யந்திர சனீஸ்வரர் கோவில்
லிங்க வடிவில் காட்சி தரும் யந்திர சனீஸ்வரர்
நவகிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சனி பகவான் சூரிய பகவானுக்கும், சாயா தேவிக்கும். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையன்று பிறந்தார். இவர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி-சந்தவாசல் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஏரிக்குப்பம் ஊருக்குத் தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ள காரிகைக் குப்பம் என்ற சிற்றூரில் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். கோயில் சுருவறையில், வேறெங்கும் காண இயலாத வகையில், லிங்க வடிவில் சனீஸ்வரன் காட்சியளிப்பது இந்த கோயிலின் தனிச் சிறப்பு
மூலவர் சனீஸ்வரரின் மேனியில் யந்திரம் பொருத்தப்பட்டுள்ளதால் லிங்க வடிவில் காட்சி தரும் அவரை யந்திர சனீஸ்வரர் என்றும் கூறுகின்றனர். ஆறடி உயரமும், இரண்டரை அடி அகலமும் உள்ள அந்த யந்திர சனீஸ்வரர் தாமரைப் பீடத்தில் நின்று கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார் என்பதும் அந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு. யந்திர சனீஸ்வரர் நின்றிருக்கும் பீடத்தில் மகாலட்சுமி யந்திரமும், ஆஞ்சநேயர் யந்திரமும், சனியின் தாயாரான சாயா தேவியின் யந்திரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கண்களைக் குறிக்கும் வகையில் வலதுபுறம் சூரியனும், இடதுபுறம் பிறைச் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளனர். சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் சனீஸ்வர பகவானின் வாகனமான காகத்தின் உருவம் உள்ளது.
சனீஸ்வரரின் மார்பு பகுதியில் அறுகோண யந்திரமும், நீர், நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரன் ஆகியோருக்கான பீஜாட்சர மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு கண்ணாடியை இந்த யந்திரத்தின் முன் வைத்து பார்த்தால், எழுத்துக்கள் நேராகத் தெரியும்படி அமைந்துள்ளது. இதுபோன்றதொரு அமைப்புடைய சிலை வடிவத்தை, அதிலும் சனீஸ்வர அம்ச சிலாரூபத்தை ஏரிக்குப்பம் தவிர வேறு எங்கும் காண்பதரிது.
பொதுவாக சனி பகவான் சன்னதி மேற்கு நோக்கி இருக்கின்ற நிலையில் இங்கு மட்டும் யந்திர சனீஸ்வரர் கிழக்கு நோக்கி திறநத வெளியில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
யந்திர சனீஸ்வரர் கோவில் வரலாறு
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட சம்புவராய மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டது. சம்புவராய மன்னரின் படைத்தளபதி ஒருவர் இந்த வழியாக சென்றபோது விபத்தில் பலத்த காயமடைந்தார். சனிதோஷம் இருப்பதால் இந்த விபந்து ஏற்பட்டதாகவும் அதன் பாதிப்பில் இருந்து விலகிட இந்த இடத்தில் சனீஸ்வரர் சிலையை மூல மந்திரத்துடன் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டும்படி படை தளபதிக்கு அசரீரி கூறியது. அதையடுத்து மன்னரின் அனுமதியுடன் லிங்க வடிவில்,மூல மந்திரத்துடன் சனீஸ்வரர் சிலையை தளபதி பிரதிஷ்டை செய்தார்.
நாசா விண்வெளிக் கழக நிபுணர்கள் கண்டுபிடிப்பு
சனி பகவானின் சிறப்பு குறித்து நாசா விண்வெளிக் கழக நிபுணர்கள் கூறுகையில் சனி கிரகத்தின் வடதுருவமும், யந்திர சனீஸ்வரரின் மூல மந்திர பிரதிஷ்டையும் நேர்கோட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்
சனி தோஷ நிவர்த்தி தலம்
கண்டகச் சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி இவை மூன்றும் கோச்சாரத்தில் இருக்கும்போது நவக்கிரக ஹோமமும், சனிபகவானுக்கு சாந்தியும் செய்வது அவசியம். இத்தோஷம் உடையவர்கள் இவரை வழிபடுவதால் நிவாரணம் பெறலாம்.
புதிய தொழில் தொடங்குபவர்கள்,நீதிமன்ற வழக்குகளால் அவதிப்படுபவர்கள், வீடு கட்டுபவர்கள் ஆகியோர் இக்கோவிலுக்கு வந்து அதன் ஆவணங்களை யந்திர சனீஸ்வரரின் மடியில் வைத்து வணங்குவது சிறப்பாகும். மேலும் கடன் பிரச்சனை, குழந்தைப்பேறு, பில்லி சூனியம் போக்குதல், விவசாயம் ஆகியவற்றுக்கும் இவரை வணங்கினால் நல்லபலன்கள் கிடைக்கும்.
வாரம்தோறும் சனிக்கிழமைகளில் ஏரிக்குப்பம் கிராமம் திருவிழாக்கோலம் பூண்டுவிடுகிறது. பல்வேறு ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் ஏரிக்குப்பம் சனீஸ்வர பகவானை வணங்கி அவரது அருள் பெற்று தோஷம் நீங்கிச் செல்கிறார்கள்.
எமதண்டீஸ்வர சுவாமி கோவில்
தினம் தினம் தன் முக பாவனையை மாற்றிக் கொள்ளும் திரிபுரசுந்தரி அம்மன்
விழுப்புரம் மாவட்டம், மைலம் வட்டம், ஆலகிராமம் கிராமத்தில் அமைந்துள்ளது எமதண்டீஸ்வர சுவாமி கோவில். இறைவன் திருநாமம் எமதண்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம்- விழுப்புரம் இடையில் உள்ளது கூட்டேரிப்பட்டு. இங்கிருந்து மேற்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், தெற்கு நோக்கிய கருவறையில் திரிபுரசுந்தரி அம்மன் காட்சி தருகிறார். இந்த அம்மன் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு விதமாகக் காட்சி தருவது வியப்புக்குரிய அம்சமாகும். திரிபுரசுந்தரி அம்மன் வாரத்தில் ஏழு தினங்களிலும் ஏழு விதமான முகபாவங்களோடு காட்சி கொடுப்பார். இவ்வாலய அம்பாள் ஞாயிற்றுக்கிழமை குழந்தை முகம் கொண்டும், திங்கள், வெள்ளிக்கிழமைகளில் புன்சிரிப்புடனும், செவ்வாய், புதன்கிழமைகளில் கோப முகத்துடனும், வியாழன், சனிக்கிழமைகளில் யோக, தியான நிலையிலும் காட்சிதருவது சிறப்பு. ஏழு வாரங்கள் அவரவர் ராசிக்கேற்ற வண்ணத்துணிகளில் நெய்தீபமேற்றி, அம்பாளை வணங்கினால் வேண்டும் வரம் கிட்டும் என்பது ஐதீகம்.
