பேரங்கியூர் திருமூலநாதர் கோவில்
மான், மழு ஏந்திய விநாயகர்
விழுப்புரம் - திருச்சி செல்லும் சாலையில், விழுப்புரத்திலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள பேரங்கியூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது திருமூலநாதர் கோவில். இக்கோவில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. இக்கோவிலின் அர்த்த மண்டப தென்புறக் கோட்டத்தில், தன் திருக்கரங்களில் மான், மழு ஏந்தியபடி தலை ஒருபுறமாக திரும்பிப் பார்க்கும் கோலத்தில் விநாயகர் சிற்பம் காணப்படுகிறது. இவரின் தலைக்கு மேல் குடையும், இருபுறமும் சாமரங்களும் காட்டப்பட்டுள்ளன. பொதுவாக மான், மழு ஏந்தியபடி சிவபெருமான்தான் காட்சி அளிப்பார். ஆனால் இங்கு மான், மழு ஏந்தியபடி விநாயகர் காட்சியளிப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாத காட்சியாகும். அதேபோல் தட்சிணாமூர்த்தி பகவான் வலது காலை தொங்க விட்டும், இடது காலை வலது காலின் மீது தூக்கி வைத்தும் , சின்முத்திரை காட்டியபடி, சற்றுச் சாய்வாக அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். இவரது இந்தக் கோலம் தனிச் சிறப்புடையதாகும்.
கருவறையின் மேற்குப் பக்க சுவரில் ஒரு அளவு கோல் பொறிக்கப்பட்டுள்ளது. சுமார் 365 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த அளவையானது, சோழர்களின் ஆட்சி காலத்தில் நில அளவைக்காகப் பயன்படுத்தி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. கோவிலில், முதலாம் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன், ராஜாதி ராஜன், குலோத்துங்கன் ஆகிய சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. குறிப்பாக ராஜராஜனின் அண்ணனான ஆதித்த கரிகாலனின் கல்வெட்டும் இங்குள்ளது, அரிய தகவலாகும்.
இராமநாதர் கோவில்
காவி உடை அணியும் விநாயகர்கள்
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில், தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்க தலம் ராமேஸ்வரம். பாண்டிய நாட்டு தேவாரத் தலங்கள் பதிநான்கில் இத்தலமும் ஒன்று. இத்தலததில் இறைவன் ராமநாதசுவாமியுடன், அம்பிகை, பர்வதவர்த்தினி எனும் மலைவளர் காதலி அருள்பாலிக்கிறாள். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது.
பர்வதவர்த்தினி அம்பாள் சந்நதி பிராகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருந்து அருள்பாலிக்கிறார்கள். இந்த விநாயகர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. விநாயகப்பெருமான், பிரம்மச்சாரி என்பதால் இவர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், துறவிகள் போல, பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும், இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.
வரசித்தி விநாயகர் கோவில்
கடன் தீர்க்கும் கணபதி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள பாகலூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது வரசித்தி விநாயகர் கோவில். இக்கோயில் பிற கோயில்களைப்போல் அல்லாமல் இரண்டு அடுக்குமாடியுடன் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
கோயிலின் கீழ்தளத்தில் யாகசாலையும், தியான மண்டபமும் அமைந்துள்ளது. மேல்தளத்திற்குச் செல்ல இருபுறமும் படிக்கட்டுகள் அமைந்துள்ளது. பிள்ளையாரின் தரிசனத்தால் நம் வாழ்க்கையின் தரம் படிப்படியாக ஏறுவது போல், படிகளின் மீது ஏறிப் பார்த்தால் அங்கு முழுமுதற்கடவுள் நமக்கு அருள்பாலிக்கத் தயாராக இருப்பது போல் வீற்றிருக்கிறார்.
சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடையாரின் மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும் ஈசனின் திசையான ஈசான்யத்தை (வடகிழக்கு) நோக்கி அருள் பொழிகிறார். தனது பாதத்தில் சரணடைந்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும் என்பதற்கேற்ப இடது பாதத்தை காட்டுகிறார். இந்த விநாயகரை வழிபட்டால் சிவசக்தியை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.கருவறையில் விமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவருக்கு இருபுறமும் கற்பக விநாயகரும், மாணிக்க விநாயகரும் உள்ளனர். விநாயகரின் வலதுபுறத்தில் தாய் சொர்ணாம்பிகையும் அவளது இருபுறமும் மீனாட்சியும், விசாலாட்சியும் அருள்பாலிக்கிறார்கள்.
கடன் தொடர்பான பிரச்னைகள் நீங்க இந்தப் பிள்ளையாருக்கு விசேஷ வழிபாடு செய்கிறார்கள் பக்தர்கள். அதாவது, சங்கடஹர சதுர்த்தி தினத்தில் இந்தக் கோயிலுக்கு வந்து, தங்களின் கடன் பிரச்னைகள் நீங்கவேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு, தேங்காய் எண்ணெய் அல்லது நெய் கொண்டு 12 அகல் விளக்குகள் ஏற்றி வழிபடவேண்டும். பின்னர், அடுத்து வரும் தேய்பிறை சதுர்த்தியில் ஒரு விளக்கைக் குறைத்து 11 விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். இப்படியே, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விளக்காகக் குறைத்து வந்து, கடைசி வழிபாட்டு நாளன்று ஒரு விளக்கு மட்டும் ஏற்றி வழிபடவேண்டும். இப்படி விளக்குகள் குறையக் குறைய கடன் சுமைகளும் படிப்படியாகக் குறையும். பிரார்த்தனை நிறைவடையும் நாளில் கடன் பிரச்னைகளும் முழுமையாக நீங்கிவிடும் என்பது பக்தர்களது நம்பிக்கை. எனவே இவரை 'கடன் தீர்க்கும் கணபதி' என்றும் செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர். உற்றார் உறவினருக்குக் கடன் கொடுத்துவிட்டு அதைத் திரும்பப் பெற இயலாமல் தவிக்கும் அன்பர்களும் இவரை வழிபட்டால் அவர்களுடைய அந்தப் பிரச்சனை தீரும்
மேலும், குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள், விநாயகர் சதுர்த்தித் திருநாளில் இந்தப் பிள்ளையாருக்கு பால்குடம் எடுத்து வந்து வழிபடுகிறார்கள். இதன் மூலம், விரைவில் குழந்தைப் பேறு வாய்க்கும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் பக்தர்கள்.
