
திருமழிசை வீற்றிருந்த பெருமாள் கோவில்
திருமேனியில் அஷ்ட லட்சுமிகளை தாங்கி இருக்கும் அபூர்வ பெருமாள்
சென்னையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருமழிசை வீற்றிருந்த பெருமாள் கோவில். தாயார் திருநாமம் செண்பகவல்லி. பொதுவாக, பெருமாளை அமர்ந்திருந்த கோலத்தில் நாம் பார்ப்பது மிக அரிது. இங்கே பெருமாள் வீற்றிருந்த பெருமாளாக அஷ்டலட்சுமியுடன் எழுந்தருளியிருக்கிறார். அவரின் வலப்பக்கம் ஸ்ரீதேவி, இடப்பக்கம் பூதேவி, பெருமாளின் சிரசில் பொருத்தப்பட்டிருக்கும் கிரீடத்தில் நான்கு லட்சுமியர், மார்பில் 2 லட்சுமிகள் என அஷ்டலட்சுமிகள் உள்ளனர். இந்த பெருமானிடம் அஷ்டலட்சுமிகளும ஐக்கியமாகி இருப்பதால், சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தி வழிபட குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
வெளிநாடு செல்லும் பக்தர்களின் விசா பிரச்சனைகளை தீர்க்கும் விநய ஆஞ்சநேயர்
இக்கோவிலில் விநய ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. வடக்கு நோக்கி அமைந்து இருப்பதால் இந்த விநய ஆஞ்சநேயர் மிகவும் சக்திவாய்ந்தவர். பொதுவாக ஆஞ்சநேயர் மேற்கு திசை பார்த்து இருப்பார். அதாவது ராமரைப் பார்த்து நின்றிருப்பதாக ஒரு ஐதீகம். ஆனால் இங்கு வடக்கு நோக்கி அதாவது குபேரனை நோக்கி நின்று நமக்கு நோய்களை நீக்கி மற்றும் செல்வங்களை வழங்குகிறார். பக்தர்களின் குறையைத் தீர்த்து வைப்பதாலும், உடல்ரீதியான பிரசனைகளை தீர்ப்பதால் இவர் வைத்தியர் எனவும் அழைக்கப்படுகிறார். மேலும் இவரிடம் வெளிநாடு செல்லும் பக்தர்கள் முழு மனதுடன் வேண்டினால் விசாவில் ஏற்படும் பிரசனை, தடைகள் நீங்கி விசா கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவ்வாறு குறை தீர்வதால் இவர் விசா ஆஞ்சநேயர் என்றும் புகழ்பெற்றுள்ளார். வடக்கு முக ஆஞ்சனேயரை தரிசனம் செய்து வடைமாலை சாற்றினால், காரிய சித்தி மற்றும் வியாபாரத்தில் வெற்றி அடைய வாய்ப்புண்டு.

திருப்புள்ளம்பூதங்குடி வல்வில்ராமன் கோவில்
புதன் கிரகத்துக்கு பரிகாரத் தலமாக விளங்கும் திவ்யதேசம்
கும்பகோணத்தில் இருந்து (17கி.மீ) திருவையாறு செல்லும் வழியில் சுவாமிமலைக்கு அருகில் உள்ள திவ்ய தேசம் திருப்புள்ளம்பூதங்குடி. மூலவர் வல்வில்ராமன். தாயார் ஸ்ரீ ஹேமாம்புஜவல்லி. இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள் பாலிப்பது தனிச்சிறப்பாகும். இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. வைணவத் தலங்களில் இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த தலமான ஸ்ரீபெரும்புதூர்.மற்றொன்று தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திவ்ய தேசமான திருப்புள்ளம்பூதங்குடி.
பரிகாரங்கள்
நவக்கிரகங்களில் புதன் கிரகத்திற்குரிய பரிகார கோவிலாக வல்வில் ராமன் கோயில் இருக்கிறது. இத்தலத்தில் பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது நன்மை பயக்கும். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடத் திருமணத் தடை நீங்கும். வேலைகளில் இருப்பவர்கள் தங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க இக்கோவிலில் இருக்கும் நரசிம்மருக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுவதால் பதவி, உத்தியோக உயர்வுகள் கிடைக்கப் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மெய்யூர் சுந்தரராஜப்பெருமாள் கோவில்
திருமணம் கை கூடுவதற்காக பெருமாளுக்கு கல்யாண உற்சவம் நடத்தப்படும் தலம்
செங்கல்பட்டு- மதுராந்தகம் சாலையில் அமைந்துள்ள பாலாற்று பாலத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது மெய்யூர் சுந்தரராஜப்பெருமாள் கோவில். தாயார் திருநாமம் சுந்தரவல்லி. இவ்வூர் பல நூற்றாண்டுகளுக்கு முன் சத்யபுரி ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மெய்யூருக்கு அருகில் இருந்த பாலாற்றில், நீருக்கடியில் பெருமாள், தாயார், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகியோரது பஞ்சலோக விக்கிரகங்களும் கிடைக்கப்பெற்றன. அவை அனைத்தும் நாகை சவுந்திரராஜப் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமானவை என்பதும், படையெடுப்பு மற்றும் விக்கிரக கடத்தல் செயல்களின் காரணமாக பாலாற்றில் வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மெய்யூரில் உள்ள பெருமாளுக்கு சுந்தரராஜப் பெருமாள் என்று பெயர் சூட்டப்பட்டது. நாகைப்பெருமாளே இத்தலத்தில் சுந்தரராஜப் பெருமாளாக எழுந்தருளியுள்ளதால், மெய்யூரில் வாழ்ந்து வந்த வைணவப் பண்டிதர்கள், நாகைத் தலப் பெருமாள் பாசுரங்களையே இத்தல பெருமாளுக்கும் பாடி வழிபாடு செய்கிறார்கள்.
கருவறையில் புன்னகை தவழும் முகத்துடன், நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் பெருமாள் காட்சி தருகிறார். இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், வலது கையில் அபயம் அளிக்கும் வண்ணமும், இடது கையை மடக்கிய வண்ணமும் காணப்படுகிறார். இவருக்கு வலது மற்றும் இடதுபுறம் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.
இத்தலத்தில் திருக்கல்யாண உற்சவ வைபவம் விசேஷமானதாகும். சுந்தரராஜப் பெருமாளுக்கும், சுந்தரவல்லி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவ வைபவம் நடத்தி வழிபட்டால், ஒரு மண்டல காலத்திற்குள் பலன் கிடைக்கும். திருமணம் கைகூடியவர்கள், தம்பதி சமேதராய் வந்து பெருமாளையும், தாயாரையும் வணங்கி விட்டுச் செல்கின்றனர். இதே போல் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தையோடு வந்து பெருமாளையும், தாயாரையும் வணங்கிச் செல்கிறார்கள்.

ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோவில்
அனுமன் சனிபகவானை இரு கால்களால் அழுத்தி நிற்கும் அபூர்வகோலம்
வேலூரில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள ஆம்பூர் நகரத்தில் பெரிய ஆஞ்சநேயர் கோவில். பழங்காலத்தில் ஆமையூர் என அழைக்கப்பட்ட இந்த ஊர் பெயர் மருவி இன்று ஆம்பூர் என வழங்கப்படுகிறது. இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது
இக்கோவில் கருவறையில், பதினோரு அடி உயரமுள்ள, கருங்கல்லில் வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பமாக பெயருக்கு ஏற்றபடி பெரிய ஆஞ்சநேயர், தெற்கு நோக்கி காட்சி தருகின்றார். இவரின் திருமுகம், கிழக்கு திசை நோக்கிய, கோலத்தில் காட்சி தருகிறது. இடது காலை முன் வைத்து சனியின் தலையினை அழுத்தியவாறும், வலது காலை சற்றே தூக்கி சனியின் வலது காலை அழுத்தியபடியும், பெரிய ஆஞ்சநேயர் காட்சி தருகின்றார். சனி பகவானின் முகம் பூமியை நோக்கியபடி உள்ளது. ஆஞ்சநேயரின் வால் , தலைக்குமேல் உயர்ந்து நுனி வளைந்து, அதில் மணி கட்டிய கோலத்தில் அமைந்துள்ளது. அவரது வலது கரம் அபயம் அளிப்பதாக உள்ளது. இடது கரம் சௌகந்திகா மலரின் தண்டினைப் பிடித்துள்ளது. காதுகளில் குண்டலங்கள் அலங்கரிக்கின்றன. மார்பில் முப்புரிநூல் விளங்குகின்றது.
புராண வரலாறு
சீதையை மீட்க, இராமபிரான் இலங்கை மீது போர்த் தொடுத்தார். அப்போரில் லட்சுமணன் மூர்ச்சையாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். இந்நிலையில், ஜாம்பவானின் ஆலோசனைப்படி, இமயமலையில் இருந்து சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவர ஆஞ்சநேயர் புறப்பட்டார். இதையறிந்த அசுர குருவான சுக்கிராச்சாரியார், சனியின் உதவியால் இதனைத் தடுக்க அறிவுறுத்தினார். ஆனால், அதற்குள் ஆஞ்சநேயர் இமயமலை சென்று, சஞ்சீவி மலையைக் சுமந்து, இலங்கை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தன்னைப் பிடிக்க முயன்ற சனியைத் தன் காலில் கொண்டு வந்து தன் முழு பலத்தைத் தந்த ஆஞ்சநேயர், அவரை அழுத்தினார். வலி தாங்க முடியாத சனி, தன்னை விட்டு விடும்படியும், மன்னித்து விடும்படியும் வேண்டியதுடன், ராமரின் துதியையும் பாடினார். இராமபிரானின் துதியைக் கேட்ட ஆஞ்சநேயர், சனியைத் தன் பிடியில் இருந்து விடுவித்தார். அதே சமயம் ராமநாமத்தைக் கூறி என்னை வழிபடும் எவரையும் துன்புறுத்தக்கூடாது என்ற உறுதி மொழியையும் வாங்கிக்கொண்டார், அனுமன். பின்னர் இலங்கை சென்று சேர்ந்தார். அதன்பின் சஞ்சீவி மலை மூலிகையால் லட்சுமணன் நலம் பெற்றான் என்பது புராணம். இந்தக் கோலமே, இந்த ஆலயத்தின் மூலவராக விளங்குகின்றது.
பிரார்த்தனை
இவ்வாலயத்திற்கு ஆம்பூர் பகுதி மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா பகுதிவாழ் மக்களும் வந்து தரிசித்துச் செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் தீபமேற்றி வழிபட்டால் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஏழரை சனி நடப்பவர்கள், சனி தோஷம் உள்ளவர்கள், சனியால் கெடுபலனை அனுபவிப்பவர்கள் இத்தலம் வந்து பெரிய ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றால், சனி பகவானால் ஏற்படக்கூடிய தொல்லையிலிருந்து விடுபடலாம். அதேபோல, திருமணப்பேறு, குழந்தைப்பேறு வழங்கும் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார்.

மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோவில்
ஒரே கருவறையில் இரண்டு ஆஞ்சநேயர்கள் அருள்பாலிக்கும் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது மேலப்பாதி என்ற கிராமம். இங்கு மிகவும் பிரசித்திப் பெற்ற இரட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. செம்பனார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது இக்கோவில். கருவறையில் இரண்டு ஆஞ்சநேயர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். இப்படி இரண்டு ஆஞ்சநேயர்கள் ஒரே கருவறையில் அருள்பாலிப்பதை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
தல வரலாறு
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் செம்பனார் கோவிலுக்கும், மேலப்பாதிக்கும் இடையே ஓடும் காவிரி ஆற்றில் இறங்கிச் செல்லும் நிலை இருந்தது. எனவே அந்தப் பகுதி மக்கள் ஆற்றில் மூங்கில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த மக்களுக்கு இரண்டு மனித குரங்குகள் உதவி செய்தன. ஒரு நாள் பாலம் கட்டிய சோர்வில் இரண்டு குரங்குகளும் அருகில் இருந்த இலுப்பைக் காட்டு திடலில் ஓய்வு எடுத்தன. சிறிது நேரத்தில் அவை இரண்டும் அதே இடத்தில் ஐக்கியமாகி விட்டதாக இந்தக் கோவில் தல புராணம் தெரிவிக்கிறது. இதை கண்ட கிராம மக்கள், ஆஞ்சநேயரே இந்த குரங்குகளின் வடிவில் வந்து தங்களுக்கு பாலம் கட்ட உதவியதாக கருதினர். எனவே அந்த மக்கள், இதனால் அந்த குரங்குகள் ஐயக்கிமான இடத்திலேயே இரட்டை ஆஞ்சநேயர் கோவிலை எழுப்பினர்.
பிரார்த்தனை
இந்த ஆஞ்சநேயரிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் அது இரட்டிப்பு பலனை தரும் என்பது நம்பிக்கை. பொதுவாக விநாயகரை வணங்கி விட்டு பணிகளை துவங்குவது போல், இப்பகுதி மக்கள் இரட்டை ஆஞ்சநேயரை வணங்கி விட்டு தான் எந்த காரியத்தையும் துவக்குகிறார்கள்.