வியாக்ரபுரீஸ்வரர் கோவில்
தவக்கோலத்தில் காட்சி தரும் முருகப் பெருமான்
புதுக்கோட்டையிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள தலம் திருவேங்கைவாசல். இறைவன் திருநாமம் வியாக்ரபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகதாம்பாள்.
கோயில் சுற்றுப்பிரகாரத்தில் எண்கோண வடிவில் தவக்கோல சன்னதி உள்ளது. அதில் முருகப்பெருமானின் 5அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான திருமேனி உள்ளது. மற்ற எல்லா தலங்களிலும் உள்ள, முருகப் பெருமான் கைகளில் இருக்கும் வேல், சூலாயுதம், தண்டம் இவற்றிலிருந்து ஒரு வேறுபாடாக தலையில் மகுடத்துடன் கண்ணிமாலை, காதுகளில் பத்ர குணடலம். கழுத்தனி மார்பில் சன்னலீரம், வயிற்றுப்பகுதியில் உதரபந்தம் ஆகிய அணிகலன்களுடன் ஒரு காலை மடித்தும் மறுகாலை தொங்கவிட்ட நிலையில் தாமரை மலர் பீடத்தின் மீது கால் வைத்த வண்ணம் அமர்ந்து, தவம் புரியும் கோலத்தில் காணப்படுகிறார்.
இவரிடம் வேலும் இல்லை. மயிலும் இல்லை. ஆண்டி கோலத்திலும், ராஜ அலங்காரத்திலும் முருகனை வழிபட்டு வந்த நமக்கு, இப்படி தவக்கோலத்தில் முருகனை தரிசிப்பது வித்தியாசமான காட்சியாகும்.
ஆண்டார்குப்பம் பால சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன் அதிகார தோரணை கொண்ட வடிவத்தில் காட்சி தரும் தலம்
சென்னை – கொல்கத்தா நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டு சாலையில் வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது ஆண்டார்குப்பம். ஆளும் கோலத்தில் முருகன் இங்கு இருப்பதால் 'ஆண்டார்குப்பம்' என அழைக்கப்படுகிறது .
இங்கு முருகன் அதிகார தோரணை கொண்ட வடிவத்தில் நமக்கு காட்சி தருகிறார் .பிரணவத்திற்கு பொருள் கூறும்படி அதிகாரத்துடன் இடுப்பில் கைவைத்து கேள்வி கேட்க்கும் தோரணையில் அவரது தோற்றம் இருக்கிறது . பிரணவத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனை, முருகன் சிறையில் அடைத்ததோடு அல்லாமல் படைப்பு தொழிலையும் தானே எடுத்து கொண்டார்.
குழந்தை, இளைஞர்,முதியவர் என்ற் மூன்று கோலத்தில் காட்சி தரும் முருகன்
முருகன் இங்கு வேல் ,வஜ்ரம் , சக்தி என எவ்வித ஆயுதம் இல்லாமல் காட்சி தருகிறார் . சுவாமிக்கு அருகில் இரண்டு யானை வாகனம் இருக்கிறது. மனிதர்களின் வாழ்க்கையில், சிறுவயதில் குழந்தையாகவும், நடுவயதில் இளைஞராகவும், முதுமையில் முதியவராக மாறுவதே காலசக்கரத்தின் பணி. அதனை போன்று இத்திருத்தலத்தில் காலையில் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞராகவும், மாலையில் முதியவராகவும் மூலவர் முருகபெருமான் காட்சி அளிப்பது உலகில் இங்கு தவிர வேறு எங்கும் இல்லை என்பது இத்திருக்கோயிலின் சிறப்பு.
பிரம்மா இங்கு முருகனுக்கு எதிரில் நீள்வட்ட சிலை வடிவில் இருக்கிறார் . இதில் பிரம்மாவிற்கு உருவம் இல்லை அவருக்குரிய தாமரை , கமண்டலம் ,அட்சரமாலை மட்டும் இருக்கிறது . இங்கு முருகன் யானை வாகனத்துடன் காட்சி தருகிறார் . இத்தலத்தை பற்றி அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார் .
இத்தலத்து முருகனை நாம் வந்து வணங்கினால் பொறுப்பான பதவி ,அதிகார பதவிகள் மற்றும் புத்திசாலியான குழந்தைகள் ஆகியவை கிடைக்கும் .
சாட்சி கணபதி கோவில்
பக்தர்களைப் பற்றி சிவபெருமானிடம் சாட்சி சொல்லும் கணபதி
ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் அருள்மிகு மல்லிகார்ஜுனர் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலுக்குச் சென்று தங்களின் வருகையை பக்தர்கள் பதிவு செய்ய வேண்டுமாம். பக்தர்கள் ஸ்ரீசைலம் அருள்மிகு மல்லிகார்ஜுனர் கோவிலுக்குச் சென்று மல்லிகார்ஜுனர் மற்றும் பிரமராம்பிகா தேவியை தரிசித்ததாக இவர் கைலாயத்தில் சாட்சி சொல்வாராம். அதனால், இவரை 'சாட்சி கணபதி' என்கின்றனர்.
இந்த சாட்சி கணபதி தன்னை காண வரும் பக்தர்களில் யார் மோட்சத்திற்கு செல்லும் அருகதை உள்ளவர்கள், யார் இல்லாதவர்கள் என கைலாசத்தில் (ஸ்ரீ சைலத்தில்) உள்ள சிவபெருமானிடம் ஒரு பட்டியல் போட்டு கொடுப்பாராம். எனவே பக்தர்கள் தமக்கு மோட்சம் கிட்ட வேண்டும் என்று கருதி இக்கணபதியை தரிசித்து தமது கோத்திரப் பெயர்களை கூறி சாட்சி கணபதியை வணங்கிய பின் பக்தியுடன் ஸ்ரீ சைலம் வாயிலில் நுழைகின்றனர். இக்கணபதி விக்ரகம், பெயர்களை குறித்துக் கொள்ளும் தோற்றத்தில்
கைகளில் எழுத்தாணி, ஏடு வைத்துக் கொண்டு இருப்பது ஒர் அற்புதம் ஆகும்.
வரதராஜப் பெருமாள் கோவில்
மூன்று திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருளியிருக்கும் தலம்
சென்னையில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, பூந்தமல்லி வரதராஜப் பெருமாள் கோவில்.
ஸ்ரீராமானுஜரின் குருவான திருகச்சி நம்பிகளின் அவதாரத் தலம் இதுவாகும். இந்த ஆலயத்தில் திருக்கச்சி நம்பிகள் கையில் விசிறியுடன் காட்சி தருகிறார். இங்கு மூலவரான வரதராஜப் பெருமாள், புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின் தலையில் சூரியனுடன் இருக்கிறார். இதனால் இது சூரிய தலமாகவும் கருதப்படுகிறது.
இந்த ஆலயத்தில் திருப்பதி வேங்கடேசர், திருவரங்கம் அரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவமும் நடை பெறுகிறது. அப்போது மூவரும் திருக்கச்சி நம்பிக்கு, கருடசேவை காட்சி தருவர்.