சாட்சி கணபதி கோவில்
பக்தர்களைப் பற்றி சிவபெருமானிடம் சாட்சி சொல்லும் கணபதி
ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் அருள்மிகு மல்லிகார்ஜுனர் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலுக்குச் சென்று தங்களின் வருகையை பக்தர்கள் பதிவு செய்ய வேண்டுமாம். பக்தர்கள் ஸ்ரீசைலம் அருள்மிகு மல்லிகார்ஜுனர் கோவிலுக்குச் சென்று மல்லிகார்ஜுனர் மற்றும் பிரமராம்பிகா தேவியை தரிசித்ததாக இவர் கைலாயத்தில் சாட்சி சொல்வாராம். அதனால், இவரை 'சாட்சி கணபதி' என்கின்றனர்.
இந்த சாட்சி கணபதி தன்னை காண வரும் பக்தர்களில் யார் மோட்சத்திற்கு செல்லும் அருகதை உள்ளவர்கள், யார் இல்லாதவர்கள் என கைலாசத்தில் (ஸ்ரீ சைலத்தில்) உள்ள சிவபெருமானிடம் ஒரு பட்டியல் போட்டு கொடுப்பாராம். எனவே பக்தர்கள் தமக்கு மோட்சம் கிட்ட வேண்டும் என்று கருதி இக்கணபதியை தரிசித்து தமது கோத்திரப் பெயர்களை கூறி சாட்சி கணபதியை வணங்கிய பின் பக்தியுடன் ஸ்ரீ சைலம் வாயிலில் நுழைகின்றனர். இக்கணபதி விக்ரகம், பெயர்களை குறித்துக் கொள்ளும் தோற்றத்தில்
கைகளில் எழுத்தாணி, ஏடு வைத்துக் கொண்டு இருப்பது ஒர் அற்புதம் ஆகும்.
அமிர்தகடேசுவரர் கோவில்
இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், எய்யலூர் சாலையில் அமைந்துள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவி வித்யூஜோதிநாயகி.
தேவர்கள், பாற்கடலில் கிடைத்த அமுதத்தை விநாயகரை வணங்காமல் பருக சென்றதால், விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுதகலசத்தை எடுத்து செல்லும்போது ஒரு துளி அமுதம் கடம்பவனமாக இருந்த இந்த ஊரில் விழுந்தது. அந்த இடத்தில் சிவன் சுயம்பு லிங்கமாக உள்ளார். இந்திரனும் தேவர்களும் தங்கள் தவறை உணர்ந்து விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு அமுதகலசத்தை திரும்பி கேட்டனர். விநாயகர் சிவனிடம் வேண்டும்படி கூறினார். சிவன் இந்திரனுக்கு அமுதகலசத்தை கொடுத்து அமிர்தகடேஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார்.
தேவர்களின் தாயான அதிதி, அமுதம் அளித்த சிவனை தினமும் வணங்கி வந்தார். இவர் தினமும் இங்கு வருவதை விரும்பாத இந்திரன் இந்த சிவனை கோயிலோடு இந்திரலோகம் எடுத்து செல்ல விரும்பி கோயிலை தேர் வடிவில் மாற்றி இழுத்து செல்ல முயன்றான். விநாயகர் தன காலால் தேர் சக்கரத்தை மிதித்து கொள்ள, இந்திரனால் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. இந்திரன் விநாயகரிடம் வழி விடும்படி வேண்ட விநாயகர் இந்திரனிடம் கோடி லிங்ககளை பிரதிஷ்டை செய்தால் தேரை கொண்டு செல்லலாம் என்று கூறினார். இந்திரன் ஆணவத்துடன் லிங்கங்கள் செய்ய அனைத்தும் பின்னப்பட்டன, தவறை உணர்ந்த இந்திரன் அமிர்தகடேஸ்வரரை வேண்ட அவர் ஆயிரம் முறை தன் பெயரை சொல்லி ஒரு லிங்கம் செய்யும்படி பணித்தார். அதன்படி இந்திரன் ருத்ரகோடிஸ்வர லிங்கத்தை உருவாக்கினான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தான் இங்கேயே இருக்க விரும்புவதால் அதிதிக்கு பதில் இந்திரனே தினமும் வழி படலாம் என கூறினார். இந்திரனும் மன்னிப்பு கேட்டான் . தினமும் இந்திரன் பூஜை செய்வதாக ஐதிகம்.
இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கிறார். இவருக்கு ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச் சென்றும், தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்தது. இவர் தலையை இடது புறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சி தருகிறார். தேர் சக்கரத்தை மிதத்ததின் அடையாளமாக, தேர் போல் அமைந்த இக்கோவிலின் இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து காணப்படுகிறது.
வலஞ்சுழி விநாயகர் கோவில்
கடல் நுரையாலான வெள்ளை விநாயகர்
வலஞ்சுழி விநாயகர் கோவில் கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ள தேவார பாடல் பெற்ற தலமான திருவலஞ்சுழியில் அமைந்துள்ளது.
இத்தலத்து விநாயகர் பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால் உருவானதால் சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) என பெயர் பெற்றார்.இவர் வெண்மையான திருமேனியுடன் வலம் சுழித்த தும்பிக்கையுடனும் காட்சி தருகிறார்.இவர் கடல் நுரையால் ஆனதால் இவருக்கு அபிஷேகங்கள் கிடையாது. பச்சைக் கற்பூரம் மட்டுமே திருமேனியில் சாத்தப்படுகிறது. விசேஷ தினங்களில் வெள்ளி, தங்கக் கவசங்கள் அணியப்படும்.
இதர தலங்களில் விநாயகரின் இரண்டு தந்தங்களில் ஒன்று மட்டும் கூர்மையாக இருக்கும். மற்றொன்று பாதி ஓடிந்த நிலையில் காணப்படும். ஆனால் இந்தத் தலத்தில் விநாயகரின் இரு தந்தங்களும் கூர்மையானதாகக் காட்சியளிக்கின்றன.
இந்திரன் வடித்து வழிபட்ட விநாயகர்
'சுவேத' என்ற வடமொழிச் சொல்லுக்கு 'வெள்ளை' என்று பொருள். பாற்கடலைக் கடைந்தபோது, மிதந்து வந்த வெள்ளை நிற நுரையைக் கொண்டு இந்திரன் வடித்து வழிபட்ட உருவம்தான் இந்த விநாயகர் எனக் கூறப்படுகிறது.
ஒருமுறை தேவலோகத்துக்கு விஜயம் செய்த துர்வாச முனிவரை மதியாததால், தேவேந்திரன் சபிக்கப்பட்டார். சாப விமோசனம் பெரும் பொருட்டு, கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் உருவத்தை எடுத்துக்கொண்டு பூமியில் சுற்றித் திரிந்தார். அமைதியான இந்த காவிரிக்கரையைக் கண்டதும், பிள்ளையாரைக் கீழே வைத்து விட்டு நதியில் நீராடினார். ஆற்றிலிருந்து திரும்பி வந்து சிலையை எடுக்க தேவேந்திரன் முயன்றார். முடியவில்லை. இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தியன்றும் இந்திரன் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம்.
