கெங்காபுரம் கெங்காதீஸ்வரர் கோவில்
குதிரை முகம் கொண்ட அபூர்வ நந்தி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி- சேத்துபட்டு வழியில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கெங்காபுரம் கெங்காதீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பங்கஜவல்லி. துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம்.
இத்தலத்து நந்தி குதிரை முகத்துடன் இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு உள்ளது. ஒரு சமயம் இந்திரன் தன்னுடைய சாப விமோசனத்திற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். ஆனால் இறைவன் அவனுக்கு காட்சி தரவில்லை. சிவபெருமான் அசரீரி மூலமாக இந்திரனை கெங்காபுரம், விருபாட்சிபுரம் , கோனைப்புதூர் முதலிய தலங்களில் வழிபட்டு, பின்னர் இத்தலத்தில் பூஜை செய்தால் காட்சி கிடைக்கும் என்று அருளினார். இந்திரனும், அவ்வாறே செய்தான்.
சிவபெருமானும் இந்திரனுக்கு காட்சி தருவதற்காக ரிஷபத்தின் மேல் ஏறிக்கொண்டு கிளம்பினார். கிளம்புவதற்கு நேரம் ஆகிவிட்டதால், இந்த ரிஷபம் குறிப்பிட்ட நேரத்திற்குள் நம்மை அழைத்து செல்லுமா என்றும், அதே நேரம் இதுவே ஒரு குதிரையாக இருந்தால் நாம் விரைவில் இந்திரனுக்கு காட்சி தரலாமே என்றும் எண்ணினார். இது ரிஷபத்திற்கு தெரிந்து ஈசன் நம்மைப் பற்றி இப்படி நினைத்துவிட்டாரே என்று எண்ணி ஈசனின் எண்ணப்படி குதிரை முகத்துடன் வடிவெடுத்து, சிவபெருமானை குறிப்பிட்ட காலத்திற்குள் அழைத்து சென்று அவரது எண்ணத்தை பூர்த்தி செய்தது. எனவே தான் இத்தலத்தில் குதிரை வடிவுடன் கூடிய நந்தி அமைந்துள்ளது. இப்படி நந்தி குதிரை முகத்துடன் இருப்பது ஒரு அரிதான காட்சியாகும்.
துலாபாரம் காணிக்கை செலுத்தப்படும் ஒரே சிவாலயம்
பொதுவாக சிவன் கோயில்களில் துலாபாரம் காணிக்கை செலுத்தும் வழக்கம் கிடையாது ஆனால் இத்தலத்தில் துலாபார காணிக்கை செலுத்தும் வழக்கம் ஒரு தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
தலத்து இறைவன் சிறந்த வரப்பிரசாதி. இத்தலத்தில் வழிபட்டு திருமணத்தடை நீங்க பெற்றவர்களும், குழந்தை பாக்கியம் பெற்றவர்களும் அதிகம். இத்தலத்தில் குழந்தை வரம் வேண்டி ஸ்ரீ சந்தான கோபால யாகமும் , திருமண தடை நீங்க ஸ்ரீ ஸ்வயம்வர கலா பார்வதி யாகமும் நடைபெறுகின்றது.
மதுரை புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோவில்
இரட்டை நாய் வாகனங்களுடன் இருக்கும் அபூர்வ பைரவர்
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் அமைந்துள்ளது புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோவில். இறைவி மீனாட்சி அம்மன் சொக்கநாதர் சன்னதிக்கு வலதுபுறம் எழுந்தருளி உள்ளார். சிவபெருமாளின்64 திருவிளையாடல்களில் ஒன்றான, ஏழை மூதாட்டி வந்தியம்மைக்கு சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட தலம் இது. மூதாட்டி வந்தியம்மைக்கும் தனி சன்னதி உள்ளது. ஆவணி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் இங்கு புட்டு திருவிழா நடைபெறும். அன்றுமட்டுமே இங்கு புட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இக்கோவிலில் இரட்டை கால பைரவர் அருள்பாலிக்கிறார். பொதுவாக பைரவர் ஒரு நாய் வாகளத்துடனோ அல்லது நாய வாகனம் இல்லாமலோ அருள்பாலிப்பார். சில தலங்களில் இரண்டு,மூன்று மற்றும் எட்டு பைரவர் கூட இருப்பதுண்டு. ஆனால் இங்குள்ள பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் இருப்பது சிறப்பு. இதனால் இவர் இரட்டை கால பைரவர் என அழைககப்படுகிறார்.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது வறுமை நீங்கி செல்வம் பெருக, இழந்த பொருள்களையும், செல்வத்தையும் மீண்டும் பெற, குழந்தை பாக்கியம் கிடைக்க, நவகிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் தீர இரட்டை கால பைரவரை பிரார்த்தனை செய்கிறார்கள்.
நெடுங்குணம் தீர்த்தாஜலேஸ்வரர் கோவில்
யோகநிலையில் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ கோலம்
திருவண்ணாமலையில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள தலம் நெடுங்குணம் தீர்த்தாஜலேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை. சுகப் பிரம்மரிஷி வழிபட்ட தலம் இது.
இக்கோவிலில் 64 சிவ மூர்த்தங்களில் ஒன்றான யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளி இருக்கிறார். பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக, சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க நால்வரும் வேண்டினார்கள். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப் பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார்.
பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக, சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க நால்வரும் வேண்டினார்கள். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப் பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார். ஆனால் சனகாதி முனிவர்களுக்கு மனம் ஒருமுகப்படாததால் தெளிவு ஏற்படவில்லை.இதனால் சிவபெருமான் தாமே யோக நிலையில் அமா்ந்து மெளனத்தின் மூலமாக ஞானமும் நிஷ்டையும் கைகூடும் தன்மையை போதித்து அருளினாா். சிவபெருமானின் இத்திருக் கோலத்தை 'யோக தட்சிணாமூா்த்தி' என்று புராணங்கள் போற்றுகின்றன. யோக தட்சிணாமூர்த்தியின் கோலம் அரிதானது. இரு பாதங்களையும் குத்திட்டு, குறுக்காக வைத்து, யோகபட்டயம் தரித்து, முன் இரண்டு கரங்களையும் முழங்கால்கள் மீது நீட்டி, பின் இரண்டு திருக்கரங்களில் அட்சய மாலை மற்றும் கமண்டலம் ஏந்தி காட்சி தருகிறார்.
