
தென்பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர் கோவில்
வெண்கல சத்தம் எழுப்பும், காந்தக் கல்லாலான சோடச லிங்கம்
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தென்பொன்பரப்பி என்னும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் சொர்ணபுரீசுவரர். இறைவியின் திருநாமம் சொர்ணாம்பிகை. இக்கோவில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. ஒரு காலத்தில் இந்த ஊரில் செல்வம் கொழித்து, பொன்னும் பொருளும் அளவற்றுப் புழங்கியதால், இந்த ஊருக்கு பொன்பரப்பி என்று பெயர் ஏற்பட்டது. இதனால் தான், இத்தலத்து இறைவனுக்கு சொர்ணபுரீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.
இத்தலத்து இறைவன், சித்தர்களின் தலைமை குருவாகக் கருதப்படும் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஸ்ரீகாகபுஜண்டர் சிவதரிசனம் வேண்டி 16 ஆண்டுகள் கடுமையாக தவம் மேற்கொண்டதாகவும், அவரது தவத்தை மெச்சிய சிவபெருமான் பிரதோஷ நேரத்தில் 16 முகங்களை கொண்ட சோடச லிங்கமாக காட்சி தந்ததாக தலபுராணம் கூறுகிறது.
இத்தலத்து சிவலிங்கத் திருமேனி, காந்தத் தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கமாகும். சுமார் 5.5 அடி உயரத்திற்கு விஷ்ணு மற்றும் பிரம்ம பீடங்களின் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. பல சிவாலயங்களில் சோடச லிங்கம் இருந்தாலும், இங்கு லிங்கம் மட்டுமின்றி, விஷ்ணு பிரம்ம பீடங்களும் 16 முகங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது இங்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பாகும்.
தன்னை வணங்கும் பக்தர்கள் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ வேண்டும் என்ற பொருளிலேயே இங்குள்ள இறைவன் சோடச லிங்கமாக காட்சிதருகிறார்.
சொர்ணபுரீஸ்வரரின் சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ள காந்தக்கல்லானது, நவபாஷாணத்திற்கு ஒப்பானதாகும். இந்த கல்லை கைகளினால் தட்டிப் பார்த்தால் வெண்கலச் சத்தம் எழுவதும், இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
இந்த கோயிலானது வாயு தலத்திற்கு இணையானதாக இருப்பதால், இதன் கருவறையானது மிகவும் உக்கிரமானதாக இருக்கும் என்றும், அதனால் கருவறையில் ஏற்றப்படும் தீபமானது, துடித்துக் கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டரின் நாடிச் சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பதை நாம் காணலாம்.
பிரதோஷ வழிபாடு, தேன் அபிஷேக மகிமைகள்
திருமணத்தடையின் காரணமாக நீண்ட காலமாக திருமணமாகாதவர்கள், 16 பிரதோஷ தினங்களில் தொடர்ந்து ஈசனை தரிசித்து வந்தால் திருமணத்தடை நீங்கும். ராகு, கேது, செவ்வாய் மற்றும் களத்திரதோஷம் உள்ளவர்கள் மற்றும் பலவித கிரக தோஷங்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மனபாரம் உள்ளவர்கள், நிலத்தகராறு, பில்லிசூனியம் ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சொர்ணபுரீஸ்வரரை தொடர்ந்து பிரதோஷ காலங்களில் வழிபட்டு வந்தால் பிரச்சனைகள் தீருவதோடு, கைவிட்டுப் போன சொத்துக்கள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு தேன் அபிஷேகம் செய்தால் சுப பலன்கள் கிடைக்கும்.
செவ்வாய், வெள்ளி ஞாயிறு, ராகு காலங்களும் மற்றும் திங்கட்கிழமை, பெளர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களும், தேன் அபிஷேகம் செய்ய உகந்த நாட்களாகும். தோஷமுடையவர்கள் தேன் அபிஷேகம் செய்த தேனை 16 தினங்களுக்கு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சுப பலன்கள் கிடைக்கும்.

படவேடு லட்சுமி நரசிம்மர் கோவில்
லட்சுமி நரசிம்மரின் வித்தியாசமான தோற்றம்
காட்பாடியிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள சந்தவாசலிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது படவேடு என்னும் கிராமம். தசாவதார பெருமாள்களில் ஒருவரான பரசுராமன் அவதரித்த தலம் இது. இந்த கிராமத்தில் ஓடும் கமண்டலா ஆற்றின் கரையில் அமைந்துள்ள மலையின் உச்சியில் அமைந்துள்ளது, பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோவில்.இந்த மலைக்கோவிலுக்கு செல்ல சாலை வசதி உண்டு.
இக்கோவில் வெறும் மூலவர் சன்னதி மட்டும் கொண்ட சிறிய கோவில். பொதுவாக எல்லா லட்சுமி நரசிம்மர் கோவில்களிலும் லட்சுமி தேவி நரசிம்மரின் இடது தொடை மீது அமர்ந்து காட்சி தருவாள். இத்தலத்தில் உள்ள லட்சுமி நரசிம்மரின் சிறப்பு என்னவென்றால், லட்சுமி தேவி, நரசிம்மரின் வலது பக்க மடிமீது அமர்ந்து காட்சி தருவது தான். லட்சுமி நரசிம்மரின் இந்த தோற்றத்தை நாம் வேறு தலங்களில் தரிசிப்பது அரிது.