மகாவிஷ்ணு வழிபட்ட விநாயகர்
மகாவிஷ்ணு, மார்கழி மாத சஷ்டி திதியில் இத்தலத்தில் உள்ள வெள்ளை விநாயகரை நேரில் வந்து வழிபட்டதாகவும் புராணங்கள் இருக்கின்றன.
ராஜராஜ சோழன், போருக்குப் போகும் போதெல்லாம் தன்னுடைய இஷ்ட தெய்வங்களின் ஒன்றான வெள்ளை விநாயகரை வழிபட்டு, பின்னர்தான் போருக்குச் சென்று வெற்றி வாகை சூடிவந்ததாக இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.
கருங்கல் ஜன்னல்
கருங்கல்லால் ஆன ஜன்னல் இச்சன்னதியில் உள்ளது. கல்லால் ஆன விளக்குகளைப் போன்ற அமைப்பு இச்சன்னதியின் தனித்துவங்களில் ஒன்றாகும். இக்கோவில் தூண்களில் நுணுக்கமான சிற்ப அமைப்புகள் காணப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழா
திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும். தினமும் சுவாமி வீதியுலா நடைபெறும். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேவேந்திரன் பூஜை, தேரோட்டம் நடைபெறும். சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவடையும்.
மகாலிங்கேசுவரர் கோவில்
தலைமைச் சிவாச்சாரியாராகத் திகழும் ஆண்ட விநாயகர்
கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் தேவாரத்தலமான திருவிடைமருதூர் இருக்கிறது. இறைவன் திருநாமம் மகாலிங்கேசுவரர்.
மூலவர் மகாலிங்கப் பெருமான் சன்னிதிக்கு தென்பகுதியில் ஆண்ட விநாயகர் சன்னிதி உள்ளது. இவர் வடக்கு திசை நோக்கி, மகாலிங்கப் பெருமானைப் பூஜிக்கும் நிலையில் அமர்ந்து நமக்கு அருள்பாலிக்கிறார்.
இவர் தேவகணங்கள் கொண்டு வந்து கொடுக்கும் பூஜைப் பொருட்களைக் வைத்து, பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானைப் பூஜித்து வருகிறார். மேலும் இந்த இடத்தில் இருந்து தனது அருட்சக்தியால், பல உயிர்களும் உய்யும் வண்ணம் அரசாட்சி செய்து வந்தமையால் இவ்விநாயகப் பெருமான், 'ஆண்ட விநாயகர்' என்னும் திருநாமம் பூண்டு எழுந்தருளியுள்ளார்.
இந்த ஆண்ட விநாயகர்தான் தினம் ஆறு காலம் மகாலிங்கப் பெருமானை அர்ச்சித்து பூஜை செய்து வருகிறார். எனவே இத்தலத்து தலைமைச் சிவாச்சாரியாராக, இவர் கருதப்படுகிறார். மற்ற சிவாச்சாரியார்கள் எல்லாம் இவருடைய உதவியாளர்களாகவே கருதப்படுகின்றனர்.
பொதுவாக சிவாலயங்களில், சிவாச்சாரியார், தான் முதலில் ஸ்நானம் செய்துவிட்டு, அதன் பிறகு இறைவனுக்கு அபிக்ஷேகம், நைவேத்தியம், தீபாராதனைகளைச் செய்வார். மேலும் சிவாலயங்களில் விநாயகருக்கு அபிக்ஷேகம், நைவேத்தியம், தீபாராதனை ஆன பிறகுதான் அவையெல்லாம் சுவாமிக்கு நடைபெறும். ஆனால் இத்தலத்தில் ஆண்ட விநாயகருக்கு முதலில் அபிஷேகம் மட்டும் நடைபெறும். இது சிவாச்சாரியார் பூஜை செய்வதற்கு முன் செய்யும் ஸநானத்திற்கு ஒப்பானது. அதன் பின்னர் கோவில் சிவாச்சாரியார் ஆண்ட விநாயகரின் கைகளில் இருக்கும் தர்ப்பையைப் பெற்றுக் கொண்டு, சுவாமி சன்னதிக்குச் சென்று ஆண்ட விநாயகர் சார்பாக சுவாமிக்கு அபிக்ஷேகம், நைவேத்தியம், தீபாராதனை செய்வார். இவ்விநாயகர் தன் கைகளில் பாசாங்குசத்திற்குப் பதிலாக தர்ப்பை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆகம விதிப்படி, சுலாமிக்குச் செய்த நைவேத்தியத்தின் ஒரு பகுதி சிவாச்சாரியருக்கு உரியதாகவும், அவருக்கு உணவாகவும் ஆகிறது. அதன்படியே மகாலிங்கப் பெருமானுக்கு சமர்பிக்கப்பட்ட நைவேத்தியத்தின் ஒரு பகுதி ஆண்ட விநாயகருக்கு நைவேத்தியமாகிறது.
ஆண்ட விநாயகரின் தலைமைச் சிவாச்சாரியார் என்ற பொறுப்பிற்கு ஏற்ப, கோவில் திருவிழாக்களின் கொடியேற்றத்தின்போது முதல் கொடியேற்றம் அவர் உற்சவ மூர்த்தியின் முன்னிலையில் நடைபெறுகிறது. அதுபோல, சந்திரசேகர், சுப்பிரமணியர் முதலியோரின் வீதிப்புறப்பாட்டின்போதும் இவர் உடன் செல்வார்.
புழுங்கல் வாரிப் பிள்ளையார் கோவில்
புழுங்கல் வாரிப் பிள்ளையார் என்று பெயர் ஏற்பட்ட வரலாறு
திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலின் ஈசான திசையில் காட்சி தருகிறார் புழுங்கல் வாரிப் பிள்ளையார். ஒரு சந்தர்ப்பத்தில் கோவில் நைவேத்யத்திற்குப் புழுங்கல் அரிசி தட்டுப்பாடு ஏற்படவே, இவர், புழுங்கல் அரிசியை மழை போல் வாரித் தந்தவராம் இவர். அதனால் இவருக்கு புழுங்கல் வாரிப் பிள்ளையார் என்று பெயர் வந்தது.