இத்தல தாயார், மல்லிகை மலரில் அவதரித்ததால் 'புஷ்பவல்லி' என்று பெயர். இவள் பூவில் இருந்தவள் என்பதால், இந்த ஊர் 'பூவிருந்தவல்லி' என்றானது. அதுவே மருவி 'பூந்தமல்லி' என்று அழைக்கப்படுகிறது.
திருமாலுக்கு விசிறி சேவை செய்ய எண்ணிய திருக்கச்சி நம்பிகள், முதலில் திருவரங்கம் சென்றார். அரங்கநாதரோ, தான் காவிரிக்கரையில் குளிர்ச்சியாகவே இருப்பதாக சொல்லி விட்டார். பின்னர் திருக்கச்சி நம்பிகள், திருப்பதி சென்றார். அங்கிருக்கும் வேங்கடேசனோ, தான் மலை மீது இருப்பதால் எப்போதும் குளிரில் இருப்பதாக கூறினார். இதனால் காஞ்சிபுரம் வந்த திருக்கச்சி நம்பிகள், அங்கு உக்கிரமாக இருந்த வரதராஜருக்கு தன்னுடைய விசிறி சேவையை செய்து வந்தார்.
திருக்கச்சி நம்பிகள், தினமும் காஞ்சிபுரம் சென்று விசிறி சேவை செய்து வந்தார். அதோடு இங்கு நந்தவனம் அமைத்து மலர்களைத் தொடுத்து மாலையும் அணிவித்து வந்தார். வயதான பின்பும் இதே போன்று அவர் காஞ்சிபுரம் சென்று வந்து கொண்டிருந்தார். அவரது தள்ளாத வயதை கருத்தில் கொண்ட வரதராஜப் பெருமாள், பூந்தமல்லிக்கே வந்து காட்சி தந்தார். அந்த இடத்தில்தான் தற்போதைய ஆலயம் இருக்கின்றது.
சூரிய தோஷ நிவர்த்தி தலம்
இது சூரியதலம் ஜோதிட ரீதியாக சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளவர்கள, உடல்நலம்
பாதிக்கப்பட்டோர், இத்தல பெருமாளை வழிபட்டால் நலம் கிடைக்கும்.
சிவசைலநாதர் கோவில்
வீதி உலாவிற்கு தங்க கைக்கடிகாரம் அணிந்து வரும் அம்பிகை
திருநெல்வேலி மாநகரிலிருந்து மேற்கே சுமார் 57 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ள தேவார வைப்புத் தலம் சிவசைலம். இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் சிவசைலநாதர். இறைவியின் திருநாமம் பரமகல்யாணி.
இத்தலத்தில் அம்பிகைக்கு தனி சன்னதி கட்ட ஏற்பாடாகி கொண்டிருந்த வேளையில், சிவசைலத்திற்கு அருகே உள்ள சிநேகபுரி (தற்போதைய ஆம்பூர்) என்னும் ஊரில் வாழ்ந்த அந்தணர் ஒருவரின் கனவில் தோன்றி அந்த ஊரில் உள்ள கிணறு ஒன்றில் அம்மையின் திருமேனி ஒன்று நான்கு கரங்களுடன் ஜலவாசமாக இருந்து வருவதாகவும், அந்த அம்பாள் திருமேனியை எடுத்து சிவசைலத்தில் கட்டப்படும் கோவிலுக்குள் பரமகல்யாணி என்ற பெயர் சூட்டி பிரதிஷ்டிக்கும் படி கூறியருள்கிறார் சிவபெருமான். அந்த அந்தணரும் தான் கண்ட கனவை ஊர் மக்களுக்கும், மன்னனுக்கும் தெரியப்படுத்தி, அந்த குறிப்பிட்ட கிணற்றில் தேடிட சிவபெருமான் கூறியது போலவே ஒரு நான்கு கரங்கள் கொண்ட அழகிய அம்மையின் திருவுருவ சிலை கிடைக்க பெற்றது. அந்த அம்மையின் திருவுருவை மங்கள வாத்தியங்கள் முழங்க அங்கிருந்து எடுத்து வந்து சிவசைலம் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாகவும் வரலாறு கூறுகிறது.
இங்குள்ள அம்பிகை நான்கு கரங்கள் கொண்டு அழகே உருவாக புன்முறுவல் பூத்த முகத்தவளாய் அளவில் சற்றே பெரிய உருவில் காட்சித் தருகிறாள். பாண்டிய நாட்டில் பிரசித்தி பெற்ற அநேக கோவிலின் அம்பிகைகள் இருகரம் கொண்டவர்களாக காட்சியளிக்க, இங்கு அம்பிகை பரமகல்யாணி, நான்கு கரங்கள் கொண்டு காட்சியளிப்பது சிறப்பம்சம் ஆகும். இங்குள்ள உற்சவர் பரமகல்யாணி அம்பிகையும் நான்கு கரங்கள் கொண்டு காட்சியளிக்கிறாள்.
உற்சவர் பரமகல்யாணி அம்பிகைக்கு தங்கக் கை கடிகாரம் ஆபரணமாக அணிவிக்கப்படுவது சிறப்பம்சம். விழாக் காலங்களில் இடது கரத்தில் தங்க கைக்கடிகாரத்தை ஆபரணமாக சார்த்துவார்கள்.இந்த அலங்கார நடைமுறை வேறு எந்த தவத்து அம்பிகைக்கும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிசும்பசூதனி (என்ற) வட பத்ரகாளியம்மன் கோவில்
சோழ மன்னர்களின் குல தெய்வம்
சோழர்கள் தங்கள் குல தெய்வமாக வணங்கிய அம்மன் நிசும்ப சூதனி என்கின்ற அம்பாயிரம்மன். கி.பி. 850 இல் உறையூரில் சிற்றரசனாக பதவி ஏற்ற விஜயாலய சோழன். பின்பு தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி தலைநகரை பழையாறையில் இருந்து தஞ்சைக்கு மாற்றினார். அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் எழுப்பினார். பின்பு வந்த இராஜ இராஜ சோழன், இராஜேந்திர சோழன் என அனைத்து சோழ மன்னர்களும் போருக்கு செல்வதற்கு முன், இந்த அம்மனை வணங்கி விட்டு சென்று வெற்றியுடன் திரும்பினர். தங்கள் வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனியை குல தெய்வமாக வழிப்பட்டனர். இவளே தஞ்சையை காக்கும் காவல் தெய்வம் ஆனாள்.
