திருக்கோட்டூர் கொழுந்துநாதர் கோவில்

சுவாமி, அம்பாள் எதிர் எதிரே அமைந்திருக்கும் அபூர்வ வடிவமைப்பு

மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கோட்டூர். இறைவன் திருநாமம் கொழுந்துநாதர். இறைவியின் திருநாமம் தேனாம்பிகை. இந்திரன் பூஜித்ததால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயர் உண்டு. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது. கோடு என்றால் யானை. அதனால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது. திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.

மூலவர் கொழுந்துநாதர் மேற்கு திசை நோக்கி, பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை தேனாம்பிகை கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றாள். இவ்வாறு சுவாமியும் அம்பாளும் எதிர் எதிர் திசையில் காட்சியளிப்பது ஒரு சில தலங்களில் மட்டுமே உள்ளதால், இந்த வடிவமைப்பு இக்கோவிலின் தனி சிறப்பாகும்.

பாலாபிஷேகத்தின் போது சிவலிங்கத் திருமேனியில் அர்த்தநாரீஸ்வரர் உருவம் தெரியும் அரிய காட்சி

மாசி பௌர்ணமி அன்று இத்தலத்து இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்யும் போது, சிவலிங்கத் திருமேனியில் அர்த்தநாரீஸ்வரர் உருவம் தெரிவது இத்தலத்தில் மட்டுமே நாம் காணக்கூடிய அரிய காட்சி ஆகும்.

பிரார்த்தனை

இந்திரன் பூஜித்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால், இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்களின் பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

தகவல் உதவி : திரு. தியாகராஜன் சிவாச்சாரியார், ஆலய அர்ச்சகர்

 
Previous
Previous

மதுரை பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோவில்

Next
Next

வையப்பமலை சுப்ரமணியசுவாமி கோவில்