முன்னொரு காலத்தில் திருவில்லிப்புத்தூர் பகுதியில் கடும் வறட்சி நிலவியது. மக்கள் வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்தனர். ஊரில் எஞ்சிய சில மக்களுக்கும் சமைக்க அரிசி கிடைக்கவில்லை. தங்களுக்குக் கிடைத்த சிறிதளவு வரகரிசியையே சமைத்து உண்டனர்.அப்போது அங்கிருந்த பெரியவர் ஒருவர், தனக்கு உணவு கிடைக்காத நிலையிலும், பிள்ளையாரின் நைவேத்தியத்திற்கு அரிசி கிடைக்கவில்லையே என்று மனம் வருந்தினார். அதனால் ஊர் மக்களிடம் நைவேத்தியத்திற்காக அரிசி தருமாறு வேண்டினார். ஆனால் மக்களோ, தாங்களே உணவிற்கு வரகரிசியைத்தான் உபயோகப்படுத்தும்போது பிள்ளையாருக்கு எப்படி அரிசி அளிக்க முடியும் என்று வினவினர்.இதனால் மனம் வருந்திய பெரியவர் பிள்ளையாரிடம் கண் கலங்கி நின்றார். பெரியவருக்காக மனமிரங்கிய பிள்ளையார், இரண்டு மரக்கால் புழுங்கல் அரிசியை சன்னதியில் வைத்து அருளினார். இதைக் கண்ட பெரியவர் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து விட்டு, தானும் உண்டு மகிழ்ந்தார்.
இதைக் கணட ஊர் மக்கள் அவருக்கு எப்படி பஞ்ச காலத்தில் புழுங்கல் அரிசி கிடைத்தது என்று வினவினார்கள். பிள்ளையார் தனக்கு அருளியதைச் சொல்ல விரும்பாத பெரியவர் மௌனம் சாதித்தார். இதனால் கோபமடைந்த மக்கள் அவரைக் கட்டி வைத்து துன்புறுத்தத் தொடங்கினார்கள்.
தன் பக்தரைக் காப்பாற்ற விரும்பிய பிள்ளையார், அன்றிரவு ஊர் பெரியவர்களின் கனவில் தோன்றி தான்தான் அரிசி வழங்கியதாகவும், அந்தப் பெரியவர் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்று கூறியருளினார். இதையறிந்த ஊர் மக்கள் மனம் வருந்தி, பெரியவரிடம் மனினிப்புக் கேட்டார்கள்.அவரையே பிள்ளையாருக்கு தினமும் பூஜை செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர்.அவர் பரம்பரையினரே இன்றும் இக்கோவிலில் பூஜை செய்கின்றார்கள். அன்றிலிருந்து இப்பிள்ளையார் புழுங்கல் வாரிப் பிள்ளையார் என்றும் புழுங்கல் அரிசிப் பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார்.
கோட்டை வாசல் விநாயகர் கோவில்
கோவிலை இடிக்க உத்தரவிட்ட ஆங்கிலேய அதிகாரியை மிரட்டிய விநாயகர்
ராமநாதபுரம் அரண்மனையைச் சுற்றியிருந்த கோட்டைக்கு வெளியே அமைந்துள்ளது கோட்டை வாசல் விநாயகர் கோவில். மிகவும் பழமை வாய்ந்தது இக்கோவில். இத்தலத்து விநாயகர் ராமநாதபுரம் மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ராமநாதபுரம் மன்னர்கள் எந்தவொரு முக்கிய செயலையும் இவரை பூஜை செய்தபின்தான் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். கருவறையில் கோட்டை வாசல் விநாயகர் வல்லபையை தமது மடியில் இருத்தி கொண்டு நமக்குக் காட்சி தருகிறார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோட்டை வாசல் பிள்ளையாருக்கு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் இருப்பதைக் கண்டு எரிச்சல் அடைந்த ஆங்கிலேய அதிகாரி ஒருவர், இக்கோயிலிலிருந்து அபிஷேக தீர்த்தம் வெளியேறும் கோமுகம் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகப் பொய்யான ஒரு குற்றச்சாட்டைக் கூறி, அந்த கோட்டை வாசல் விநாயகர் கோவிலை உடனடியாக இடித்து விட வேண்டும் என உத்தரவிட்டார்.
அன்று இரவே ஆங்கிலேய அதிகாரியின் உறக்கத்தின் பொழுது, கனவில் யானை உருவத்தில் கோட்டை வாசல் விநாயகர் தோன்றி ஏறி மிதிப்பது போல மிரட்டி உள்ளாராம். விடியற்காலையில் ஆங்கில அதிகாரி கோவிலை இடிக்கும் உத்தரவை நிறுத்தி உள்ளார்.
தெய்வ சக்தியை உணர்ந்த அந்த அதிகாரி, தன் தவறை உணர்ந்து கோவிலுக்கு வந்து கோட்டை வாசல் விநாயகரை வணங்கி மன்னிப்பும் கேட்டுச் சென்றாராம். அதோடு மட்டும் அல்லாமல் இந்த ஆலயத்தை அரண்மனைக்கு எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார் என்பது வரலாறு.
இவரை வழிபடுபவர்களின் கோரிக்கைகளை இவர் நிறைவேற்றித் தருவதால், இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் சிதறு தேங்காய் போடுவதும், விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
ஏழைப் பிள்ளையார் கோவில்
ஏழு இசை ஸ்வரங்கள் சாப விமோசனம் பெற்ற தலம்
திருச்சி மலைக்கோட்டை என்றாலே நம் நினைவுக்கு வருவது உச்சிப் பிள்ளையார்தான்.ஆனால் மலைக்கோட்டையை கிரிவலம் வரும்போது, உச்சிப் பிள்ளையாரையும் சேர்த்து 12 விநாயகர் கோயில்களை தரிசிக்கலாம். இதில் ஏழாவதாகக் காட்சி தருபவரே வடக்கு ஆண்டார் தெருவில் வீற்றிருக்கும் ஏழாவது பிள்ளையார். இவரே நாளடைவில் மருவி ஏழைப் பிள்ளையார் என்றானார். ஏழு ஸ்வரங்கள் இணைந்து இவரை வணங்கி அருள் பெற்றன என்றும் அதனால் ஏழிசை விநாயகர் என்ற திருநாமம் ஏற்பட்டு பின்னர் அது ஏழைப் பிள்ளையார் என்று மருவியது என்ற கருத்தும் உண்டு. இவர் ஸப்தபுரீஸ்வரர் என்றும் போற்றப்படுகிறார்.