நிசும்பசூதனி என்ற பெயர் வரக் காரணம்
முன்னொரு காலத்தில் சும்பன், நிசுபன் என்ற இரு அரக்கர்கள் மக்களையும், தேவர்களையும், ரிஷி முனிகளையும் துன்புறுத்தி வந்தனர். இவர்களின் கொடுஞ்செயல் தாளாது அனைவரும் கொற்றவையை (துர்கை) நாடினர். கௌசீகி என்ற அழகிய பெண் உருவம் கொண்டிருந்த அம்பிகையை கண்டு சும்ப, நிசும்பர்களின் படைவீரர்களான சண்ட, முண்டர்கள் தங்கள் அரசனிடம் கூற அவளை அடைய வேண்டும் என்று மோகம் கொண்டு அவளை பிடித்து வர உத்தரவிட்டனர். தன்னை எவர் வெற்றி கொள்கிறாரோ அவர்களையே மணப்பேன் என்று கூறிய அன்னையிடம் சண்ட முண்டர்கள் போர்ப் புரிய துவங்கினர். அம்பிகை உக்ர ரூபம் கொண்டு சண்ட முண்டர்களை அழித்தாள். அதன் பின் அசுர குல அரசர்களான சும்ப, நிசும்பர்களை அழித்து வெற்றி கொண்டு 'நிசும்பசூதனி' என்ற நாமம் கொண்டாள்..
நிசும்பசூதனியின் வித்தியாசமான தோற்றம்
சோழர்கள் நிற்மானித்த தஞ்சை நிசும்பசூதனி ஆலயம் 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயம் ஆகும். இன்றளவும் பொலிவு மாறாமல் காணப்படுகிறது. கருவறையில் அன்னை வேறெங்கும் காண முடியாத தோற்றத்தில் காட்சி தருகிறாள்.
ஏழு அடி உயரத்தில், மெலிந்த தேகம், உடல் சதையற்று எலும்புகள் வெளியே தோன்றும், எட்டு திருக்கரங்கள், தீச்சுவாலையாக திருமுடி. நிசும்பனின் தலை கொய்து, தலைமீது அழுத்திய மெலிந்த திருவடி, தெற்று பற்கள், முப்புரி நூலாக மண்டை ஓடுகள், நிசும்பனை அழிக்கும் திரிசூலம் என அசுரன் மீது அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறாள் அன்னை. எட்டு கரங்களில் சூலம், கேடயம், வாள், தனுசு, அம்பு, கபாலம், பாசம், மணியை தாங்கி தலையை சற்று சாய்த்தவாறு அருமையாக வடிவமைத்துள்ளனர். இங்கே வீழ்ந்து இருக்கும் நான்கு அசுரர்களும் சண்டன், முண்டன் மற்றும் சும்ப, நிசும்பர்கள் ஆவர்.
இந்த அம்பிகையே தற்பொழுது 'வட பத்ரகாளியம்மன்' என்ற பெயருடன் தஞ்சையை காவல் புரிகிறாள். கோர ரூபம் என்றாலும் பக்தர்களுக்கு அருள்புரியும் கருணைக்கடலாய் திகழ்கிறாள் அன்னை நிசும்பசூதனி. மகிடனை அழித்த கொற்றவையின் அம்சமாக தோன்றிய நிசும்பசூதனியை இராகு காலம் மற்றும் அட்டமி நாளில் வணங்குவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
இக்கோவிலுக்கு தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய் அல்லது வெள்ளி அல்லது ஞாயிறு கிழமைகளில் ராகு நேரத்தில் சென்று வழிபட்டால் ராகு, கேது தோஷங்களான தார தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், திருமணத் தடை, தொழில் தடை போன்றவற்றிற்கு நிவர்த்தி கிடைக்கும்.
நித்ய கல்யாண பெருமாள் கோவில்
ஒவ்வொரு நாளும் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் திவ்ய தேசம்
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில், 40 கிலோமீட்டர் தொலைவில், கோவளத்திற்கு முன்னதாக திருவேடகத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில். இங்கு, லட்சுமியை தன் இடது தோளில் ஏந்தியபடி காட்சி தருகிறார் நித்ய கல்யாணப் பெருமாள். லட்சுமியை இடப்பக்கம் ஏந்திய திருத்தலம் என்பதால் `திருஇடந்தை' என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே திருவிடந்தை ஆக மாறிவிட்டது.
கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக- தேவியை மடியில் அமர்த்திக் கொண்டு வீற்றிருக்கிறார். பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேடன் உள்ளார். ஸ்ரீஆதிவராக மூர்த்தியின் இடப்பக்கத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லி நாச்சியார் என்றும், பிரதி தினம் கல்யாணம் செய்து கொண்டபடியால், பெருமாளுக்கு நித்திய கல்யாண பெருமாள் என்றும் திருநாமம் வழங்கலாயிற்று. தாயார் திருநாமம் கோமளவல்லி.
பெருமாளுக்கு அனுதினமும் திருமணம் நடந்த வரலாறு
சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சம்பு என்று அழைக்கப்பட்ட தீவில் குனி என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்குப் பணிவிடை செய்வதற்காக கன்னிகை ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். ஒரு காலகட்டத்தில் அந்த முனிவர் மோட்சம் அடையவே, அவரைப் போலவே மோட்சம் அடைய அந்தக் கன்னிகை கடுந்தவம் செய்து வந்தாள். ஒரு நாள் அங்கு வந்த நாரத முனிவர் அவளிடம்,'திருமணம் செய்து கொள்ளாமல் மோட்சம் அடைய இயலாது' என்று கூறினார். எனவே பல முனிவர்களிடமும் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினாள். காலவ முனிவர் என்பவர் அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். முதலாவது பெண் குழந்தையின் பெயர் கோமளவல்லி. அவர்களைப் பெற்ற சிறிது காலத்தில் குழந்தைகளின் தாய் மறைந்து விட்டாள். காலவ முனிவர் அந்த 360 பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார். பெண் குழந்தைகள் மளமளவென்று வளர்ந்து பருவமடைந்து, திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிகளானார்கள். இத்தனை பெண்களையும் எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று தவித்தார் காலவ முனிவர். சம்புத்தீவிற்கு வந்து மற்ற முனிவர்களிடம் அந்தப் பெண்களுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்று வருத்தத்துடன் ஆலோசனை கேட்டார். அவர்கள் திருவிடந்தை சென்று பெருமாளை வழிபடக் கூறினார்கள். இத்தலத்திற்கு தனது 360 கன்னிகைகளுடன் வாழ்ந்து வந்த காலவரிஷியின் வேண்டுதலை ஏற்று, பெருமாள் பிரம்மச்சாரியாக வந்து தினம் ஒரு கன்னிகையாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடபாகத்தில் வைத்துக் கொண்டு எழுந்தருளினார்.
திருஷ்டி தோஷம் விலக்கும் தலம்
உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ரகங்களாகக் காட்சி தருகின்றனர். ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்று உள்ளது. இது இயற்கையிலேயே அமைந்ததாம். இந்த திருஷ்டிப் பொட்டையும் தனிச்சந்நிதி தாயாரான கோமள வல்லித் தாயாரின் திருமுகத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டை யும் தரிசிப்பவர்களுக்கு திருஷ்டி தோஷம் விலகும் என்கிறார்கள். இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் சட்டென்று திருமணம் முடிந்து விடும். அவ்வாறு திருமணம் முடிந்த தம்பதியர், இந்த கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்
எழுந்து நிற்கும் நிலையில் காட்சி தரும் நந்தி
பொதுவாக சிவாலயங்களில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் நந்தி, சிவபெருமானின் முன்பு அமர்ந்திருப்பார். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தியாகராஜப் பெருமானுக்கு முன்பு உள்ள நந்தியோ நின்ற கோலத்தில் உள்ளார், இதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான காரணம் உள்ளது.
