ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கநாதருக்கு, மாமனார் தீபாவளி சீர் அளிக்கும் சாளி உற்சவம்
தீபாவளி என்றால், மாமனார் மாப்பிள்ளைக்குச் சீர் செய்வது வழக்கம். அந்த வழக்கப்படி, தன் மகள் ஆண்டாளை ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு மணமுடித்து தந்த பெரியாழ்வார், தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் செய்யும் வைபவமானது ஸ்ரீரங்கம் கோவிலில் தீபாவளியன்று 'சாளி உற்சவம்' என்று கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதர் ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை, மேள தாளங்கள் முழங்க, மூலவரான பெரிய பெருமாள் எண்ணெய் அலங்காரம் செய்து கொள்வார். கோவிலில் கைங்கரியம் செய்வோர்களுக்கும் அன்று பெருமாளின் சார்பாக எண்ணெய், சீகைக்காய் உள்ளிட்டவை வழங்கப்படும். அன்று இரவு, உற்சவரான நம்பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும். அதன்பின், கோவிலில் எழுந்தருளியிருக்கும் ரங்கநாயகித் தாயார், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியோரின் சந்நதிகளுக்கெல்லாம் எண்ணெய், சீகைக்காய், மஞ்சள் உள்ளிட்டவற்றைப் பெருமாள், அர்ச்சகர் மூலம் அனுப்பி வைப்பார். தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் ரங்கநாயகித் தாயாருக்கும், ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கும் எண்ணெய் அலங்காரம் செய்யப்படும். அனைவரும் புத்தாடையும் மலர் மாலைகளும் அணிந்து கொள்வார்கள்.
காலை பத்து மணியளவில் நம்பெருமாள், சந்தனு மண்டபத்தில் எழுந்தருளித் திருமஞ்சனம் கண்டருள்வார். பின்னர் பெரியாழ்வார் தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் சமர்ப்பிப்பார். ஒவ்வொருவரும் தன் குருவுக்குச் செலுத்தப்படும் அதே மரியாதையை, தன் மாமனாருக்கும் செலுத்த வேண்டும் என்பது மரபு. அந்த வகையில், நம்பெருமாள் பெரியாழ்வாருக்கு மரியாதை செய்து, அவரிடமிருந்து தீபாவளிச் சீரைப் பெற்றுக் கொள்கிறார். பெரியாழ்வாரின் சார்பில், அரையர்கள் நம்பெருமாளின் திருவடிகளைச் சுற்றி நாணய மூட்டைகளைச் சீராக வைப்பார்கள். நாணய மூட்டைகளுக்குச் சாளி என்று பெயர். இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர். ஜாலி அலங்காரம் என்பது, ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி, பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது. நாணய மூட்டைகளை தீபாவளிச் சீராகப் பெரியாழ்வார் சமர்ப்பிப்பதால், 'சாளி உற்சவம்' என்று அழைக்கப்பட்ட இந்த உற்சவம், நாளடைவில் 'ஜாலி உற்சவம்' என்றாகிவிட்டது. வேத பாராயணமும் மங்கல வாத்தியங்களும் முழங்க இந்த வைபவம் நடைபெறும். தனது மாமனாரான பெரியாழ்வார் தனக்கு அளித்த இந்த தீபாவளிச் சீரை அனைவருக்கும் காட்டி, மாமனாரின் பெருமையைப் பறைசாற்றுவதற்காக அந்த நாணய மூட்டைகளோடு இரண்டாம் பிராகாரத்தில் நம்பெருமாள் வலம் வருவார். மாலையில் கிளி மண்டபத்துக்கு எழுந்தருளும் நம்பெருமாள் அங்கே காலைமுதல் காத்திருக்கும் ஆழ்வார் ஆச்சாரியார்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுக்குப் புத்தாடை, சந்தனம், வெற்றிலைப் பாக்கு, புஷ்பங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றைத் தீபாவளிப் பரிசாகத் தந்து கௌரவிப்பார். இந்தத் திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடை களுக்கும், பணவரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது என்பது நம்பிக்கை.
நாவலூர் ஏகாம்பரேசுவரர் கோவில்
மூலவரின் எதிரில் அமர்ந்திருக்கும் அபூர்வ இரட்டை நந்திகள்
படப்பையில் இருந்து ஒரகடம் போகும் வழியில் அமைந்துள்ள சரபணஞ்சேரி என்ற கிராமத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நாவலூர் ஏகாம்பரேசுவரர் கோவில். 900 ஆண்டுகள் பழமையானது. இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன்.
பொதுவாக சிவாலயங்களில் மூலவரின் முன் ஒரு நந்தி அமர்ந்திருக்கும். ஆனால் இத்தலத்து மூலவரின் எதிரில் இரண்டு நந்திகள் ஒன்றின் அருகில் ஒன்றாக அமர்ந்திருக்கின்றன. இப்படி அருகருகே அமர்ந்திருக்கும் இரட்டை நந்திகளை, வேறு எந்த சிவாலயத்திலும் நாம் தரிசிக்க முடியாது. இவற்றில் ஒரு நந்தி இத்தலத்து மூலவரையும், இத்தலத்துக்கு நேர் கோட்டில் இருக்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மூலவரையும் தரிசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. மற்றொரு நந்தி, திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்கும் வண்ணம் தன் தலையை திருப்பி அமர்ந்துள்ளது. இவ்விரு நந்திகளை தரிசித்தால், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் தலங்களை தரிசித்த பலன்கள் கிட்டும்.
திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில்
பிறைச்சந்திரனைத் தன் கிரீடத்தில் சூடிய பாலச்சந்திர விநாயகர்
திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம், திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில். எறும்பு ஈசனை வழிபட்ட தலம் இது. இறைவன் திருநாமம் எறும்பீஸ்வரர். இறைவி சௌந்தர நாயகி. இங்கு விநாயகர் பாலச்சந்திர விநாயகராக அருள்புரிகிறார். தன் அழகினால் அகங்காரம் கொண்டு அவமதித்த சந்திரனை விநாயகப் பெருமான் சாபமிட்டார். சாபத்தின் காரணமாக தனது பிரகாசத்தை படிப்படியாக இழக்க ஆரம்பித்தான் சந்திரன். இதனால் கலக்கமடைந்து ஓடி ஒளிந்த சந்திரனுக்கு விநாயகப்பெருமானை வழிபட்டு நன்னிலை அடையுமாறு தேவர்கள் அறிவுருத்தினர். அதன்படி சந்திரனும் விநாயகரைப் பூஜித்து தன் சாபம் நீங்கப்பெற்றார். அதன் அடையாளமாக பிறைச்சந்திரனைத் தன் கிரீடத்தில் சூடி பாலச்சந்திர விநாயகராக, விநாயகப் பெருமான் காட்சி கொடுக்கும் தலம் இது.
பிரார்த்தனை
இங்கு வந்து வேண்டிக்கொண்டால் மனதில் உள்ள அகந்தை நீங்கி எப்போதும் சுடர்விடும் ஞான ஒளி மனதில் பிறக்கும் என்பது நம்பிக்கை.
திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவில்
நரசிம்மரின் உக்கிரம் தாங்காமல் கருடாழ்வார் பயந்த நிலையில் காட்சியளிக்கும் திவ்யதேசம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கே ஒரு கி.மீ. தூரத்தில், விளக்கொளிப் பெருமாள் கோவிலுக்கு நேர் எதிரில் உள்ளது, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவில். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிடித்தமான இடம் இருப்பது போல, திருமால் தானே விரும்பி அமர்ந்த இடம் தான் திருவேளுக்கை. வேள் என்றால் விருப்பம். தானாக விருப்பப்பட்டு அமைதியைத் தேடி இத்தலத்தில் யோக மூர்த்தியாக இருப்பதால் வேளிருக்கை என்று ஆகி, காலப்போக்கில் வேளுக்கை என்றாகி விட்டது. மூலவர் முகுந்த நாயகன், நின்ற கோலமாக கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். இவருக்கு அழகிய சிங்கர் நரசிம்மர், ஆள் அரி என்ற பெயர்கள் உண்டு.
ஒரு சமயம் பிரம்மதேவர் யாகம் செய்து கொண்டிருந்தபோது, அரக்கர்கள் அவரது யாகத்துக்கு இடையூறு விளைவித்தனர். பிரம்மதேவர் யாகம் இடையூறு இல்லாமல் நடக்க திருமாலிடம் வேண்டினார். திருமால், முன்பு பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த அதே கோலத்துடன் ஹஸ்திசைலம் என்ற குகையில் இருந்து புறப்பட்டு, பிரம்மதேவனின் யாகத்துக்கு இடையூறு அளித்த அசுரர்களை அவ்விடத்தில் இருந்து விரட்டிச் சென்றார். அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள இந்த இடம் வரை ஓடிவந்தனர். அவர்களைத் துரத்திக் கொண்டு வந்த நரசிம்மப் பெருமாள் குளிர்ச்சியான இயற்கை எழில் மிகுந்த இந்த இடத்திலேயே அமர்ந்து விட்டார். பயந்து ஓடிய அசுரர்கள் மீண்டும் வந்தால் அவர்களை எதிர்க்க இந்த இடமே சிறந்தது என்று நினைத்து, தனது கோப உணர்வுகளை நீக்கி, யோக நரசிம்ம மூர்த்தியாக அருள்பாலித்து தரிசனம் தருகிறார். இதனாலேயே இவரது சந்நிதி 'காமாஷிகா நரசிம்மர் சந்நிதி'என்று பெயர் பெற்றது.
இக்கோவிலில், நரசிம்மருக்கு எதிரில் உள்ள கருடாழ்வார், நரசிம்மரின் உக்கிரம் தாங்காமல் சற்றே தலை சாய்த்து பயத்துடன் இருப்பது மிகவும் அரிய தோற்றம் ஆகும்.
தஞ்சாவூர் கோடியம்மன் கோவில்
சிவபெருமானை தன் தலையில் சூடியிருக்கும் கோடியம்மன்
தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், தஞ்சையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கோடியம்மன் கோவில். தஞ்சையின் எல்லையில் குடிகொண்டிருக்கும் இந்த அம்மன் தஞ்சையின் எல்லை தெய்வமாக வீற்றிருந்து அருள்புரிகிறாள்.
முன்னொரு காலத்தில், தற்போது கோடியம்மன் கோவில் இருக்கும் பகுதியானது தேவர்கள் தவம் செய்த சோலைவனமாக இருந்தது. சிவபெருமானை வழிபட்ட தஞ்சன் என்ற அரக்கன் அவரிடம் பல வரங்களைப் பெற்றான். பின்னர் தன்னுடைய சக்தியின் காரணமாக தேவர்களை துன்பம் செய்துவந்தான். தேவர்கள் ஒன்றுகூடி சிவனிடம் முறையிட்டனர். அவர் தனது அம்பிகையான ஆனந்தவல்லியிடம் தஞ்சனை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனந்தவல்லி பச்சைக்காளியாக வடிவெடுத்து அசுரனை அழிக்க வந்தாள். அசுரனோ, அழிய அழிய மீண்டும் தோன்றினான். இவ்வாறு கோடி அவதாரங்கள் எடுத்தான்.இதனால் கோபமடைந்த ஆனந்தவல்லியின் முகம் சிவந்தது. அவள் சாந்தத்தை கைவிட்டு பவளக்காளியாக ( (பவளம் – சிவப்பு நிறம்) மாறினாள். தஞ்சனை வதம் செய்தாள். தஞ்சனின் உடலிலிருந்து பெருகிய ரத்தம் ஆறாக ஓடியது. அந்த எதிரொளிப்பில் காளியின் உருவமே சிவப்பானது. கோடி அவதாரம் எடுத்த அசுரனை அழித்ததால் அம்பாள் கோடி அம்மன் என்றும் வழங்கப்பட்டாள். தஞ்சன் தான் இறக்கும் தருவாயில் தன் பெயரால் இந்த ஊர் அழைக்கப்பட வேண்டும் என்று வரம் பெற்றான். அதன்படியே தஞ்சபுரி என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி தஞ்சாவூர் என்றானது.
சிவனின் பிரதிநிதியாக வந்து அசுரனை அழித்ததால், கோடியம்மன் சிவபெருமானையே தனது தலையில் சுமந்து கொண்டாள். சிவபெருமான் தன் தலையில் கங்கையை சூடியிருப்பது போல, இந்த அம்மன் தன் தலையில் சிவபெருமானையே சூடியிருப்பது சிறப்பாகும். எனவே இக்கோவிலில் அம்மனுக்குரிய சிங்க வாகனத்திற்கு பதிலாக நந்தி வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் பூஜை நடக்கும்போது சற்று தொலைவில் உள்ள ஆனந்தவல்லி சமேத தஞ்சபுரீஸ்வரர் கோயிலிலும் பூஜை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரார்த்தனை
குழந்தைச் செல்வம் கிட்டவும், செய்வினை நீங்கவும் இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.
காளியாட்டத் திருவிழா
மாசி கடைசி வாரம் அல்லது பங்குனி முதல்வாரத்தில் பச்சைக்காளி, பவளக்காளி சிலைகளை வர்ணம்பூசி எடுத்து வீடு வீடாக சென்று காளியாட்டம் நடக்கும். இதை காளியாட்டத் திருவிழா என்கிறார்கள். இந்த திருவிழா காலத்தில் பால்குடம் எடுப்பது மிகவும் விசேஷம். தஞ்சாவூர் மேல வீதியில் பச்சைக்காளி பவளக்காளி ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளன.
முடிகொண்டான் கோதண்டராமர் கோவில்
அனுமன் உடன் இல்லாமல் ராமர் எழுந்தருளியிருக்கும் தலம்
திருவாரூர் மாவட்டத்தில், தில்லைவிளாகம், வடுவூர், பருத்தியூர், முடிகொண்டான், அதம்பார் ஆகிய தலங்களில் அமைந்துள்ள ராமர் கோவில்கள் 'பஞ்சராமர் க்ஷேத்திரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இதில் முடிகொண்டான் கோதண்டராமர் கோவில் திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில், திருக்கண்ணபுரம் மற்றும் சிறுபுலியூர் திவ்ய தேசங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
கருவறையில், வேறு எங்குமே காண முடியாத வகையில் அனுமன் இல்லாத ராமர் எழுந்தருளி இருப்பதை நாம் இத்தலத்தில் காணலாம். ராமரின் இடது புறம் சீதையும், வலது புறம் லட்சுமணனும் உள்ளனர். ராமர் சீதையை மீட்டுக் கொண்டு அயோத்தி திரும்புகையில் பரத்வாஜ முனிவர் வேண்டுகோளுக்கிணங்க அவர் ஆசிரமத்தில் தங்கி இருந்து விருந்துன்ன சம்மதித்தார். 16 வருடம் முடியப்போவதால் தமக்காக காத்திருக்கும் தம்பி பரதன் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வான் என்று கருதி அனுமனை அயோத்திக்கு அவசரமாக அனுப்பி தாம் கிளம்பி வந்து கொண்டே இருக்கும் தகவலைத் தெரிவித்துவிட்டு வரும்படி ஸ்ரீராமர் உத்தரவிட்டார். அனுமனும் அயோத்தி சென்று பரதனிடம் ராமர் கூறியவற்றை தெரிவித்துவிட்டு இங்கு திரும்பினார். அப்போது ராமர் தான் வருவதற்கு முன்பே விருந்து சாப்பிட்ட செய்தி அறிந்ததும் ஆசிரமத்திற்குள் வராமல் கோபித்துக் கொண்டு வெளியிலேயே உட்கார்ந்து கொண்டாராம். ராமரும் தனக்கு அளிக்கப்பட்ட விருந்தில் பாதியை அனுமனுக்கு அளித்து சாந்தப்படுத்தினார். கோபித்துக் கொண்ட அனுமனுக்கு கோயிலுக்கு நேர் எதிரில் தனியாக சந்நிதி இருப்பதையும் காணலாம்.