செவ்வாய் தோஷம் தீர்க்கும் யோக தட்சிணாமூர்த்தி
இந்த யோக தட்சிணாமூர்த்தியை இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவை கொண்டு விளக்கேற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும். கல்வியில் மேன்மை பெறலாம்.
திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவில்
பக்தர்கள் பூதகணம் வேடமிட்டு பங்கேற்கும் திருக்குவளை மாசிமகம் நெல் அட்டி திருவிழா
திருவாரூரில் இருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குவளை. இறைவன் திருநாமம் பிரம்மபுரீசுவரர். இறைவியின் திருநாமம் வண்டமர் பூங்குழலம்மை. பிரம்மன் இத்தல இறைவனை வணங்கி படைப்புத்தொழில் கைவரப் பெற்றமையால், இறைவனுக்கு இப்பெயர் ஏற்பட்டது. பிரம்மனால் வெண்மணலால் அமைக்கப்பட்டவர் என்பதால், மூலவருக்குக் குவளை சாற்றியே வழிபடப்படுகிறது. மாதந்தோறும் அமாவாசையன்று இரவு 6 மணிக்கு மட்டுமே குவளை நீக்கப்பட்டு, வெண்மணலால் ஆன சிவலிங்கத் திருமேனிக்குத் தைலக்காப்பு சாற்றப்படுகிறது.
திருவாரூரில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரும், அவரது மனைவி பரவை நாச்சியாரும், தினந்தோறும் சிவனடியார்களுக்கு உணவு படைத்து வந்தார்கள். உணவு சமைப்பதற்கான பொருட்களை, திருக்குவளை அருகே உள்ள குண்டையூரைச் சேர்ந்த வேளாளரான குண்டையூர் கிழார் என்பவர். சுந்தரருக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஒரு சமயம், திடீரென பஞ்சம் ஏற்பட்டது. அதனால், சுந்தரருக்கு நெல் அனுப்ப முடியாமல் குண்டையூர் கிழார் கவலையுற்று, இறைவனை வேண்டினார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், குண்டையூர் கிழாரின் கனவில் தோன்றி. சுந்தரமூர்த்தி நாயனாருக்காக உமக்கு நெல் தந்தோம் என்றருளி மறைந்தார். குண்டையூர் கிழார் கண்விழித்துப் பார்க்கையில் நெல் மலை ஒன்றை இறைவன் அருளியிருப்பதை அறிந்தார். இந்த செய்தியை அறிந்த சுந்தரர் நெல்லைப் பெற்றுச் செல்ல குண்டையூர் வந்தார். அங்கு குவிந்திருந்த நெல் மலையைக் கண்டு வியந்த சுந்தரர். அந்த நெல் அனைத்தையும் தன்னால் கொண்டு செல்ல இயலாது என்பதை உணர்ந்து, நெல் மலையைத் திருவாரூருக்குக் கொண்டு செல்ல ஆள் வேண்டி, திருக்குவளைக்கு வந்து திருக்கோளிலி இறைவனை வேண்டி.
"....கோளிலி எம்பெரு மான் குண்டையூர்ச்
சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெரு மானவை
அட்டித் தரப்பணியே"
என்ற திருப்பதிகம் பாடினார். அன்றிரவே, சிவபெருமானின் அருளால் பூதகணங்கள், குண்டையூர் நெல் மலையைத் திருவாரூருக்குக் கொண்டு சென்று ஊர் முழுவதும் நிரப்பின.
இக்கோவிலில், குண்டையூர் கிழார், சுந்தரருக்கு அளித்த நெல்லைத் திருவாருருக்குக் கொண்டு செல்ல சிவபெருமான் பூதகணங்களை அனுப்பிய ஐதீக விழா, மாசி மாதத்தில் நெல் மகோற்சவமாக, 5 நாட்கள் திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மக நட்சத்திர நாளில், திருக்குவளையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டையூருக்கு அருள்மிகு கோளிலிநாதர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் புறப்பாடு நடைபெறுகிறது. அப்போது, பூதகணங்களைப் போல வேடமணிந்த பக்தர்கள் உடன் சென்று, குண்டையூரில் நெல் அள்ளும் நிகழ்ச்சியும், அங்கிருந்து திருவாருருக்குக் கொண்டு செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இந்த மாசிமகம் நெல் அட்டி திருவிழா, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
ஒரக்காட்டுப்பேட்டை குணம் தந்த நாதா் கோவில்
உன்னத குணநலன்களை அருளும் இறைவன்
செங்கல்பட்டிலிருந்து சுமார் 8 கி.மீ.தூரத்தில் உள்ளது ஒரக்காட்டுப் பேட்டை குணம் தந்த நாதா் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. இத்தலத்து இறைவனின் திருநாமம் தனிச் சிறப்புக்குரியது. இந்தத் திருநாமம், இறைவனுக்கு வேறு எந்த தலத்திலும் கிடையாது. இத்தலத்தின் முந்தைய பெயர்உறைகாடு. உறைகாடு என்றால் உறைவதற்கு அல்லது வாழ்வதற்கு வளமான பூமி என்பது பொருளாகும். இதுவே பின்னர் உறைக்காட்டுப்பேட்டை என்றாகி பின்னர் மருவி, ஒரக்காட்டுப்பேட்டை என்றானது.
இத்தலத்து இறைவன் தன் மீது உண்மை யான பக்தி கொண்டு வழிபடும் அன்பா்களுக்கு எட்டு வகையான குணநலன்களை அளித்து அவா்களை இறைநிலையான பேரின்ப நிலைக்கு உயர்த்துகிறார். இவரை வழிபட்டால், மனமது செம்மையாகும். சிந்தை தெளிவுறும். நல் வழியைத் தேர்ந்தெடுப்பதில் தடுமாற்றம் இருக்காது. மது, புகை முதலான தவறான பழக்கங்களுக்கு ஆட்பட்டு, அதன் காரணமாக பாதிப்புக்கு ஆளானோர், தொடர்ந்து 11 பிரதோஷ தினங்கள் இந்தத் தலத்துக்குச் சென்று, நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொண்டு, ஈசனின் சந்நிதியில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டால், விரைவில் கொடுமையான தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவார்கள். தீய பழக்கங்களிலிருந்து விடுபடக்கூடிய மன உறுதியை அவா்களுக்கு அளிப்பார் குணம் தந்த நாதா் என்பது நம்பிக்கை. கருவுற்றிருக்கும் பெண்கள், தன் கணவருடன் சென்று ஒரக்காட்டுப்பேட்டைத் தலத்தில் அருளும் குணம்தந்த நாதரை தரிசித்து வழிபட்டால், நல்ல குணநலன்கள் கொண்ட மகவினை ஈன்றெடுப்பா் என்பது ஆன்றோர் வாக்காகும்.
