
கோலார் கோலாரம்மன் கோவில்
சிற்ப கருவூலமாக விளங்கும் கோலாரம்மன் கோவில்
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் கோலாரில் அமைந்துள்ளது, கோலாரம்மன் கோவில். கோலார் மக்கள் பார்வதி தேவியை, கோலாரம்மா என்ற பெயரில் வணங்குகின்றனர். பண்டைய காலத்தில் இந்நகருக்கு குவளாலபுரம் என்று பெயர். இதே கோவில் பிரகாரத்தில் செல்லம்மா கோவில் என்றொரு கோவில் உள்ளது. தேள் கடித்து பாதிப்பு ஏற்படும்போது, இங்கு வழிபட்டால் நோய் தீரும் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை.
ராஜராஜ சோழன் அவரது மகன் ராஜேந்திர சோழன் ஆகியோர் கட்டிய கோவில்
கி.பி 10 ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜன் கோலார் பகுதியை கைப்பற்றி தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். கோலார் அம்மன் கோயிலில் உள்ள இராஜராஜனின் 12 - 22 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுக்கள், குவளாலநாடு (கோலார்), நிகரிலிச்சோழ மண்டலத்தில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. கோலார் நகரை, சோழர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் நீண்ட நாட்கள் வைத்திருந்தமைக்கு பிரதான காரணமே அது தங்க பூமி என்பதாலேயே என்கின்றனர் சில வரலாற்று அறிஞர்கள். கோலார் நகருக்கு பெருமை சேர்பதாக இருப்பது முதலாம் இராஜராஜன் மற்றும் அவனது மகன் முதலாம் இராஜேந்திரன் ஆகியோர் கட்டிய உலகப் புகழ்பெற்ற, இந்த கோலார் அம்மன் கோவிலாகும்.
இங்கு இரண்டு கோவில்கள் உள்ளன. இரண்டுமே சப்த மாதர்களுக்காக முதலாம் இராஜராஜன் மற்றும் அவனது மகன் முதலாம் இராஜேந்திரனால் கட்டப்பட்டவை. குறிப்பாக போரில் வெற்றியை பெற்றுத்தரும் கடவுள்களான சப்த மாதர்களுக்காக (சாமுண்டி) இக்கோவில் கட்டப்பட்டதாகும்.
மிரள வைக்கும் போர்க்களக் காட்சியின் சிற்பத் தொகுப்பு
கோலார் அம்மன் கோவில் ஒரு சிறந்த சிற்ப கருவூலமாக விளங்குகிறது. குறிப்பாக இக்கோவிலின் முதல் பிரகாரத்தின் நுழைவாயிலின் வடக்கு பகுதி மண்டபத்தில் சுமார் ஐந்து அடி, உயரமும் நான்கு அடி அகலமும் கொண்ட கற்பலகையில் இரு நாட்டு வீரர்கள் போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நேரடிக் காட்சி அப்படியே சிற்பமாக்கப் பட்டுள்ளது. சிற்ப தொகுப்பின் மேற்புறம் அரசன் போர்க்களம் புறப்படும் காட்சியும். பிறகு போர்களத்தில் தங்கியிருக்கும் காட்சியில் ஆடல் மகளிர் நடனம்புரியும் காட்சியும் உள்ளன. மறுநாள் போர் ஆரம்பம். இரு தரப்பு வீரர்களும் நேருக்கு நேராக மோதிக்கொள்ளும் போர்களக் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. மேலும் யானை ஒன்று போர்க்களத்தில் எதிரி படையினரை நோக்கி வேகமாக தாக்குதல் நடத்த ஓடிவரும் காட்சி பார்ப்பவரை மிரளவைக்கிறது. அதைத் தொடர்ந்து குதிரை வீரனின் வாள் வீச்சில் எதிரி வீரன் ஒருவனின் தலை துண்டிக்கப்பட்டு தலை வேறு உடல் வேறாக கிடக்கும் காட்சியில் போரின் உக்கிரத்தை காண முடிகிறது.
மேலும் குதிரையின் காலடியில் வீரன் ஒருவனின் உடல் இரண்டாக வெட்டப்பட்டு கிடக்கும் காட்சி பார்ப்பவருக்கு மிரட்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சிற்பத் தொகுப்பின் கீழ் பகுதியில் போரில் இறந்த வீரர்களின் உடல்களை கழுகு கொத்தி தின்னுவது போன்றும், நரியொன்று இறந்த வீரனொருவனின் உடலில் இருந்து சதைகளை பிய்த்து தின்னுவது போன்ற சிற்பங்களில் போரின் கொடூரத்தை உணரமுடிகிறது.
மொத்தத்தில் இந்த சிற்பத்தை பார்ப்பவர்களுக்கு அந்தகால போர்களத்திற்கு நம்மை கூட்டி செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும் தென்னிந்தியாவில் ஒரு போர்க் களத்தின் நேரடி காட்சியைத் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ள முதல் சிற்பத் தொகுப்பு அனேகமாக இதுவாகத்தான் இருக்கமுடியும்.