ராமருக்கு விருந்தோம்பல் செய்வதில் உற்சாகமடைந்த பரத்வாஜ ரிஷி, ராமரிடம் தனது கிரீடத்துடன் (முடி) தரிசனம் தரும்படி கேட்டுக் கொண்டார். ராமர் தனது தனது குலதெய்வமான ரங்கநாதரின் ஆசீர்வாதத்தைப் பெறாமல் இதைச் செய்ய முடியாது என்று கூறியபோது, பரத்வாஜ ரிஷி தனது சக்தியைப் பிரயோகித்து ரங்கநாதரை இந்த இடத்திற்கு அழைத்து வந்தார். ரங்கநாதர், ஐந்து தேவலோக மலர்களால் ஆன மலர் கிரீடத்தை ராமருக்கு சூட்டினார். ராமர் அந்த மலர் கிரீடத்துடன் பரத்வாஜர் முனிவருக்கு காட்சி தந்ததால் இத்தலத்திற்கு முடிகொண்டான் என்ற பெயர் ஏற்பட்டது.
இத்தலத்து உற்சவமூர்த்தி ராமர் தனது உடலில் மூன்று வளைவுகளுடன், அதாவது முகம் ஒரு திசையில், இடுப்பு. மற்றொன்று மற்றும் மூன்றாவது வளைவில் கால் என்ற நிலையில் காட்சி அளிப்பது தனித்துவமானது. இந்த ஆசனம் 'உத்தம லக்ஷணம்' என்று குறிப்பிடப்படுகிறது.
பிரார்த்தனை
இத்தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானமும் கீர்த்தியும், புகழும் அடைவர். குறிப்பாக மேல்நாட்டுக் கல்வி படிக்க விரும்புவோர் இத்தலத்தில் வழிபட்டால் அவர்களது பிரார்த்தனை நிறைவேறுகிறது. உயர்கல்வி கற்க விரும்புவர்கள், பாடத்தில் தேர்ச்சி பெற விரும்புவர்கள். கலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலோர் இத்தலத்தில் வந்து வழிபட்டு தங்கள் கலைகளில் சிறந்து விளங்குகின்றனர். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வழிபட்டு மீண்டும் ஒன்று சேர்கின்றனர். மேலும் வேலை வாய்ப்பு தொழில் விருத்தி உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்
காசி காலபைரவருக்கு இணையான குண்டடம் கொங்கு வடுகநாதர்
கோவை - மதுரை நெடுஞ்சாலையில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில், பல்லடத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் தாராபுரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில். இறைவன் திருநாமம் விடங்கீசுவரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. இந்தக் கோவிலில் உள்ள காலபைரவ வடுகநாத சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும்,காசி சென்று கால பைரவ சுவாமியை வணங்க முடியாதவர்கள் இவரை வணங்கினால் போதும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். 'காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்! ' என்று திருமுருக கிருபானந்த வாரியார் கூறி இருக்கிறார். அதாவது காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைதான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்துக்கும் வந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி கால பைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார்.
முன்னொரு காலத்தில், விடங்கர் என்ற முனிவர் இந்த காட்டில் தவம் இருக்கும்போது அரக்கர்களால் தவத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உதவ வேண்டும் என்று காசி விசுவநாதரை மனமுருக வேண்டினார். காசி விசுவநாதர் விடங்கரின் பிரார்த்தனைக்கு இணங்கி வடுக பைரவரை அனுப்பினார். பைவர் இடையூறு செய்த அரக்கர்களை அழித்தார், பின் இலந்தை மரத்தின் அடியில் இருந்த புற்றில் நிரந்தரமாய்க் குடிகொண்டார். அருகே ஒர் அரசமரத்தடியில் பாம்பாட்டீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சேர நாட்டிலிருந்து மிளகு விற்க வரும் வியாபாரிகள் இந்த அரசமரத்தடியில் இளைப்பாறுவது வழக்கம். ஒரு நாள் காலபைரவர் வயதான அந்தணர் தோற்றத்தில், மிளகு வியாபாரியிடம் சென்று தனக்கு உடல்நிலை சரியில்லை, கஷாயம் வைக்க மிளகு கொஞ்சம் கேட்கிறார், ஆனால் கொடுக்க நினைக்காத வியாபாரி மாட்டு வண்டியில் உள்ள மூட்டையில் மிளகு இல்லை பயறு என்று பொய் சொல்லிவிடுகிறார்.
மதுரை சென்று சேர்ந்த வியாபாரிகள் பாண்டிய மன்னரிடம் விலை பேசி மிளகு மூட்டைகளை விற்று விட்டார்கள். மிளகு மூட்டையை பரிசோதித்துப் பார்க்க, அவை பச்சைப் பயறாக இருப்பதைப் பார்த்து ஏமாற்றி விட்டதாய் கோபப்படுகிறார் மன்னர். வியாபாரிகள் ஒரு பெரியவர் மிளகு கேட்டதாகவும் தாங்கள் மிளகு கொடுக்க மறுத்து மூட்டையில் உள்ளது பச்சைப் பயிறு என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். நம்ப மறுக்கிறார் மன்னர். அப்போது பைரவர் திருவிளையாடல் புரிகிறார், எந்த வியாபாரியிடம் மிளகு கேட்டாரோ அந்த விபாபாரி மேல் அருள் வந்து நான்தான் மிளகு மூட்டைகளைப் பயிறு மூட்டைகளாக மாற்றினேன் என்று சொல்கிறார் பைரவர். அப்போதும் மன்னருக்கு நம்பிக்கை வரவில்லை.என் மகன், மகள் இருவரும் உடல்நிலை சரியில்லாதவர்கள் அவர்களைச் சரி செய்தால் நம்புவதாகச் சொல்கிறார்.
பைரவர் மன்னரிடம் புற்றில் இருக்கும் என்னைக் கோவில் கட்டிக் குடியமர்த்து .அபிஷேகம் செய்து மிளகு சாற்றி வழிபடு. உன் குழந்தைகளைக் குணப்படுத்துகிறேன் என்கிறார். பாண்டிய மன்னரும் அவ்வாறு செய்ய, குழந்தைகள் எட்டு நாட்களில் நலம் பெற்றார்கள்.. பேசமுடியாது இருந்த பெண் குழந்தை பேசியது, நடக்க முடியாது இருந்த ஆண் குழந்தை பைரவர் அருளால் நடந்தது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால், பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது. கொங்கு நாட்டுக் காசியாக, குண்டடம் விளங்குகின்றது.
