மெய்யூர் சுந்தரராஜப்பெருமாள் கோவில்
திருமணம் கை கூடுவதற்காக பெருமாளுக்கு கல்யாண உற்சவம் நடத்தப்படும் தலம்
செங்கல்பட்டு- மதுராந்தகம் சாலையில் அமைந்துள்ள பாலாற்று பாலத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது மெய்யூர் சுந்தரராஜப்பெருமாள் கோவில். தாயார் திருநாமம் சுந்தரவல்லி. இவ்வூர் பல நூற்றாண்டுகளுக்கு முன் சத்யபுரி ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மெய்யூருக்கு அருகில் இருந்த பாலாற்றில், நீருக்கடியில் பெருமாள், தாயார், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகியோரது பஞ்சலோக விக்கிரகங்களும் கிடைக்கப்பெற்றன. அவை அனைத்தும் நாகை சவுந்திரராஜப் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமானவை என்பதும், படையெடுப்பு மற்றும் விக்கிரக கடத்தல் செயல்களின் காரணமாக பாலாற்றில் வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மெய்யூரில் உள்ள பெருமாளுக்கு சுந்தரராஜப் பெருமாள் என்று பெயர் சூட்டப்பட்டது. நாகைப்பெருமாளே இத்தலத்தில் சுந்தரராஜப் பெருமாளாக எழுந்தருளியுள்ளதால், மெய்யூரில் வாழ்ந்து வந்த வைணவப் பண்டிதர்கள், நாகைத் தலப் பெருமாள் பாசுரங்களையே இத்தல பெருமாளுக்கும் பாடி வழிபாடு செய்கிறார்கள்.
கருவறையில் புன்னகை தவழும் முகத்துடன், நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் பெருமாள் காட்சி தருகிறார். இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், வலது கையில் அபயம் அளிக்கும் வண்ணமும், இடது கையை மடக்கிய வண்ணமும் காணப்படுகிறார். இவருக்கு வலது மற்றும் இடதுபுறம் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.
இத்தலத்தில் திருக்கல்யாண உற்சவ வைபவம் விசேஷமானதாகும். சுந்தரராஜப் பெருமாளுக்கும், சுந்தரவல்லி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவ வைபவம் நடத்தி வழிபட்டால், ஒரு மண்டல காலத்திற்குள் பலன் கிடைக்கும். திருமணம் கைகூடியவர்கள், தம்பதி சமேதராய் வந்து பெருமாளையும், தாயாரையும் வணங்கி விட்டுச் செல்கின்றனர். இதே போல் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தையோடு வந்து பெருமாளையும், தாயாரையும் வணங்கிச் செல்கிறார்கள்.