இங்குள்ள ஆஞ்சநேயர்களுக்கு வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால், வெண்ணெய் உருகுவது போல இன்னல்கள் தீரும். சனி பகவானின் தாக்கம் குறையும். எடுத்த காரியங்கள் வெற்றி யாகும். எப்படிப்பட்ட தோஷமும் விலகி விடும்.நவகிரக தோஷங்கள் எதுவானாலும் இந்த தல இரட்டை ஆஞ்சநேயரை வழிபட விலகி விடும். அமாவாசை நாட்களில் இந்த ஆஞ்சநேருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. சிறப்பு அபிஷேகங்கள், துளசி மாலை, வடை மாலை, வெற்றிலை மாலை சாற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் கோவில்
ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தரும் அபூர்வ நரசிம்மர்
சீர்காழியிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும், திருவெண்காட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, திருகுறையலூர் உக்கிர நரசிம்மர் கோவில். தாயார் அமிர்தவல்லி. குறைகளை அகற்றும் ஊர் என்பதே மருவி, திருக்குறையலூர் என்று ஆயிற்று. மிகவும் பழமையான இத்தலத்தை 'ஆதி நரசிம்மர் தலம்' என்றும், தெற்கில் மிகவும் உயர்ந்த நரசிம்ம ஷேத்திரம் என்பதால் 'தட்சிண நரசிம்மர் தலம்' என்றும் சிறப்பு பெயரிட்டு அழைக்கிறார்கள் பத்ம புராணம், நாரத புராணத்தில் இத்தலம் ஸ்ரீ பூரண புரி, பூரண நரசிம்ம ஷேத்திரம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. திருமங்கையாழ்வார் அவதரித்த தலம் இது. பஞ்ச நரசிம்ம தலங்களில் முதலாவது இத்தலம்.
கருவறையில் உக்கிர நரசிம்மர். ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். நரசிம்மரை இவ்வாறு இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும்.
தல வரலாறு
சிவனை அவமரியாதை செய்யும் வகையில், பார்வதியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். இதனால் கோபம் கொண்ட பார்வதி, தந்தைக்கு புத்தி புகட்ட யாகம் நடக்கு மிடத்திற்குச் சென்றாள். அவளையும் தட்சன் அவமரியாதை செய்யவே, யாகத்தீயில் விழுந்து விட்டாள். கோபமடைந்த சிவன் தனது அம்சமாக வீரபத்திரரை உருவாக்கி அனுப்பி யாகத்தை அழித்தார். மேலும், பார்வதியைப் பிரிந்த துயரம் சிவனை வாட்டியது. நரசிம்மர் அவருக்கு இத்தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக காட்சி தந்து அமைதிப்படுத்தியதாக தல புராணம் கூறுகிறது.
பிரார்த்தனை
மன நலம் பாடுக்கப்பட்டவர்கள், கடன் பிரச்னை உள்ளவர்கள், குடும்பத்தில் பிரசினை உள்ளவர்கள் பிரதோஷ நாளிலும், அஷ்டமி, சுவாதி நாட்களிலும் நெய்விளக்கு ஏற்றி, பானக நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள். பித்ரு தோஷம் உள்ளவர்கள், அமாவாசை நாளில் இங்கு வந்து நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து இயன்ற அளவு அன்னதானம் செய்து வழிபட்டால், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெற்று வம்சவிருத்தியுடன் சீரும் சிறப்புமாக வாழ்வர் என்பது ஐதீகம்.

செட்டிபுண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோவில்
ஹயக்ரீவர் யோகநிலையில் இருக்கும் அபூர்வ தோற்றம்
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டுக்கு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும் உள்ளது செட்டிபுண்ணியம். பழமையான இந்தக் கோவிலில் மூலவர் வரதராஜப் பெருமாள். தாயார் ஹேமாம்புஜவல்லி. உற்சவர். தேவநாதப் பெருமான் மற்றும் யோக ஹயக்ரீவர். இந்தக் கோவிலில் உள்ள யோக ஹயக்ரீவர் மிகவும் பிரசித்தம். அதனால் இக்கோவிலை செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் கோவில் என்றே மக்கள் கூறுகின்றனர். 'ஹயம்' என்றால் 'குதிரை' மற்றும் 'க்ரீவம்' என்றால் 'கழுத்து'. உடம்பில் கழுத்து வரை குதிரை உருவம் கொண்ட தெய்வம் என்று ஹயக்கிரீவர் குறிப்பிடப்படுகிறார்.
அந்நிய படையெடுப்பில் இருந்து காப்பாற்ற வேண்டி, 1848 ஆம் ஆண்டு திவ்ய தேசமான திருவஹீந்திரபுரம் கோவிலிலிருந்து இக்கோவிலுக்கு தேவநாத பெருமாள், ஹயக்ரீவர் விக்கிரகங்களும், பின்னர் தஞ்சாவூரிலிருந்து ராமர், சீதை, லட்சுமணன், அனுமார் விக்கிரகங்களும் கொண்டுவரப்பட்டன. அன்றிலிருந்து இந்த தெய்வங்கள் இக்கோவிலில் அருள்பாளித்து வருகின்றனர்.
இங்குள்ள குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவ மூர்த்தி நான்கு கைகளுடன் சங்கு, சக்கரதாரியாக யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். அனைத்து ஆலயங்களிலும் ஹயக்ரீவர் மடியில் லஷ்மி தேவி அமர்ந்துள்ள காட்சியே இருக்கும். ஆனால் அதற்கு மாறாக இங்கு ஹயக்ரீவர் யோக நிலையில் அபய முத்திரைக் காட்டியபடி ஸ்ரீதேவநாதன் எனும் பெயரில் தனி சன்னதியில் காணப்படுவது விசேடக் காட்சி ஆகும்.
கல்வியில் முன்னேற்றம் கிடைக்க ஏலக்காய் மாலை
இந்த ஆலயத்தில் உள்ள யோகஹயக்ரீவரை திருவோண நட்சத்திரத்தன்றும், புதன்கிழமையிலும் ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவது பலன் தரும் என்பது நம்பிக்கை ஆகும். யோக ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வணங்கினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், ஞாபக சக்தி கூடும் . ஹயக்ரீவரின் பாதத்தில் தாம் எடுத்துச் செல்லும் பேனா மற்றும் பென்சிலை வைத்து வணங்கிய பின் அதை எடுத்து செல்கின்றனர். கல்விக்காக வேண்டுபவர்கள் மட்டும் இன்றி இசை, நடனம் போன்ற கலைகளிலும் சிறந்து விளங்குவதற்கும் , தமது தொழிலில் தடைகள் அகலவும் இங்குள்ள ஹயக்ரீவரை வந்து வழிபடுகிறார்கள். பேச முடியாதவர்கள் தேன் நிவேதனம் செய்து தினமும் சாப்பிட்டு வர பேசும் சக்தியை ஹயக்ரீவர் அருள்வார் என்பதும் நம்பிக்கை. இந்தக் கோவில் திருமணத் தடை, தொழிலில் தடை போன்றவற்றிற்கும் பரிகார ஸ்தலமாய் விளங்குகிறது. தல விருட்சம் அழிஞ்சல் மரம். இந்த மரத்தில் நூல், வேண்டுதல்கள் எழுதிய காகிதங்கள் முதலியவற்றைக் கட்டி, படிப்பிற்கும். குழந்தைப் பேற்றுக்கும் வேண்டிக் கொள்கிறார்கள்.

இஞ்சிமேடு வரதராஜபெருமாள் கோவில்
ராமனின் வில்லின் மேல்புறத்தில் நரசிம்மர் எழுந்தருளி இருக்கும் அபூர்வ கோலம்
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 64 கி.மீ. தொலைவில் உள்ள இஞ்சிமேட்டில் அமைந்துள்ளது ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில்.