சிவபெருமானின் நண்பரும், தேவாரம் பாடிய மூவர்களில் ஒருவருமான சுந்தரர் திருவாரூரில் வசித்து வந்த பரவை நாச்சியார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்காக அவர் சிவபெருமானை பரவை நாச்சியாரிடம் தனக்காக தூது செல்ல வேண்டினார். சுந்தரரின் காதலியிடம் துாது சென்றார் சிவபெருமான். அப்போது தன் வாகனமான நந்தி மீது செல்லாமல், திருவாரூர் வீதிகளில் நடந்தே போனார். இதனால் வருத்தமடைந்த நந்தி, இதன் பின் யாருக்காகவும், எதற்காகவும் சிவபெருமானை நடக்க விடக் கூடாது என்றும், அவர் அழைத்தால் உடனே புறப்படவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் நந்தி முடிவு செய்தார். இதுவே இங்கு நந்தி நின்ற நிலையில் காட்சியப்பதற்கான காரணமாகும்.
பொதுவாக நந்தியின் வடிவமானது கருங்கல்லாலோ அல்லது வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தலத்தில் உலோகத்தினால் நந்தி உருவாக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும். மேலும் திருவாரூரைச் சுற்றியுள்ள மற்ற சப்த விடங்கத்தலங்களிலும் நந்தி நிற்கும் நிலையில் இருப்பதும், உலோகத்தினால் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.இவரை தரிசித்தால் தடைகள் அகன்று சுபவிஷயங்கள் நடந்தேறும்.
அமிர்தகடேசுவரர் கோவில்
இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், எய்யலூர் சாலையில் அமைந்துள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவி வித்யூஜோதிநாயகி.
தேவர்கள், பாற்கடலில் கிடைத்த அமுதத்தை விநாயகரை வணங்காமல் பருக சென்றதால், விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுதகலசத்தை எடுத்து செல்லும்போது ஒரு துளி அமுதம் கடம்பவனமாக இருந்த இந்த ஊரில் விழுந்தது. அந்த இடத்தில் சிவன் சுயம்பு லிங்கமாக உள்ளார். இந்திரனும் தேவர்களும் தங்கள் தவறை உணர்ந்து விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு அமுதகலசத்தை திரும்பி கேட்டனர். விநாயகர் சிவனிடம் வேண்டும்படி கூறினார். சிவன் இந்திரனுக்கு அமுதகலசத்தை கொடுத்து அமிர்தகடேஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார்.
தேவர்களின் தாயான அதிதி, அமுதம் அளித்த சிவனை தினமும் வணங்கி வந்தார். இவர் தினமும் இங்கு வருவதை விரும்பாத இந்திரன் இந்த சிவனை கோயிலோடு இந்திரலோகம் எடுத்து செல்ல விரும்பி கோயிலை தேர் வடிவில் மாற்றி இழுத்து செல்ல முயன்றான். விநாயகர் தன காலால் தேர் சக்கரத்தை மிதித்து கொள்ள, இந்திரனால் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. இந்திரன் விநாயகரிடம் வழி விடும்படி வேண்ட விநாயகர் இந்திரனிடம் கோடி லிங்ககளை பிரதிஷ்டை செய்தால் தேரை கொண்டு செல்லலாம் என்று கூறினார். இந்திரன் ஆணவத்துடன் லிங்கங்கள் செய்ய அனைத்தும் பின்னப்பட்டன, தவறை உணர்ந்த இந்திரன் அமிர்தகடேஸ்வரரை வேண்ட அவர் ஆயிரம் முறை தன் பெயரை சொல்லி ஒரு லிங்கம் செய்யும்படி பணித்தார். அதன்படி இந்திரன் ருத்ரகோடிஸ்வர லிங்கத்தை உருவாக்கினான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தான் இங்கேயே இருக்க விரும்புவதால் அதிதிக்கு பதில் இந்திரனே தினமும் வழி படலாம் என கூறினார். இந்திரனும் மன்னிப்பு கேட்டான் . தினமும் இந்திரன் பூஜை செய்வதாக ஐதிகம்.
இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கிறார். இவருக்கு ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச் சென்றும், தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்தது. இவர் தலையை இடது புறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சி தருகிறார். தேர் சக்கரத்தை மிதத்ததின் அடையாளமாக, தேர் போல் அமைந்த இக்கோவிலின் இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து காணப்படுகிறது.
லட்சுமி நரசிம்மர் கோவில்
தீராத நோய்களைத் தீர்க்கும் வைத்திய நரசிம்மர்
தெலுங்கானா மாநிலம் யாதகிரி மாவட்டத்தில், யாதகிரிகுட்டா என்ற ஊரில் அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மர் கோவில். ஐதராபாத்தில் இருந்து 52 கிலோ மீட்டரிலும், வாரங்கல்லில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. தீராத நோயைத் தீர்த்து வைக்கும் சக்திமிக்கவராக விளங்கும் இத்தல நரசிம்மர், 'வைத்திய நரசிம்மர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
தல வரலாறு
திரேதா யுகத்தில், ருஷ்யசிருங்கரின் மகனான யாத மகரிஷி இங்கு தவம் செய்கையில் அவருக்குப் பிரத்யட்சமான அனுமன் அவரது வேண்டுகோளின்படி அவருக்கு நரசிம்மரின் திருக்கோலம் காணும் பாக்கியத்தை அருளினார். நரசிம்மர் அவருக்கு ஐந்து வடிவில் காட்சி தந்த தலம் இது. இந்த இடம் தற்போது கோவில் இருக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. மக்களின் முறையற்ற வழிபாட்டின் காரணமாக, நரசிம்மர் தன்னுடைய புராதன இடத்தில் இருந்து தற்போதைய குன்றில் வந்து அமர்ந்ததாகவும், அதை அறிந்து இங்கே ஆலயம் கட்டப்பட்டதாகவும் தலவரலாறு சொல்கிறது.
இங்கு வீற்றிருக்கும் மூலவரான லட்சுமி நரசிம்மர், மிகவும் சக்தி வாய்ந்தவர். இவர் 12 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட குகையில் இருந்து அருள்புரிகிறார். யோக நரசிம்மர், நரசிம்பர், ஜூவால் நரசிம்மர், உக்கிர நாசிப்பர், லட்சுமி நரசிம்மர்' என ஐந்து தோற்றங்களில் யாதரிஷி முனிவருக்கு, காட்சிதந்த தலம் என்பதால், இந்தக் கோவில் பஞ்ச நரசிப்பர் கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது. பதினெட்டு புராணங்களில் ஒன்றான கந்த புராணத்தில், கோவிலைப் பற்றிய தகவல்கள் இருப்பதை வைத்து, இது எவ்வளவு புராதனமான ஆலயம் என்பதை உண முடியும்.