சிலம்பிமங்கலம் சிலம்பியம்மன் கோவில்
தில்லை காளியின் மறுவடிவமான சிலம்பியம்மன்
கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில், 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது, சிலம்பிமங்கலம். சிலம்பிமங்கலம் கிராமத்தில் அடர்ந்த முந்திரிக்காடு மத்தியில் இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணித்தால், ஒரு பெரிய மணல் மேடு வரும். இந்த மணல் திட்டு 10 அடி உயரம் உள்ளது. கால்கள் மணலுக்குள் புதைய நடந்து சென்றால், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. அதன் கீழ் தான், சிலம்பியம்மன் கோவில் அமைந்திருக்கிறது.
கருவறையில் சிலம்பியம்மன் நடுநாயகமாக வீற்றிருக்க, அவருக்கு வலதுபுறம் 3 அம்மன்களும், இடதுபுறம் 3 அம்மன்களும் அருள்பாலிக்கிறார்கள். ஒரு முறை சிதம்பரத்தில் உள்ள நடராஜருக்கும். தில்லை காளிக்கும் நடனத்தில் போட்டி உண்டானது. அப்போது ஈசனுடன், தில்லைக்காளி அம்மன் ஆக்ரோஷமாக நடனம் ஆடினாள். அவளின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல், அவளது காலில் இருந்து சிலம்பு ஒன்று கழன்று ஓரிடத்தில் போய் விழுந்தது. அந்த இடம்தான் சிலம்பிமங்கலம் என்று தல புராணம் சொல்கிறது. சிலம்பிமங்கலத்தில் விழுந்த அந்த சிலம்பு உடைந்து, அதில் இருந்த 7 முத்துக்களும் சிதறி விழுந்தன. அவற்றில் இருந்து 7 அம்மன்கள் தோன்றினர்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த அம்பாள் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய 7 சக்திகளும், நாங்கள் மணல் திட்டின் மேல் வீற்றிருக்கிறோம் என்று தெரிவித்தனர். அவர் ஊர் மக்களிடம் இது பற்றி சொல்லி, ஊர்மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கு மணல் திட்டின் மேல் பகுதியில் அமர்ந்த கோலத்தில் 7 அம்மன் சிலைகள் காணப்பட்டன. அம்மன் சிலைகள் கிடைத்த இடத்திலேயே அந்தப் பகுதி மக்கள் கோவில் எழுப்பினர்.
கோவிலில் நடுநாயகமாக கையில் சிலம்போடு சிலம்பியம்மனும், அவளுக்கு வலது புறத்தில் பிரம்ஹி, வைஷ்ணவி, ருத்ராணி ஆகியோரும். இடதுபுறத்தில் கவுமாரி, வாராகி, இந்திராணி ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மன். தில்லை காளியின் மறுவடிவம் என்று இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். இந்த ஆலயத்திற்கு என்று தனிப்பெரும் சிறப்பு ஒன்று இருக்கிறது. அதாவது இந்த ஆலய சன்னிதிகளில் அருள்பாலிக்கும். தெய்வ சிலைகள் அனைத்தும், இந்த ஆலயம் இருக்கும் பூமியின் அடியில் இருந்தே கண்டெடுக்கப்பட்டவை.
அம்மனுக்கு முந்திரி மாலையை நேர்த்திக் கடனாக செலுத்தும் விவசாயிகள்
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மனை குலதெய்வமாகவும், ஊரின் காவல் தெய்வமாகவும் இப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர். இந்தப் பகுதியில் முந்திரிதான் பிரதான விவசாயமாக இருக்கிறது. இதனால் முந்திரி விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டி, விவசாயிகள் அம்மனை வேண்டிக் கொள்கிறார்கள். இன்றளவும் அமோகமான விளைச்சலை பெறும் விவசாயிகள், அதற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், முந்திரியால் ஆன மாலையை அம்மனுக்கு அணிவித்து தங்களின் நன்றிக்கடனை செலுத்துகிறார்கள்.
பிரார்த்தனை
இந்த ஆலயத்தை குடைபோல் இருந்து காத்து வரும் பழமையான ஆலமரம் இத்தலத்தின் சிறப்புக்குரியதாகும். திருமணம் தடைபடும் பெண்கள், 'ஓம் சக்தி.. பராசக்தி..' என்று உச்சரித்தபடியே இந்த ஆலமரத்தை 7 முறை சுற்றி வந்து வணங்கினால், மனதுக்குப் பிடித்த வரன் விரைவில அமையும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

குறிச்சி அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை கோவில்
நவபாஷாணத்தால் ஆன, முப்பெருந்தேவியரும் இணைந்த அபூர்வ துர்க்கை அம்மன்
பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் பட்டுக்கோட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள குறிச்சி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை கோவில். இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் அம்மன் முப்பெரும் தேவியரின் ஒருங்கிணைந்த வடிவமாகும். மேலும் அம்மனின் 12 அடி உயர திருவுருவானது நவபாஷாணத்தால் வடிவமைக்கப்பட்டது என்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இந்த அம்பிகைக்கு அஷ்டதசபுஜ (பதினெட்டுக் கை) மகாலட்சுமி துர்க்கை அம்மன் என திருநாமம் எழுந்தது.