நத்தம் வாலீஸ்வரர் கோவில்
நெற்றியில் மூன்றாவது கண் அமைந்த அம்பிகை
காலில் பாதச்சலங்கையுடன், பரத நாட்டிய உடையுடன், நாட்டிய கோலத்தில் அம்பிகையின் அபூர்வ தோற்றம்
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.
அம்பிகை ஆனந்தவல்லிக்கு, நெற்றியில் மூன்றாவது கண் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. அம்பிகை அபய, வரத முத்திரையுடனும், கைகளில் அங்குசம் பாசம் ஏந்தி, காலில் பாதச்சலங்கையுடன், பரதநாட்டிய உடையுடன், நாட்டிய கோலத்தில் காட்சி தருவது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும்.
இத்தலத்தில் சிவராத்திரி அன்று மூன்றாம் காலத்தில், அதாவது லிங்கோத்பவர் காலத்தில், சிவபெருமானும் பார்வதி தேவியும் நாட்டியமாடியதாக ஐதீகம், அதனால் தான் அம்பிகைக்கு ஆனந்தவல்லி என்று பெயர்.
அன்னப்பாவாடை நெய்க்குள தரிசனம்
தை மாதம் ரேவதி நட்சத்திர தினத்தன்று, அம்மனுக்கு அன்னப் பாவாடை வைபவம் நடைபெறும். சர்க்கரைப் பொங்கல் முதலிய அன்ன வகைகள், பட்சணங்கள், பழவகைகள் ஆகியவை அம்பிகைக்கு முன் படையலிடப்படும். சர்க்கரை பொங்கல் முதலில் அன்ன வகைகள் பாத்தி போல் கட்டப்பட்டு அதில் நெய் ஊற்றப்படும். நெய்க்குளத்தில் அம்மன் உருவம் தோற்றமளிப்பது கண் கொள்ளாக் காட்சியாகும்.
ராகு, கேது தோஷ நிவர்த்தி தலம்
ஒரு சமயம் அம்பிகைக்கு ஏற்பட்ட சர்ப்ப தோஷத்தை, இத்தலத்து இறைவன் வாலீசுவரர் நிவர்த்தி செய்தார். அதனால் இத்தலம் ராகு கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் முதலியவற்றுக்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
பிரார்த்தனை
கலைகளில் சிறந்து விளங்க இந்த அம்பிகை அருள் புரிகிறாள். வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு தேனாபிஷேகம் செய்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், கலைகளில் உன்னத நிலையை அடைய முடியும்.

திருச்சுழி திருமேனிநாதர் கோவில்
பச்சிலை மூலிகையால் உருவாக்கப்பட்ட அபூர்வ நடராஜர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை என்ற ஊரிலிருந்து, 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருச்சுழி. பாண்டிய நாட்டில் உள்ள 14 தேவார தலங்களில் இத்தலமும் ஒன்று. இறைவன் திருநாமம் திருமேனிநாதர். இறைவியின் திருநாமம் துணைமாலையம்மை. இத்தலத்தில் பிரளய வெள்ளம் ஏற்பட்டபோது, ஒரு அம்பினால் சுழித்து அந்த வெள்ளத்தை பாதாளத்திற்குள் செலுத்தியதால், இந்த ஊர் 'திருச்சுழியல்' என்று அழைக்கப்பட்டது. ரமண மகிரிஷி பிறந்த இடம் இது.
இந்தத் தலத்தில் உள்ள நடராஜரின் திருமேனி கொள்ளை அழகுடன் திகழ்கின்றது. மிக மிக தத்ரூபமாக வடிக்கப்பட்ட இந்த நடராஜரின் விக்கிரகம் பச்சிலை மூலிகையால் உருவாக்கப்பட்டது என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இப்படிப்பட்ட பச்சிலை மூலிகையால் உருவான நடராஜரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

வேடசந்தூர் நரசிம்ம பெருமாள் கோவில்
சிங்கமுகமின்றி, சாந்த முகத்துடன் தோற்றமளிக்கும் நரசிம்ம பெருமாள்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அமைந்துள்ளது நரசிம்ம பெருமாள் கோவில்.இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது.
இத்தலத்தில் சுவாமி நரசிம்ம பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், இங்கு பெருமாளின் நரசிம்ம வடிவம் கிடையாது. மூலஸ்தானத்தில் சங்கு, சக்கரத்துடன், அபய, வரத முத்திரைகள் காட்டியபடி பெருமாள் சாந்த முகத்துடன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது, அதிக உக்கிரத்துடன் இருந்தார். அவரை சாந்தப்படுத்தும்படி தேவர்கள் சிவனை வேண்டினர். எனவே, அவர் சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, உக்கிரத்தைக் குறைத்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இங்கு இவர், சாந்தமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மேலும் சன்னதி முன்புள்ள மண்டபத்தில், சிவனின் லிங்க வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இங்கு ஒரே சமயத்தில் சிவன், பெருமாள் இருவரின் தரிசனம் பெறலாம்.
பிரார்த்தனை
விபத்து மற்றும் எம பயம் நீங்க, ஆயுள் அதிகரிக்க, திருமணத் தடைகள் நீங்க இங்கு நரசிம்ம பெருமாளிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