பிரார்த்தனை
தேய்பிறை அஷ்டமியில் இவரை தரிசித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். இவரை வணங்கினால் நவக்கிரக தோஷம் நீங்கிவிடும். பதினோரு மிளகு வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி எட்டு தீபங்களை ஏற்றி வைத்தால் நாம் வேண்டும் பிரார்த்தனை நிறைவேறும்.
ஆஞ்சநேயருக்கு சாற்றுவது போல் இவருக்கு வடை மாலை சாற்றப்படுகிறது. வெண்பொங்கல் நைவேத்தியமும் இவருக்கு விசேஷம். தேங்காய் மூடியிலும், வெட்டப்பட்ட பூசணித் துண்டிலும் எண்ணெய் ஊற்றி சிலர் பரிகாரத்துக்காக விளக்கேற்றுகிறார்கள்.
நடுசத்திரம் காசிவிசுவநாதர் கோவில்
இந்தியாவின் இரண்டாவது காசி என்று போற்றப்படும் தலம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை வழியாகச் செல்லும் சாலையில், சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் நடுசத்திரம். இறைவன் திருநாமம் காசிவிசுவநாதர். இறைவியின் திருநாமம் அன்னபூரணி. இக்கோவில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானது. இந்தத் தலத்தின் சந்நிதியில் மட்டுமே காசிக்கு அடுத்தபடியாக அன்னபூரணி அம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறார். காசிக்குச் செல்லும் மக்களுக்கு ஏதுவாக இந்த ஆலயத்தை, காசியில் உள்ளது போன்றே வடிவமைத்திருக்கின்றனர். அதனால், இத்தலம் இந்தியாவின் இரண்டாவது காசி என்று போற்றப்படுகின்றது.
இத்தலத்து மூலவர் காசி விசுவநாதருக்கு எதிரே உள்ள நந்தீஸ்வரரின் ஒரு கண் சிவனைப் பார்த்தவாறும், மற்றொரு கண் அன்னபூரணியைப் பார்த்தவாறும் தலை சாய்த்து அமைந்திருக்கிறது. மேலும், சண்டிகேஸ்வரர் தெற்கு பார்த்து, காளை வாகனத்தில் அமர்ந்திருப்பது, வேறு சிவாலயங்களில் காண்பதற்கரிய சிறப்பம்சம் ஆகும்.
தலையை சாய்த்து அருள் பாலிக்கும் குபேர சனீஸ்வரர்
இத்தலத்தில் சனீஸ்வர பகவான் குபேர சனீஸ்வரர் என்ற திருநாமத்துடன் தனித்து அருள்பாலிக்கிறார். நந்திதேவரைப் போன்று இவரும், தன் தலையைச் சற்றே சாய்த்தவாறு அருட்கோலம் கொண்டிருக்கிறார். இத்தலத்தில் அன்னபூரணி அம்பிகை, காலபைரவர், சண்டிகேஸ்வரர், நடராஜர் மற்றும் குபேர சனீஸ்வர பகவான் அனைவரும் தென் திசை நோக்கி அமைந்திருப்பது மற்றொரு தனிச் சிறப்பாகும்.
பிரார்த்தனை
தொழில் விருத்தி, திருமண வரம், குழந்தை பாக்கியம் வேண்டி மக்கள் இங்கே பிரார்த்தனை செய்கிறார்கள்.
வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்
தென்திசை நோக்கி காட்சி தரும் ஞான துர்க்கை
நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் தேவாரத் தலமான வேதாரண்யம் உள்ளது. இறைவன் திருநாமம் திருமறைக்காடர். இறைவியின் திருநாமம் வேதநாயகி, யாழைப் பழித்த மொழியாள். 64 சக்தி பீடங்களில் ஒன்றான சுந்தரி பீடம் அமையப் பெற்ற கோவிலாகவும் இது திகழ்கிறது.
பொதுவாக சிவாலயங்களில், மூலவர் கருவறையின் சுற்றுச்சுவரில் வடக்கு நோக்கி பரிவார தேவதையான துர்க்கை எழுந்து அருளி இருப்பாள். ஆனால் இத்தலத்தில் பரிவார தேவதையான துர்க்கையானவள் தென்திசை (மூலவர் சந்நிதியை) நோக்கி காட்சி தருகிறாள். இது ஒரு அரிதான காட்சியாகும். தட்சிணாமூர்த்தி போல் தென்திசை நோக்கி எழுந்தருளி இருப்பதால் இவளை ஞான துர்க்கை என்பார்கள். திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளி உள்ளாள். இவள் வேதாரண்யத்தின் காவல் நாயகி என்பர் ஆன்றோர்.
பிரார்த்தனை
இவள் மிகுந்த வரப்பிரசாதி என்பதால் இத்தலத்தின் பிரார்த்தனை தெய்வமாக விளங்குகின்றாள். துர்க்கை அம்மன் சந்நிதியில் செவ்வாய் கிழமைகளில் ராகுகால பூஜைகள் மிகவும் விசேஷம். இவளை வழிபட்டால் குழந்தை இல்லாமை, திருமணத் தடை, பில்லி- சூனியம், கிரக கோளாறுகள் போன்ற குறைபாடுகள் விலகும்.
திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்
அமர்ந்த கோலத்தில் இருக்கும் அபூர்வ அர்த்தநாரீசுவரர்
திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருக்கண்டியூர். திருவையாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள சப்த ஸ்தான கோவில்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது. இறைவன் திருநாமம் பிரம்மசிரகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.
இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீசுவரரின் திருமேனி அற்புதமான கலையம்சம் கொண்டது. அர்த்தநாரீசுவரர் என்ற பெயரின் அர்த்தம் 'அரை பெண்ணாக இருக்கும் இறைவன்' என்பதாகும். அர்த்தம் என்பது பாதி; நாரி என்பது பெண். சிவனின் ஆண் உருவம் பாதியும், பார்வதியின் பெண்ணுருவம் பாதியும் கொண்டு அமைந்த கோலம் தான் அர்த்தநாரீசுவரர். சிவனின்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவனில்லை என்பதனை விளக்குகின்ற உருவமாகும்.
இக்கோவிலில் உள்ள அர்த்தநாரீசுவரர், மற்ற சிவாலயங்களில் உள்ளதுபோன்று நின்ற கோலத்தில் அல்லாமல் ரிஷபத்தின் மீது ஒரு கையை ஊன்றி அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது விசேஷமானது. ஆண் பாதியில் காலைத் தொங்கவிட்டுக் கொண்டு ஒரு கரத்தில் மழு எந்தியிருக்க, பெண் பாதியில் சேலை அணிந்த காலைக் குத்திட்டு உட்கார்ந்து அதன் மீது மலர் ஏந்தும் கரத்தை ஊன்றித் தலையைச் சுற்றி சாய்ந்து காட்சிக் கொடுக்கும் தோற்றமானது, அற்புதமான ஒன்றாகும். அர்த்தநாரீசுவரரின் இந்தத் தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
கண்டரமாணிக்கம் மருதம் விநாயகர் கோவில்
அனுமனைப் போல வடை மாலை ஏற்கும் மருதம் விநாயகர்
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் என்ற கிராமத்தில் உள்ள விநாயகர் மிகமிக வித்தியாசமாக தோற்றம் அளிக்கிறார். இந்த விநாயகருக்கு தும்பிக்கை கிடையாது. மனித முகத்துடன் காணப்படும் இந்த விநாயகர், மருதம் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். பக்தர்கள் வேண்டியதைக் கொடுக்கும் சக்தி வாய்ந்த இந்த கணபதிக்கு, அனுமனைப்போல வடை மாலை அணிவித்து, பொங்கல் வைத்து மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.