பௌர்ணமியன்று கோவில் பிரகார வலம் - திருவண்ணாமலை கிரிவலம் செய்த புண்ணிய தரும்
திருவண்ணாமலை தலத்தில் மலையைச் சுற்றி அஷ்டலிங்கங்கள் அருள்பாலிப்பது போல், இத்தலத்திலும் எட்டு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக அஷ்ட லிங்கங்கள் அருள் பாலிப்பது சிறப்பான ஒன்றாகும். உடல்நிலை, வயோதிகம் மற்றும் இதரச் சூழல்களின் காரணமாக திருவண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்ல இயலாத நிலையில் இருப்பவர்கள், 21 பெளர்ணமி தினங்கள் இந்தத் தலத்துக்குச் சென்று வலம் வந்து, குணம் தந்த நாதரையும், அம்பிகை திரிபுரசுந்தரியையும் வழிபட்டால், கிரிவலம் செய்த புண்ணியம் கிட்டும். பிறவியிலேயே பேச முடியாத நிலையிலிருந்த அன்பர் ஒருவர், 21 பெளர்ணமி தினங்கள் தொடர்ந்து வந்து குணம் தந்த நாதரை வழிபடுவது என்று தீர்மானித்து வழிபாட்டைத் தொடங்கினார். 7 பெளர்ணமி தினங்கள் வழிபாடு செய்த நிலையிலேயே அவருக்குப் பேச்சுத் திறன் வந்தது என்பது சமீப காலத்தில், இத்தலத்தில் நிகழ்ந்த அற்புதமாகும்.
இனாம் கிளியூர் மன்மதன் கோவில்
காமன் பண்டிகை - திருமணத் தடை நீங்க கரும்பு அல்லது கரும்புச்சாறு நைவேத்தியம்
பழங்காலத் தமிழர்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகைகளுள் ஒன்றான காமன் பண்டிகை, ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் தொடங்கி மாசி பௌர்ணமி முடிந்து மூன்று நாட்கள் வரையில், காமன் பண்டிகை 15 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஒரு பூஜைபோல் செய்கிற வழக்கம் இன்றைக்கும் பெரும்பாலான கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சிவபெருமானின் தவத்தைக் கலைக்க மன்மதன் அவர் மீது மலர்க்கணை தொடுத்த தினம் மாசி பௌர்ணமி ஆகும். இதனால் கோபமுற்ற சிவபெருமான், தன் நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்து சாம்பலாக்கி விட்டார். காமனை எரித்ததே, காமதகனம் மற்றும் காமன் பண்டிகை என்னும் விழாவாக நம் கிராமங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், மாசி மகத்துக்கு முன்னதாக, மன்மதனுக்கும் ரதிதேவிக்கும் திருமணம்,
சிவபெருமானின் தவம், மலர்க்கணையால் சிவபெருமானின் தவம் கலைக்கும் மன்மதன், சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரிக்கும் காமதகனம், ரதிதேவி சிவபெருமானிடம் தன் கணவனை உயிர்பித்து தருமாறு வேண்டுதல், மன்மதன் மீண்டும் உயிர் பெற்று எழுந்து வருதல் என காமன் பண்டிகை தொடர்பான நிகழ்ச்சிகள் வில்லுப்பாட்டாகவும் நாடகமாகவும் அரங்கேறும். மாசி பௌர்ணமியை அடுத்த மூன்றாம் நாள் மன்மதன் மீண்டும் உயிர்த்தெழுந்து ரதியினை அடைந்தான்.
மாசி பெளர்ணமியின் போது, ஊருக்கு நடுவே, ஒரு கரும்பை நட்டுவைப்பார்கள் மக்கள். மன்மதன் கையில் கரும்பு வைத்திருப்பான். அந்தக் கரும்பையே வில்லாக்கி மலர்க்கணை தொடுப்பான். அந்தக் கரும்பை மன்மதனாக பாவித்து, அந்தக் கரும்புக்கு தர்ப்பைகளும் மலர்களும் சார்த்துவார்கள். நன்றாக அழகுற அலங்கரிப்பார்கள். அப்போது ரதிதேவியின் உருவத்தையும் ஓவியமாக வரைந்து வைப்பார்கள். சில ஊர்களில் மரத்தால் செய்யப்பட்டு, மன்மதனுக்கும் ரதிதேவிக்கும் வர்ணம் பூசி, சிலைகளைப் போல் வைத்து பூஜிப்பதும் நடைபெறுகிறது. மன்மதனாக பாவித்து நட்டுவைக்கப்பட்ட கரும்பை, தீயிட்டுக் கொளுத்துவார்கள். பிறகு, அப்படி எரியும்போது, அந்தத் தீயைச் சுற்றி, அந்தக் கரும்பைச் சுற்றி, மன்மதனைச் சுற்றி வலம் வந்து வேண்டிக்கொள்வார்கள். அப்படி வேண்டிக்கொண்டால், பூமி செழிக்கும், விவசாயம் தழைக்கும், வம்சம் விருத்தியாகும், வாழையடிவாழையென பரம்பரை சீரும் சிறப்புமாக வளரும், வளரச்செய்வார் மன்மதன் என்பது நம்பிக்கை.
மாசி பெளர்ணமியில், காமதகனம் நடந்ததாகச் சொல்லப்படுகிற நாளில், வீட்டில் மன்மதனை நினைத்தும், ரதிதேவியை நினைத்தும் விளக்கேற்றி, கரும்பு அல்லது கரும்புச்சாறு நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தினருக்கு வழங்கினால், இல்லத்தில் தடைபட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள இனாம் கிளியூர் என்ற கிராமத்தில் காமன் பண்டிகை, திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு மன்மதனுக்குக் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர தாம்பத்திய பிரச்னைகள் தீரும்.
திருப்பாற்றுறை ஆதிமூலநாதர் கோவில்
திருப்பாற்கடலில் சயனம் கொண்டுள்ள சிவபெருமான்
திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருப்பாற்றுறை. இறைவன் திருநாமம் ஆதிமூலநாதர். இறைவியின் திருநாமம் மேகலாம்பிகை, நித்யகல்யாணி. பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி ‘பாற்றுறை நாதர்’ என்றும், தலம் ‘பாற்றுறை’ (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.