முத்துமலை முருகன் கோவில்
முருகப்பெருமானின் தலைக்கிரீடத்திலிருந்து முத்து விழுந்த மலை
கோவைக்கும் பொள்ளாச்சிக்கும் இடையே உள்ள கிணத்துக்கடவு என்ற ஊரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் முத்துகவுண்டனூரில் உள்ளது, முத்துமலை முருகன் கோவில். மலை மேல் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு செல்ல சாலை வசதியும் உண்டு.
முருகப்பெருமான் தனது வாகனமான மயிலின் மீது உலகைச் சுற்றிக் கொண்டிருந்தபோது, அவரது கிரீடத்திலிருந்து ஒரு முத்து விழுந்தது. முருகன் அந்தமுத்துவைத் தேடியபோது, அது இந்த மலையின் மீது விழுந்திருந்தது. முருகப்பெருமான் அதை மீட்க இம்மலையின் மீது கால் வைத்தார். முருகனின் முத்து இம்மலையில் விழுந்ததால், இந்த மலை முத்துமலை என்று அழைக்கப்பட்டது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, முருகப்பெருமான் ஒரு உள்ளூர் பெண்ணின் கனவில் வந்து, மூன்று காரைச் செடிகளின் (காட்டு மல்லிகை) வரிசையின் கீழ் புதைந்து இருப்பதாகக் கூறினார். இதை அந்தப் பெண் உள்ளூர் பெரியவர்களிடம் கூறியபோது, யாரும் நம்பவில்லை. தொடர்ந்து மூன்று கிருத்திகை மற்றும் பரணி நட்சத்திர நாட்களில் அவள் கனவில் முருகன் மீண்டும் தோன்றினார். அந்தப் பெண் முருகனை தேடிச் சென்றபோது, மூன்று காரைச் செடிகள் வரிசையாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். ஊர் பெரியவர்கள் அவளை நம்பி, அந்த இடத்தில் ஒரு வேல் (ஈட்டி) நிறுவி, அதை முருகனின் பிரதிநிதியாகக் கருதி வழிபட்டனர். பின்னர் இந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டு முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இத்தலத்தில் நாகர் சன்னதி அமைந்துள்ளது. அதனால் நாக தோஷ நிவர்த்திக்காக விசேஷ பூஜைகள் இத்தலத்தில் நடத்தப்படுகின்றது. கோவிலுக்கு அருகில் ஒரு எறும்புப் புற்று உள்ளது. இந்த எறும்புப் புற்றிலிருந்து இரவு நேரங்களில் ஒரு ஒளி வெளிப்படுகிறது. இந்த ஒளியை பல பக்தர்கள் தரிசனம் செய்திருக்கிறார்கள். இந்த ஒளிர்விற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை.

திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்
திருமணத்தடை நீக்கும் வராகி அம்மன்
கோவில் உரலில், விரலி மஞ்சள் இடித்து, வராகி அம்மனுக்கு செய்யப்படும் அபிஷேகம்
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர். இறைவியின் திருநாமம் ஒப்பிலாநாயகி. திருநெடுங்களம் என்றால் 'சமவெளியில் அமைந்த பெரிய ஊர்' என்று பொருள்.
இறைவன் கருவறையின் வெளிச்சுற்றில் சப்த கன்னியர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். சப்த கன்னியரில் ஐந்தாவதாக விளங்கும் வராகி அம்மன் சிறந்த வரப்பிரசாதி. மனித உடலும், பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள் வராகி அம்மன்.
இத்தலத்து வராகி அம்மன் தடைகளை நீக்கி திருமணம் வரம் கைகூட அருள்பவள். சப்த கன்னியரின் அருகிலேயே, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சோழர் காலத்து உரல் ஒன்று உள்ளது.
வராகி அம்மனுக்கு வாரத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ராகு காலத்தின்போது சிற்ப உரலில், விரலி மஞ்சளை இடித்து அபிஷேகம் செய்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும். இந்த வழிபாட்டு முறை இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். திருமண வரம் வேண்டும் ஆண், பெண் என இருபாலரும், பெரும் அளவில், இத்தலத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.
பிரார்த்தனை
வளர்பிறை பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபடுவது மிகுந்த நற்பலன்களை தரும். பகை, வறுமை, பிணி, தடைகள் அகலும். பில்லி, சூன்யம், மாந்திரீகம் விலகி ஓடும். எதிரிகள் ,பகைவர்கள், தீயோர் விலகிடுவர்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்
விநாயகர் சதுர்த்தி திருவிழா
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா, வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது. 10 நாட்கள்
நடைபெறும் திருவிழாவில் ஒன்பதாம் நாள் தேர் திருவிழா நடைபெறுகின்றது. 10-ஆம் நாள் விநாயகர் சதுர்த்தி அன்று கற்பக விநாயகருக்கு ராட்சதக் கொழுக்கட்டை
படைக்கப்படுகின்றது. விழா நாட்களில் தினமும் காலையில் கேடகத்திலும், மாலையில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் விநாயகர் எழுந்தருளி, வீதியுலா நடைபெறும்.
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே செய்யப்படும் சந்தனகாப்பு அலங்காரம்
விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒரு சில கோவில்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும்
பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும், மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செய்வார்கள். சண்டிகேசுவரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வார்கள். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்வார்கள். தேரோட்டம் நடைபெறும் அதே நேரத்தில் மூலவர் கற்பக விநாயகருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால், அக்காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை சந்தனகாப்பு அலங்கார தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும்.
முக்குறுணி கொழுக்கட்டை படையல்
விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ராட்சத கொழுக்கட்டை தயாரித்து, நைவேத்யம் செய்வார்கள். 18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி, கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ ஆகியவற்றை சேர்த்து ஒரே கலவையாக்கி, உருண்டை சேர்த்து அதனை துணியால் கட்டி, மடப்பள்ளியில் அன்னக் கூடையில் வைத்து சுட்டுவார்கள். தண்ணீர் நிரப்பப்பட்ட அண்டாவினுள் இறக்கி அதன் அடிப்பகுதியில் படாதவாறு தொங்கவிட்டு, மடப்பள்ளி முகட்டில் கயிற்றால் கட்டி விடுவார்கள். பின்னர் அது, அந்த பெரிய அளவிலான பாத்திரத்தில் 2 நாள் தொடர்ச்சியாக வேக வைக்கப்படும். பின்னர் இது உலக்கை போன்ற கம்பில் கட்டி பலர் சேர்ந்து காவடி போல தூக்கி வந்து, மூலவருக்கு உச்சிகால பூஜையில் நிவேதனம் செய்வார்கள். மறுநாள் கொழுக்கட்டை சூடு ஆறிய பின்னர், நகரத்தார். ஊரார்கள் மற்றும் பணியாளர்களுக்கு பிரித்து பிரசாதமாகக் கொடுப்பர்கள்.