தோல் நோய் அகற்றும் விநாயகர்
மகாகவி முத்தப்பர் (1767 - 1829) என்ற கவிஞர் நகரத்தார் மரபில், செட்டிநாட்டில் பிறந்தவர். இளமையிலேயே பாடும் திறமை பெற்றிருந்த முத்தப்பர், குன்றக்குடி முருகன் பேரில் பதிகம் பாடி அருட் புலமை பெற்றார். தமது குல வழக்கமான வணிகத்தில் ஈடுபடாது தமிழை வளர்ப்பதில் ஈடுபட்டார். முருகனின் அருளால் சொல்பலிதமும் ஏற்பட்டது. பாடிய மாத்திரத்தில் ஏதும் நடந்துவிடும் அளவுக்கு அவருடைய சொல்லாற்றல் விளங்கியது. தான் பாடும் பாடல்களால், மழையை வரவைக்கும் கவித்துவம் பெற்றவர்.
மகாகவி முத்தப்பர், இந்த கணபதியை வேண்டி மனமுருகி பாடிய பத்து பாடல்கள் காரணமாக, அவருக்கு இருந்த தோல் நோய்கள் நீங்கினார். இதனால் இன்றும் தோல் நோய் கொண்டவர்கள் இங்கு வந்து மருதம் விநாயகரிடம் வேண்டிக் கொண்டு பலன் பெறுகிறார்கள். பிள்ளைப்பேறு வேண்டி இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
வள்ளியூர் சுப்பிரமணியர் சுவாமி கோவில்
வள்ளி தேவிக்குக்கென்று தனி சன்னதி உள்ள திருப்புகழ் தலம்
திருநெல்வேலியில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில், நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. வள்ளியூர் சுப்பிரமணியர் சுவாமி கோவில். பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட, குடைவரை கோவில் இது. மற்ற கோவில்களில் முருகப் பெருமான் குன்றின் மீது நின்று அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்கு, குன்றுக்குள் இருந்து அருள்பாலிக்கிறார் என்பது தனிச்சிறப்பு. வள்ளி-தெய்வானையுடன், முருகப்பெருமான் வீற்றிருக்கும் இந்த குன்றின் பெயர், 'பூரணகிரி' என்பதாகும். சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த சமயத்தில், கிரவுஞ்ச மலையையும் தகர்த்து எறிந்தார். அந்த மலையின் துண்டுகள் விழுந்து உருவான மலையே வள்ளியூர் என்று கூறப்படுகிறது. மாயம் நிறைந்த கிரவுஜாசுரனின் தலைப்பாகமாக, இந்த குன்று கருதப்படுகிறது. அகத்தியருக்கு பிரம்ம ஞான உபதேசம் அருளிய காரணத்தினால் முருகப்பெருமான் ஞானஸ்கந்தன் என்று அழைக்கப்படுகின்றார். வள்ளி கேட்ட வரத்தின் படி முருகன் வள்ளியை திருத்தணிகையில் மணமுடித்து தென்கோடியில் உள்ள பூரணகிரி மலைக்குகையில் வள்ளியுடன் வந்து அமர்ந்தாராம். அதனால் இம்மலை அமைந்துள்ள பகுதி வள்ளியூர் என அழைக்கப்பட்டது. இங்குள்ள சரவணப் பொய்கை, வள்ளியின் வேண்டுகோளுக்கிணங்க, முருகப்பெருமானால் உருவாக்கப்பட்டதாம். இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றது.
கருவறையில் வள்ளி-தெய்வானையோடு முருகப்பெருமான் அருள்காட்சி தருகிறார். அதே வேளையில் வள்ளிதேவிக்கு மட்டும் தனியாகவும் இங்கு சன்னிதி அமைந்திருப்பது இக்கோவிலின் மற்றொரு சிறப்பாகும். நான்கு கரங்களைக் கொண்ட இத்தல முருகப்பெருமான், வலது மேற்கரத்தில் வள்ளிக்குப் பிடித்த தாமரையையும், இடது மேற்கரத்தில் தெய்வானைக்குப் பிடித்த நீலோற்பவத்தையும் ஏந்தியிருக்கிறார். வலது கீழ் கரத்தில் அபய முத்திரையை காட்டி, இடது கீழ்கரத்தை இடுப்பில் வைத்து வள்ளி, தெய்வானையுடன் கல்யாண கோலத்தில் நின்றபடி அருள்கிறார். முன்புறம் வைரம் பதித்த வஜ்ரவேல் மின்னுகிறது.
திருமணத் தடை நீக்கும் வள்ளியூர் முருகன்
வள்ளியூர் கோயில் வந்து வள்ளி சமேத முருக பெருமானை வழிபட திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களுக்கு இடையே நம்பிக்கையாக உள்ளது. வள்ளிதேவியிடம் மனதிற்கு பிடித்தவரை கரம் பிடிக்க வேண்டிக் கொள்ளும் கன்னி பெண்களுக்கு, அவரையே மணம் முடிக்கும் பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை உள்ளது.
நெடுங்குணம் யோக ராமர் கோவில்
கைகளில் வில்லும், அம்புமின்றி யோக நிலையில் அமர்ந்திருக்கும் அபூர்வ ராமர்
திருவண்ணாமலையிலிருந்து 47 கி.மீ. தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது நெடுங்குணம் யோக ராமர் கோவில். சுமார் 700 ஆண்டுகள் பழமையானது. எண்பத்தேழாயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இக்கோவில், தமிழ்நாட்டில், ராமருக்கு என்று அமைந்த தனிக்கோவிலில் மிகவும் பெரியது.
கருவறையில் ஸ்ரீராமபிரான் வித்தியாசமான கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். எப்பொழுதும் அவர் கையில் ஏந்தி இருக்கும் கோதண்டம் மற்றும் ஆயுதங்கள் ஏதுமின்றி, அமர்ந்த நிலையில் வலது கையை சின் முத்திரையுடன் திருமார்பில் வைத்தபடி, கண்களை மூடிய வண்ணம் யோக நிலையில் காட்சி தருகிறார். இது ராமபிரானின் மிகவும் அபூர்வமான திருக்கோலம் ஆகும். இதனாலேயே இவரை யோக ராமர் என்று அழைக்கின்றனர். ராமர் அருகே இடப்புறம் சீதாபிராட்டி அமர்ந்த நிலையில், வலக் கரத்தில் தாமரை மலரை ஏந்தியபடி காட்சி தருகிறார். அவரது இடக்கரம் திருவடி சரணத்தை உணர்த்தும் அபயஹஸ்தமாக விளங்குகிறது. லட்சுமணன், ராமருக்கு வலது புறத்தில் கைகளைக் குவித்து அஞ்சலி செலுத்தியவராய் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ராமபிரானும் சீதா பிராட்டியும் பீடத்தில் அமர்ந்து காட்சி தர, அவர்கள் எதிரே அனுமன் பிரம்மசூத்திரம் படித்தபடி காட்சி தருவது இன்னும் சிறப்பானது. இது வேறு எங்குமே காணமுடியாத அற்புத காட்சியாகும்.