தீராத நோயைத் தீர்த்து வைக்கும் சக்திமிக்கவராக விளங்கும் இத்தல நரசிம்மர், 'வைத்திய நரசிம்மர்' என்றும் அழைக்கப்படுகிறார். சகல மனக்கிலேசங்களையும், அச்சங்களையும் அகற்ற வல்லவர் நரசிம்மர். இங்கு ஒரு மண்டல காலம் தங்கித் தொழுதால் மனப்பிணிகள் அகன்று விடும் என்பது நம்பிக்கை. இங்கு வந்து தொழுவோருக்கு பில்லி, சூனியம், ஏவல் ஆகியவை அகன்று விடும் என்பதும் நம்பிக்கை.உத்தியோகம், உத்தியோகத்தில் உயர்வு, மகப்பேறு ஆகியவற்றிற்காவும் இத்தலம் பெயர் பெற்றுள்ளது.
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்
மும்மூர்த்திகளான சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவன் ஒன்றாக சேர்ந்திருக்கும் அபூர்வக் கோலம்
சேலம்-மேட்டூர் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் தாரமங்கலம். இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவி சிவகாமியம்மை.
இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவன் ஒரே சிலையில் காட்சியளிப்பது வித்தியாசமான திருக்கோலம் மற்றும் அபூர்வமான விஷயமாகும். அதிலும் மகாவிஷ்ணு, லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமானின் ஆவுடையாராக மாறியிருக்கிறார். பிரம்மதேவனும் கூட, நான்முகனாக மாறுவதற்கு முன்பு இருந்த 5 முகங்களுடன் காட்சியளிக்கிறார். விஷ்ணுவும், பிரம்மனும், சிவபெருமானின் அடியையும், முடியையும் தேடினர். அது இயலாமல் போனதால் இருவரும் சிவனை பூஜிக்க, அவர் சிவலிங்க வடிவில் இருவருக்கும் காட்சியளித்தார். அடி முடி தேடிய வரலாற்றை எடுத்துரைக் கும் வகையிலேயே, அடியைத் தேடிச் சென்ற மகாவிஷ்ணு, சிவலிங்கத்தின் அடியில் ஆவுடையாராக மாறியிருக்கிறார். அதே போல் முடியைத் தேடிச் சென்ற பிரம்மன், சிவலிங்கத்தின் மேற்பகுதியை தன்னுடைய கையில் தழுவியபடி காட்சி யளிக்கிறார்.
இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை. ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது. இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
துர்கா பரமேசுவரி கோவில்
வித்தியாசமான கோலத்தில் காட்சி தரும் துர்கை அம்மன்
கர்நாடக மாநிலம் மங்களூர் நகரத்திலிருந்து 29 கி.மீ. தூரத்தில் உள்ள கட்டீல் தலத்தில் அமைந்துள்ளது துர்கா பரமேசுவரி கோவில். கனககிரி மலைக்கும், பர்வஞ்சே என்ற இடத்திற்கும் நடுவே கட்டீல் அமைந்துள்ளது. இத்தலத்தில் பாயும் நந்தினி நதியின் நடுவே துர்கா பரமேசுவரி கோவில் அமைந்துள்ளது. முனிவர் ஒருவர் சாபத்தால் தேவலோக பசுவான காமதேனுவின் மகளான நந்தினி இங்கே நதியாக பாய்கிறாள்.
அருணாசுரன் என்ற அரக்கன் பிரம்ம தேவரை வழிபட்டு அரிய பெரிய வரங்களைப் பெற்றான். பின்னர், அவற்றைக் கொண்டு தேவர்களையும், முனிவர்களையும், உலக உயிர்களையும் துன்புறுத்தினான். அவனை அம்பாள் தேனீ வடிவில் வந்து அழித்தாள். பின்னர் தன் அடியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இத்தலத்தில் எழுந்தருளினாள்.
கடிலா என்பது தேவியின் இடுப்புப் பகுதியைக் குறித்ததினாலும் , அவள் நதிக்கு இடையில் தோன்றியதால் நடு என்ற அர்த்தம் தரும் வகையில் கடி எனவும் , இடம் என்ற அர்த்தத்தை தரும் லா என்ற சொல்லும் இணைந்த சொல்லான கடி லா என்ற பெயரில் அங்கு ஆலயம் எழும்ப, பின்னர் கடிலா என்பது மருவி கட்டீல் என ஆயிற்று.
இக்கோவிலில், துர்கை அம்மன் உட்கார்ந்த நிலையிலும் இல்லாமல், நின்ற நிலையிலும் இல்லாமல் வித்தியாசமான கோலத்தில் காட்சி தருவது ஒரு தனிச் சிறப்பாகும். நதிக்கு நடுவில் அம்மன் எழுநந்நருளியிருப்பதால் கர்ப்பகிரகம் ஈரமாக இருப்பதுடன், இங்கு பிரசாதமாக வழங்கப்படும் குங்குமமும் ஈரமாக இருக்கினறது.இந்த துர்கை அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் மிகவும் பிரசித்தம். வாரத்திற்கு கிட்டத்தட்ட 3000 இளநீரால் அபிஷேகம் நடை பெறுமாம். அதே போல பாக்குப் பூ அர்ப்பணிப்பதும் விசேஷம். சுற்று வட்டார தென்னை விவசாயிகள் தங்கள் தென்னந் தோப்புகளில் தேங்காய் நிறைய காய்க்க வேண்டும் என்று இங்கே வழிபாடு செய்கிறார்கள். வேண்டுதல் பலித்ததும் தென்னங்கன்றுகளை கோவிலுக்கு காணிக்கையாக்குகின்றனர்.
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்
நாள்பட்ட நோயால் சிரமப்படுபவர்கள் வழிபட வேண்டிய தலம்
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 16 கி.மீ.தூரத்திலும், காஞ்சிபுரத்திலிருந்து 21 கி.மீ. தூரத்திலும் பழைய சீவரம் தலத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது.
மூலவர் லட்சுமிநரசிமமர் மேற்குநோக்கி வீற்றிருக்கிறார். கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும்,வலக்கரத்தால் அபயம் அளித்தும், இடது கையால் லட்சுமியை அணைத்தபடியும் உள்ளார். தாயார் அகோபிலவல்லி.