இந்த கோவிலில் ஸ்ரீ வரதராஜபெருமாள் சன்னதி, ஸ்ரீ பெருந்தேவி தாயார் சன்னதி, கல்யாண லட்சுமி நரசிம்மர் சன்னதி, ராமருடன் லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் இருக்கும் சன்னதிகள் உள்ளன. இத்தலத்து ராமபிரான், பரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ராமபிரானின் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் வில்லின் மேல்புறத்தில் நரசிம்ம மூர்த்தி எழுந்தருளியிருக்கிறார். இது, வேறு எங்கும் காண முடியாத அற்புதமாகும்.
ராமரின் அருகிலேயே கருடாழ்வாரும், அனுமனும் இருக்கும் அபூர்வக் காட்சி
ராமரின் அருகிலேயே கருடாழ்வாரும், அனுமனும் காட்சியளிக்கின்றனர். இப்படி கருவறையில் பெரிய திருவடியும், சிறிய திருவடியும் ஒருசேர காட்சியளிப்பது வேறு எந்த தலத்திலும் காண முடியாத அபூர்வக் காட்சியாகும்.
பிரார்த்தனை
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க இக்கோவிலுக்கு வந்து ஸ்ரீபெருந்தேவி தாயாருக்கு மஞ்சள் மாலை சாற்றுவதாக வேண்டிக் கொள்கின்றனர். பின்னர் தங்கள் இல்லத்திற்குச் சென்று இத்தலத்தின் தாயாரை வேண்டி ஒரு நாளுக்கு ஒரு மஞ்சளை எடுத்து பூஜையறையில் வைக்கின்றனர். இவ்வாறு செய்து வர 48 நாட்களுக்குள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் இந்த மஞ்சளை மாலையாகத் தொடுத்து காணிக்கையாக தாயாருக்கு சமா்ப்பிக்கின்றனா்.

கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோவில்
வைகுந்த வாசப் பெருமாள் அமர்ந்திருக்கும் அபூர்வத் தோற்றம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெகு அருகில் உள்ளது வைகுண்ட வாசப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் கனகவல்லி .
‘கோ’ எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை, ‘அயம்’ என்னும் இரும்பு சங்கிலியால் கட்டி வைத்த இடம் என்பதால் ‘கோயம்பேடு’ என பெயர் பெற்றது. பேடு என்றால் ‘வேலி’ என்று பொருள். இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது.
வைகுண்ட பெருமாள் பெரும்பாலும் அமர்ந்த நிலையில்தான் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில், அவர் ஸ்ரீதேவி , பூதேவி தாயாருடன் நின்ற கோலத்தில் காட்சி தருவது ஒரு தனிச்சிறப்பாகும்.
சீதாதேவி கர்ப்பிணி கோலத்தில் இருக்கும் அரிய தோற்றம்
இத்தலத்தில் ராமர், சீதை ஆகிய இருவர் மட்டுமே, லட்சுமணன் அனுமன் உடன் இல்லாமல் காட்சி தருவது ஒரு அபூர்வமான அமைப்பாகும். இக்கோவிலில் ராமர் அரச கோலத்தில் இல்லாமல் மரவுரி தரித்து இருப்பதும் ஒரு அபூர்வ கோலமாகும். மேலும் இந்தக் கோவிலில், தனிச் சன்னதியில் சீதாதேவி கர்ப்பிணி கோலத்தில், மேடிட்ட வயிற்றுடன் எழுந்தருளி இருப்பது ஒரு அபூர்வ தோற்றமாகும். இத்தலத்தில் சீதா தேவிக்கு நடத்தப்படும் வளைகாப்பு உற்சவம் மிகவும் சிறப்பானது. குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சீதா தேவிக்கு வளையல் அணிவித்து வேண்டிக்கொண்டால், விரைவில் அந்த பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோவில் முன் மண்டபத்தில் ராமனின் மைந்தர்கள் லவன், குசன் வால்மீகி முனிவரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார்கள்.
பிரார்த்தனை
கோவில் வளாகத்தில் இரண்டு வில்வ மரங்கள், ஒரு வேம்பு மரம் பிணைந்து காணப்படுகிறது. இம்மரங்கள், சிவன், விஷ்ணு மற்றும் அம்பிகை அம்சமாக கருதப்படுகின்றன. இம்மரத்திற்கு 'பார்வதி சுயம்வர விருட்சம்' என்று பெயர். ஒவ்வொரு செவ்வாய் கிழமையும், இவ்விருட்சங்களுக்கு கல்யாண தோஷம் நிவர்த்தி வேண்டி, பக்தர்கள் பூஜை செய்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா
108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. மகாலட்சுமியின் அம்சமாகிய ஸ்ரீ ஆண்டாள் மானிட ரூபமாக அவதரித்து, ஸ்ரீரங்க மன்னருக்கு பாமாலை சூட்டி பின் பூமாலை சூட்டிய பெருமை வாய்ந்த தலம்தான் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்.
இங்கு ஆண்டாள் கோவிலில், ஆண்டுதோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு திருஆடிப்பூர உற்சவம் 14.07.23 வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த தேரோட்ட விழாவானது மொத்தம் பத்து நாட்கள் நடைபெறும். திருவிழாவின் ஐந்தாம் நாள், ஐந்து கருட சேவையும், ஏழாம் நாள் ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவையும், அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய அம்சமான திருவாடிப்பூர தேரோட்டம் ஜூலை 22-ம் தேதி, பூர நட்சத்திரதன்று நடைபெறுகிறது.
துளசி மாடத்தில் அவதரித்து தன்னையே நினைத்து தன்னையே மணந்த ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆண்டுதோறும் ஆடிப்பூர நாளில் பட்டு வஸ்திரம் பரிசளிப்பது சிறப்பம்சமாகும். அந்த பட்டு வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து, ரங்கமன்னாருடன் இணைந்து ஆடிப்பூர தேரோட்டத்தில் எழுந்தருளி வலம் வருவார். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில்
வேண்டியதை உடனுக்குடன் நிறைவேற்றும் லட்சுமி நரசிம்மர்
சென்னையிலிருந்து சுமார் 55 கி.மீ. தொலைவிலும், பூந்தமல்லியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும் உள்ள பேரம்பாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது, சுமார் 1400 வருடங்கள் பழமையான, நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில். தாயார் திருநாமம் மரகதவல்லி. சிறந்த பிரார்த்தனைத் தலமான நரசிங்கபுரம், துன்பம் நீங்கி உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது. இவரிடம் வேண்டிக்கொண்டால், உடனுக்குடன் நிறைவேற்றி விடுவார் என்பது ஐதீகம். எனவே 'நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில்' என்று போற்றப்படுகிறார்.