பிரார்த்தனை
இங்கே ராமபிரான் சாந்தமான கோலத்தில் எழுந்தருளி இருப்பதால், அவரை வணங்கினால் மன அமைதி, நிம்மதியான வாழ்க்கை நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.ராமபிரான் இங்கு குரு அம்சமாக இருப்பதால், கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கான பிரதான வழிபாட்டுத் தலமாக இருக்கிறது. கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக நெய்தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, தம்பதியர் ஒற்றுமைக்காக ஊற வைத்த பாசிப்பயிறு, சர்க்கரைப்பொங்கல் , பானக நிவேதனம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இத்தலத்தில் வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர்.
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில்
அதிசயமான நேரம் காட்டும் கல்
வேலூர் நகரத்திலிருந்து 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் மார்க்கபந்தீசுவரர் ஆவார். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை.இக்கோவில் 1300 வருடங்கள் பழமையானதாகும்.
இக்கோவிலில் உள்ள அதிசயம், மணி காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல். கோவிலின் உள்ளே தென்புறத்தில் 'நேரம் காட்டும் கல்' உள்ளது. இதை மணிகாட்டிக் கல் என அழைப்பதும் உண்டு. அர்த்த சந்திரவடிவில் உள்ள காலம் காட்டும் கல்லின் ஒருபுறம், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் ஒன்று முதல் ஆறு வரை எண்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மற்றொரு புறமும் ஆறு முதல் 12 என்ற வரிசையில் எண்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரு பாகம் முற்பகலையும், மற்றொரு பாகம் பிற்பகலையும் காட்டும். மணிகாட்டும் கல்லின் மேற்பகுதியில் சிறிய பள்ளமான பகுதி ஒன்று இருக்கும். அதன் மேல் சிறு குச்சியை வைத்தால், சூரிய ஒளியின் திசைக்கு ஏற்றவாறு, குச்சியின் நிழல் மணிக்காக குறிக்கப்பட்டுள்ள கோட்டின் மீது விழும். அதைப் பார்த்து மணியைத் தெரிந்துகொள்ளலாம்.
ஆதிகாலத்தில் மேலை நாட்டினர், 'கிளாசிக்கல் க்ளாக்' எனும் மணல் கடிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அறிவியல் அதிகமாக வளராத ஆதிக்காலத்திலையே, சூரியனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசித்தவர்கள், தமிழர்கள். மேலை நாட்டினர் மண்ணைப் பார்த்து சிந்தித்தபோது, விண்ணைப் பார்த்து சிந்தித்தவன் தமிழன். தமிழர்கள் சூரியனைப் பயன்படுத்தி கடிகாரம் கண்டுபிடித்து, பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அதற்கு முன்னர், சூரியனையும், கோயில் கோபுரத்தையும் வைத்து நேரம் அறிந்துகொண்டிருந்தனர், தமிழர்கள். அதன் பின்னர் சிறிய கருங்கல்லை வைத்து தன்னுடைய தொழில்நுட்பத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தினார்கள். சிறியதாக ஒரு கருங்கல்லை வைத்து பன்னிரண்டு மணிநேரத்தை பார்க்கும்படி வடிவமைத்துள்ளார்கள்.வானியல் மாற்றங்களைத் தெரிந்துகொள்ள தொழில்நுட்பங்கள் இல்லை. பருவநிலையையும் மற்றும் பருவகால மாற்றங்களையும் அறிந்துகொள்ள மணிகாட்டும் கல்லைத் தவிர இன்னும் பல கற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள், நம் முன்னோர்கள்.
ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்
ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்
சிவபெருமான், சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகம்.
ஐப்பசி மாதப்பௌர்ணமி தினத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான். ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவான். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்து, உணவை சாப்பிட்டால் அன்னதோஷசம், அன்ன துவேஷம் நீங்கும். ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவனை தரிசித்தால், சொர்க்கத்திற்கு போகும் வரை சோறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அன்னம் பர பிரம்மம் என்று கூறி, உணவை இறைவனாகப் பாவிப்பது நம் இந்து தர்மம். உடலை வளர்ப்பது மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம்தான். கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர் வரை, அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன். அதனால் அன்னத்தைப் பற்றி ‘அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ’ என்று சாமவேதத்தில் குறிப்பிடப்படுகிறது. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறான் என்பதே இதன் பொருள். அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை. சோறுதான் சொக்கநாதர், 'சோறுகண்ட இடம் சொர்க்கம்' என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு. உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல், அவை உண்பதற்கான உணவையும் படைத்தருளிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் செய்கிறோம்.
ஐப்பசி மாதம் பெளர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து அதில் உள்ள ஒவ்வொரு சாதத்திலும், அரிசியிலும் ஒரு சிவத்தின் ரூபத்தை காணலாம். ஒரு சிவத்தை வழிபட்ட பலன் அந்த நாளில் கிடைக்கும் என சிவ பெருமானே நமக்கு வரமளித்துள்ளார். அந்த வரத்தின் படி அன்னாபிஷேகத்தை கண்டால் அதில் உள்ள கோடான கோடி சோறும், கோடான கோடி சிவ லிங்கங்களை சென்று தரிசனம் செய்த பலனை நமக்கு தரும்.
ஐப்பசி மாத பௌர்ணமியன்று, வடித்து சற்றே ஆற வைக்கப்பட்ட அன்னத்தைக் கொண்டு சிவலிங்கத் திருமேனி முழுவதையும் மறைத்து, அதன் மேலாக காய்,கனி வகைகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள். இந்த வேளையில் யஜூர் வேதம், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணம் நடைபெறும். லிங்கத்தின் ஆவுடையிலும், பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னத்தை எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கரைப்பார்கள். நல்ல அதிர்வுகளும் உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் சிவலிங்கத்தின் மேல்பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம், மனிதர்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
கலியுகத்தில் முக்தி பெறும் வழிகளில் முதன்மையானது பக்தியும், அன்னமிடுதலும் ஆகும். அன்னம் ஒடுங்கினால், சகலமும் ஒடுங்கி விடும். பசியால் வாடுபவர்களுக்கு உணவு தராமல் விரட்டினால், அன்னதோஷம் ஏற்படும். அன்னதோஷம் பீடித்தால், வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் தங்காது. தரித்திரம் ஆட்டிப்படைக்கும். அன்னதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அன்ன துவேஷம் எனும் உணவைக் கண்டாலே வெறுப்பு உண்டாகும் நோய் ஏற்படும். அன்னதோஷத்தாலும், அன்ன துவேஷத்தாலும் பீடிக்கப்பட்டவர்களும். ஈசனுக்கு பக்தியுடன் அன்னாபிஷகம் செய்வதன் மூலம் முக்தியைப் பெற முடியும். ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும் உணவை அப்படியே உண்ணக்கூடாது. தயிரோ அல்லது வெண்ணெயோ கலந்துதான் சாப்பிட வேண்டும்.
கல்விமடை திருநாகேசுவரமுடையார் கோவில்
இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நிறம் மாறும் அம்மன்
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ளது கல்விமடை . இந்தக் கிராமத்தில் கி.பி 10-ம் நூற்றாண்டை சேர்ந்த, மிகவும் பழமை வாய்ந்த, திருநாகேசுவரமுடையார் கோவில் உள்ளது. இறைவியின் திருநாமம் திருநாகேசுவரி.