திருச்சிற்றம்பலம் புராதனவனேசுவரர் கோவில்
பூவை விழுங்கும் விநாயகர்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில், 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம் என்ற திருத்தலம். இறைவன்
திருநாமம் புராதனவனேசுவரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இக்கோவில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலத்து மண்ணை உடலில் பூசிக்கொண்டால் முக்தி கிடைக்கும் என்கிறார்கள்.
இக்கோவிலில் பெரியநாயகி அம்மன் சன்னதியை வலம் வரும் இடத்தில், பூவிழுங்கி விநாயகர் என்ற பெயரில் பழம் பெருமை வாய்ந்த விநாயகர் உள்ளார்.
அம்மன் சன்னதியை வலம் வருவோர் இவரது செவியில் உள்ள துவாரங்களில் தமது வேண்டுதல்களை மனதில் நினைத்து பூக்களை வைக்கிறார்கள். காதில் வைக்கப்படும் பூவை இவ்விநாயகர் காதுக்குள் இழுத்துக் கொண்டால் நமது வேண்டுதல் நிறைவேறும், நினைத்த காரியம் கைகூடும். காரியங்கள் நிறைவேறாது என்றால் செவிகளில் வைத்த பூக்கள் அப்படியே வைத்தவாறே இருக்கும்.பக்தர்களின் நம்பிக்கையாக இன்றும் பூ வைக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த விநாயகரால் இத்தலத்தின் பெயரே பூவிழுங்கி விநாயகர் கோவில் என்றே மருவி வருகிறது.

குணசீலம் தார்மீகநாதர் கோவில்
பித்ருதோஷ நிவர்த்திக்கான தலம்
தோல் நோய்களை தீர்க்கும் அம்மனின் குங்குமப் பிரசாதம்
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள குணசீலத்தில் அமைந்துள்ளது தார்மீகநாதர் கோவில். இறைவியின் திருநாமம் ஹேமவர்ணேஸ்வரி.
ஒரு சமயம் இப்பகுதியில் பிரளயம் ஏற்பட்ட போது காவிரி ஆற்றில் ஒரு சிவலிங்கம் அடித்து வரப்பட்டது. இரண்டாகப் பிளந்த அந்த லிங்கத்தின் ஒரு பகுதி வடகரையிலும் (குணசீலத்திலும்) மற்றொன்று தென் கரையிலும் பிரதிஷ்டை ஆனது. அவ்வாறாக உருவானதுதான் குணசீலம் தார்மீக நாதர் மற்றும் திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் கோவில்கள். இறைவனின் பிளவுபட்ட பகுதி பின்புறம் உள்ளதால், சுவாமி தரிசனம் செய்யும்போது நமக்கு எவ்வித வேறுபாடும் தெரியாது.
இத்தலத்து தார்மீகநாதர் பிளவுபட்ட திருமேனியாக காணப்படுவதாலும், இவர் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பதாலும் கேட்டவர்களுக்கு கேட்ட வரங்களை தரும் தெய்வமாக தார்மீகநாதர் திகழ்கிறார். பக்தர்களின் பித்ருதோஷத்தை நிவர்த்தி செய்யும் பரிகார நாயகராக இவர் அருள் புரியுன்றார். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பித்ருதோஷ நிவர்த்தி பரிகாரம் இக்கோவிலில் செய்யப்படுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், பித்ருதோஷ பரிகார நிவர்த்தி வழிபாட்டில் பங்கேற்கின்றனர்.
கோவிலின் மகா மண்டபத்தின் வலதுபுறத்தில் இறைவி ஹேமவர்னேசுவரி அம்மன் சன்னதி உள்ளது. ஹேமவனேசுவரி என்றால் தங்கநிறத்தை உடையவள் என்று பொருள். இங்கு நின்ற திருக்கோலத்தில், இரண்டு கரங்களுடன் அபயஹஸ்த முத்திரைகளுடன், தெற்குத் திசை நோக்கி புன்னகைத் தவழ அம்மன் காட்சியளித்து வருகிறார்.
இந்த அம்மனுக்கு குங்கும் அர்ச்சனை செய்து, வழிபாடு நடத்தி, அப்போது தரப்படும் குங்குமத்தை பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.

மாறாந்தை கயிலாயநாதர் கோவில்
தட்சிணாமூர்த்தியின் சிரசில் சிவலிங்கம் அமைந்திருக்கும் அபூர்வ காட்சி
திருநெல்வேலியிலிருந்து மேற்காக தென்காசி செல்லும் சாலையில், 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மாறாந்தை கயிலாயநாதர் கோவில். இறைவியின் திருநாமம் ஆவுடையம்மாள். இத்தலத்து இறைவன் திருமேனியில் பசு மாட்டின் குளம்படி தடம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
இப்பகுதி முற்காலத்தில், மாறன் தாய நல்லூர் என்று அழைக்கப்பட்டது. 'மாறன்' என்பது பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். 'தாயம்' என்பதற்கு 'உரிமை என்று பொருள். பாண்டிய மன்னன் தம் வரி உரிமையை, மக்களுக்கு விட்டுக் கொடுத்த நல்ல ஊர் என்னும் பொருள்படும்படியாக இப்பகுதி இப்பெயரால் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இப்பெயர் மருவி, தற்போது மாறாந்தை என அழைக்கப்படுகிறது.
பொதுவாக, ஆலமர்ச் செல்வன் என்று போற்றப்படும் தட்சிணாமூர்த்தி, சனகாதி முனிவர்கள் நான்கு பேர்களுக்கு கல்லால மரத்தடியில் உபதேசம் செய்யும் கோலத்தில் காட்சி தருவார். இதில் சற்று மாறு பட்ட கோலத்திலும் சில தலங்களில் அருள் புரிகிறார். தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி சில தலங்களில் திசைமாறியும் எழுந்தருளியுள்ளார். திசைமாறியும், வித்தியாசமான திருக்கோலத்திலும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை வழிபட நினைத்த நல்ல காரியங்கள் உடனே நிறைவேறும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
வேறெந்த ஆலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பாக, இவ்வாலயத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் சிரசில் சிவலிங்கம் உள்ளது. பாலபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் செய்து இந்த தட்சிணாமூர்த்தியை வழிபடுவோருக்குச் சிறந்த கல்வி, உயர்பதவி, தொழில் முன்னேற்றம் கிடைக்கின்றன.

திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில்
பெருமாளுக்கு மிகவும் பிரியமான திவ்ய தேசம்
காவிரியில் 108 முறை நீராடிய பலன் தரும் தலம்
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்யதேசம், திருச்சேறை. மூலவரின் திருநாமம் சாரநாதப் பெருமாள். தாயாரின் திருநாமம் சாரநாயகித் தாயார், பஞ்சலக்ஷ்மித் தாயார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்ததால், இத்தலத்தின் மூலவர் சாரநாதப் பெருமாள் என்று அழைக்கப்பட்டு இத்தலமும் திருச்சாரம் என்று பெயர் பெற்றது. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது. தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்ரம் என்று திருமாலால் அருளப்பட்ட தலம் இது. இத்தலத்து தீர்த்தம் சார தீர்த்தம். இந்தப் புஷ்கரணியின் மேற்குக் கரையில், காவிரித்தாய், ஸ்ரீபிரம்மா, அகத்தியமுனி ஆகியோருக்குச் சந்நிதிகள் அமைந்துள்ளன.
இத்தலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்று 5 தேவியருடன் அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித் தாய் காட்சி அளிக்கிறாள். இதற்கான பின்னணியை தல வரலாறு விவரிக்கின்றது.
ஒரு முறை காவிரித் தாய், திருமாலிடம், கங்கைக்கு கிடைக்கும் பெருமை தனக்கும் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சார புஷ்கரிணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். காவிரித் தாயின் தவத்தை மெச்சி, திருமால் ஒரு குழந்தையின் வடிவில் காவிரித்தாயிடம் வந்து, அவளின் மடியில் அமர்ந்தார். தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது என்று காவிரித் தாய் கூறியதும், கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் தோன்றி திருமால் அருள்பாலித்தார். மேலும் வேண்டும் வரம் அளிப்பதாகவும் உறுதி அளித்தார். காவிரித் தாய் திருமாலிடம், 'தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இத்தலத்தில் அருள்பாலிக்க வேண்டும். மேலும் கங்கையிலும் மேன்மையை எனக்கு தந்தருள வேண்டும்' என்று வேண்டினாள். திருமாலும் அவ்வண்ணமே செய்தார். அன்று முதல், கங்கைக்கு நிகராகக் காவிரியும் போற்றப்படலானாள்.
காவிரித் தாய்க்கு பெருமாள் காட்சியளித்த தைமாதம் பூச நட்சத்திரம், இங்கே விமரிசையாகக் கொண்டாடப்பெறுகிறது.
திருச்சேறை பெருமாளை ஒருமுறையேனும் வழிபட்டால், காவிரியில் 108 முறை நீராடிய பலன் கிடைக்கும் என்றும், நம் பாவங்களெல்லாம் தொலையும் என்றும் ஆச்சார்யர்கள் சொல்கிறார்கள்.

உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்
விஷக்கடியை குணப்படுத்தும் விஷ ராஜா
நாகத்தை வாயில் கடித்தபடி இருக்கும் வித்தியாசமான கோலம்
தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால், இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.
காளத்தீஸ்வரர் கோவிலுக்கு வெளியில், நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத நாகராஜனின் அம்சமான விஷ ராஜா எழுந்தருளி இருக்கிறார். இவர் தனது வாயில் நாகத்தை கடித்தபடி காட்சி தருகிறார். விஷ பூச்சிகளால் கடிபட்டவர்கள் பௌர்ணமியன்று இவருக்கு பாலபிஷேகம் செய்வித்து வஸ்திரம் அணிவித்து, அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் விஷக்கடிக்கு உள்ளானவர்கள் அதிலிருந்து குணமாகிறார்கள். இத்தலத்து விஷ ராஜாவை வழி பூஜை செய்து வழிபட்டவர்கள், எந்தவிதமான விஷக்கடிக்கும் உள்ளாவதில்லை என்பது கூடுதல் சிறப்பு.
காளிதேவியுடன் எழுந்தருளி இருக்கும் சப்த மாதர்கள்
பொதுவாக கோவில்களில் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டாதேவி ஆகிய சப்த மாதர்கள் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் அஷ்ட மாதர்களை (எட்டு அம்பிகையர்) நாம் தரிசிக்கலாம. ஆதிசக்தியிலிருந்து ஏழு அம்சங்களாக ஏழு தேவியர் தோன்றினர் என்றும், அவர்களே சப்தமாதர்களாக அருளுகின்றவர் என்றும் தேவி பாகவதம் குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் இங்கு ஆதிசக்தியின் வடிவமாக காளிதேவியும், சப்த மாதர்களுடன் சேர்ந்து காட்சி தருகிறாள் இவர்களது தரிசனம் விசேஷ பலன் தரக்கூடியது.