கல்யாண லட்சுமி நரசிம்மர்
கருவறையில் மூலவர், ஏழரை அடி உயரம் கொண்டவர். இடது திருவடியை மடித்து, வலது திருவடியை கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் சிரித்த முகத்துடன் கம்பீரமான தோற்றம். இடது தொடை மீது தாயாரை அமர்த்தி, அணைத்தபடி இருக்கும் பெருமாள் நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு கரங்களில் சக்கரமும், சங்கும் ஏந்தியிருக்கிறார்; கீழ் வலது கரத்தை, அபய ஹஸ்தமாக வைத்திருக்கிறார். எல்லா லட்சுமி நரசிம்மர் கோவில்களிலும் , லட்சுமி பக்கவாட்டில் பார்த்தபடி அமர்ந்திருப்பார். ஆனால், இங்கே மகாலட்சுமி தாயார், வரும் பக்தர்களை நோக்கியபடி நரசிம்மரை அணைத்தபடி அமர்ந்திருக்கிறார். இது ஒரு அபூர்வ அமைப்பாகும். இதனால் இந்த லட்சுமி நரசிம்மருக்கு கல்யாண லட்சுமி நரசிம்மர் என்ற பெயரும் உண்டு. இவரை தரிசித்தால் சத்ரு பயம் அகலுவதோடு, லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
பிரார்த்தனை
இங்கு நான்கு அடி உயரத்தில், பதினாறு நாகங்களை அணிகலனாக கொண்ட கருடாழ்வார் அருள்புரிகின்றார். இந்த கருடாழ்வாரை வழிபடுவதால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
.நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அந்திப் பொழுதில் அவதரித்தவரானதால், இவரை ஒன்பது சுவாதி நட்சத்திர நாட்கள் வணங்கினால், தீராத கடன், பிணி, திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். இங்கு மாதந்தோறும் நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் நெய் தீபம் ஏற்றி, கோயிலை முப்பத்திரண்டு முறை வலம் வந்தால் திருமணத் தடை நீங்கும். நினைத்த காரியம் கைகூடும்.

கூகலூர் அதிசய ஆஞ்சநேயர் கோவில்
கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்திய அதிசய ஆஞ்சநேயர்
ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து 23 கி.மீ. தூரத்திலும், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 11 கி.மீ. தூரத்திலும் உள்ள கூகலூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது அதிசய ஆஞ்சநேயர் கோவில்.
இக்கோவில் கருவறையில் அதிசய ஆஞ்சநேயர், ஆறடி உயரத்தில் நின்ற திருவடிவினராக, கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு வித்தியாசமாக காட்சி தருகிறார். இவர் அதிசய ஆஞ்சநேயர் என்றழைக்கப்படுகிறார். ஆஞ்சநேயரின் இந்த அபூர்வ தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
பிரார்த்தனை
இந்த அதிசய ஆஞ்சநேயர் தினமும் தங்கள் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மகப்பேறு இல்லாதவர்களும், நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த அதிசய ஆஞ்சநேயரை வழிபட்டு நற்பலன்கள் பெறுகிறார்கள். உடல்நிலை சரியில்லாதவர்கள், மகப்பேறு இல்லாதவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமை இங்கே வந்து வடைமாலை சாத்தி இவரை வழிபட்டால் நற்பேறு கிட்டும் என்பது ஐதீகம்.

மதுரை மதனகோபாலசுவாமி கோவில்
சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த மதன கோபாலன்
மதுரை நகரத்தின் மேல மாசி வீதி - தெற்கு மாசி வீதி சந்திப்பில், 1000 வருடங்களுக்கு மேல் பழமையான மதனகோபாலசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், கூடல் அழகர் கோவிலுக்கும் இன்மையில் நன்மை தருவார் கோவிலுக்கும் மிக அருகில் உள்ளது. இது கிருஷ்ணன் கோயில் ஆகும். மூலவர் மதனகோபால சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் இரண்டு கைகளில் புல்லாங்குழல் வைத்து, இடது கால் ஊன்றி வலது கால் சற்று மாற்றி விஸ்வரூபக் கண்ணனாகப் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறார். அருகில் பாமா, ருக்மணி தேவியர் வீற்றிருக்கின்றனர். மதுரவல்லி தாயார் தனிசன்னதியிலும், ஆண்டாள் தனி சன்னதியிலும் இருந்து அருள் பாலிக்கின்றனர்.
தல வரலாறு
ஒரு முறை சிவபெருமான், மதுரையில் மீனாட்சியை திருமணம் செய்தபின், சுந்தரபாண்டிய மன்னனாக ஆட்சிபொறுப்பை ஏற்கும் முன் சிவலிங்கம் வடித்து சிவபூஜை செய்கிறார். சிவபெருமான், தான் செய்யும் பூஜையின் போது தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார். இதனால் சிவபெருமானின் உடலில் வெப்பம் அதிகமாகி, அக்னி ஜுவாலையாக மாறி இந்த உலகை பாதிக்கிறது. இதனால் பயந்த தேவர்கள் பிரம்மாவின் தலைமையில் விஷ்ணுவிடம் சென்று நடந்ததைக் கூறி இந்த உலகைக் காக்கும் படி வேண்டுகின்றனர். சிவனின் தியானத்தை கலைத்தால் மட்டுமே அவரது உடலில் ஏற்படும் வெப்பம் குறைந்து, உலகம் காக்கப்படும் என்பதை அறிந்தார் விஷ்ணு. உடனே தன் புல்லாங்குழலை எடுத்து இசைக்கிறார். இந்த இசை என்னும் இன்ப வெள்ளம், சிவனின் செவிகளிலும் ஒலிக்க ஆரம்பிக்கிறது. இசைக்கு மயங்கிய சிவபெருமான் கண் விழிக்கிறார். தியானம் கலைகிறது. உலகம் காக்கப்படுகிறது. சிவபெருமான் மிகுந்த மகிழ்ச்சியுடன் 'மகாவிஷ்ணு, தாங்கள் எப்போதும் மதன கோபாலன் என்ற திருநாமத்துடன் என் அருகிலேயே இருந்து புல்லாங்குழல் இசைத்து என்னை மகிழ்விக்க வேண்டும்' என்றார். மகாவிஷ்ணுவும் சிவபெருமானின் விருப்படியே, மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையிலும் நன்மை தருவார் என்ற சிவாலயத்திற்கு அருகில், மதன கோபால சுவாமி என்ற கோயிலில் வீற்றிருந்து புல்லாங்குழல் இசைத்து சிவபெருமானையும் மகிழ்வித்து நம்மையும் காத்து அருள்புரிகிறார்.
ஆண்டாள் ஸ்ரீரங்கம் செல்லும் முன்பு, பெரியாழ்வாருடன் பல்லக்கில் வந்து இங்கு எழுந்தருளி மதனகோபாலரைத் தரிசனம் செய்துள்ளார்கள் என்றும், பின் ஆண்டாள் அரங்கப் பெருமானின் திருமேனியில் ஐக்கியமானார் என்றும் வரலாறு கூறுகிறது.
