வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

வேடுவக் கோலத்தில் கையில் வில்லும் அம்பும் ஏந்தி காட்சி தரும் முருகன்

கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் எல்லைக்குள் உள்ள வேலுடையான்பட்டு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது சிவசுப்ரமணிய சுவாமி கோவில். அருணகிரிநாதரின் திருப்புகழலில் இத்தலம் அத்திப்பட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும் முருகப் பெருமான் வேலுடனும் அல்லது தண்டத்துடனும்தான் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் மூலவர் சிவசுப்ரமணியசாமி, வேடுவக் கோலத்தில் சடா முடியுடனும், திருக்கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி, இடுப்பில் சல்லடத்துடன், காலில் இறகு அணிந்து வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். மூவரின் திருவுருவங்களும் ஒரே கல்லில் அமைந்திருப்பது அதன் சிறப்பம்சம் ஆகும். கொடிமரத்தின் அருகே பெரிய அளவில் ஏழு வேல்கள் முருகனின் உத்தரவிற்காகக் காத்து நிற்கும் சேவகர்களைப் போல் இருப்பது வேறு எந்த முருகன் தலத்திலும் காணமுடியாத அமைப்பாகும்.

பிரார்த்தனை

கந்த சஷ்டியின்போது குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன், நோய் போன்ற பல பிரச்னைகளையும் தீர்க்கும் பிரார்த்தனைக் கடவுளாக இத்தல முருகனை பக்தர்கள் போற்றுகிறார்கள்.

 
Previous
Previous

திருநிலை பெரியாண்டவர் கோவில்

Next
Next

பெரிய அய்யம்பாளையம் உத்தமராய பெருமாள் கோவில்