சென்னை வேளச்சேரி தண்டீசுவரர் கோவில்
எமதர்மன் மீண்டும் தண்டம் பெற்ற தலம்
திருக்கடையூருக்கு இணையாக ஆயுள் விருத்தி அளிக்கும் தலம்
சென்னை மாநகரின் ஒரு பகுதியான வேளச்சேரியில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த தண்டீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கருணாம்பிகை.
முதலாம் இராஜராஜசோழனின் தந்தையாகிய சுந்தரசோழனால் இக்கோவில் கட்டப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது.
சோமாசுரன் என்னும் அசுரன், நான்கு வேதங்களையும் பிரம்மாவிடமிருந்து பறித்துச்சென்றான். அதனை திருமால் மீட்டு வந்தார். அசுரனிடம் தாங்கள் இருந்த தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வேண்டி தவமிருந்தன. வேதங்களின் சிவ வழிபாட்டிற்கிரங்கி காட்சி தந்த சிவபெருமான் வேதங்களுக்கு ஏற்பட்ட தோஷம் நீக்கி அருளினார்.
வேதங்கள் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதால் 'வேதச்சேரி' என்றழைக்கப்பட்டு, பின்பு "வேளச்சேரி' என்று மருவியது. வேதஸ்ரேணி என்பது இத்தலத்தின் புராணப் பெயராகும்.
திருக்கடையூரில், 16 வயதே ஆயுள் பெற்றிருந்த சிவ பக்தன் மார்க்கண்டேயனின் ஆயுளை எடுக்கச் சென்ற எமதர்மனை, சிவபெருமான் காலால் எட்டி உதைத்து தண்டித்தார். எமதர்மனின் பதவியையும் பறித்தார். இழந்த பதவியைப் பெற எமதர்மன், பூலோகத்தில் சிவத்தல யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தான். அப்போது எமதர்மனுக்கு காட்சி தந்த சிவன், தண்டம் கொடுத்து பணி செய்யும்படி அறிவுறுத்தி அருளினார். எனவே இத்தலத்து சிவன், 'தண்டீஸ்வரர்' என்று பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.
பிரார்த்தனை
எமதர்மன் மீண்டும் தண்டம் பெற்ற திருத்தலம் என்பதால், இங்கு மக்கள் அறுபது, எண்பதாம் திருமணம் மற்றும் ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்து கொள்கிறார்கள்.
வேலை இழந்தவர்கள் நல்ல வேலை கிடைக்க தண்டீஸ்வரரை வேண்டிக் கொள்கிறார்கள். .

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்
தேரினை ஆமை இழுத்துச் செல்லும் வடிவமைப்பு - வியக்க வைக்கும் கலைப்படைப்பு
சுழலும் தேங்காய்
தனித்தனியாக சுற்றும் வளையங்களால் இணைக்கப்பட்ட கிளிகள்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரின் தென் கிழக்குப் பகுதியில், மலை மீது அமைந்துள்ளது, அர்த்தநாரீசுவரர் கோவில். கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற ஏழு தலங்களில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம். இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இக்கோவிலில் அர்த்தநாரீசுவரர், செங்கோட்டுவேலன், ஆதிகேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள் அமைந்துள்ளன.
இக்கோவிலில் உள்ள எல்லா சன்னதிகளின் முன்பாக உள்ள மண்டபங்களில், பல்வேறு விதமான அழகிய மற்றும் நுணுக்கமான வேலைப்பாடு உள்ள சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இத்தலத்தில் எழுந்தருளில் உள்ள முருகப்பெருமானின் திருநாமம் செங்கோட்டு வேலவர். அவர் சன்னிதி முன்னுள்ள மண்டபத்தில் ஒரு தேர் போன்ற வடிவம் உள்ளது. அதன் கீழ் ஆமை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டு, அந்தத் தேரினை ஆமை இழுத்துச் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வேறு எந்த கோவில்களிலும், நாம் காண முடியாத வியக்க வைக்கும் கலை படைப்பாகும்.
இந்த செங்கோட்டு வேலவரது சன்னதியின் முன்னே அமைந்துள்ள மண்டபத்திலும் மற்ற மண்டபங்களிலும் அமைந்துள்ள எல்லா தூண்களிலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள், அக்காலத்திய சிற்பக்கலையின் உன்னதத்தை நமக்கு விளக்குகின்றன. ஒவ்வொவொரு சிற்பத்தின் நுண்ணிய அழகிய வேலைப் பாட்டினையும், ஒவ்வொரு சிற்பத்திலும் காணப்படும் கற்பனை வளத்தினையும், இந்த சிற்பங்களை செதுக்கியவர்கள் எத்தனைப் பொறுமையாக, நிதானமாக, அறிவுக் கூர்மையுடன் இவற்றை செதுக்கி இருப்பார்கள் என்று நம்மை எண்ண வைக்கிறது. குதிரை மீது அமர்ந்திருக்கிற போர் வீரர்களின் சிற்பங்கள் மண்டபத் தூண்களில் கம்பீரத்துடன் திகழ்கின்றன. குதிரைகளின் உடலும் வாளேந்திய வீரர்களின் ஆவேசம் கூடிய மிடுக்கும், இடையிடையே அமைந்த தெய்வத் திருமேனிகளும் விலங்குகளும் பறவைகளுமாக நுட்பத்துடன் வடிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் கோவிலின் மண்டப மேற்கூரையில் எட்டுக்கிளிகள் வட்டத்திற்கு வெளியே அமைந்தது போலவும், நடுவிலே ஒரு தேங்காய் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேங்காயை நாம் கைகளால் சுழற்ற முடியும். இதில் உள்ள கிளிகளின் மூக்கில் வளையம், காலில் வளையம், வால்களில் வளையம் என்று அமைத்து, இவை அனைத்துமே தனித்தனியாக சுற்றுவது போல அமைக்கப்பட்டுள்ளது, நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்த சிற்பத்தில், மேலிருந்து தொங்கும் சங்கிலிகள்,தொங்கும் தாமரைப்பூ,அதன் இதழ்களில் அமர்ந்து,மகரந்தத்தை ருசிக்கும் எட்டு கிளிகள், கிளிகளுக்கு காவலாக வெளியில் நான்கு பாம்புகள் ஆகிய எல்லாமே ஒரே கல்லால் வடிக்கப்பட்டது என்று அறியும் போது நம்மை வியப்பின் உச்சத்துக்கே இட்டுச் செல்லும்.
இந்த கோவிலின் சிற்பங்களை பார்த்து ரசிப்பதற்கு ஒரு நாள் போதாது. சிற்பக் கலையின் உன்னதத்தை உணர்த்தும் எண்ணற்ற நம் கோவில்களில், இக்கோவில் தனக்கென்று தனி இடத்தை பெற்று திதழ்கின்றது