ஏழு இசை ஸ்வரங்கள் சாப விமோசனம் பெற்ற தலம்
ஏழு இசை ஸ்வரங்களும் தாங்களே சிறந்தவர்கள் என்ற ஆணவத்தால், சிவபூஜையில் அபசுரமாக ஒலித்த காரணத்தால் கலைமகளால் சாபம் பெற்றன . இதனால் அவை ஊமையாகி விட்டன. சாபவிமோசனம் வேண்டி, ஈசனைத் துதிக்க, அவரும் 'பூலோகம் சென்று, தென் கயிலாயம் எனப்படும் திருச்சிராப்பள்ளி மலை மீது அருளும் உச்சிப் பிள்ளையாரை வழிபட்டு, அந்த மலையை வலம் வந்து, அந்த பாதையில் ஏழாவதாக எழுந்தருளி இருக்கும் விநாயகரை வழிபட்டால் உங்கள் சாபம் நீங்கும். மீண்டும் சப்தஸ்வரங்களை ஒலிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். அந்த ஆலயமும் உங்கள் நினைவாக ஏழிசைப் பிள்ளையார் என்ற பெயர் கொண்டு விளங்கும்' என்று அருளினார். அதேபோல் ஏழு ஸ்வரங்களும் இங்கு வந்து கணபதியை பிரதிஷ்டை செய்து, தொழுது சாப விமோசனம் பெற்றன என்று ஆலய புராணம் கூறுகிறது.
மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் குணமடைய அருளும் பிள்ளையார்
இசைக் கலைஞர்கள் குரல் வளம் சிறப்பாக, பேச்சுத் திறமை உண்டாக, செல்வச் செழிப்பு உண்டாக, குழந்தைகளுக்கு ஏற்படும் பேச்சு சம்பந்தமான குறைகள் தீர, தொண்டை சம்பந்தமான நோய்கள் நீங்க இங்குள்ள விநாயகரைப் பிரார்த்திக்கிறார்கள். படிப்பில் கவனம் குறைந்த குழந்தைகளும், மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளும் இவரை வணங்கினால் நல்ல முன்னேற்றம் அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
யம பயம் போக்கும் பிள்ளையார்
ஏழைப் பிள்ளையார் தெற்கு திசை நோக்கி அருள்புரிவதால் இவரை வணங்குபவர்களுக்கு யம பயமோ, யம வாதனையோ இல்லை என்பது ஆன்றோர் கூற்று. திருச்சிராப்பள்ளி மலை மீது எழுந்தருளியிருக்கும் தந்தையான ஈசனையும் தாயான அம்பிகையையும் பார்த்த வண்ணம் இருப்பதால், இந்த கணபதியை வணங்கினால் குடும்ப ஒற்றுமையும் அமைதியும் நிலைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த கணபதியை தரிசித்தாலே மலை மீது ஏறி உச்சிப் பிள்ளையாரை தரிசித்த பலனும் கிட்டும் என்கிறார்கள்.
உழக்கரிசி பிள்ளையார் கோவில்
ஆங்கிலேயர் பிள்ளையாருக்கு கொடுத்த உழக்கரிசி மானியம்
திருநெல்வேலியில் இருந்து சுமார் 42 கி. மீ தொலைவில் உள்ள அம்பலவாணபுரம் என்ற ஊரில் உழக்கரிசி பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. கருவறையில் விநாயகப் பெருமான் அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் கருணை ததும்பும் திருமுகத்துடன் அழகாக காட்சி அளிக்கிறார்.
முற்காலத்தில் சிவபெருமான் பார்வதி திருமணத்தின் போது தாழ்ந்த தென் பகுதியை சமன் செய்ய அகத்திய முனிவர் பொதிகை மலை பகுதிக்கு வந்தார். அப்போது இந்த பகுதியில் பல தெய்வங்களை பிரதிஷ்டை செய்து வணங்கினார்.
அப்போது அகத்தியர் பிரதிஷ்டை செய்து வணங்கிய பிள்ளையார்தான் இந்த உழக்கரிசி பிள்ளையார். ஆனால், காலப் போக்கில் இந்தப் பிள்ளையார் இருந்த இடத்தினை யாரும் கவனிக்காமல் விட்டு விட்டனர். இதனால் அவர் இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டார்.
18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியின் போது இந்த பகுதியில் ஒரு ஆங்கிலேய துரை வேட்டையாட வந்தார். அவர் இந்த வழியாக வரும் போது வெள்ளைக்கார துரையின் குதிரை கால் பட்டு மீண்டும் வெளிப்பட்டார் உழக்கரிசி பிள்ளையார். அப்போது குதிரையில் குளம்படி பட்டு பிள்ளையார் மீது ரத்தம் பீரிட்டது. இதை கண்ட வெள்ளைகாரர் அரண்டு போய் விட்டார். அந்த பிள்ளையாரின் ஆற்றலை உணர்ந்த அவர் உடனே அங்கிருந்த மக்களிடம் இந்த பிள்ளையாரை நீங்கள் முறைப்படி வைத்து வணங்குங்கள். நான் அதற்கு உதவி புரிகிறேன் என்று கூறினார். மக்கள் அந்த பிள்ளையாரை மீண்டும் பிரதிஷ்டை செய்து வணங்க ஆரம்பித்தனர்.
அந்த வெள்ளைக்கார துரை இந்த பிள்ளையாருக்கு மானியமாக தினமும் உழக்கு அரிசி கொடுக்க உத்தரவு பிறப்பித்தார். ஆகவே இந்த பிள்ளையாருக்கு'உழக்கரிசி பிள்ளையார்' என்று பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இவரை வணங்கும் பக்தர்களுக்கு கருணைக் கடலாய் அருள்புரிவாராம் . ஆகவே இவருக்கு கருணை பிள்ளையார் என்ற பெயரும் வந்தது.
அருணாசலேசுவரர் கோவில்
யானைதிறைக் கொண்ட விநாயகர்
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் மொத்தம் 5 பிரகாரங்கள் கொண்டது. ஒவ்வொரு பிரகாரத்திலும் ஆங்காங்கே விநாயகர் வீற்றிருக்கிறார். கோபுரத்து இளையனார் சன்னதிக்கு அருகில் சிறுகுகை போன்ற சன்னதியில் நின்ற கோலத்தில் யானைதிறைக் கொண்ட விநாயகர் அருள்பாலித்து வருகிறார். இவருக்கு இந்தப் பெயர் வந்ததின் பின்னணியில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.
ஒருசமயம் ஆந்திராவைச் சேர்ந்த அரசர் ஒருவர் திருவண்ணாமலையை முற்றுகையிட்டு போரிட்டு கைப்பற்றினார். அன்று இரவு அவர் திருவண்ணாமலையில் தனது படை வீரர்களுடன் தங்கியிருந்தார்.