இந்தக் கோவிலில் உள்ள அம்மன் விக்கிரகம் அற்புதமானது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை, அம்மன் விக்கிரகம் தானாக நிறம் மாறுகிறது. பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது. அம்மனின் நிறம் மாறுவதைக் காண, ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இந்தக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இக்கோவிலில் புரட்டாசி மகாளய அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. அப்பொழுது மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளான சிவப்பெருமான் மற்றும் அம்பாளுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம், உள்ளிட்ட அபிசேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர் சுவாமி-அம்பாளுக்கு வில்வம், ரோஜா, செவ்வந்தி, சாமந்தி, தாமரை, மரிக் கொழுந்து, முல்லை, மல்லி கை பூ உள்ளிட்ட சுமார் 2 டன் எடையுள்ள 11 வகையான மலர்களால் அபிசேகம் செய்து அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது.
பிரார்த்தனை
இத்தலம் ராகு, கேது பரிகாரத் தலமாக விளங்குகின்றது. நன்றாக பணி செய்தும், சரியான மரியாதை கிடைக்காமல் இருப்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பணி உயர்வு, இடமாற்றம் வேண்டுபவர்களும் சுவாமியை வழிபடலாம். புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வளையல்கள் அணிவித்து வழிபடுகிறார்கள்.
அனந்தமங்கலம் இராஜகோபால சாமி கோவில்
மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும் உடைய அபூர்வ ஆஞ்சநேயர்
மயிலாடுதுறை மாவட்டத்தில், திருக்கடையூருக்கும் தரங்கம்பாடிக்கு இடையில் அமைந்துள்ளது அனந்தமங்கலம் ராஜகோபால சாமி கோவில். கருவறையில் மூலவர் வாசுதேவப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். உற்சவர் ராஜகோபால சுவாமி ருக்மணி, சத்யபாமாவுடன் எழுந்தருளி இருக்கிறார்.
இக்கோவில் பெருமாள் கோவிலாக இருந்தாலும், இங்கு எழுந்தருளியுள்ள திரிநேத்திர தசபுஜ வீர ஆஞ்சநேயர் மிகவும் பிரசித்தி பெற்றவர். அவரே முதன்மையான கடவுளாக இத்தலத்தில் வழிபடப்படுகிறார். அவர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும் உடையவராகவும், அவரது ஐந்து வலது கைகளில் சுதர்ஸனம், திரிசூலம், அங்குசம், பாணம், மத்தகக்ஷ்ம் என்ற ஆயுதங்களையும், இடது ஐந்து கைகளில் சங்கு, பத்மம், பாசம், கோதண்டம், நவநீதம் என்ற ஆயுதங்களையும் ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு, அபூர்வமான தோற்றத்தில் காட்சித் தருகிறார். இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனியை வேறு எந்த கோவிலிலும் நாம் தரிசிக்க முடியாது.
ராமபிரான் இலங்கையில் இராவணனை வதம் செய்துவிட்டு திரும்புகையில், ராவணனின் வழிவந்த அரக்கர்கள் அங்கே கடலுக்கு அடியில் தவம் செய்து கொண்டிருப்பதை கேள்விப்பட்டு அவர்களை அழிக்க அனுமனை அனுப்பினார். இலங்கைக்கு புறப்பட்ட ஆஞ்சநேயருக்கு திருமால் தன்னுடைய சங்கு, சக்கரத்தையும், பிரம்மா தனது பிரம்ம கபாலத்தையும், ருத்ரன் மழுவையும், ஸ்ரீதேவி பத்மமும், ஸ்ரீசக்தி பாசமும் அளித்தனர். ராமபிரான் வில்லையும், அம்பையும் வழங்கினார். கருடாழ்வார் தம் சிறகுகளை அளித்தார். கடைசியாக அங்குவந்த சிவபெருமான், பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து நின்றிருந்த அனுமனைப் பார்த்தார். தாம் என்ன தருவது என்று சிந்தித்தார். தம்முடைய சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணையே அனுமனுக்கு அளித்தார். மூன்று கண்களும் (திரிநேத்ரம்), பத்து கைகளும் (தசபுஜம்) கொண்டு வீரக்கோலத்தில் இருந்த அனுமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கடலுக்கு கீழே தவம் செய்த அசுரர்களையும் அவர்களது படையினரையும் அழித்து துவம்சம் செய்த அனுமன், தனக்கு தரப்பட்ட கடமையை செவ்வனே செய்து முடித்து, ஆனந்தத்துடனும் ராமனை சந்திக்கப் பயணமானார். அப்படி வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பிய இத்தலத்தில் ஆனந்தத்துடன் தங்கினார். அப்படி அவர் தங்கிய இடம் 'ஆனந்தமங்கலம்' என பெயர் பெற்றது. தற்போது வழக்கில் அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
பிரார்த்தனை
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும், அனந்தமங்கலம் சென்றால் ஆனந்தம் கிடைக்கும் என்பது பழமொழி. இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டாலே சிவன், திருமால், பிரம்மா, ஸ்ரீராமர், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். உடல் மற்றும் மனநலம் குன்றியவர்கள். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள். தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள். பில்லி, சூனியம், ஏவலால் பாதிக்கப்பட்டவர் கள் இத்தல் ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்கள் அல்லல் நீங்கி ஆனந்தம் பெறுவதாக மக்களின் நம்பிக்கை. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் வியாழக்கிழமை, இத்தல ஆஞ்சநேயரை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தஞ்சைப் பெரிய கோவில்
மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா
தஞ்சைப் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன். உலக வரலாற்றில் அலெக்ஸ்சாண்டருக்கு இணையாகப் போற்றப்பட வேண்டியவர். மாபெரும் யானைப்படை, கப்பல் படையைக் கொண்டு தெற்காசியா முழுமையும் தனது பராக்கிரமத்தால் கட்டியாண்ட மாமன்னன் ராஜராஜன், 947-ம் ஆண்டு ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். 985-ம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று 1014-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். சைவர்கள் போற்றும் திருமுறைகளை மீட்டுத் தந்தவர் மாமன்னன் ராஜராஜன். அவரை சிறப்பிக்கும் வகையில், அவர் பதவியேற்ற 985-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -வது சதய விழா, இன்று (25.10.2023) அரசு விழாவாக கொண்டாடப்படுகின்றது.
தஞ்சைப் பெரிய கோவிலின் சிறப்புகள்
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மாமன்னன் ராஜராஜ சோழனின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் தஞ்சை பெருவுடையார் கோவிலின் சில சிறப்புகளை இப்பதிவில் காணலாம்.
1003க்கும் 1010ஆம் ஆண்டிற்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை வைத்து கட்டினால் கூட பல ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை பெற்ற இந்தக் கோவில், இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்றது.
தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோவில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோவில், பிரகதீசுவரர் கோவில் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. காஞ்சியில் இராசசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோவில், மாமன்னன் ராஜராஜசோழனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய ராஜராஜசோழன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினார். பெரியகோவிலின் அமைப்பு, திருவாரூர் தியாகராசர் கோவிலில் உள்ள அசலேசுவரர் சந்நிதியின் மாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் இராசராசப்பெருந்தச்சன் எனக் கோவிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோவில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான இக்கற்கோவிலை ராஜராஜசோழன் எழுப்பினார். கோவிலின் கட்டுமானப் பணிக்காக 1,30,000 டன் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அருகே மலைகள் இல்லாத நிலையில், நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் சுமார் 50 மைல்கள் தொலைவில் இருந்து கோவியிலுக்கான கற்கள் எடுத்து வரப்பட்டிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இக்கோவில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.