பிரார்த்தனை
இசைதுறையில் மேன்மையடைய விரும்புபவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம்.. இத்தலத்தில் அறுபதாம் கல்யாணம் செய்பவர்களின் சந்ததி சிறப்பு பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்குள்ள நாக தேவி, ஹரிஹர ஸர்ப்ப ராஜா என அழைக்கப்படுகிறார். இங்கு வெள்ளி தோறும் இராகு கால பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது. நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜை செய்தால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

குமளம்பட்டு சீனிவாச பெருமாள் கோவில்
பக்தர்களுடன் அசரீரியாக பேசும் பெருமாள்
திண்டிவனத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது குமளம்பட்டு சீனிவாச பெருமாள் கோவில். பெருமாள் எடுத்த தசாவதாரங்களில், மச்ச அவதாரத்திற்கு உரிய தலமாக இத்தலம் போற்றி வணங்கப்படுகின்றது. கருவறையில் பேசும் பெருமாளான சீனிவாசப் பெருமாள் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் பக்தர்கள் மனம் உருகி தம் குறைகளை கூறி வழிபட்டால், பக்தர்களின் கனவில் பெருமாள் தோன்றி குறைகளைப் போக்க அருள்புரிகின்றார். மேலும் வழிபடும் போதே அசரீரியாக பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை அளிப்பதால் பேசும் பெருமாள் என்று போற்றப்படுகின்றார்.
பேசாத குழந்தைகளையும் பேச வைக்கும் பேசும் பெருமாள்
வாய் பேச முடியாத குழந்தைகள் ஒன்பது அமாவாசை தினங்கள் தொடர்ந்து இக்கோவிலில் நெய் தீபம் ஏற்றி , இப்பெருமானின் தீர்த்த பிரசாதத்தை அக்குழந்தைகளுக்கு அளித்தால், பேசாத குழந்தைகளையும் பேச வைக்கும் பேசும் பெருமாளாக அருள்புரிகின்றார்.
விபூதி பிரசாதம் தரப்படும் பெருமாள் கோவில்
இக்கோவிலில் பெருமாளுக்கு நைவேத்தியம் தயாரிக்கப்படும் அடுப்பிலிருந்து கிடைக்கப்பெறும் சாம்பலையே விபூதி பிரசாதமாக தருகிறார்கள். இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

ஆத்தூர் வீர ஆஞ்சநேயர் கோவில்
வடக்கு திசை பார்த்தபடி எழுந்தருளி இருக்கும் அபூர்வ ஆஞ்சநேயர்
சேலத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள ஆத்தூர் என்ற ஊரில் அமைந்துள்ளது வீர ஆஞ்சநேயர் கோவில்.
இக்கோவிலில் ஆஞ்சநேயர் பிரகாரமூர்த்தியாக இல்லாமல் மூலவராக எழுந்தருளி இருக்கிறார். இவர், தனது வாலை சுருட்டி தலைக்கு மேலே கிரீடம் போல வைத்து, வராக (பன்றி) முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. இராமபிரான் இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்த போது, மிகப்பெரிய பாறைகளை எடுக்க வேண்டியிருந்தது. அதை அகழ்ந்து தோண்ட பஞ்சமுக ஆஞ்சநேயராக தன்னை உருமாற்றிக் கொண்டார் ஆஞ்சநேயர். அதில் ஒன்று வராஹ முகம். பன்றி முகத்தைக் கொண்டு பூமியை அகழ்ந்து தோண்டி, பாறைகளைப் பெயர்த்தெடுத்தார். அளவில் மிகவும் சிறிய இவரை வசிஷ்ட முனிவர் வணங்கிச் சென்றுள்ளார். இங்கு சுவாமிக்கு பூஜை செய்யப்பட்ட 'முடிகயிறு' என்னும் 'மஞ்சள் கயிறை' பிரசாதமாக தருகின்றனர். இதனைக் கட்டிக்கொண்டால் வாழ்வில் மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
ராமர் சீதையைத் தேடி வரும்வழியில் இத்தலத்துக்கு அருகில் இருக்கும் மலைக்கு வந்திருந்தார் அப்போது அவர் தென்திசையை பார்த்தபடி அமர்ந்திருந்தார். அப்போது ஆஞ்சநேயர் வடக்கு பக்கமாக திரும்பி ராமரை பார்த்ததால் இத்தலத்து ஆஞ்சநேயர் வடதிசை பார்த்தபடியே இருக்கிறார். இது குபேர திசையாகும். இத்திசையை பார்த்த ஆஞ்சநேயரை காண்பது அபூர்வம்.
சனிதோஷ நிவர்த்தித் தலம்
சூரியனின் மகன் சனி, சனியின் மகன் குளிகன். ஆஞ்சநேயர், சூரியனின் சிஷ்யன். இவரே சனிக்கு அதிபதியான பெருமாளின் ஆஸ்தான சீடர். எனவே, இவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு சனிக்கிழமைகளில் குளிகை நேரத்தில் சனிதோஷ பரிகாரபூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. இப்பூஜையில் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வணங்கினால் சனிதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

யானைமலை யோக நரசிம்மர் கோவில்
மிகப்பெரிய நரசிம்மர் உருவம் உடைய நரசிம்மர் கோவில்
மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ஒத்தக்கடை கிராமத்தின் அருகே உள்ள யானைமலை அடிவாரத்தில் யோக நரசிங்கர் கோவில் அமைந்துள்ளது. யானை ஒன்று முன்புறம் துதிக்கையை நீட்டி அமர்ந்த கோலத்தில் இருப்பது போல் தோன்றுவதால், இந்த மலைக்கு யானைமலை என்று பெயர் வந்தது. சுமார் 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயில் ஆகும்.
கருவறையிலுள்ள நரசிங்கப் பெருமாளின் பெரிய திருவுருவம் ஆனைமலையின் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். நரசிம்மர் கோவில்களிலேயே மிகப்பெரிய நரசிம்மரின் மூலவர் விக்கிரகத்தை கொண்ட கோவிலாக இந்த யானைமலை யோக நரசிம்மர் கோவில் இருக்கிறது. தாயார் திருநாமம் நரசிங்கவல்லி தாயார்.
தலவரலாறு
ரோமச முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி யானைமலையிலுள்ள சக்கர தீர்த்ததில் நீராடி யாகம் செய்தார். அப்போது பெருமாளின் நரசிம்ம அவதாரத்தை மீண்டும் காண விரும்பினார். அதனால் பெருமாள் மீண்டும் உக்கிர நரசிம்மராக அவர் முன் தோன்றினார். அவருடைய கோபத்தால் உலகம் வெப்பமயமானது. பின் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பிரகலாதனும், மகாலட்சுமியும் நரசிம்மரின் உக்கிரத்தினை தணித்தனர்.