அப்போது அவருக்கு ஒரு கனவு வந்தது. யானை ஒன்று தன்னையும், தனது படைவீரர்களையும் அடித்து விரட்டுவது போல கனவு கண்டார். அதிர்ச்சியுடன் விழித்த அவர் இதுபற்றி விசாரித்தார். அப்போது திருவண்ணாமலை தலத்தில் உள்ள தலவிநாயகர்தான் அவர் கனவில் வந்தது எனத் தெரிய வந்தது. உடனே அந்த அரசர் தனது யானை படை அனைத்தையும் அந்த விநாயகருக்கு காணிக்கை செலுத்தி மன்னிப்பு கேட்டு சென்றார். இதனால் அந்த தலவிநாயகருக்கு யானைதிறைக் கொண்ட விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது.
தியாகராஜர் கோவில்
ஐங்கலக் காசு விநாயகர்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மொத்தம் 84 விநாயகர்கள எழுந்தருளியிர்க்கிறார்கள். அவர்களில் ஒருவரான ஐங்கலக் காசு விநாயகர், தியாகராஜப் பெருமான் சன்னதிக்கும், வன்மீகநாதர் சன்னதிக்கும் நடுவில் தனிச் சன்னதி கொண்டு எழுந்தருளியிருக்கிறார். இவர் அழகிய சோழ மன்னன் தந்த காணிக்கையால் உருவாக்கப்பட்டவர். ஒரு கலம் தங்கம், ஒரு கலம் வெள்ளி, ஒரு கலம் செம்பு, ஒரு கலம் வெண்கலம், ஒரு கலம் பித்தளை ஆகிய ஐந்து மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டவர்தான் ஐங்கலக் காசு விநாயகர்.
மிளகு பிள்ளையார் கோவில்
மழையை வரவழைக்க பிள்ளையாருககுச் செய்யப்படும் மிளகு அபிஷேகம்
திருநெல்வேலியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேரன்மாதேவியில் அமைந்துள்ளது மிளகு பிள்ளையார் கோவில்.
திருநெல்வேலி மாவட்டத்தின் நீர் ஆதாரமான தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பல்வேறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைக்கட்டுகளில் இருந்து தண்ணீரை கொண்டு செல்ல பல்வேறு கால்வாய்களும் வெட்டப்பட்டு உள்ளன. அவற்றுள் முக்கியமானது கன்னடியன் கால்வாய். இந்த கன்னடியன் கால்வாய் வறண்டு போகும் போது மிளகுப் பிள்ளையாருக்கு மிளகரைத்து அபிஷேகம் செய்தால் மழை பெய்து கால்வாய் நிரம்பும் எஎன்பது ஐதீகம்.
மிளகுப் பிள்ளையாருக்கும் கன்னடியன் கால்வாய்க்கும் உள்ள தொடர்பின் பின்னணியில் ஒரு சுவாரசியமான வரலாறு உள்ளது.
கேரள மன்னனின் முன் ஜென்ம பலன்
முன்னொரு காலத்தில், கேரள மன்னன் ஒருவனுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. எவ்வளவு சிகிச்சை அளித்தும் பலனில்லை. ஒருநாள் மன்னரைக் காண ஒரு ஜோதிடர் வந்தார். ஜோதிடர் மன்னனின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து அவனுடைய முன் ஜென்ம பயனால் தான் இந்த வயிற்று வலி உண்டாகி வேதனைப் படுத்துகிறது என்றார். அதற்கு ஜோதிடர் பரிகாரமாக மன்னன் உருவம் போன்ற அமைப்பில் எள்ளு தானியத்தால் ஒரு பொம்மை செய்து அதனை அந்தணர் ஒருவருக்கு தானம் செய்தால் மன்னனுடைய முன் ஜென்ம பலன் அவருக்குச் சென்றுவிடும் என்று கூறினார்.
மன்னனிடமிந்து பொம்மையை தானம் பெற்ற கன்னட பிரம்மச்சாரி
மன்னனும் ஜோதிடர் கூறியபடியே எள்ளு தானியத்தால் தனது உருவ அமைப்பில் ஒரு பொம்மையைச் செய்து அதனை தானம் அளிக்கத் தகுந்த அந்தணரைத் தேடிக் கொண்டிருந்தான். ஆனால் அதனை தானம் பெற்றால் மன்னனுடைய முன் வினைப் பயனால் அவனைச் சேர்ந்த பாவமும் தங்களை சேர்ந்துவிடும் எனப் பயந்து யாரும் தானம் பெற முன் வரவில்லை. இதனால் மன்னன் தன்னிடம் தானம் பெறும் அந்தணருக்குப் பல பொன்னும் பொருளும் நிறைந்த முடிப்பை பரிசாகத் தருவதாக கூறி அறிவிப்பு செய்தான். இந்நிலையில் இது பற்றி அறிந்த கன்னட பிரம்மச்சாரி அந்தணன் ஒருவன், மன்னனை சந்தித்து தான் அந்த பொம்மையை பெற்றுக் கொள்வதாகக் கூறினான். இதனால் மன்னனை பிடித்திருந்த முன் ஜென்ம பாவ வினைகள் நீங்கியது. மன்னனும் தான் அறிவித்த பரிசுகளை கொடுத்தான்.
கன்னட பிரம்மச்சாரி உருவாக்கிய கால்வாய்
பிரம்மசாரியின் கைக்கு வந்தவுடன் அந்த பொம்மை உயிர் பெற்றது. தனக்கு அந்த பிரம்மசாரி செய்திருந்த பூஜையின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. 'அப்படி கொடுத்து விட்டால் வியாதி உன்னை அண்டாது' என்றும் அந்த பொம்மை சொன்னது. இதனைக்கேட்ட அந்த பிரம்மசாரி பொம்மை கேட்டபடி பூஜையின் பலனில் ஒரு பகுதியை கொடுத்து விட்டான்.
ஆனால் தானம் கொடுத்த பின்னர் அவனது மனது துன்பம் அடைந்தது. 'வியாதியால் அவதிப்படுவோம் என்ற பயத்தில், சுயநலம் கருதி தர்மத்துக்கு மாறாக பூஜையின் பலனை தானம் செய்து விட்டோமே' என்று அவன் கலங்கினான். இதற்கு பிராயச்சித்தமாக தனக்கு கிடைத்த மதிப்பு மிக்க பொருட்களை பொது நலன் கருதி செலவழிப்பது என்று அவன் முடிவெடுத்தான்.
பொது மக்களுக்கு என்ன நன்மை செய்யலாம் என யோசனைக் கேட்பதற்காக பொதிகை மலையில் வசித்து வரும் தன் குருவான அகத்திய முனிவரிடம் சென்றான்.