பக்தரின் வயிற்று வலியை போக்கிய லட்சுமிநரசிமமர்
300 ஆண்டுகளுக்கு முன், வடஇந்தியாவிலிருந்து பக்தர்கள் இங்கு வந்தனர். அதில் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது. பழைய சீவரம் தலத்திற்கு தாிசனம் செய்ய வந்த இந்த அன்பா் புண்ணியநதியான 'ஷீர நதியில்' (பாலாறு) நீராடி எம்பெருமானை வழிபட்டு அன்று இரவு இத்தலத்திலேயே ஓய்வெடுத்தாா் . அவரது கனவில் பிரத்யக்ஷமான எம்பெருமான் இத்தலத்தில் ஒரு மண்டலம் தங்கி வழிபாடு செய்ய உடல் நோய் முற்றிலும் குணமாகும் என அருள்பாலித்தாா். நெஞ்சம் நெகிழ்ந்த அன்பா் எம்பெருமானின் திருவுள்ளப்படி இத்தலத்தில் தங்கி வழிபாடுகள் செய்ய அவரது உடல் நோய் முற்றிலும் நீங்கியது. எம்பெருமானின் அருட்கடாட் சத்தை எண்ணி வியந்த இந்த அன்பா் திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகளை செய்து மகிழ்ந்தாா். அவருடைய பரம்பரையில் வந்தவர்களே அறங்காவலர்களாக இன்றும் இருந்து வருகின்றனர்.
நாள் பட்ட நோய்களை விரட்டும் லட்சுமி நரசிம்ம மந்திரம்
நாள்பட்ட வியாதிகளால் அவதியுறும் அன்பா்கள் இத்தலத்தில் வழிபட, நோயின் தாக்கம் உடனடியாகக் குறைந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. நாள்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள் ஆரோக்கியம் பெற லட்சுமி நரசிம்மரை வீட்டிலிருந்த படியே வேண்டிக் கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்கள், மருத்துவமனை செல்லும் முன் இங்கு வந்து தரிசிக்கின்றனர். இவர்கள் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை ஜபித்தபடியே மருந்து உண்டால், நோய்கள் பறந்தோடும் என்பது நம்பிக்கை. பாவம் காரணமாகவே நோய்கள் வருகின்றன. இந்த மந்திரத்தை ஜெபித்து, நல்லதை மட்டுமே செய்தால் நோய்கள் தங்கள் பரம்பரைக்கும் வராமல் தடுக்கலாம். துளசி மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
சுத்தரத்தினேசுவரர் கோவில்
சிறுநீரக நோய்களைத் தீர்ககும் பஞசநதன நடராஜர்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாடலூர் என்ற ஊரிலிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள தலம் ஊட்டத்தூர். இறைவன் திருநாமம் சுத்தரத்தினேசுவரர். இறைவி அகிலாண்டேசுவரி.
இக்கோவிலில் தனிச் சன்னதியில் பஞசநதன நடராஜர் அருள் பாலிக்கிறார்.எட்டு அடி உயரத் திருமேனி உடைய இவர் ஆசியக் கண்டத்திலேயே மிகப் பெரிய நடராஜர் என்ற பெருமை உடையவர். இவர் சூரிய பிரகாசிப்புத் தருகின்ற, அரிய வகைக் கல்லான பஞசநதன என்ற கல்லால் ஆனவர். இத்தகைய கல்லாலான சிற்பங்களை கோவில்களில் காணபது என்பது மிக மிக ஆபூர்வம்.
சிறுநீரகத்தில் கல் உருவாகி அவதிப்படுபவர்கள், சிறுநீரகம் செயலிழந்து அதனனால் ரத்தம் சுத்தகரிப்பு செய்ய வேண்டியவர்கள் என சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானவர்கள். இத்தலத்துக்கு ஒரு கிலோ வெட்டிவேரை வாங்கி வந்து அதனை 48 துண்டுகளாக்கி பின் அதனை மாலையாகத் தொடுத்து பஞசநதன நடராஜருக்கு சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அந்த மாலையையும், இத்தலத்து தீர்த்தமான பிரம்ம தீர்த்தத்தையும் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
வெட்டிவேரை தினம் ஒரு துண்டு வீதம் பிரம்ம தீர்த்தத்தில் ஊற வைத்து அதன் சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரக பாதிப்பு குறைகின்றது என்று பக்தர்கள் கூறுகின்றனர். வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் இங்கு வந்து வழிபட்டு தங்கள் சிறுநீரக நோய் குணமடைந்து செல்கின்றனர்.
புஷ்பவனநாதர் கோவில்
நாரதருக்கு நாதோபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி
தஞ்சாவூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி, கல்லணை செல்லும் வழியில் கண்டியூரை அடுத்த 3 கி.மீ. தொலைவில் மேலத்திருப்பூந்துருத்தி எனும் இடத்தில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உள்ள தேவாரத் தலம் திருப்பூந்துருத்தி. இறைவன் திருநாமம் புஷ்பவனநாதர். இறைவி சௌந்தர்யநாயகி.
சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான இத்தலத்தில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலத்தை நாம் தரிசிக்கலாம். இவர், வீணையேந்தியபடி யோக நெறியை மேற்கொண்டு, அந்த வீணை நாதத்தில் மனமொருமித்த நிலையில் அருள்கிறார். நாரத முனிவருக்கு நாதோபதேசம் செய்த அருட்கோலம் இது. ஒரு சமயம், ஒலி எனும் நாதத்தின் உற்பத்தி ஸ்தானமான நாதப்பிரம்மம் எத்தகையது என கந்தர்வர்களும், தேவர்களும், நாரதரும் சிவபெருமானிடம் வினவ, சிவபெருமான் பூந்துருத்திக்கு வருக எனப் பணித்தார். அங்கே தானும் எழுந்தருளி, வீணையை ஏந்தி மீட்ட, நாதத்தின் மையத்தோடு யாவரும் கலந்தனர்.
சரசுவதி சிவபெருமானுக்கு பரிசாக அளித்த வீணை
ஒரு சமயம் கல்விக் கடவுளான சரசுவதிக்கும், சிவபெருமானுக்கும் விவாதப் போட்டி நடைப்பெற்றது. அதில் சிவபெருமான் வெற்றி பெற்றார். சிவபெருமானின் வாதத் திறமையைக் கேட்டு மனம் மகிழ்ந்த சரசுவதி தன் கையிலிருந்த வீணை அவருக்கு பரிசாக அளித்து விட்டாள்.
இசைக்கலைஞர்களுக்கு அருளும் வீணா தட்சிணாமூர்த்தி
இசைக்கலைஞர்கள் தங்கள் இசைக் கருவிகளை இவர் முன் வைத்து தங்கள் கலையில் முன்னேற்றம் பெற இவரை வழிபடுகின்றனர்.இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட, அவர்களின் கலைத் திறன் மேன்மையடைகிறது.
வலஞ்சுழி விநாயகர் கோவில்
கடல் நுரையாலான வெள்ளை விநாயகர்
வலஞ்சுழி விநாயகர் கோவில் கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ள தேவார பாடல் பெற்ற தலமான திருவலஞ்சுழியில் அமைந்துள்ளது.