பிரதோஷ பூஜை நடைபெறும் ஒரே வைணவ தலம்
எல்லா சிவன் கோயில்களிலும் பிரதோஷம் தினத்தை மிகவும் விமர்சையாக கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். ஆனால் பெருமாள் கோயிலில் பிரதோஷம் கடைப்பிடிக்கப்படுகிறதென்றல் அது இந்த கோயில் தான். தேய்பிறை பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்ததால் இக்கோவிலில் தேய்பிறை பிரதோஷ தினத்தில் மிக சிறப்பான பூஜைகள் செய்யப்படுகின்றன. இச்சமயத்தில் நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் கல்வி பயலும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். தொழில், வியாபாரங்கள் நன்கு விருத்தியாகும். துஷ்ட சக்திகளின் தாக்கம் மற்றும் மரண பயம் நீங்கும். இச்சமயத்தில் நரசிம்மரோடு நரசிங்கவல்லி தாயரையும் வணங்க திருமண தடை தாமதம் போன்றவை நீங்கும்.
மேலும் கொடூரமான, கோபக்கார கணவர்களை அடைந்த பெண்கள் இங்கு வேண்டினால், அவர்களின் கணவர்களின் கோப குணங்கள் மாறி, மனைவி மற்றும் பிள்ளைகளிடம் அன்பாக நடக்கும் நபராக மாறுவார்கள் என்பது அனுபவம் வாய்ந்த பக்தர்களின் நம்பிக்கை.

தேவசமுத்திரம் காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில்
அனுமனுக்கு முழுத்தேங்காய் நேர்த்திக்கடன்
கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ள தேவசமுத்திரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில். இக்கோவில் விஜயநகரப் பேரரசின் காலத்தில் தோன்றியது. அக்காலத்தில் இப்பகுதி வனமாக இருந்ததால், காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில் என்று பெயர் பெற்றது. ஆஞ்சநேயர் இங்கு சாய்ந்த கோலத்தில், வலது புறம் திரும்பி நின்றும், தலை மேல் நோக்கியும் , வால் தூக்கி நின்றவாறும், வாலில் சிறிய மணி ஒன்று கட்டியவாறும் காட்சியளிக்கிறாா்.
வளரும் நந்தீசுவரா்
இக்கோவிலின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுவது வளரும் நந்தீசுவரர் ஆவாா். மூலஸ்தானத்திலிருந்து இடதுபுறமாக, கோவிலின் வெளிபுறம் பாறையின்மீது நந்தீசுவரர் மிக அழகான தோற்றத்துடன் காட்சியளிக்கிறாா். இந்த நந்தி வளர்ந்து வருவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
முழுத்தேங்காய் பிராத்தனை
எல்லா ஆஞ்சநேயர் கோவில்களிலும் வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு சாத்தி வழிபடுதல் விசேஷம். ஆனால் இங்கு முழுத்தேங்காய் நேர்த்திக்கடன் விசேஷம். இங்கு வருகை புரிந்து பிராத்தனை செய்யும் பக்தர்களுக்கு தேங்காய், வெற்றிலையுடன் கூடிய சிகப்பு நிற துணி பை வழங்கப்படுகிறது. அவர்கள் பிராத்தனை முடிந்த பிறகு அந்த பையினை கோவிலுனுள் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். எவரொருவர் ஒரு முழுத்தேங்காயை, மனதார வேண்டி அனுமனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றாரோ, அவருடைய கோரிக்கைகள் மூன்று மாதத்திற்குள் நிறைவேறும் என்பது ஐதீகம். காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த நாட்களில் அனுமனை வழிபட்டு தேங்காய் கட்டினால் தங்களது வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில்
பதினாறு ஆயுதங்களோடு அபூர்வ கோலத்தில் சக்கரத்தாழ்வார் எழுந்தருளி இருக்கும் திவ்யதேசம்
மதுரை – மேலூர் சாலையில், மதுரைக்கு வடகிழக்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருமோகூர். மூலவர் காளமேகப் பெருமாள். தாயாரின் திருநாமம் மோகனவல்லித் தாயார். கருவறையில் மூலவர் காளமேகப் பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உயர்ந்த பீடத்தில், உயரமான வடிவில் காட்சியருள்கிறார்.இங்குள்ள கருடன் பெரிய வடிவில் எழிலான தோற்றத்தில் காட்சி தருகின்றார்.
இத்தலத்தில் மிகப்பழமையான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால் இவரை வணங்கும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அனைத்து பெருமாள் கோவில்களிலும் சக்கரத்தாழ்வார் இருந்தாலும் இவர் இங்கு பதினாறு கைகளிலும் பதினாறு ஆயுதங்களோடு அபூர்வ கோலத்தில் காட்சி தருகிறார். மந்திர எழுத்துக்களும் சுழலும் திருவடிகளும் காணப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மரோடு காட்சி தருகிறார். இந்த அமைப்பு நரசிம்ம சுதர்சனம் என்று அழைக்கப்படுகிறது. நரசிம்மரின் நான்கு கைகளிலும் நான்கு சக்கரங்கள் உள்ளன. சங்கு கிடையாது. சக்கரத்தாழ்வார் உற்சவர் விக்கிரகத்தில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.
மந்திர எழுத்துக்களுடன் உள்ள சக்கரத்தாழ்வரின் பூஜிக்கப்பட்ட யந்திரம் தொழில் விருத்தியையும் எதிரிகளை வெல்லும் திறனையும் கண் திருஷ்டியை நீக்கும் வல்லமையுடையது என்பதும் ஐதீகம். திருமணம், பிள்ளைப்பேறு, வேலை, நோய்கள், வியாபார அபிவிருத்தி, செய்வினைக் கோளாறு, கடன் தொல்லை, வழக்குகள் என்று பல பிரச்சினைகளுக்கு சக்கரத்தாழ்வார் ஆறுதலும் தீர்வும் அளிக்கிறார்.
ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
இத்தலம் நவகிரக தோஷங்களை போக்கக் கூடிய தலம். திருமோகூர் ராகு கேது தலமாகும். ராகு கேதுவால் உண்டாகும் தோஷங்களுக்கு திருமோகூர் பரிகார தலமாக விளங்குகிறது.

ஆவராணி அனந்த நாராயண பெருமாள் கோவில்
திருமேனி முழுவதும் ஆபரணங்களை தரித்து இருக்கும் 'ஆபரண தாரி' பெருமாள்
நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் சிக்கலுக்குத் தென்மேற்கில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, ஆவராணி அனந்த நாராயண பெருமாள்கோவில். தாயார் திருநாமம் அலங்காரவல்லி. பஞ்ச நாராயணத் தலங்களில் இத்தலமும் ஒன்று.
திருவரங்கத்தில் ரங்கநாதப் பெருமாள் 18 அடி நீள திருமேனியுடன், ஐந்து தலை ஆதிசேஷன் மேல் வானத்தைப் பார்த்தவண்ணம் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து கருவறையில், மூலவரான அனந்த நாராயண பெருமாள், தென் திசை முடியை வைத்து, வட திசை பாதம் நீட்டியுள்ளார். 21 அடி நீளத்தில், ஏழு தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது, பக்தர்களை பார்த்த வண்ணம் சயனம் கொண்டுள்ளார். இந்த காட்சியை, இங்கு மட்டுமே நாம் தரிசிக்க முடியும். வேறு எந்த தலத்திலும்காண முடியாது.