திருப்பாற்கடல் என்பது இறைவனின் ஜீவ சக்தியாய், அமிர்த மயமாய் உலக ஜீவன்கள் அனைத்திற்கும் ஆதாரமாய்த் தோன்றியதாகும். அந்த அமிர்த சாகரத்தில் பள்ளி கொண்டவரே எம்பெருமான் ஆவார். ஆதியில், முதன்முதலில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் சிவபெருமானே என்று அகத்திய சித்த கிரந்தங்கள் உறுதிபட உரைக்கின்றன. இந்த சிவ அமிர்த புராணத்தை உலகிற்கு பறைசாற்றிய திருத்தலங்களுள் திருப்பாற்றுறை ஒன்றாகும். ஆதியில் முதன் முதலாக தோன்றிய பாற்கடலில் சிவபெருமான் ஏக மூர்த்தியாக,
திருப்பாற்கடலில் சயன நிலையில் எந்த வாகனமும் இன்றி , ஆதிசேஷனின் படுக்கையும் இன்றி பள்ளி கொண்ட நிலையில் அருள்பாலிக்கும் அற்புத திருக்கோலத்தை இன்றும் திருப்பாற்றுறை திருத்தலத்தில் நாம் தரிசித்திடலாம்.
குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்
தாயின் வயிற்றில், குழந்தையின் வளர்ச்சியை விளக்கும் வியப்பூட்டும் சிற்பங்கள்
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில், பல்லடத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் தாராபுரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில். இறைவன் திருநாமம் விடங்கீசுவரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. இந்தக் கோவிலில் உள்ள காலபைரவ வடுகநாத சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர். காசி சென்று கால பைரவ சுவாமியை வணங்க முடியாதவர்கள் இவரை வணங்கினால் போதும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோவில் தூண்களில். ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, வெவ்வேறு காலகட்டங்களில், அதாவது குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இந்த விதமான நிலையில் (Position) இருக்கும் என்பதை சிற்பங்களாக தூணில் வடித்து வைத்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, ஸ்கேன் கருவி போன்ற நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் வயிற்றில் உள்ள குழந்தையை படம் பிடித்து, அதை சிற்பத்திலும் வடித்து வைத்திருப்பது நம் முன்னோர்கள் மருத்துவத் துறையிலும், அறிவியல் துறையிலும் அடைந்திருந்த உன்னத நிலையை விளக்குகின்றது. நம் முன்னோர்கள் கட்டிடக்கலை, சிற்பக்கலை, அறிவியல் துறை, மருத்துவத்துறை ஆகியவற்றில் அடைந்திருந்த வளர்ச்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
குரங்கணில்முட்டம் வாலீசுவரர் கோவில்
எமனுக்கு சாப விமோசனம் கிடைத்த தலம்
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி-செய்யாறு நெடுஞ்சாலையில் உள்ள தூசி கிராமத்தில் இருந்து பிரியும் சாலையில் 1½ கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரம் பாடல் பெற்ற தலம் குரங்கணில்முட்டம் வாலீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் இறையார் வளையம்மை.. மறுபிறவி வேண்டாதவர்களுக்கு அருள்பாலிக்கும் தலம் இது, மகரிஷிகளின் சாபத்தால் வாலி குரங்காகவும், இந்திரன் அணிலாகவும், எமன் முட்டமாக (காகம்) பூலோகத்தில் பிறப்பெடுத்தனர். இதனால், மனம் வருந்திய மூவரும் திருக்கயிலாயம் சென்று உமையொருபாகனான சிவபெருமானை சரணடைந்து தங்களுக்கு சாப விமோசனம் அருளும்படி வேண்டி நின்றனர். சிவபெருமானின் கட்டளையை ஏற்று இத்தலத்து இறைவனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.
சனி தோஷ நிவர்த்தி தலம்
சனி கிரகத்தின் அதிபதியாக யமன் கருதப்படுகிறார். அவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும். எமனுக்கே சாப விமோசனம் கிடைத்த தலம் இது என்பதால், சகலவிதமான சனி தோஷங்களும் இங்கு நிவர்த்தியாகும்.
கோலியனூர் வாலீஸ்வரர் கோவில்
சப்த கன்னியருக்கு உபதேசம் செய்த 'கன்னியர் குரு' தட்சிணாமூர்த்தி
விழுப்புரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது கோலியனூர் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. கிஷ்கிந்தையின் அரசன் வாலி வழிபட்ட சிறப்பினை உடையது. அதனால் இறைவன் வாலீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார்.
பொதுவாக தட்சிணாமூர்த்தி இறைவன் சன்னதி சுற்றுச்சுவரில், தனது நான்கு சீடர்களுடன் அருள் பாலிப்பார். ஆனால் இத்தலத்தில், தட்சிணாமூர்த்தி சப்த கன்னியருடன் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். தட்சிணாமூர்த்தி சப்த கன்னியருடன் எழுந்தருளி இருப்பதற்கும் அம்பிகை மகிஷாசுரனை வதம் செய்ததற்கும் தொடர்புண்டு.
மகிஷாசுரன், கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டுமென்ற வரம் பெற்றிருந்தான். தான் பெற்ற வரத்தால், தேவர்களை துன்புறுத்தினான். தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன், அம்பிகையிடம், மகிஷாசுரனை வதம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பிகை, தன்னிலிருந்து பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி என ஏழு சக்திகளைக் தோற்றுவித்தாள். "சப்தகன்னியர்' எனப்பட்ட இவர்கள் மகிஷாசுரனை அழித்தனர். இதனால் அவர்களுக்கு தோஷம் உண்டானது.
இந்த தோஷம் நீங்க, கயிலாயம் சென்று சிவனை வேண்டினர். .இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் கோலியனூர் எனும் தலத்தில் தன்னை வழிபட்டு வரும்படியும், குறிப்பிட்ட காலத்தில் தோஷ நிவர்த்தி செய்வதாகவும்கூறினார். சப்த கன்னியர்களை பாதுகாக்க தன்னுடைய அம்சமான வீரபத்திரனை உடன் அனுப்பி வைத்தார். இத்தலத்தில் சப்த கன்னியருக்கு தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து உபதேசம் செய்து கொலைப்பாவத்தினை நீக்கினார். அவர்களுக்கு விமோசனம் தந்து, சிவாலயங்களில் அம்பிகையின் காவலர்களாகவும் இருக்க அருள்பாலித்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில், சப்தகன்னியர் தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். சப்தகன்னியருக்கு அருளியவர் என்பதால் இவரை, "கன்னியர் குரு' என்று அழைக்கிறார்கள். வீரபத்திரர் சப்த கன்னியரின் பாதுகாப்பிற்காக இங்கு வந்தபோது, அவர் ரிஷபத்தில் வந்தார். இந்த நந்தி கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. நந்தி அருகில் கொடிமரம் உள்ளது.
பொதுவாக தட்சிணாமூர்த்தியை, வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்வார்கள். ஆனால், பக்தர்கள் இங்கு தினமும் பூஜை செய்து வழிபடுகிறார்கள். பிராமிக்கு உரிய அதிதேவதை பிரம்மா. எனவே, தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும் ஞாயிற்றுக் கிழமைகளில் இவளை வழிபடுகிறார்கள். மகேசுவரிக்குரிய அதிதேவதை சிவன் என்பதால், முக்தி கிடைக்க சிவனுக்குரிய திங்கட்கிழமைகளில் இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். கவுமாரிக்குரிய அதிதேவதை முருகன் என்பதால், இவளிடம் செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக வேண்டுகிறார்கள். குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக சனிக்கிழமைகளில் வைணவியையும், தீராத நோய்கள் விரைவில் குணமாக புதன்கிழமையில் வாராகியையும், தோஷ நிவர்த்தி பெற வியாழக்கிழமைகளில்
இந்திராணியையும், திருமணத்தடை நீங்க வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டியையும் வழிபடுகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு கன்னியரையும் வணங்கும் போது அவர்களுடன், தட்சிணாமூர்த்திக்கும் நைவேத்யம் படைக்கிறார்கள். இதனால், தங்களின் குருவின் கட்டளைப்படி பக்தர்களுக்கு சப்தகன்னியர் அருளுவதாகச் சொல்கிறார்கள். பஞ்சமி திதியன்று, சப்தகன்னியருடன் உள்ள வீரபத்திரருக்கு விசேஷ பூஜை நடக்கும்.
மருங்கப்பள்ளம் மருந்தீசுவரர் கோவில்
மருந்து கல்வம் மற்றும் குழவியே சிவலிங்கமாக இருக்கும் தலம்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது மருங்கப்பள்ளம். இத்தலத்து இறைவன் திருநாமம் மருந்தீசுவரர், ஔஷதபுரீசுவரர். இறைவியின் திருநாமம் மருத்துவ நாயகி ,பெரியநாயகி. சகல நோய்களையும் இறைவன் குணப்படுத்துவதால் இந்த பெயர் ஏற்பட்டது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது.
சூரியனுக்கும் உஷா தேவிக்கும் பிறந்த குழந்தைகள் நசத்யா மற்றும் தசரா. அஸ்வினி குமாரர்கள் என்றழைக்கப்படும் இவர்கள், பிரம்மாவின் ஆணைப்படி, தேவலோக மருத்துவர் பதவியை அடைவதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து, அந்த பதவியை அடைந்தார்கள். அவர்கள் முதலில் மூலிகைகளை அரைக்க பயன்படுத்திய, கல்வம் (கல்வம் என்பது கல்லினாலான ஆன முட்டை வடிவமான குழியுள்ள அம்மி) மற்றும் குழவியையே, உலக உயிர்கள் யாவும் ஆரோக்கியமாக வாழும் பொருட்டு சிவலிங்கமாக பிரதிஷ்டைசெய்து, "ஸ்ரீ மருந்தீசுவரர்" என்று திருநாமம் வைத்து வழிபட்டார்கள். மருந்தீசுவரர் லிங்கத்தில், குழவியின் விளிம்பு இருப்பது, நாம் வேறு எந்த தலத்து சிவலிங்கத் திருமேனியிலும் காண முடியாது.
ஆஞ்சநேயப் பெருமான் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து செல்லும்போது மருந்தீஸ்வரர் திருவருளால் அதிலிருந்து ஒர் பெரும் பாறை இவ்வூரில் விழுந்து சிதறியது. விழுந்ததினால் ஏற்பட்ட பள்ளம், மருந்து தீர்த்தம் என்று அழைக்கப்படும் இக்கோவிலின் திருக்குளமானது. பாறையிலிருந்து சிதறிய மூலிகைகள் இவ்வூரெங்கும் மருத்துவ தாவரங்கள் ஆகவும், முக்கிய மூலிகையான பாதிரி தல விருட்சமாகவும் ஆனது. இதனாலையே இவ்வூர் மருந்து + பள்ளம் = மருந்துப்பள்ளம் என பெயர்பெற்றது. இதுவே மருவி மருங்கப்பள்ளம் என் அழைக்கப்படுகிறது. மருந்துபுரி, ஒளஷதபுரி என்றும் இத்தலம் புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த, திருக்குளத்து நீரே( மருந்து தீர்த்தம்) தீராத நோய் தீர்க்கும் மஹாஔஷத பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது.
மருத்துவத் துறையைச் சார்ந்த அனைவரும் வழிபட வேண்டிய தலம்
மருந்தீசுவரர், அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருத்துவராக விளங்குவதால், சகல துறை வைத்தியர்களும், அறுவை சிகிச்சை நிபுணர்களும், சித்த மருத்துவர்களும், நாட்டு வைத்தியர்களும், மருத்துவத் துறையில் படிப்பவர்களும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், விற்பனையாளர்களும், செவிலியர்களும் வழிபட வேண்டிய தெய்வமாக திகழ்கிறார். மருத்துவர்கள் தங்களது மருத்துவ சாதனங்களை இறைவன் திருபாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்துச்சென்றால் அவர்களது அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் வெற்றியடையும். உடல்நிலை பாதிக்கபெற்ற அன்பர்கள் தங்களது மருந்துப் பொருட்களை இறைவன் திருவடியில் வைத்து வணங்கி, மருந்துப் பொருட்களை இறைவன் திருபிரசாதமாக உண்ணும்பொழுது வியாதி உடனே நிவர்த்தியாகும்.