இத்தலத்து விநாயகர் பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால் உருவானதால் சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) என பெயர் பெற்றார்.இவர் வெண்மையான திருமேனியுடன் வலம் சுழித்த தும்பிக்கையுடனும் காட்சி தருகிறார்.இவர் கடல் நுரையால் ஆனதால் இவருக்கு அபிஷேகங்கள் கிடையாது. பச்சைக் கற்பூரம் மட்டுமே திருமேனியில் சாத்தப்படுகிறது. விசேஷ தினங்களில் வெள்ளி, தங்கக் கவசங்கள் அணியப்படும்.
இதர தலங்களில் விநாயகரின் இரண்டு தந்தங்களில் ஒன்று மட்டும் கூர்மையாக இருக்கும். மற்றொன்று பாதி ஓடிந்த நிலையில் காணப்படும். ஆனால் இந்தத் தலத்தில் விநாயகரின் இரு தந்தங்களும் கூர்மையானதாகக் காட்சியளிக்கின்றன.
இந்திரன் வடித்து வழிபட்ட விநாயகர்
'சுவேத' என்ற வடமொழிச் சொல்லுக்கு 'வெள்ளை' என்று பொருள். பாற்கடலைக் கடைந்தபோது, மிதந்து வந்த வெள்ளை நிற நுரையைக் கொண்டு இந்திரன் வடித்து வழிபட்ட உருவம்தான் இந்த விநாயகர் எனக் கூறப்படுகிறது.
ஒருமுறை தேவலோகத்துக்கு விஜயம் செய்த துர்வாச முனிவரை மதியாததால், தேவேந்திரன் சபிக்கப்பட்டார். சாப விமோசனம் பெரும் பொருட்டு, கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் உருவத்தை எடுத்துக்கொண்டு பூமியில் சுற்றித் திரிந்தார். அமைதியான இந்த காவிரிக்கரையைக் கண்டதும், பிள்ளையாரைக் கீழே வைத்து விட்டு நதியில் நீராடினார். ஆற்றிலிருந்து திரும்பி வந்து சிலையை எடுக்க தேவேந்திரன் முயன்றார். முடியவில்லை. இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தியன்றும் இந்திரன் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம்.
மகாவிஷ்ணு வழிபட்ட விநாயகர்
மகாவிஷ்ணு, மார்கழி மாத சஷ்டி திதியில் இத்தலத்தில் உள்ள வெள்ளை விநாயகரை நேரில் வந்து வழிபட்டதாகவும் புராணங்கள் இருக்கின்றன.
ராஜராஜ சோழன், போருக்குப் போகும் போதெல்லாம் தன்னுடைய இஷ்ட தெய்வங்களின் ஒன்றான வெள்ளை விநாயகரை வழிபட்டு, பின்னர்தான் போருக்குச் சென்று வெற்றி வாகை சூடிவந்ததாக இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.
கருங்கல் ஜன்னல்
கருங்கல்லால் ஆன ஜன்னல் இச்சன்னதியில் உள்ளது. கல்லால் ஆன விளக்குகளைப் போன்ற அமைப்பு இச்சன்னதியின் தனித்துவங்களில் ஒன்றாகும். இக்கோவில் தூண்களில் நுணுக்கமான சிற்ப அமைப்புகள் காணப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழா
திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும். தினமும் சுவாமி வீதியுலா நடைபெறும். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேவேந்திரன் பூஜை, தேரோட்டம் நடைபெறும். சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவடையும்.
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில்
காலபைரவர் மூச்சு விடும் அதிசயம்
திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்குறுங்குடி. இத்தலத்தில் பெருமாள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளார். தாயார் குறுங்குடிவல்லி
சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இக்கோவிலில் சிவபிரான் 'மகேந்திரகிரி நாதர்' என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறார்.
இங்கே பெருமாள் சன்னதியில் காலபைரவர் அதிசயிக்கதக்க வகையில் இருக்கிறார். உள் பிரகாரத்தை சுற்றி வரும்போது பிரமாண்டமான தோற்றத்தில் இருக்கும் இவரே, இக்கோவிலின் காவல் தெய்வமாக இருக்கிறார்.
காலபைரவர் சன்னதியில், கருவறையின் மேற்பக்கம் ஒரு விளக்கும், கீழ்பகுதியில் ஒரு விளக்கும் ஏற்றப்பட்டிருக்கும். இவைத் தவிர பக்கவாட்டில் இரண்டு சரவிளக்குகளும் இருக்கும். இந்த நான்கு தீபங்களும் எரியும்போது தெரியும் பிரகாசமான ஒளியில் பைரவர் ரூபம் அழகாகக் காட்சியளிக்கும். இந்தக் கருவறைக்குள் எந்த திசையிலிருந்தும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இதில் அதிசயம் என்னவென்றால் மேற்பகுதியில் உள்ள விளக்கின் ஜ்வாலை மட்டும் காற்று பட்டால் அசையும் தீபம் போல ஆடிக் கொண்டேயிருக்கும். கீழே உள்ள விளக்கின் தீப ஒளி எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கும்.
மேல் இருக்கும் விளக்கு மட்டும் வெளிபக்கமாகவும் , உள்பக்கமாகவும் அசைவது பைரவர் விடும் மூச்சு காற்று என சொல்லபடுகிறது. அதாவது பைரவர் மூச்சை இழுக்கும்போது தீபம் உள்பக்கமாகவும், மூச்சு வெளிவிடும்போது தீபம் வெளிப்பக்கமாகவும் அசைகிறது. மற்ற தீபங்கள் எல்லாம் எந்த சலனமும் இல்லாமல் அசையாமல் இருக்கும்போது அவருடைய முகத்துக்கு பக்கத்தில் இருக்கும் விளக்கு மட்டும் உள்பக்கம் வெளிபக்கமாக அசைவதை பகதர்கள் நேரில் கண்கூடாகப் பார்க்கலாம்.
குழந்தைப்பேறு வேண்டி இங்கே வழிபாடு நடத்துபவர்களுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கிறது. இவருக்கு தயிரன்னமும், வடைமாலையும், பூசட்டையும் படைக்கப்படுகிறது.
வெளிகண்டநாத சுவாமி கோவில்
சூரியன்,சந்திரனின் அபூர்வக் கோலம்
திருச்சி மாநகரம் மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ள பாலக்கரை பகுதியில் அமைந்துள்ளது வெளிகண்டநாத சுவாமி கோவில். இறைவி சுந்தரவல்லி.
பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் சூரியன்,சந்திரன் உள்பட எல்லா நவக்கிரகங்களும் நின்ற நிலையில் எழுந்தருளியிருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் வெளிகண்டநாத சுவாமி கருவறைக்கு நேர் எதிர் திசையில் சூரியனும், சந்திரனும் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். இவர்களின் இந்தக் கோலம் மிகவம் விசேடமானது என்று தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சூரிய பூஜை வழிபாடு என்பது எல்லா சிவாலயங்களிலும், தமிழ் மாதங்களில், குறிப்பிட்ட மூன்று நாட்கள்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால் இக்கோவிலில் மாசி மற்றும் ஐப்பசி மாதம் முழுவதும் சூரிய பூஜை நடைபெறுவது தனிச் சிறப்புடையதாகும்.