சயன கோலத்தில் இருக்கும் அனந்த நாராயண பெருமாள் தன்னுடைய ஒரு கையால் தன்னுடைய தலையைத் தாங்குகிறார். பெருமானுடைய இன்னொரு கை முழங்கால் வரை நீண்டுள்ளது. கன்னங்கரிய வடிவத்திலே தைலக்காப்புக்குள்ளே இருக்கிறார்.
இக்கோயிலின் தனிச்சிறப்பு என்னவென்றால், மூலவர் தலை முதல் கால் வரை அலங்காரத்துடன் காட்சியளிக்கிறார். சிரத்தின் மேல் மணிமகுடம், அழகான நீண்ட காது வளையங்கள், திருமார்பில் நலங்கிளர் எனும் ஆரம் ,தண்டம், தாரணம், சிரேஷணம், கடகம் போன்ற ஆபரணங்கள், மார்பின் குறுக்கே கவசம், இடுப்பில் உத்தரியம், உடல் முழுவதும் யஜ்ஞோபவிதம். அவரது காலில் தண்டை, கொலுசு அணிந்தபடி காணப்படுகிறார். அவரது கைகளின் விரல்களிலும், கால்களின் கால்விரல்களிலும் ஒவ்வொரு மோதிரம் காணப்படுகிறது. இப்படி இத்தலத்துப் பெருமாள் திருமேனி முழுவதும் ஆபரணங்களை தரித்து இருப்பதால், இவருக்கு ஆபரண தாரி என்கிற பெயரும் வந்தது. அதுவே இந்த ஊரின் பெயராகி பின்னர் ஆவராணி என்று மருவியது.

கீழையூர் பூர்வரங்கநாதர் கோவில்
திருவரங்கம் தலத்தின் அபிமானத் தலமாகக் கருதப்படும் கீழரங்கம்
நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் சுமார் 24 கி.மீ., தொலைவில் கீழையூர் பூர்வரங்கநாதர் கோவில் உள்ளது. பெருமாள் தன் பக்தனுக்க கிருஷ்ணனாகக் காட்சி தந்து, பின் அரங்கனாகப் பள்ளி கொண்ட திருத்தலம் இது. பூர்வ என்றால் வடமொழியில் முழுமையான குறைவில்லாத எனப்பொருள். அதனால் இத்தலம் பூர்வாங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. பூர்வஜன்ம வினைப்பயனால் உண்டான தோஷங்களைக்கூட தரிசித்த மாத்திரத்தில் தீயினில் இட்ட தூசு போல காணாமல் போக்கும் பெருமாள் அருளும் தலம், கீழையூர்.
பஞ்சரங்க ஷேத்ரங்கள் என்ற ஐந்து அரங்கனின் ஆலயங்களில் இதுவும் ஒன்று. திருவரங்கம் - மத்தியரங்கம், கர்நாடகத்து ஸ்ரீரங்கப்பட்டினம் - மேலரங்கம், மாயவரம் - வடரங்கம், வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள கட்டிமேடு - ஆதிரங்கம், இத்தலம் கீழரங்கம்.
தல வரலாறு
மார்க்கண்டேய மகரிஷி தான் மகளாக வளர்ந்த மகாலட்சுமியை பெருமாளுக்கு திருமணம் செய்து கொடுத்த பின் ஐந்து ரங்கத் தலங்களுள் நான்கிற்குச் சென்று பெருமாளையும் மகாலட்சுமியையும் கண்டு மகிழ்ந்தார். கடைசியாக பூர்வரங்கம் அல்லது கீழை அரங்கம் என அழைக்கப்படும் அரங்கத்தில் உறையும் அரங்கனைத் தேடி அலைந்தார். அரங்கனைக் காண முடியாததால் அங்கேயே தவம் இருக்கத் தொடங்கினார். கால ஓட்டத்தில் மெதுவாக புற்று வளர்ந்து அவரை மூடியது. ஒருநாள், அந்தக் கானகத்தில் எழுந்த குழல் ஓசை, தவம் செய்த முனிவரையும் கவர்ந்திழுத்தது. அதனால், உள்ளேயிருந்து வெளிப்பட்ட ரிஷி, குழலோசை வந்த திக்கை நோக்கிச் சென்றார். அங்கே கால்நடை மேய்க்கும் சிறுவன் ஒருவன் குழலிசைப்பதைக் கண்டார்.சிறிது நேரத்தில் சிறுவன் உருமாறி கண்ணனாகக் காட்சியளித்தான். வணங்கிய முனிவர். 'அரங்கன் வடிவில் தரிசனம் தந்து வரங்கள் அருள வேண்டும்' என்று வேண்டினார். உடனே, திருவரங்கத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் குண திசை முடியை வைத்து, குடதிசை பாதம் நீட்டி வட திசை பின்பு காட்டி தென்திசை இலங்கை நோக்கி யோக நித்திரையில் காட்சிதந்தார். பெருமாள் மார்க்கண்டேய மகரிஷிக்கு பெருமாள் காட்சி கொடுத்தது. தை மாதம் இரண்டாம் நாளாகும். பெருமாள் அன்று முதல் தன்னருகே மார்க்கண்டேய மகரிஷி கருவறையிலேயே இருக்குமாறு செய்தார்.
கருவறையில் ஆனந்த விமானத்தின் கீழ் இடக்கை பக்கவாட்டில் இருக்க வலக்கையைத் தலை அருகில் வைத்து யோக சயனத்தில் ஐந்து தலை ஆதிசேஷன் மேல் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார் பெருமாள். பெருமாளின் தலையருகே மார்க்கண்டேய மகரிஷியும், திருவடி அருகே பூதேவியும் உள்ளனர் யோக மூர்த்தியாக இருப்பதால் நாபிக் கமலத்தில் பிரம்மா கிடையாது. மார்க்கண்டேய மகரிஷிக்கு முதலில் ஆயன் உருவில் காட்சி தந்ததால், உற்சவர் ஆயனார் என்ற திருநாமத்தோடு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார்.
பிரார்த்தனை
கோயிலில் வடக்கே உள்ள புஜ்கரணியின் அருகே ரங்கநாயகித்தாயார் தவம் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருமணங்குடி என்னும் ஊரில் பெருமாளை திருமணம் செய்து கொண்டதாக புராண வரலாறு உள்ளது. எனவே இங்கு ரங்கநாயகித் தயாரிடமும், பெருமாளிடமும் செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் ஒரே நேரத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு பாலும் பழமும் நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு கொடுத்தால் திருமணம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை. வாழைப்பழம், உலர்திராட்சை, முந்திரி, கல்கண்டு போன்றவற்றை தாயாருக்கு நைவேத்யம் செய்து சிறுகுழந்தைகளுக்குத் தந்தால் புத்திர பாக்கியம் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகம்.
திருவரங்கம் தலத்தின் அபிமானத் தலமாகக் கருதப்படும் இத்தலத்தில் அனைத்து திருவிழா, உற்சவங்களும் திருவரங்கத்தினைப் போலவே நடைபெறுகின்றன.