மாமன்னன் ராஜராஜசோழனின் தமிழ் பற்றை இக்கோவிலின் வடிவமைப்பில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம். கோவிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி. தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி. தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோவிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி. தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி. தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் பெரியது. 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும், இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது, கோபுரத்தின் மேல் உள்ள வைக்கப்பட்டுள்ள கலச வடிவிலான மேற்கூரை கல் சுமார் 80 டன் எடை கொண்ட ஒற்றை கல்லால் செய்யப்பட்டது என்பது பெரிய அதிசயம். அதைவிட பெரிய அதிசயம், அப்பெரிய கல்லை எப்படி அவ்வளவு மேலே எடுத்துச் சென்றனர் என்பதுதான்.
அழகி என்னும் இடையர் குல மூதாட்டி, பெரிய கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் ராஜராஜசோழன் இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம், இராசகோபுரத்தின் உச்சியில் உள்ள 80டன் எடை கொண்ட கல்லில், அழகி என்று மூதாட்டியின் பெயர் பொறித்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. இப்படி, கோவிலில் உள்ள கல்வெட்டில், கோவிலை கட்ட யார் யார் பணியாற்றினார்களோ, கட்டடக்கலை நிபுணர்களிலிருந்து அவர்களின் துணிகளை சலவை செய்தவர்கள், முடி திருத்தியவர்கள் என கோவில் பணி செய்ய உதவியவர்களுக்கு தொண்டு செய்தவர்களின் பெயர் கூட கல்வெட்டில் பதிவு செய்திருப்பது ராஜ ராஜ சோழனின் பெருந்தன்மையும், மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பும், ராஜ ராஜ சோழன் மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் புலப்படுகிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
கன்னியாகுமரி பகவதி அம்மன்
இந்தியாவின் தென்கோடி முனையில், முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில். அம்மனின் 51 சக்தி பீடங்களில், இது சேது சக்தி (குமரி சக்தி) பீடம் ஆகும்.. இந்த அம்மனுக்கு துர்க்கை, பகவதி என்னும் பெயர்களும் உண்டு. பரசுராமர் பிரதிஷ்டை செய்த ஆலயங்களில், கன்னியாகுமரியும் ஒன்று என்பது ஐதிகம். பாணாசுரன் எனும் அசுரனை அழித்த தேவி இங்கே குமரியாக நிலை கொண்டாள். அம்பிகையின் தோழிகளான தியாகசுந்தரி, பாலசுந்தரி இருவரும் ஆலயத்தில் தனிச் சந்நதி கொண்டருள்கின்றனர். தேவியின் மூக்கில் ஜாஜ்வல்யமாக ஜொலிக்கும் மூக்குத்தி, நாகரத்தினத்தால் ஆனது.
தாணுமாலயனுக்கும் தேவிக்கும் நடக்க இருந்த திருமணம் நாரதரின் கலகத்தால் நின்றது. திருமணத்திற்குத் தயாரிக்கப்பட்ட உணவுகள் யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரி கடற்கரையில் அரிசி போன்ற வெண் சிறுமணலையும், பலவண்ண மணல்களையும் காணலாம்.
இந்தத் தலத்துக்குத்தான் ராமர் முதலில் வந்து வணங்கி,சீதையை மீட்க இங்கிருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க முயன்றார். அதன்பின் தேவியின் உத்தரவின்பேரில் வானரசேனையோடு ராமேசுவரம் சென்று அங்கு பாலம் அமைத்தார் என்கிறது தலவரலாறு.
இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். இந்த ஆலயத்துக்கு வந்து கன்னிப்பெண்கள் வேண்டிக்கொண்டால் விரும்பியபடி கணவன் அமைவான் என்பது நம்பிக்கை. காசிக்குச் சென்று புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவதற்கு முன்பு கன்னியாகுமரியில் இருக்கும் முக்கூடல் சங்கமிக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடுவதால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.
சிருங்கேரி சாரதாம்பிகை கோவில்
சிருங்கேரி சாரதாம்பிகை
கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது சிருங்கேரி சாரதாம்பிகை கோவில். ஆயகலைகள் அறுபத்து நான்கினிற்கும் தெய்வமாக திகழும் சரஸ்வதி தேவிக்கு, நாற்பதுக்கும் அதிகமான திருநாமங்கள் உள்ளன. அவற்றில் சில கலைமகள், சகலகலாவல்லி, நாமகள், சாவித்ரி, சாரதா ஆகியவை ஆகும். சாரதா என்றால் சரஸ்வதி அல்லது வாக்கிற்கு அதி தேவதை என்று பொருள். லலிதாம்பிகையின் ஆயிரம் திருநாமங்களில் 123 வது திருநாமமாக அமைவது சாரதாராத்யா என்னும் திருநாமம். சாரதாராத்யா என்றால் விஷ்ணு, பிரம்மா ஆகியோரால் ஆராதிக்கப்பட்டவள் என்று பொருள். 'சாரத' என்ற சொல்லுக்குப் பண்டிதர்களால் பூஜிக்கப்படுபவர் என்ற அர்த்தமும் உண்டு.
கருவறையில் சாரதா தேவியானவள் 'பிரம்ம வித்யா' சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீசக்ர பீடத்தில், கையில் ஜெப மாலையுடன் சிம்மாசனத்தில் மேல் அமர்ந்திருக்கிறார். அவரது நான்கு கைகளில் மேல் வலது கையில் கிளி இருக்கிறது. கீழிருக்கும் வலது கை சின்முத்திரை காண்பிக்கிறது. மேல் இடது கை அமிர்த கலசத்தை ஏந்தியுள்ளது. கீழ் இடது கை புத்தகத்தை வைத்துள்ளது. அமிர்த கலசம் சாகாமையையும், புத்தகம் மேலான அறிவையும் குறிக்கின்றன. ஜெப மாலையோ, பிரபஞ்சம் தோன்றும் விதையாக உள்ளது. பிரம்மனுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் உயிரின் விழிப்புணர்வை சின்முத்திரை பிரதிபலிக்கிறது.
சரத் காலத்தில் ஆராதிக்கப்பட்டவள் சாரதாம்பிகை. சரத்காலம் என்பது இலையுதிர் காலம். இது ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கொண்டது. இந்தக் காலத்தில் வரும் நவராத்திரி, சாரதா நவராத்திரி எனப்படும். வசந்த காலத்தில் வரும் நவராத்திரி, வசந்த நவராத்திரி எனப்படும். இந்த இரு நவராத்திரி காலங்களும் அம்பிக்கைக்கு மிகவும் உகந்த பூஜை காலமாகும். ஆகவே இந்தக் காலத்தில் சிறப்பு பூஜைகள் இங்கு நடத்தப்படுகின்றன. கோலாகலமாக நடைபெறும் நவராத்திரி விழாவில், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு திரண்டு வந்து, சாரதாம்பிகையை வழிபடுகின்றனர்.
நுண்ணறிவை அதிகம் கொண்டு மேதையாக ஆக சாரதா வழிபாடு மிகவும் அவசியம். சிருங்கேரி சாரதாம்பிகையை தரிசிப்பதன் மூலம் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறலாம் என்பது ஐதீகம். சாரதாம்பிகையே சரஸ்வதி என்பதால் கல்வியை ஆரம்பிக்கும் இளம் சிறார்கள் இங்கு வந்து அதைத் தொடங்குகின்றனர்.