நெடுங்குணம் யோக ராமர் கோவில்
கைகளில் வில்லும், அம்புமின்றி யோக நிலையில் அமர்ந்திருக்கும் அபூர்வ ராமர்
திருவண்ணாமலையிலிருந்து 47 கி.மீ. தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது நெடுங்குணம் யோக ராமர் கோவில். சுமார் 700 ஆண்டுகள் பழமையானது. எண்பத்தேழாயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இக்கோவில், தமிழ்நாட்டில், ராமருக்கு என்று அமைந்த தனிக்கோவிலில் மிகவும் பெரியது.
கருவறையில் ஸ்ரீராமபிரான் வித்தியாசமான கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். எப்பொழுதும் அவர் கையில் ஏந்தி இருக்கும் கோதண்டம் மற்றும் ஆயுதங்கள் ஏதுமின்றி, அமர்ந்த நிலையில் வலது கையை சின் முத்திரையுடன் திருமார்பில் வைத்தபடி, கண்களை மூடிய வண்ணம் யோக நிலையில் காட்சி தருகிறார். இது ராமபிரானின் மிகவும் அபூர்வமான திருக்கோலம் ஆகும். இதனாலேயே இவரை யோக ராமர் என்று அழைக்கின்றனர். ராமர் அருகே இடப்புறம் சீதாபிராட்டி அமர்ந்த நிலையில், வலக் கரத்தில் தாமரை மலரை ஏந்தியபடி காட்சி தருகிறார். அவரது இடக்கரம் திருவடி சரணத்தை உணர்த்தும் அபயஹஸ்தமாக விளங்குகிறது. லட்சுமணன், ராமருக்கு வலது புறத்தில் கைகளைக் குவித்து அஞ்சலி செலுத்தியவராய் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ராமபிரானும் சீதா பிராட்டியும் பீடத்தில் அமர்ந்து காட்சி தர, அவர்கள் எதிரே அனுமன் பிரம்மசூத்திரம் படித்தபடி காட்சி தருவது இன்னும் சிறப்பானது. இது வேறு எங்குமே காணமுடியாத அற்புத காட்சியாகும்.
பிரார்த்தனை
இங்கே ராமபிரான் சாந்தமான கோலத்தில் எழுந்தருளி இருப்பதால், அவரை வணங்கினால் மன அமைதி, நிம்மதியான வாழ்க்கை நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.ராமபிரான் இங்கு குரு அம்சமாக இருப்பதால், கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கான பிரதான வழிபாட்டுத் தலமாக இருக்கிறது. கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக நெய்தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, தம்பதியர் ஒற்றுமைக்காக ஊற வைத்த பாசிப்பயிறு, சர்க்கரைப்பொங்கல் , பானக நிவேதனம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இத்தலத்தில் வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர்.