அம்மன் திருமேனி உருவான வரலாறு
குறிச்சி கிராமத்தில் வசித்து வந்த தனராமலிங்கர் என்பவரிடம் அருகில் உள்ள பாலத்தளி கிராம மக்கள் துர்க்கை சிலை வடிவமைத்து கோயில் கட்ட ஆலோசனை கேட்டனர். அவர் கனவில் தோன்றிய துர்க்கை, சித்தர் ஒருவர் உன்னிடம் வருவார். அவரது ஆலோசனைப்படி சிலை செய்து வை என்று கூறினாள். அதன்படி ஓர் அமாவாசை நாளில் சித்தர் அவரிடம் வந்தார். நவபாஷாணத்தால் ஆன முப்பெருந்தேவியரும் இணைந்த 12 அடி உயர சிலை எழுந்தது. 18 கரங்களுடன் அமைந்த அந்த துர்க்காலக்ஷ்மி சிலையை ஒரே நாள் இரவில் வடித்தார். சிம்ம வாகனத்தில் அமர்ந்தது போல் அன்னை காட்சி தந்தாள். பின்னர் எதுவும் கூறாமல் தாம் கொல்லிமலை செல்வதாகக் கூறிச் சென்றார் சித்தர்.
பிரார்த்தனை
பதினெட்டுக்கை(அஷ்ட தசபுஜ) மகாலட்சுமி துர்க்கை அம்மனை வழிபட்டால் முப்பெரும் தேவியரை தனித்தனியே வழிபட்ட பலன் கிடைக்கும். தீராத நோய்கள் தீரவும், தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்படவும், திருமணத்தடை நீங்கி குழந்தைச் செல்வம் கிட்டவும், வேலை கிடைக்க வேண்டியும், கணவன் மனைவி பிரச்னை நீங்கி நிம்மதி கிடைக்கவும் அம்பிகையிடம் பக்தர்கள் வேண்டுகின்றனர்.

பல்லடம் அங்காள பரமேஸ்வரி கோவில்
அம்மனின் பாதத்தில் எலுமிச்சை பழம் வைத்து வேண்டுதல் வைக்கும் பெண் பக்தர்கள்
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் நகரில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி கோவில். 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவில், அப்பகுதி பெண்களிடையே மிகவும் பிரசித்தம். கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலோர் பெண்கள்.இக்கோவிலில் மஞ்சள் மற்றும் குங்குமம் வாசனை எப்பொழுதும் நிறைந்திருக்கும்.
பெண்கள் ஒரு எலுமிச்சம் பழத்தை, தங்கள் பிரார்த்தனையை வேண்டிக் கொண்டு, அம்மனின் பாதத்தில் வைத்துவிட்டு தங்கள் புடவை தலைப்பை அம்மனின் பாதத்தருகில் பிடிப்பார்கள். புடவையில் பழம் உருண்டு விழுந்தால், அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
கேட்டை நட்சத்திர பரிகாரத்தலம்
இந்தக் கோவில் கேட்டை நட்சத்திர பரிகாரத்தலமாக விளங்குகின்றது. அதனால் இக்கோவிலுக்கு பூராடம் கேட்டை கோவில் என்ற பெயரும் உண்டு.
ஜென்ம நட்சத்திரம் கேட்டை நட்சத்திரமாக இருப்பவர்கள், வருடத்திற்கு இரண்டு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது இந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும். இரண்டரை மணி நேரம் கோவிலில் அல்லது கோவில் வளாகத்தில் இருக்க வேண்டும்.
பிரார்த்தனை
திருமணத்தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இந்த அம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். மாசி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில், பெரியவர்கள், கைகுழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி அங்காளம்மனை வழிபடுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
கன்னியாகுமரி அம்மன் தனக்கு கேட்டு வாங்கிய மூக்குத்தியும், புல்லாக்கும்
திருவிதாங்கூர் மகாராஜாவின் ஆட்சி காலத்தில், கன்னியாகுமரி பகுதியில் பனையேறி ஒருவன் இருந்தான். அவன் தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் அவன் மனைவி ஒவ்வொரு முறை கருவுறும் போதும் அவனுக்கு பெண் குழந்தை மட்டுமே பிறந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு முறையும் அவன் மனைவிக்கு பிரசவம் ஆனதும் அவன் முதல் மகள் தான் அவனிடம் வந்து குழந்தை பிறந்த செய்தியை சொல்லுவாள். இப்படியே அவனுக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்து விட்டன. இதனால் மனம் வருந்திய அவன் இனி நமக்கு பெண் குழந்தை பிறந்தது என்று நம் மகள் வந்து நம்மிடம் சொல்லும் போது நாம் பனையின் உச்சியில் இருந்தால் அப்படியே இரண்டு கைகளையும் மரத்தில் இருந்து விடுவித்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்.
இந்நிலையில் அவன் மனைவி 6வது முறையாக கருவுற்றாள். அப்போது வழக்கம் போல் அவனது முதல் பெண் ஓடி வந்து அப்பா அம்மாக்கு பிரசவம் ஆயிடுச்சு. தங்கை பிறந்துருக்கா என்று சொன்னாள். ஆனால் அந்த நேரம் இவன் பனையில் இருந்து கீழே இறங்கி இருந்தான். அதனால் அவனால் உடனே தற்கொலை செய்ய முடியவில்லை. 7வது முறையும் இவன் பனையில் இருந்து இறங்கிய பிறகே முதல் மகள் வந்து பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை சொன்னாள். இந்நிலையில் அவன் மனைவி 8வது முறை கருவுற்றாள். இம்முறையும் அவன் பனையை விட்டு இறங்கிய பிறகே அவன் மூத்த மகள் வந்து 8வதாக பெண் பிறந்த செய்தியை சொல்ல, மனம் வெறுத்து போன அவன் இனி நாம் உயிர் வாழவே கூடாது என முடிவு செய்து அருகில் இருந்த பாம்பு புற்றில் தன் கையை விட்டான். பாம்பு கடித்து விடும், நாம் உயிரை விட்டு விடலாம் என்பது அவன் எண்ணம்.
ஆனால் அம்மனின் விருப்பம் வேறாக இருந்தது. அவன் புற்றின் உள்ளே கையை விட்டதும் கையில் ஏதோ சூடு பட்டது போல உணர்ந்தான். சூடு தாங்க முடியாமல் கையை வேகமாக வெளியே இழுத்து பார்க்கும் போது அவன் கையில் ஏதோ ஒன்று தக தகவென மின்னியது. புற்றில் இருந்த முதிர்ந்த நாகம் அவன் கையில் நாகரத்தினத்தை உமிழ்ந்து இருந்தது. அது என்னவென்று அறியாத அவன் அதனை உடனே அரண்மனைக்கு கொண்டு சென்றான். அதை மகாராஜாவிடம் கொடுத்தான். உடனே அதை பெற்று கொண்ட மகாராஜா அவரது குதிரையை அவிழ்த்து விட்டு, அது எவ்வளவு தூரம் ஓடுகிறதோ அவ்வளவு இடத்தையும் அவன் பெயரில் எழுதி வைக்க சொன்னார். அவனும் மகிழ்ச்சியோடு அதை பெற்று கொண்டு வீட்டுக்கு சென்றான்.
அன்றிரவு மன்னரின் கனவில் ஒரு சின்னஞ்சிறு பெண் வந்து மன்னா ! இன்று காலை அரண்மனை தர்பாரில் உன்னிடம் ஒருவன் நாகரத்தினம் கொண்டு வந்து தந்தானே! அந்த நாகரத்தினத்தில் எனக்கு ஒரு மூக்குத்தியும், புல்லாக்கும் செய்து தர கூடாதா? என்று கேட்டு விட்டு மறைந்து விட்டாள். திருவிதாங்கூர் மன்னர் மறுநாள் காலையில் நம்பூதிரிகளை வரவழைத்து தான் இரவு கண்ட கனவை கூறி அந்த சிறு பெண் யார் என பிரசன்னம் வைத்து கண்டு பிடிக்கும் படி கூறினார். நம்பூதிரிகள் பிரசன்னம் வைத்து பார்க்கும் போது அது வேறு யாரும் அல்ல கன்னியாகுமரி பகவதி அம்மன் தான் என்பது தெரிய வந்தது.
நம்பூதிரிகள் கூறியதை கேட்ட மன்னர் உடனடியாக தேவி கன்னியாகுமரி பகவதிக்கு நாகரத்தினத்தில் மூக்குத்தியும், புல்லாக்கும் செய்து கொடுத்தார். அது தான் இன்றும் அன்னை அணிந்து கொண்டு இருக்கிறாள். நாகரத்தினம் என்பதால் அது தக தகவென ஜொலிக்கும். கப்பலோட்டிகள் அம்பாளின் மூக்குத்தி வெளிச்சத்தை கலங்கரை விளக்க ஒளி என்று எண்ணியதால், கப்பல் திசை மாறி வந்த காரணத்தால் கோவிலின் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு தெற்கு வாசல் வழியாக சென்று தான் தேவியை தரிசனம் செய்ய முடியும்.

காரடையான் நோன்பு
கணவரின் ஆயுள் விருத்திக்காக சுமங்கலிகள் கடைபிடிக்கும் காரடையான் நோன்பு (சாவித்திரி விரதம்)
மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் காரடையான் நோன்பு, அனைத்து சுமங்கலி பெண்களாலும் அனுஷ்டிக்கப்படுகிறது. இதை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்திரி விரதம் என்று கூறுவர். எமதருமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை எப்படிக் காப்பாற்றினாள் என்பது தொடர்பான பண்டிகை இது. இந்த சுமங்கலி நோன்பு தென் இந்தியர்கள் மட்டுமல்ல வட இந்தியர்களாலும் சுக்கிரனின் பலம் நிறைந்த வைகாசி மாதத்தில் பௌர்னமி திதியன்று சுக்கிர வாரத்தில் "வட சாவித்திரி விரதம்" என்ற பெயரில் அனுஷ்டிக்கப்படுகிறது.
காரடையான் நோன்பின் தத்துவம்
கார் என்றால் இருள். இருள் சூழ்ந்திருக்கும் எமப்பட்டினத்தை அடையாதவன் கார்- அடையான் என்று கூறப்பட்டது. இந்த விரதத்தை சுமங்கலிகள் அனுஷ்டித்தால் அவர்களுடைய கணவன்மார்கள் எமப்பட்டினத்தை அடையார் என்பதே இந்த காரடையான் நோன்பின் பெயர் வரக்காரணமாகும்.
மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்து கொள்கிற மஞ்சள் கயிறானது, பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும் கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.
காரடையான் நோன்பிருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி
மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் ஒரே மகள் சாவித்திரி, வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி. மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள்.
சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள். இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார்.
சாவித்திரி சமயோசிதமாக, என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார்.
அன்னை காமாட்சி தேவியை நினைத்து நோன்பிருந்து, தனது கணவர் சத்யவானின் உயிரை, எமதர்ம ராஜாவிடம் போராடி சாவித்திரி மீட்டு கொண்டு வந்த தினமே காரடையான் நோன்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.
காரடையான் நோன்பு முறை
கற்புக்கரசி சாவித்திரி தன் கணவனின் ஆயுள் முடிவதற்கு மூன்று நாட்கள் முன் கௌரி பூஜை செய்து கணவனின் ஆயுளை காப்பாற்றினாள். விரதம் இருக்கும் பெண்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள காமாட்சி அம்பாளின் படம் அல்லது ஏதாவது அம்மன் படத்தின் முன் விளக்கேற்றி வைக்க வேண்டும். ஒரு இலை போட்டு அதன் மீது வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி, பூஜை ஆகிய தாம்பூல பொருட்களை வைக்க வேண்டும். சாவித்திரி நோற்ற நோன்பை குறிக்கும் விதமாக, நோன்பின் போது சுமங்கலிகள் அரிசி மாவும் ,வெல்லப்பாகும் சேர்த்து அடைதட்டி கற்களின் அடையாளமாக காராமணி பயிரை வேக விட்டு கலந்து, கௌரியை வேண்டி விரதமிருந்து நோன்பு கயிறை கட்டி கொண்டால் ,கணவனின் ஆயுள் அதிகரிக்கும் .
'உருக்காத வெண்ணையும், ஓரடையும் நான் படைத்தேன். ஒருக்காலும் என் கணவன் பிரியாதிருக்க வேண்டும்' என்று சொல்லிக்கொண்டே மணமான பெண்கள் நோன்பு சரடு கட்டிக்கொள்ள வேண்டும் .

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்
எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவக் கோவில்
மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள சோழவந்தானில் அமைந்துள்ளது ஜெனகை மாரியம்மன் கோவில். மதுரையைப்போல இவ்வூரையும் கோவில் நகரம் என அழைக்கின்றனர். இந்த மாரியம்மனை ஜனக மகாராஜா வணங்கியதாக தல வரலாறு கூறுகிறது. இதனால் இந்த மாரியம்மன் 'ஜனகை மாரி' என்றழைக்கப்பட்டு பின்னர், 'ஜெனகை மாரி' என்று பெயர் பெற்றாள்.
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் கருவறையில் ஜெனகை மாரியம்மன் இரண்டடி உயர திருமேனியுடன் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். அவருக்குப் பின்புறம் சந்தனமாரியம்மன் ஆக்ரோஷமாக நின்ற நிலையில் எழுந்தருளி இருக்கிறார். சொல்லி வரம் கொடுப்பாள் சோழவந் தான் ஜெனகை மாரி என்பது இவ்வூர் மக்களின் வேதச் சொல் ஆகும். இப்பகுதியில் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஜெனகைமாரி என பெயர் வைத்திருப்பார்கள்
இக்கோவிலில் குடிகொண்டுள்ள ஜெனகை மாரியம்மன், சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 48 கிராம மக்களுக்கும் குல தெய்வமாக உள்ளார். எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவ கோவில் இது. அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத் துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டு அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தம் வாங்கி குடிக்க வேண்டும். இது மஞ்சள் வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும், அம்பாள் கருணையும் கலந்த அபூர்வ தீர்த்தம் ஆகும். அம்மை போட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு குணமடைவது இப்பகுதியில் மிகவும் பிரபலம். குழந்தை பாக்கியம். திருமண வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.
பெண் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி, கோவிலில் தொட்டில் கட்டி பூஜை செய்வது வழக்கம். குழந்தை வரம் கிடைக்கப் பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் கட்டி குழந்தையை எடுத்து கோவிலை சுற்றி வருகின்றனர். விவசாயம் செழிப்படைய வேண்டிக் கொண்டவர்கள் தானியங்களை கொண்டு வந்து கொட்டி அம்மனுக்கு காணிக்கை செய்கின்றனர்.
திருவிழாவின் முடிவில் மழை தூரல் விழும் அதிசய நிகழ்ச்சி
இக்கோவிலில் தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா நடைபெறுவது ஒரு தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் விஜய தசமி அன்று வைகை ஆற்றில் நடக்கும் அம்பு போடுதல் திருவிழாவின் முடிவில், மழை தூரல் விழுவது இத்தலத்தில் இன்றளவும் நடக்கும் அதிசய நிகழ்ச்சியாகும்.

சூலக்கல் மாரியம்மன் கோவில்
கண்நோயை தீர்க்கும் மாரியம்மனின் அபிஷேக தீர்த்தம்
பொள்ளாச்சியில் இருந்து 11கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சூலக்கல் மாரியம்மன் கோவில். சுயம்புவாக தோன்றிய மாரியம்மனுக்கு அருகே சூலம் இருந்ததால் இந்தப்பகுதி சூலக்கல் என்று பெயர் பெற்றது. கோவை மாவட்டத்தில் சிறப்பு பெற்ற மாரியம்மன் கோவில்களில், சூலக்கல் மாரியம்மன் கோயிலும் ஒன்று.
கருவறையில் மாரியம்மன் அமர்ந்த நிலையில் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில், வலது கைகளில் உடுக்கையும் சுத்தியும், இடது கைகளில் சூலமும், கபாலமும் ஏந்தி அருள்பாலிக்கிறார். சூலக்கல் மாரியம்மன் வடக்கு நோக்கி அருள் புரிவதால், 'வடக்கு வாயிற் செல்வி' எனவும் அழைக்கப்படுகிறார்.
பிரார்த்தனை
சூலக்கல் மாரியம்மன், அம்மை நோயையும், கண்நோயையும் தீர்ப்பதில் கண்கண்ட தெய்வமாய் திகழ்கிறாள். அவளது அபிஷேக தீர்த்தத்தை கண்நோய் கண்டவர்கள் தங்கள் கண்களில் இட்டு குணம் பெறுகின்றனர். குழந்தைப்பேறு, இல்லாதவர்கள் அம்மனை வேண்டி, தல விருட்சத்தில் தொட்டில் கட்டி பிராரத்தனை செய்தால், அவர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறுகிறது.

மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்
அம்பிகையின் அந்தப்புரமாக விளங்கிய தலம்
திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது சேஷபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அந்தப்புர நாயகி. இத்தலம் முற்காலத்தில் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது, நான்கு (சதுர்) வேதங்களைப் படித்த வேத பண்டிதர்கள் நிறைந்த ஊர் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
சிவபெருமான் பார்வதி திருமணத்தோடு இத்தலம் தொடர்புடையது. சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக, பார்வதி, இத்தலத்துக்கு மிக அருகில் உள்ள பெருவேளூரில் தவம் மேற்கொண்டார். இறுதியில் கரவீரம் என்னும் தலத்தில் சிவபெருமானை மணந்து கொண்டார். சிவன் மற்றும் பார்வதியின் திருமணத்தை இத்தலத்து வேத பண்டிதர்கள் நடத்தினார்கள். திருமணத்திற்குப் பிறகு, அடுத்த நாள் காலை கைலாசத்திற்குச் செல்வதற்கு முன், இத்தலத்திலுள்ள அந்தப்புரத்தில் பார்வதி தங்கினார், எனவேதான் பார்வதிதேவி அந்தப்புர நாயகி என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். அம்பிகையின் இந்த திருநாமம் தனிச்சிறப்பு உடையது. வேறு எந்த தலத்திலும் அம்பிகைக்கு இந்த திருநாமம் கிடையாது.
பிரார்த்தனை
சிவபெருமான்-பார்வதி திருமணத்துடனான தொடர்பு காரணமாக, திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கும், குழந்தைகளைப் பெற விரும்புபவர்களுக்கும் இது ஒரு பிரார்த்தனை தலமாகும்.

மருங்கப்பள்ளம் மருந்தீசுவரர் கோவில்
அம்பிகைக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது மருங்கப்பள்ளம். இத்தலத்து இறைவன் திருநாமம் மருந்தீசுவரர், ஔஷதபுரீசுவரர். இறைவியின் திருநாமம் மருத்துவ நாயகி ,பெரியநாயகி. சகல நோய்களையும் இறைவன் குணப்படுத்துவதால் இந்த பெயர் ஏற்பட்டது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது.
இத்தலத்து இறைவி பெரிய நாயகி மேல் இரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கி கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் புன்னகை தவழ நின்றகோலத்தில் காட்சிதருகிறாள். அம்பிகை, இவளை வணங்குவோர் குடும்பத்தில் நிம்மதி நிலவும். ஒற்றுமை நிலைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதனை நிரூபிப்பதுபோல், இந்த ஆலயத்தில் இவளுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்படுகிறது. வழக்கமாக இறைவனின் உற்சவமூர்த்திக்கே செய்யப்படும் இந்த அலங்காரம், தேவியின் மூலமூர்த்திக்கே செய்யப்படுவது சிறப்பானது.

திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்
கருவறையில் ஊஞ்சலில் ஆடும் காளியம்மன்
சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் 'ராஜமாதங்கீசுவரி,
இக்கோவில் பிரகாரத்தின் வடக்கு புறத்தில் 'ஆனந்த வடபத்ரமாகாளியம்மன்' தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். மரத்தினால் ஆன திருமேனி உடையவள். தனது எட்டு கைகளிலும் வெவ்வேறு ஆயுதங்களை ஏந்தியபடி அருளுகிறாள். கருவறையில் இவள் ஊஞ்சல் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறாள். இப்படி கருவறையில் ஊஞ்சலில் அமர்ந்து காட்சி தரும் அம்மனை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. ஊஞ்சலில் ஆடும்போது இந்தக் காளியம்மனின் தரிசனம் பெறுவது விசேஷம். பவுர்ணமியில் காளி சன்னதியில் மாவிளக்கு ஏற்றி, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வணங்குகின்றனர். பத்ரகாளி அம்மனின் மூலவர் விக்கிரகமே விழாக்காலங்களில், வீதி உலாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

பெரியதிருமங்கலம் அருங்கரை அம்மன் கோவில்
பெண்கள் வந்து வணங்க அனுமதி இல்லாத அம்மன் கோவில்
கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது பெரிய திருமங்கலம். இந்த ஊரில் பாயும் அமராவதி ஆற்றின் கரையில் அம்மன் கோவில் உள்ளது. நல்லதாய் என்று முதலில் பெயர் பெற்றிருந்த இந்த அம்மன், பின்னர் ஆற்றின் கரையில் எழுந்தருளி இருப்பதால் அருங்கரை அம்மன் என்று அழைக்கப்படுகின்றார்.
இந்தக் கோவிலுக்கு உள்ளே செல்ல பெண்களுக்கு அனுமதியில்லை. அவர்கள் வாசலில் நின்று வழிபடலாம். பெண் குழந்தைகள் கூட கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது. வெளியில் நின்று வணங்கும் பெண்கள், அமராவதி ஆற்றில் குளித்துவிட்டு, தலை முடியாமல், ஈரத்துணியுடன் வழிபட வேண்டும். ஆண்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று வழிபடுகின்றனர். மேலும், இங்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே கோயில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடக்கிறது. மற்ற நாட்களில் கோவில் இரவும், பகலும் அடைக்கப்பட்டே இருக்கும்.
மஞ்சள், குங்குமம் பிரசாதத்திற்கு பதிலாக மடப்பள்ளி அடுப்பு சாம்பல் பிரசாதம்
அம்பாள் கோயில்களில் வழக்கமாக தரப்படும் மஞ்சள், குங்கும பிரசாதமும் இங்கு தரப்படுவதில்லை. அவளுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் அடுப்பிலுள்ள சாம்பலையே தருகின்றனர். அம்பாளுக்கு பூஜை முடிந்தபின்பு, படைக்கப்பட்ட பூஜைப் பொருட்கள், மற்றும் நேர்த்திக்கடனாக செலுத்தும் வாழை, தானியங்கள் போன்றவற்றை கோயில் முன் மண்டபத்தில் இருந்து "சூரை' (எறிதல்) விடுகின்றனர். இதனை பெண்கள் தங்களது சேலையில் பிடித்துக் கொள்கின்றனர். அம்பாள் பிரசாத பொருட்களின் வடிவில் பெண்களுக்கு அருளுவதாக நம்பிக்கை.
கோவில் வரலாறு
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த மீனவர்கள், அமராவதி ஆற்றில் வலைவீசிய போது, பெட்டி ஒன்று சிக்கியது. அதற்குள் ஒரு அம்மன் சிலை இருந்தது. ஆற்றங்கரையிலுள்ள மரத்தின் அடியில் அம்பாளை வைத்து வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் அவர்கள் அவ்விடத்தை விட்டு சென்றுவிடவே, மணல் மூடி பெட்டி மண்ணுக்குள் புதைந்து விட்டது. பின்னர் நல்லதாய் என்ற கால்நடைகளை மேய்க்கும் தொழிலைச் செய்து வந்த சிறுமி, ஒரு நாள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது ஒரு பசு மட்டும் மரத்தின் அடியில் இருந்த மணல் மேட்டின் மீது பால் சொரிந்ததைக் கண்டாள் வியப்புற்று அருகில் சென்று பார்த்தபோது ஒரு மேடு இருந்தது அதன் மீது அவள் அமர்ந்தாள் அதன்பின் எழவில்லை. சிறுமியைக் காணாததால் ஊரில் இருந்த ஆண்கள் அவளைத்தேடி இங்கு வந்தபோது சிறுமி மணல் திட்டில் அமர்ந்திருந்ததைக் கண்டனர் அவர்கள் சிறுமியை வீட்டிற்கு வரும்படி அழைத்தனர் அங்கிருந்த வர மறுத்த சிறுமி அவர்களிடம், "நான் இங்கேதான் இருக்க விரும்புகிறேன் என்னைக்கண்ட இந்தநூளில் இதே நேரத்தில் மட்டும் எனக்கு பூஜை செய்து வழிபடுங்கள் என்று சொல்லிவிட்டு ஜோதியாக மாறி மறைந்துவிட்டாள் பின் அவர்கள் சிறுமியை அம்பாளாக எண்ணி உருவம் ஏதுமில்லாமல் வழிபட்டு வந்தனர் பிற்காலத்தில் இங்கு கோயில் கட்டப்பட்டது.

பஞ்சட்டி அகத்தீசுவரர் கோவில்
மரகத திருமேனியுடன், நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் சத்ருசம்ஹார கோலம் கொண்ட அம்பிகை
சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையில், 31 கி.மீ தொலைவில், செங்குன்றம், காரனோடை ஊர்களைக் கடந்தால் வரும் தச்சூர் கூட்டு ரோட்டில் இருந்து, சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது பஞ்சட்டி அகத்தீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. அகத்தியர் வந்து வழிபாடு செய்ததால் இறைவனுக்கு, அகத்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.
அம்பாள் ஆனந்தவல்லி தெற்கு நோக்கி, இடது காலை முன்வைத்து நின்ற கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாள்.அம்பிகையின் திருமேனி பச்சை மரகதக்கல்லால் ஆனது. அம்பிகையின் நெற்றியில், சிவபெருமானைப் போல் மூன்றாவது கண் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
அகத்திய முனிவர், சுகேது என்ற அரக்கனுடைய சாப விமோசனத்திற்காக இத்தலத்தில் ஐந்து யாகங்கள் செய்தார். அவர் செய்த ஐந்து யாகங்களுக்கு பஞ்ஜேஷ்டி என்று பெயர். இஷ்டி என்றால் யாகம். ஐந்து யாகங்கள் என்பதால் பஞ்ச இஷ்டி. அதுவே இத்தலப் பெயரானது.
அந்த யாகத்துக்கு அசுரர்கள் தடை ஏற்படுத்திட முயல, அகத்திய முனிவர் அம்பிகையிடம் காத்தருள வேண்டினார். உடனே அம்பிகை மூன்று கண்களைக் கொண்ட திரிநேத்ரதாரணியாக இத்தலத்தில் தோன்றி, தனது இடது காலை முன் வைத்து, மூன்றாவது கண்ணால் அந்த அசுர சக்திகளை எரித்துச் சாம்பலாக்கினாள். தீய சக்திகளை அழிக்க புறப்பட்டதினால், அம்பிகை இங்கு இடது காலை முன்வைத்து காட்சி தருகிறாள். அம்பாளின் இத்திருக்கோலம் சத்ருசம்ஹார திருக்கோலம் ஆகும். பிறகு அகத்திய முனிவர், அம்பிகைக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டும், அவள் சாந்த நிலைக்குத் திரும்பவும் அம்பாளுக்கு முன்பாக மிகப் பெரிய துர்க்கா மகா யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார்.
அம்பாள் ஆனந்தவல்லியாக ஆனந்தத்தையும், அதே நேரத்தில் நம்மை வாட்டி வதைக்கும் தீய சக்திகளைப் பொசுக்கிக் காத்தருளும் முக்கண்ணுடையவளாகவும் அருள் பாலிக்கிறாள்.இங்கு யாகங்கள் செய்தால் பலன்கள் பல மடங்காக கூடும் என்று கூறப்படுகிறது. அகத்தியரால் செய்யப்பட்ட ஐந்து யாகங்களில், அன்னதானத்தையே மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். எனவே இந்த ஆலயத்தில் அன்னதானம் செய்தால் இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும் , உயர் பதவிகள் தேடி வரும் என்பது ஐதீகம். அம்பாளின் அருள் நம் செயல்களில் ஏற்படும் தடங்கல்கள், எதிர்ப்புகள் அனைத்தையும் விலக்கி விடும்.
அம்பாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ராஜகோபுரம் தெற்கு நோக்கி அம்பாளின் முன் அமைந்திருப்பதும் ஒரு தனிச்சிறப்பாகும். இவ்வாறு தெற்கு நோக்கி ராஜகோபுரம் அமைந்திருந்தால் அத்தலத்தை பரிகார தலம் என்பார்கள. ராஜகோபுரத்தில் இருக்கும் நவக்கிரகங்கள், அட்டதிக்கு பாலகர்கள் ஆகியோர், அம்பாளுக்கு எதிரில் கட்டுப்பட்டு இருக்கின்றனர். அதனால் திருமண தோஷம் ,நவக்கிரக தோஷம் ,சத்ரு தோஷம் ,வாஸ்து தோஷம் ஆகியவைகளுக்கு பரிகார தலமாக இக்கோவில் விளங்குகின்றது.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்
ராஜபோக வாழ்க்கை அருளும் ராஜமாதங்கி அம்மன்
சென்னையில் இருந்து 45 கி.மீ. தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் கோவில். கோவிலுக்குள் நுழைந்தவுடன் விநாயகரை தரிசித்து விட்டு செல்லும்போது தனி சன்னதியில் நமக்கு காட்சி தருபவள் ஸ்ரீ சர்வ சந்தோஷ சக்தி மாதங்கி அம்மன். இவள் ராