மருங்கப்பள்ளம் மருந்தீசுவரர் கோவில்

மருந்து கல்வம் மற்றும் குழவியே சிவலிங்கமாக இருக்கும் தலம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது மருங்கப்பள்ளம். இத்தலத்து இறைவன் திருநாமம் மருந்தீசுவரர், ஔஷதபுரீசுவரர். இறைவியின் திருநாமம் மருத்துவ நாயகி ,பெரியநாயகி. சகல நோய்களையும் இறைவன் குணப்படுத்துவதால் இந்த பெயர் ஏற்பட்டது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது.

சூரியனுக்கும் உஷா தேவிக்கும் பிறந்த குழந்தைகள் நசத்யா மற்றும் தசரா. அஸ்வினி குமாரர்கள் என்றழைக்கப்படும் இவர்கள், பிரம்மாவின் ஆணைப்படி, தேவலோக மருத்துவர் பதவியை அடைவதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து, அந்த பதவியை அடைந்தார்கள். அவர்கள் முதலில் மூலிகைகளை அரைக்க பயன்படுத்திய, கல்வம் (கல்வம் என்பது கல்லினாலான ஆன முட்டை வடிவமான குழியுள்ள அம்மி) மற்றும் குழவியையே, உலக உயிர்கள் யாவும் ஆரோக்கியமாக வாழும் பொருட்டு சிவலிங்கமாக பிரதிஷ்டைசெய்து, "ஸ்ரீ மருந்தீசுவரர்" என்று திருநாமம் வைத்து வழிபட்டார்கள். மருந்தீசுவரர் லிங்கத்தில், குழவியின் விளிம்பு இருப்பது, நாம் வேறு எந்த தலத்து சிவலிங்கத் திருமேனியிலும் காண முடியாது.

ஆஞ்சநேயப் பெருமான் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து செல்லும்போது மருந்தீஸ்வரர் திருவருளால் அதிலிருந்து ஒர் பெரும் பாறை இவ்வூரில் விழுந்து சிதறியது. விழுந்ததினால் ஏற்பட்ட பள்ளம், மருந்து தீர்த்தம் என்று அழைக்கப்படும் இக்கோவிலின் திருக்குளமானது. பாறையிலிருந்து சிதறிய மூலிகைகள் இவ்வூரெங்கும் மருத்துவ தாவரங்கள் ஆகவும், முக்கிய மூலிகையான பாதிரி தல விருட்சமாகவும் ஆனது. இதனாலையே இவ்வூர் மருந்து + பள்ளம் = மருந்துப்பள்ளம் என பெயர்பெற்றது. இதுவே மருவி மருங்கப்பள்ளம் என் அழைக்கப்படுகிறது. மருந்துபுரி, ஒளஷதபுரி என்றும் இத்தலம் புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த, திருக்குளத்து நீரே( மருந்து தீர்த்தம்) தீராத நோய் தீர்க்கும் மஹாஔஷத பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது.

மருத்துவத் துறையைச் சார்ந்த அனைவரும் வழிபட வேண்டிய தலம்

மருந்தீசுவரர், அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருத்துவராக விளங்குவதால், சகல துறை வைத்தியர்களும், அறுவை சிகிச்சை நிபுணர்களும், சித்த மருத்துவர்களும், நாட்டு வைத்தியர்களும், மருத்துவத் துறையில் படிப்பவர்களும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், விற்பனையாளர்களும், செவிலியர்களும் வழிபட வேண்டிய தெய்வமாக திகழ்கிறார். மருத்துவர்கள் தங்களது மருத்துவ சாதனங்களை இறைவன் திருபாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்துச்சென்றால் அவர்களது அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் வெற்றியடையும். உடல்நிலை பாதிக்கபெற்ற அன்பர்கள் தங்களது மருந்துப் பொருட்களை இறைவன் திருவடியில் வைத்து வணங்கி, மருந்துப் பொருட்களை இறைவன் திருபிரசாதமாக உண்ணும்பொழுது வியாதி உடனே நிவர்த்தியாகும்.

அசுவினி, ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன் தரும் தலம்

அசுவினி, ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் மற்றும் ஞாயிறு ,செவ்‌‍‌‍‍வாய்க் கிழமையில் பிறந்தவர்கள் வழிபடவண்டிய தலம் இது. பிறந்தநாள், திருமண நாள், ஜன்ம நட்சத்திர நாள், ஆகிய தினங்களில் இங்குள்ள மருந்து தீர்த்தத்தில் நீராடி ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பது ஐதீகம். நோய்கள் நிவர்த்தியாகும்.

மருந்து தீர்த்தம்

 
Previous
Previous

பெரியதிருமங்கலம் அருங்கரை அம்மன் கோவில்

Next
Next

மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்