தென்பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர் கோவில்
இளம் கன்றாகத் தோற்றமளிக்கும் பால நந்தீசுவரர்
பால நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாகும் அதிசயம்
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தென்பொன்பரப்பி என்னும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் சொர்ணபுரீசுவரர். இறைவியின் திருநாமம் சொர்ணாம்பிகை. இத்தலத்து இறைவன் ஸ்ரீகாகஜண்ட சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஸ்ரீகாகபுஜண்ட சித்தருக்கு பிரதோஷ காலத்தில் இறைவன் காட்சி கொடுத்ததால், இவ்வாலயம் பிரதோஷ ஆலயமாக அமையப் பெற்றுள்ளது.
இக்கோவிலில் அமைந்துள்ள நந்தியானவர், மிகவும் இளைய கன்றுக்குட்டியின் தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். பெரும்பாலான சிவாலயங்களில் உள்ள நந்தி வயது முதிர்ந்தது போலவும், முகமோ அல்லது தலையோ ஏதேனும் ஒரு பக்கமாக சாய்ந்தது போலவும் காணப்படுவது இயல்பு. ஆனால் இங்குள்ள நந்தியானது, இளங்கன்றாக இருப்பதால் இவருக்கு பால நந்தி என்று பெயர். இவர் பால நந்தியாக இருப்பதால், பிரதோஷ காலங்களில் கொம்புகள் இடையூறின்றி நேரடியாக நாம் சொர்ணபுரீசுவரரை தரிசிக்க முடியும்.
ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குளி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள், பாலநந்தியின் இரு கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கரப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவது ஒரு அற்புதமான காட்சியாகும்.
இங்குள்ள பாலநந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது பால், நீலநிறமாக மாறிக் காட்சியளிப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை:
விவசாயம் செழிக்கவும், கடன் தொல்லை நீங்கவும், திருமணத்தடை நீங்கவும், ராகு கேது உள்ளவர்கள், களத்திரதோஷம், கால சர்ப்பதோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று ராகு கால வேளையில் பாலநந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால் தடைகள் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.

நங்கநல்லூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நவநீத கிருஷ்ணன் கோவில்
யோக நரசிம்மர் ஐந்து தலை நாகத்தின் மேல் அமர்ந்தபடி இருக்கும் அபூர்வ காட்சி
சென்னை, நங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் நவநீதகிருஷ்ணன் கோயில். இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
நங்கையாகிய லட்சுமி தோன்றிய இந்த இடம், நங்கை நல்லூராகி இன்று நங்கநல்லூராய் திரிந்து உள்ளது.
இத்தலம், பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் மகா யக்ஞம் செய்த இடம். பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவருக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. பிரகலாதனுக்காகத் தூணைப் பிளந்துகொண்டு வந்த நரசிம்மரைத் தரிசிக்க வேண்டும் என்பதுதான். அதற்காக யாகம் நடத்தினார். யாகத்தீயின் நடுவே உக்கிரமாகத் தோன்றினார் நரசிம்மர். அவரை சாந்தமாக இருக்கும்படியும் தான் பெற்ற தரிசனம் மற்றவர்களும் பெற வேண்டும் என்றும் வேண்டினார். அதனால் லட்சுமியை மடியில் ஏந்தி புன்னகைத்த திருக்கோலத்துடன் இங்கு எழுந்தருளினார்.
கருவறையில் மூலவர் லட்சுமி நரசிம்மர், தன் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, கீழ் வலக்கரம் அபய முத்திரையுடனும், இடது கரத்தால் மடியில் உள்ள லட்சுமியை அணைத்தபடியும் காட்சி தருகிறார். வடக்குபுற சந்நிதியில் நர்த்தன கிருஷ்ணர் ஆடியபடி அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் சக்கரத்தாழ்வார் தனது 16 கரங்களில் பல்வேறு ஆயுதங்கள் ஏந்தி காட்சி தருகிறார். அவருக்கு பின்புறம் யோக நரசிம்மர் ஐந்து தலை நாகத்தின் மேல் அமர்ந்தபடி காட்சி தருவது தனி சிறப்பாகும்.
பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் பிரார்த்தனை சக்கரம்
சக்கரத்தாழ்வார் சன்னதியின் எதிரில் ஒரு சிறு மேடையின் மேல் அமைந்திருக்கிறது பிரார்த்தனை சக்கரம். பிரயோக நிலையில் ஏவப்படுவது போல் காட்சி தரும் இந்த பிரார்த்தனை சக்கரம், இக்கோவிலில் நடந்த அகழ்வாய்வின்போது கிடைத்த பெருமாளின் சிலையில் இருந்தது. இந்த பிரார்த்தனை சக்கரம், இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். பக்தர்கள் பிரார்த்தனை சக்கரத்தை தொட்டு கண்களை மூடி தங்களின் பிரார்த்தனைகளைச் சொல்லிவிடுகிறார்கள். தொடர்ந்து 48 நாட்கள் நெய் தீபமிட்டு, நாற்பத்து எட்டு முறை வலம் வந்து ஸ்ரீ சுதர்சனரை வழிபட்டால் இடையூறுகள் மறையும், கவலைகள் நீங்கும் என்பது பலரின் அனுபவமாக உள்ளது.

மதுரை பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோவில்
சிவபெருமானின் தோற்றத்தில் காட்சியளிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ளது காசி விசுவநாதர் கோவில். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
பொதுவாக சிவாலயங்களில், இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில், தட்சிணாமூர்த்தி, கல்லால மரத்தின் கீழ் நான்கு சீடர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி, சிவபெருமானின் கோலத்தில் காட்சி தருகிறார். தெற்கு பார்த்து அருள் பாலிக்கும் இந்த சிவதட்சிணாமூர்த்தி, புலித்தோலை ஆடையாக அணிந்து, சப்தரிஷிகள் கீழே நிற்க முடிந்த தலையில் கங்கையுடன், வலது கை அபய முத்திரையுடன் ஜபமாலை, இடது கையில் ஏடு, வலது மேல் கையில் நாகம், இடது மேல் கையில் அக்னி என சிவபெருமானின் கோலத்தில், தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இதனால் இவர் சிவ தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