அசுவினி, ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன் தரும் தலம்
அசுவினி, ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் மற்றும் ஞாயிறு ,செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர்கள் வழிபடவண்டிய தலம் இது. பிறந்தநாள், திருமண நாள், ஜன்ம நட்சத்திர நாள், ஆகிய தினங்களில் இங்குள்ள மருந்து தீர்த்தத்தில் நீராடி ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பது ஐதீகம். நோய்கள் நிவர்த்தியாகும்.
மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்
பாம்பு ஊர்ந்த தழும்பு கொண்ட சிவலிங்கத் திருமேனி
திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது சேஷபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அந்தப்புர நாயகி. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம். அப்பர் பாடிய தேவார வைப்புத்தலம்.
ஒரு சமயம், திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன், தனது சாப விமோசனத்திற்காக இத்தலத்து இறைவனான சேஷபுரீஸ்வரரை வணங்கி, விஷேச பூஜைகள் செய்து கடும் தவம் புரிந்து சாபம் நீங்கப் பெற்றான். அதன் காரணமாக இங்குள்ள சிவலிங்கத்தின் பாணத்தில் பாம்பு ஊர்ந்த தழும்பை இன்றும் காணலாம்.
ஆதிசேஷன் வழிபட்ட தலம் என்பதால் ராகு கேது தோஷ நிவர்த்திக்காகவும், நாக தோஷ நிவர்த்திக்காகவும் இத்தலத்தில் பிரார்த்திக்கிறார்கள். இத்தலத்துக்கு வந்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும்.
திரிசூலம் திரிசூலநாதர் கோவில்
அபூர்வ கோலத்தில் கோலத்தில்அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி
சென்னை விமான நிலையம் எதிரில் அமைந்துள்ள திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திரிசூலநாதர் கோவில். கோவிலின் பிரதான அம்பிகையான திரிபுரசுந்தரி அம்மன் தனிச் சன்னதியிலும், மற்றொரு அம்பிகையான சொர்ணாம்பிகை மூலவர் திரிசூல நாதரின் கருவறையிலும் எழுந்தருளி இருக்கிறார்கள்.
இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில், தட்சிணாமூர்த்தி வலது காலை முயலகன் மீது ஊன்றி, தனது இடது காலை குத்திட்டு வைத்திருக்கிறார். வழக்கமாக அவர் ஒரு காலை மடித்தும், மற்றொரு காலை தொங்கவிட்டும் இருக்கும் நிலையிலிருந்து மாறுபட்டு இப்படி இடது காலை குத்திட்டு அமர்ந்திருப்பது ஒரு அபூர்வ காட்சியாகும். இப்படி அமர்ந்திருக்கும் கோலத்தினால், அவர் வீராசன தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். மேலும் வலது செவியில் மகர குண்டலமும், இடது செவியில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருவதால் தட்சிணாமூர்த்தி, இங்கே அர்த்தநாரீஸ்வர கோலத்தில் வீற்று இருக்கிறார். தட்சிணாமூர்த்திக்கு கீழேயுள்ள சீடர்கள், வழக்கமான அஞ்சலி முத்திரையுடன் இல்லாமல், சின்முத்திரை காட்டியபடி இருக்கின்றனர். இதுவும் ஒரு அபூர்வமான அமைப்பாகும்.
திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்
சிவபெருமான் பார்வதி திருமணத்திற்கு சீர் வரிசை கொண்டு வந்த நந்தியம்பெருமான்
சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஸ்ரீராஜமாதங்கீசுவரி, மாதங்கி. இக்கோவிலில் வேறு எந்த தலத்திலும் காண முடியாத வகையில், அரிய நிலையில் இரண்டு நந்திகள் எழுந்தருளிய உள்ளன. இவைகள் முன்னும் பின்னும் திரும்பிய நிலையில் காட்சியளிக்கின்றன. இவற்றில் மதங்க நந்தி இறைவனை பார்த்தபடியும், மற்றொரு நந்தியான சுவேத நந்தி கோவில் வாசலை பார்த்தபடி திரும்பியும் இருக்கின்றது. இதனை நந்தி, சிவ பார்வதி திருமணத்திற்கு சீர் பொருட்களை கொண்டு வந்த கோலம் என்கிறார்கள். இதன் பின்னணியில் சுவையான நிகழ்வு ஒன்று இருக்கின்றது.
மதங்க முனிவரின் மகளாக அவதரித்த பார்வதிதேவி மாதங்கி என்ற திருநாமத்துடன் வளர்ந்து வந்தாள். தக்க வயது வந்ததும், மதங்க முனிவர் தம் மகளை சிவபெருமானுக்கு முடிக்க எண்ணினார். சிவபெருமான், மாதங்கியின் திருமணம் திருநாங்கூருக்கு அருகில் உள்ள திருவெண்காட்டில் நடந்தது. சிவபெருமான் திருமணத்திற்காக மதங்கரிடம் சீர் எதுவும் வாங்கவில்லை. திருமணத்திற்கு வந்திருந்த முக்கோடி தேவர்கள் உட்பட அனைவரும் மதங்கர் சீர் தராத்தை சுட்டிக்காட்டி இழிவுபடுத்தி பேசினர். அவர்களது எண்ணத்தை அறிந்த சிவபெருமான், தட்சணை வாங்குவது தவறு என்று அவர்களிடம் எடுத்துக் கூறினார். ஆனாலும் அவர்கள் கேட்பதாக இல்லை. எனவே சிவபெருமான் அவர்களிடம் "மாதங்கியை மணப்பதால் அவள் வேறு, நான் வேறு இல்லை. எங்கள் இருவர் பொருளும் ஒன்றுதான்" என்று சொல்லி, சிவலோகத்திலுள்ள தன் செல்வத்தின் பெரும் பகுதியை நந்தியை அனுப்பி எடுத்து வரும்படி கூறினார். அதை பார்வதிக்கு கொடுத்தார். இதனை உணர்த்தும் விதமாக இக்கோவிலில் முன்னும், பின்னுமாக திரும்பியபடி இரண்டு நந்திகள் இருக்கின்றன. பிரதோஷ வேளையில் இவ்விரு நந்திகளுக்கும் அபிஷேகம் நடக்கின்றது. அந்நேரத்தில் இரு நந்திகளையும் தரிசனம் செய்வது சிறப்பான பலன்களைத்தரும்.
வாராப்பூர் அகத்தீசுவரர் கோவில்
கைகள் கட்டப்பட்ட நிலையில் அருள் பாலிக்கும் ராகு, கேது பகவான்
புதுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வாராப்பூர். இத்தலத்து இறைவன் திருநாமம் அகத்தீசுவரர். இறைவியின் திருநாமம் சௌந்தராம்பிகை. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானது. அகத்திய முனிவர் வழிபட்ட தலம்.
இக்கோவிலில், ராகு பகவான், கேது பகவான் ஆகிய இருவரும் ஒரே திருமேனியாக, கைகள் கட்டப்பட்ட நிலையில் எழுந்தருளி இருப்பது சிறப்பாகும். இத்தலத்து இறைவன், பக்தர்களின் ராகு கேது தோஷம் நீங்கும் வகையில் அருள்பாலிக்க வேண்டும் என்று கட்டளையிட்டதால், அவரது ஆணைக்கு கட்டுப்பட்டு, கைகளை கட்டிக்கொண்டு அருள் பாலிக்கிறார்கள். இதனால் இக்கோவில், காலசர்ப்ப தோஷம், நாக தோஷம் நீங்க வழிபட வேண்டிய சக்தி வாய்ந்த பரிகார தலமாக விளங்குகின்றது. இத்தலத்தில் வழிபட, திருமண தடை விலகும். குழந்தை பாக்கியமின்மை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும். தீராத நோய்கள் குணமாகும். வயிறு வலி குணமாகும். ராகு கேது பரிகாரத்திற்கு காளஹஸ்தி செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வழிபடலாம்.
பொழிச்சலூர் அகத்தீசுவரர் கோவில்
வடதிருநள்ளாறு - திருநள்ளாறுக்கு இணையான சென்னையிலுள்ள சனி பகவான் பரிகார தலம்
சென்னை மாநகரம் பல்லாவரத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள பொழிச்சலூர் பகுதியில் அமைந் துள்ளது அகத்தீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. பல்லவர்கள் காலத்தில் பொழில் சேர் ஊர் என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி, பொழிச்சலூர் என்றானது. ஒரு காலத்தில் பல்லவர்கள் இவ்விடத்தில் யானைகளை பாதுகாத்து வந்தார்கள் . இங்குள்ள அடையார் ஆறும் மற்றும் அருகில் உள்ள மடுவும் யானைகளை பாதுகாக்க உகர்ந்ததாக இருந்தது . அதனால் ஆணைகாபுத்தூர் என்று பெயர் பெற்றிருந்த இப்பகுதி பின்னர் மருவி அனகாபுத்தூர் என்று தற்போது அழைக்கப்படுகிறது. அகத்திய முனிவர் தென்பகுதியில் சிவபூஜை செய்து வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் சனிபகவான் மிகவும் வரப்பிரசாதி என்று போற்றப்படுகிறார். சனி பகவான் பிறருக்கு கண்டச்சனி ,ஏழரை சனி ,ஜென்ம சனி என்று அவர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்றார் போல தண்டனைகளை கொடுத்து வந்ததால், அவருக்கு ஏற்பட்ட பாவங்களை போக்க சிவபெருமானை கேட்க அவர் இந்த இடத்தில் வந்து தனக்கு பூஜை செய் என்று கூறினார் அதன்படி அவர் இங்கு வந்து குளத்தை உருவாக்கி இறைவனை வேண்டிவந்தார் அதனால் அவர் பாவங்கள் போயிற்று . இங்குள்ள குளத்திற்கு வடதிருநள்ளாறு தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சனிபகவான் திருநள்ளாறு திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பதைப்போலவே இங்கும் தனியாக எழுந்தருளி சின்முத்திரையுடன் காட்சியளிக்கின்றார். இங்குள்ள சனி பகவான் மங்கள சனீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். ஆகையால் இத்தலத்தை வடதிருநள்ளாறு என்று போற்றுகின்றனர். எனவே திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இங்குள்ள சனீஸ்வரனுக்கு அந்த பரிகாரங்களைச் செய்கின்றனர். சனி தோஷங்களுக்கு பரிகார தலமாக இக்கோவில் விளங்குகிறது.
இக்கோவிலின் மற்றுமொரு சிறப்பு, கோயிலின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள சம்ஹார மகா கால பைரவர். அஷ்டமி தோறும் இங்கு நடைபெறும் பைரவ வழிபாடு மிகச் சிறப்பு வாய்ந்தது.
பிரார்த்தனை
ஏழரைச் சனி, பாதச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி என எந்த சனிதோஷம் இருந்தாலும் பொழிச்சலூரில் இருக்கும் அகத்தீஸ்வரரையும், சனிபகவானையும் வணங்கி வழிபட்டால் தோஷநிவர்த்தி அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருச்சி பைரவ நாத சுவாமி கோவில்
திருச்சி மலைக்கோட்டையின் காவல் தெய்வம்
சிவபெருமானுடைய ஐந்து குமாரர்கள் விநாயகர், முருகன், சாஸ்தா, வீரபத்திரர், பைரவர் ஆகியோர் ஆவர். இவர்களை பஞ்ச குமாரர்கள் என்று அழைப்பர். இத்தகைய சிறப்பு வாய்ந்த பைரவருக்கு தமிழ்நாட்டில் ஒரு சில தலங்களில் தான் தனி கோவில்கள் உள்ளன. அப்படி பைரவருக்கு அமைந்த அபூர்வ கோவில்களில் ஒன்றுதான் திருச்சி மாநகர பெரிய கடை வீதியில் உள்ள பைரவ நாத சுவாமி கோவில். காசியில் கங்கையை பார்த்தபடி வீற்றிருக்கும் பைரவருக்கு நிகரான சக்தி வாய்ந்தவராக, இந்த பைரவ நாத சுவாமி நம்பப்படுவதால் இத்தலத்தை திருச்சியின் காசியாகவே கருதி வழிபட்டு வருகிறார்கள். இங்கு மூலவராக அருள் பாலிக்கும் பைரவர் மலைக்கோட்டையின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
வழக்கமாக உக்கிரமான முகத்துடன் விளங்கும் பைரவர் இங்கு சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கருவறை முன் ஒளிவிட்டு சுடர் விடும் தீபம் 'பைரவ தீபம்' என அழைக்கப்படுகிறது. பகல், இரவு என நாள் பூராவும் இந்த தீபம் எரிந்து கொண்டேயிருக்கிறது. கருவறையின் முன், பைரவரின் வாகனம் சுவானம் (நாய்). உள்ளது. நாய்க்கு துன்பம் விளைவித்தவர்கள் அதனால் தோஷம் ஏற்படாமல் இருக்க, இங்குள்ள சுவானத்திற்கு பால் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கி, சுக வாழ்வு பெறலாம்.