அகத்தியர் அவனிடம், 'தானத்தில் தலை சிறந்தது தண்ணீர் தானம் தான். நீ மலையில் இருந்து திரும்பி செல்லும்போது, வழியில் ஒரு பசுவை காண்பாய். அது போகும் வழிப்படி ஒரு கால்வாய் வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு ஏற்படுத்து. அது கோமியம் பெய்யும் இடங்களில் மறுகால் ஏற்படுத்து. பசு படுக்கும் இடங்களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே கால்வாய் பணியை முடித்து மீதி தண்ணீர் அங்கே சேரும்படியாக ஒரு குளம் தோண்டு' என்றார்.
அந்த இளைஞன் பசுவை கண்ட இடம்தான் சேரன்மாதேவி. அகத்திய முனிவரே அந்த பசுவாக மாறி வந்து நின்றதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. பசு சென்ற பாதையில் மதகு, ஏரிகளை அமைத்தான் இளைஞன். கடைசியாக பிராஞ்சேரி என்ற ஊரில் பசு மறைந்து விட்டது. அங்கே மிகப் பெரிய ஏரியை தோண்டினான். இப்போதும் மழை வெள்ள காலங்களில் நீர் நிறைந்து காணப்படும் இந்த ஏரியை பார்த்தால், கடல் போல் காட்சியளிக்கும்.
கன்னடியன் கால்வாய்
அந்த இளைஞனின் பெயர் இன்றுவரை யாருக்கும் தெரியாது. அவனது மொழியின் பெயராலே அந்த கால்வாய்க்கு 'கன்னடியன் கால்வாய்' என்று பெயர் வைத்து விட்டனர்.
பிள்ளையாருககு மிளகு அபிஷேகம்
அந்த இளைஞன் கால்வாய் வெட்டியதோடு நின்று விடவில்லை. அந்த கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவேண்டுமே என்று கவலைப் பட்டான். அவன் கவலைப் பட்டது போலவே, ஒரு சமயம மழை பொய்த்ததால் கால்வாய் காய்ந்து போய் விட்டது.
உடனே அவன் ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரது உடலில் மிளகை அரைத்துத் தேய்த்து அபிஷேகம் செய்தான். அந்த அபிஷேக நீர், கால்வாய்க்குள் விழும்படி செய்தான். என்ன ஆச்சரியம்! உடனே மழை கொட்டி தீர்த்தது.
தமிழக அரசு கெஜட்டில் மிளகு பிள்ளையார் வழிபாடு
இப்போதும் மழை இல்லாத காலங்களில் சேரன்மாதேவி பகுதி விவசாய சங்கத்தினர் இந்த வழிபாட்டை செய்கின்றனர்.
1916-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தமிழக அரசு கெஜட்டின், 367 வது பக்கத்தில் இந்த மிளகு பிள்ளையார் வழிபாடு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமலை முத்துக்குமார சுவாமி கோவில்
திருமலை உச்சிப்பிள்ளையார்
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரில் இருந்து வடமேற்கில் 10 கிலோமீட்டர் தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலுள்ள திருமலை என்ற சிறிய குன்றின் மீது திருமலை முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது.
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் போல திருமலைக் குனறின் மீதும் ஒரு உச்சிப்பிள்ளையார் எழுந்தருளியிருக்கிறார். இந்தக் குன்றில் மூன்று விநாயகர் சன்னதிகள் உள்ளன. மலையடிவாரத்தில் வல்லப கணபதி, மலைப்பாதையின் நடுவில் நடுவட்ட விநாயகர், மலையுச்சியில் மூலவர் முத்துக்குமார சுவாமி சன்னதி அருகில் உச்சிப்பிள்ளையார் என மூன்று சன்னதிகள் அமைந்திருக்கின்றன.. உச்சிப்பிள்ளையார் சன்னதிக்குச் செல்ல 16 படிக்கட்டுக்கள் உள்ளன. இந்த 16 படிகளை ஏறி இவரை வணங்குபவர்தளுக்கு 16 வகை செல்வங்களும் சேரும் என்பது ஐதீகம்.
திருமறைக்காடர் கோவில்
இராமபிரானின் தோஷத்தை நீக்கிய விநாயகர்
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சுமார் 65 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மி. தொலைவிலும், தேவாரத் தலமான வேதாரண்யம் உள்ளது. இறைவர் திருப்பெயர் திருமறைக்காடர். இறைவி யாழினும் இனிய மொழியாள்.
இராமபிரான், சிறந்த வீரனான இராலனணை வதம் செய்ததால் அவரை வீர ஹத்தி தோ௸ம் பீடித்தது. இராமபிரானுக்கு ஏற்பட்ட வீரஹத்தி தோஷத்தை இத்தலத்திலுள்ள விநாயகர் விரட்டி அடித்ததால், அவர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார். இவரின் சந்நிதி, கோயிலின் மேற்கு வெளிப் பிராகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது. விநாயகரின் சந்நிதிக்குக் கொடிமரமும் உள்ளது. சுவாமி, அம்பாள், விநாயகர் ஆகிய மூவருக்குமாக மூன்று கொடி மரங்கள் இத்தலத்தில் உள்ளன. இப்படி விநாயகருத்கென்று தனி கொடிமரம் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
ராஜகணபதி கோவில்
தினமும் ராஜ அலங்காரத்தில் காட்சி தரும் விநாயகர்
சேலம் கடைவீதி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது.400 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் கட்டப்பட்டது. மன்னர் காலத்தில் மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் 'சைலதேசம்' என்ற பெயர் பெற்ற பகுதிதான் தற்போதைய சேலம். இவர் தினமும் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவதால் 'ராஜ கணபதி' என அழைக்கப்படுகிறார்.
திருமண வரவேற்ப்பு கோலத்தில் அபூர்வ காட்சி தரும் வல்லப கணபதி
பொதுவாக எல்லா விநாயகர் ஆலயங்களிலும், விநாயகர் சதுர்த்தி விழாவை பிரம்மோற்சவமாக கொண்டாடுவார்கள் ஆனால் இங்கு ஜன உற்சவம் ஆக கொண்டாடப்படுகிறது. ஜன உற்சவம் என்பது, பிறந்த நாள்(சதுர்த்தி) முதற் கொண்டு 12 நாட்கள், கால் மண்டலமாக கொண்டாடப்படுவது.