திருக்கோட்டூர் கொழுந்துநாதர் கோவில்
சுவாமி, அம்பாள் எதிர் எதிரே அமைந்திருக்கும் அபூர்வ வடிவமைப்பு
மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கோட்டூர். இறைவன் திருநாமம் கொழுந்துநாதர். இறைவியின் திருநாமம் தேனாம்பிகை. இந்திரன் பூஜித்ததால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயர் உண்டு. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது. கோடு என்றால் யானை. அதனால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது. திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.
மூலவர் கொழுந்துநாதர் மேற்கு திசை நோக்கி, பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை தேனாம்பிகை கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றாள். இவ்வாறு சுவாமியும் அம்பாளும் எதிர் எதிர் திசையில் காட்சியளிப்பது ஒரு சில தலங்களில் மட்டுமே உள்ளதால், இந்த வடிவமைப்பு இக்கோவிலின் தனி சிறப்பாகும்.
பாலாபிஷேகத்தின் போது சிவலிங்கத் திருமேனியில், அர்த்தநாரீஸ்வரர் உருவம் தெரியும் அரிய காட்சி
மாசி பௌர்ணமி அன்று இத்தலத்து இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்யும் போது சிவலிங்கத் திருமேனியில் அர்த்தநாரீஸ்வரர் உருவம் தெரிவது இத்தலத்தில் மட்டுமே நாம் காணக்கூடிய அரிய காட்சி ஆகும்.
பிரார்த்தனை
இந்திரன் பூஜித்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால், இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்களின் பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

வையப்பமலை சுப்ரமணியசுவாமி கோவில்
சின்னப் பழனி என்று போற்றப்படும் முருகன் தலம்
முருகப்பெருமானின் விசேஷமான திருக்கோலம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ள வையப்பமலை ன்னும் ஊரில், மலை மீது அமைந்துள்ளது சுப்ரமணியசுவாமி கோவில்.
கருவறையில் இரண்டு கரத்தினராக , இடையில் கையை ஊன்றியவராகக் காட்சி அளிக்கிறார் சுப்பிரமணியர். முருகனுக்கான விசேஷமாகச் சொல்லப்படும் 16 கோலங்களில், இந்த சுப்பிரமணியர் திருக்கோலமும் ஒன்று. குமாரதந்திரம் மற்றும் ஸ்ரீ தத்துவ நிதி ஆகிய நூல்கள் பெருமானின் இந்த திருக்கோலத்தை மிகச் சிறப்பானதாகக் குறிப்பிடுகின்றன.
இத்தலத்திற்கு முற்காலத்தில் வைகை பொன்மலை என்று பெயர். அதன் பின்னணியில் பழனி முருகன் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்று உள்ளது.
இந்த மலைக்கு அருகில் ‘அலவாய்மலை’ என்று அழைக்கப்படும் உலைவாய்மலை அமைந்துள்ளது. இந்த உலைவாய் மலையின் ஒரு பகுதியான சித்தர்மலையிலே, சித்தர்கள் பலர் தங்கியிருந்து மூலிகைகள் பல கொண்டு ரச வாதத்தின் மூலம் பொன் செய்தார்கள். இவ்வாறு பல காலம் செய்த பொன்னை எல்லாம் அவர்கள் ஒன்று திரட்ட, அது ஒரு பொற் குன்றாக விளங்கியது.
பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி, சித்தர்களின் மதி எல்லாம் பொன்னின் பால் சென்றதால் அவர்களை தடுத்தாட்கொண்டு திருவிளையாடல் புரிய விரும்பினார். முருகப்பெருமான் அந்த சித்தர்களிடம், ஆடு மேய்க்கும் இடையனை போன்ற வடிவத்தில், அவர்களிடம் சீடனாக சேர்ந்து, அவர்கள் அயர்ந்த சமயத்தில் அந்த பொன் மலையை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடிக்கலானார்.
அதைக் கண்ட சித்தர்கள் அவன் யார் என்று தெரியாமலேயே, ‘வை பொன்னை’, ‘வை பொன்னை’ எனக் கூவிக்கொண்டே துரத்தினர். ‘நீ தூக்கிச் செல்லும் பொன்மலை உனக்கு உதவாமல், கல் மலையாக போகக் கடவது’ என்று சித்தர்கள் சாபம் தந்தனர். அதனால் இந்த பொன்மலை, கலியுகத்தில் கல் மலையாக மாறியது.
சித்தர் மலையில் இருந்து முருகப்பெருமான் பொன்மலையை தூக்கிச் சென்ற போது ஒரு சிறு பகுதி உடைந்து விழுந்தது. அந்த இடம் தற்போது பொன்மலை என்று அழைக்கப்படுகின்றது.
முருகப்பெருமான் தற்போது உள்ள பொன்மலைக்கு வந்ததும், அங்கே தவம் செய்து கொண்டிருந்த ஔவையார் முருகனைக் கண்டு அடையாளம் கண்டு கொண்டு,’வைக,பொன் மலையை’ என்று வேண்டினார். அதற்குச் இசைந்த முருகன், இவ்விடத்தே பொற்குன்றை வைத்து விட்டு ஔவைக்கும் துரத்தி வந்த சித்தர்களுக்கும் மலை மீது காட்சி அளித்து, உபதேசம் செய்து அருளினார். அதுமுதல், வைகைப்பொன்மலை என்றும், பேச்சு வழக்கில் வையப்பமலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
பழனி மூலவர் பீடத்தில், மூலவர் தண்டாயுதபாணி இல்லாததைக் கண்ட போகர், தனது ஞான திருஷ்டியின் மூலமாக நடந்ததை அறிந்து நவ பாசனத்தால் மூலவர் சிலையை உருவாக்கி பீடத்தில் வைத்து விட்டார்.
அதுமுதல் பழனியில் நவபாஷான முருகனும், வைகைபொன்மலையில் மூலவரான பாலதண்டாயுதபாணியான முருகனும் மேற்கு நோக்கி அருள்புரிந்து வருகிறார்கள். இதனால் தான் இத்தலம் சின்னபழனி என்று போற்றப்படுகின்றது.