மாதந்தோறும் வரும் வளர்பிறை அஷ்டமியில், பைரவருக்கு பள்ளய பூஜை எனும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்று பைரவரை பூக்களாலேயே அலங்காரம் செய்வர். இங்கு மூலவரை வழிபடுவதாலும் ஹோமத்தில் கலந்து கொள்வதாலும் பக்தர்கள் இழந்த பொருளை மீண்டும் பெறுவதுடன், கடன் தொல்லை, பில்லி, சூனியம், பகைகளில் இருந்து மீள முடியும்.
தஞ்சைப் பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் சிறப்பு பூஜை
உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீட்டர், நீளம் 7 மீட்டர், அகலம் 3 மீட்டர் ஆகும். இதன் எடை 20 டன் ஆகும். இந்த நந்தியம் பெருமான், ஆந்திர மாநிலத்தில் உள்ள லேபாக்ஷி கோவில் நந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே 2வது பெரிய நந்தி ஆவார். ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் தினத்தில், நந்தியம் பெருமானுக்கு பூஜைகள் மிகவும் சிறப்பாக நடக்கும். அப்போது 108 பசுக்களுக்கு 'கோ' பூஜை செய்யப்படும். பெருந்திரளான பக்தர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்கிறார்கள். மிகவும் விஷேசமான இந்த பூஜையையொட்டி, நந்திககு ஒரு டன் எடையில் காய்கறிகள், பழங்கள், பலவகை இனிப்புகள், பலகாரங்கள் உள்ளிட்டவைகளால் அலங்கரித்து பெருவுடையாருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடத்தப்படும். இந்த பூஜையில் கலந்துகொண்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருத்தெளிசேரி பார்வதீசுவரர் கோவில்
சிவனும், பார்வதியும் உழவராக பணிபுரிந்து பஞ்சம் தீர்த்த தேவாரத்தலம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகரின் ஒரு பகுதியாக விளங்கும் தேவார தலம் திருத்தெளிசேரி. இறைவன் திருநாமம் பார்வதீசுவரர், இறைவியின் திருநாமம் பார்வதியம்மை.
ஒரு சமயம் உணவு பஞ்சம் சோழநாட்டில் சரிவர மழை பெய்யாததால் உணவு பஞ்சம் ஏற்பட்டது. நாட்டு மக்கள் பசியால் வாடினர். சோழ மன்னன் இத்தல இறைவனிடம் வேண்டினான். இதையேற்ற சிவபெருமான், பார்வதிதேவியுடன் உழவன் வேடத்தில் வந்து, நிலங்களில் விதை தெளித்துச் சென்றார். பயிர் சிறப்பாக விளைந்து பஞ்சம் நீங்கியது. இறைவனே விதை தெளித்து சென்றதால் இத்தலம் 'திருத்தெளிசேரி' ஆனது. இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் விதத்தில் இத்தலத்தில் ஆனி மாதம் விதை தெளிவு உற்சவம் நடைபெறுகின்றது. இறைவனும் இறைவியும் கோவிலுக்கு எதிரே உள்ள சூரிய தீர்த்தத்திற்கு எழுந்தருளி விதை தெளிக்கும் வைபவம் நடைபெறும். அதன் பின்னரே, விவசாயிகள் தங்கள் நிலத்தில் விதை தெளிப்பார்கள்.
பங்குனி மாதம் நடைபெறும் சூரிய பூஜை
சூரியபகவான் தனது துணைவியான சாயா தேவியிடம் அன்பு செலுத்தாத காரணத்தினால், அவள் மிகுந்த வருத்தமடைந்தாள். இதனை நாரதர் மூலம் அறிந்த அவளது தந்தை, சூரியனை சபித்து விட்டார். இதனால், சூரியன் தனது ஒளியை இழந்து வருந்தி இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி பார்வதீசுவரரை வழிபட்டான். இவனது வழிபாட்டிற்கு மகிழ்ந்த இறைவன் சாபத்தை நீக்கி அருளினார். சூரியன் வழிபட்டதால், இதனை 'பாஸ்கரத்தலம்' என்கின்றனர். . இறைவனை வழிபட்டு சூரிய பகவான் சாபம் நீங்கப் பெற்றதால், ஆண்டு தோறும் பங்குனி மாதம் 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை சூரிய பூஜை வெகு விமரிசையாக இங்கு கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில், அஸ்தமனச் சூரியன் தன் பொன் நிறக்கதிர்களால் இறைவனை ஆராதனை செய்யும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
பிரமனூர் கைலாசநாத சுவாமி கோவில்
அபூர்வமான ஆறடி உயரமுள்ள சூரியபகவான்
மதுரையில் இருந்து 23 கிமீ தூரத்தில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்திலுள்ள பிரமனூரில் அமைந்துள்ளது கைலாசநாத சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி. பிரம்மதேவன் சிவனால் ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்துக்கு வந்து வழிபட்டதால், இந்த ஊருக்கு (பிரமன்+ஊர்) பிரமனூர் என பெயர் ஏற்படடது.
பல நூறு ஆண்டுகள் பழமையான கோவிலில் உள்ள சூரியபகவான் சிலை மிகவும் அபூர்வமானது. சுமார் 6 அடி உயரமுள்ள இந்த சூரியபகவான் இறைவனை பார்த்த வண்ணம், சுவாமியின் இடப்பாகம் எழுந்தருளி உள்ளார்.
பொதுவாக சூரிய பகவான், சூரியபகவான் இறைவனின் வலப்பாகத்தில் தான் இருப்பார். இத்தகைய சூரிய பகவானை, இந்தியாவின் வேறு எந்த தலத்திலும் நாம் காண்பது அரிது.
மகர சங்கராந்தி
சூரிய பகவான் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் தினமே மகர சங்கராந்தி ஆகும். சூரியபகவான் வான்வெளியில் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் தான் மகர சங்கராந்தி. சமசுகிருதத்தில் 'சங்கரமண' என்றால், 'நகரத் துவங்கு' என்று பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று. தமிழகத்தில் இந்நாள், பொங்கல் பண்டிகை எனவும், இந்தியாவின் பிற பகுதிகளில் சூரிய வழிபாடு எனும் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால், அறுவடை திருவிழாவாகவும், சூரியனுக்கு வரவேற்பும், நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.