலப்பாதத்தை மடித்து இடப்பாதத்தை அம்பரன்மீது ஊன்றி, திரிசூலம் கொண்டு அவனது மார்பைப் பிளப்பது போன்ற கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறாள். பத்ரகாளியம்மனுக்கு 18 மீட்டர் அளவில், எப்பொழுதும் வெள்ளைத் துணி அணிவிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இந்தத் துணியை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
பிரார்த்தனை
வழக்கு பிரச்சனைகள் உள்ளவர்கள், எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இங்கே வந்து வேண்டிக் கொள்கிறார்கள். ஏவல், பில்லி, சூன்யம் அனைத்தும் இங்கே வந்தால் தொலைந்து போகும்.
திருக்காட்டுப்பள்ளி அக்னீசுவரர் கோவில்
சிவபெருமான் கயிலாயத்தில் அம்பிகைக்கு உபதேசித்த கோலத்தில் காட்சி தரும் யோக தட்சிணாமூர்த்தி
திருவையாறு – கல்லணை சாலையில் திருவையாற்றுக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தேவார தலம் திருக்காட்டுப்பள்ளி அக்னீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி.
இத்தலத்து இறைவனை அக்னி பகவான் வழிபட்டதால், கோயிலுக்கு 'அக்னீசுவரம்' என்று பெயர் வந்தது. மூலவர் அக்னீசுவரர் கருவறை, தரை மட்டத்திலிருந்து கீழே ஒரு தாழ்வான பகுதியில் இருக்கிறது. பிரம்மாவுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் இது. அக்கினீசுவரர் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவுக்குத் தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது.
மூலவரைச் சுற்றிவரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். சிவபெருமான் கயிலாயத்தில் அம்பிகைக்கு சிவாகமங்களை உபதேசித்த போது இருந்த அதே கோலத்தில், இங்கே யோக தட்சிணாமூர்த்தியாக எழுந்து அருளி இருப்பது தனிச்சிறப்பாகும். இதனால் இந்த யோக தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி, ருத்ராட்சம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து, தன் கையில் சிவாகம நூல் ஏந்தி யோக குருவாகக் காட்சி தருவது சிறப்பு. இவரை அப்பர் தன்னுடைய தேவாரத்தில், ஞான நாயகன் என்று போற்றுகின்றார். இவரை வாரந்தோறும் வியாழக்கிழமையில் ஐந்து நெய்தீபம் ஏற்றி முல்லைப் பூவால் வழிபட்டால், திருமணம், கல்வி, செல்வம் யோகத்தை அடையலாம். வழக்குகளில் நம் பக்கம் நியாயம் இருந்தால், எல்லா தடைகளும் நீங்கி வெற்றி பெறலாம்.
இத்தலத்திலுள்ள இரண்டாம் பிராகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். சிலா வடிவிலுள்ள இவரின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே, கருவறை கோஷ்டத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம். இந்த அமைப்பும், இரண்டு குரு பகவான்கள் எழுந்தருளி இருப்பதும் இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.