ஜன உற்சவத்தின் முதலாம் நாள் தங்க கவசம் சாற்றபட்டு ராஜ அலங்கரத்திலும் மற்ற நாட்கள் சிறப்பு அலங்காரத்திலும் காட்சி தருகிறார். 3ம் நாள் உலகில் எங்கும் இல்லாத வகையில் திருமண வரவேற்ப்பில் மணமகன் மணப்பெண் எவ்வாறு காட்சி தருவார்கலோ அவ்வாறு வல்லப கணபதி திருமண கோலத்தில் நின்ற நிலையில் காட்சி தருகிறார். 10ம் நாள் சத்தபரனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பூ சங்கம் வியாபாரிகள் மிகவும் பிரமாண்ட முறையில் சாமி வீதி உலாவிற்கு பூ அலங்காரம் செய்து தருகின்றனர்.
கேட்ட வரம் தரும் ராஜகணபதி
மிகுந்த சக்தி வாய்ந்த கேட்ட வரம் தரும் கலியுக கண் கண்ட தெய்வாமாக விளங்குபவர் ராஜகணபதி. இவருக்கு அபிசேகம் செய்து வஸ்த்திரம் சாத்தி பிரார்த்தனை செய்தால், வேண்டுதல் நிறைவேறுவதாக ஐதீகம்.
ராஜகணபதியை வழிபடும் பக்தர்களுக்கு மக்கள் செல்வம் கிடைக்கும். பொருட் செல்வம் சேரும். தீராத நோய் தீரும். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இவரை வேண்டலாம்.
சங்குபாணி விநாயகர் கோவில்
சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் சங்குபாணி விநாயகர்
காஞ்சிபுரத்தில் உள்ள 16 விநாயகர்களை சங்குபாணி விநாயகர் மிகவும் முக்கியமானவர் சங்குபாணி விநாயகர். காஞ்சி சங்கராச்சாரியாரான மகா பெரியவர் காஞ்சியிலிருந்து வெளியூருக்கு புறப்படும்போதும் திரும்பி காஞ்சிக்கு வரும் போதும் இத்தலத்து விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்த பின்தான் செல்வார் என்பது இத்தலத்து சிறப்பாகும். இவர் கையில் சங்கு ஏந்தி அருள்பாலிப்பதால் சங்குபாணி விநாயகர் (பாணி என்றால் கை) என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவில் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது.
சங்கு பாணி விநாயகர் என்று பெயர் வந்த கதை
ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்த போது தேவர்கள் வேதங்களை ஆயுதமாகக் கொண்டு அசுரர்களை தாக்கினர். இதனை முறியடிக்க அசுரர்கள், அசுரர்களில் பேராற்றல் படைத்தவனும், சங்கு வடிவில் தொன்றியவனுமான சங்காசுரனை அணுகினார்கள். சங்காசுரனும் தன் தம்பியான கமலாசுரனை அனுப்பி பிரம்மனிடமிருந்து வேதங்களை பறித்துவரச் செய்தான். பின்னர் வேதங்களை கடலுக்கடியில் மறைத்து வைத்து தானே காவல் நின்றான். இதனால் மூவுலகங்களில் வேத நெறி ஒழுக்கங்கள் மறைந்து போயின. படைப்பைத் தொடர இயலாமல் வருந்திய பிரம்மன், சிவனிடம் சரணடைந்தார். சிவன் விநாயகரால்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று கூற, பிரம்மன் விநாயகரை வேண்டினார். விநாயகரும் பிரம்மனின் வேண்டுதலை ஏற்று கர்க்க முனிவரின் வேள்வியிலிருந்து தோன்றிய மயில் மீதேறிச் சென்று சங்காசுரனை அழித்தார். வேதங்களையும் மீட்டெடுத்தார். சங்காசுரனை சங்கு வடிவில் தன் கையிலேயே வைத்துக்கொண்டார். அதனாலேயே இவருக்கு சங்குபாணி விநாயகர் என்ற பெயர் வந்தது. மயில் மீதேறி வந்ததால் மயூர விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இத்தலத்து விநாயகரை வழிபட்டால் சகல விதமான பிரச்சினைகளும் தீரும் என்பது ஐதீகம்.
வீரட்டேசுவரர் கோவில்
அவ்வையாரை தன் தும்பிக்கையால் கைலாயத்திற்கு தூக்கிவிட்ட விநாயகர்
விழுப்புரத்தில் இருந்து சுமார் 37 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கோயிலூர். இறைவன் திருநாமம் வீரட்டேசுவரர். இறைவி பெரியநாயகி. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் பெரிய யானை கணபதி குறித்து தமிழ் மூதாட்டி அவ்வையார் சீதக் களப எனத் தொடங்கும் விநாயகர் அகவல் பாடியுள்ளார்.
சுந்தரர், சேரமான் இருவரும் வான்வழியாக கயிலை செல்லும் போது அவ்வையார் இந்த தலத்து விநாயகர் பெரிய யானை கணபதியை பூஜை செய்து கொண்டிருந்தார். .தானும் கயிலை செல்ல எண்ணி அவசரம், அவசரமாக பூஜை செய்தார்..உடனே விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்ய அருளினார். சீதக் கபை எனத் தொடங்கும் விநாயக அகவல் பாடி அவ்வையார் பூஜை செய்த பிறகு, விநாயகர் விசுவரூபம் கொண்டு தன் துதிக்கையால் அவ்வையாரை சுந்தரர், சேரமான் ஆகியோர் சென்றடையும் முன்பே கைலாயத்தில் சேர்த்துவிட்டார். இவ்விநாயகர், விசுவரூபம் எடுத்ததாலேயே பெரிய யானை கணபதி என்று பெயர் பெற்றார்.
இடுக்கு பிள்ளையார் கோவில்
தவழ்ந்து சென்று தரிசிக்க வேண்டிய பிள்ளையார்
திருவண்ணாமலை கிரிவல பாதையில் குபேர லிங்கத்தை தாண்டியதும், வலது பக்கத்தில் இடுக்கு பிள்ளையார் கோவில் உள்ளது.
இந்த இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள், படுத்த நிலையில் ஊர்ந்தபடி உடலை குறுக்கி கொண்டுதான் நுழைந்து வெளியே வரமுடியும். கோயிலில் பின் வாசல் வழியாக ஒருக்களித்துப் படுத்தவாறு உள்ளே நுழைய வேண்டும். மெதுவாக கையை ஊன்றி நகர்ந்து நகர்ந்து முன்வாசல் வழியாக வெளிவர வேண்டும். இதனால் பெண்களுக்கு கர்ப்பபை கோளாறுகள் நீங்குவதாக ஐதீகம். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தாலும் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள் சென்று வந்தால் பலன் கிடைக்கும்.
இந்த இடுக்கு பிள்ளையாருக்குள் இடைக்காட்டு சித்தர் மூன்று யந்திரங்களை பதித்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த யந்திரங்கள் தரும் அதிர்வு காரணமாகத்தான் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் விலகுவதாக பக்தர்கள் நம்புகின்றனர.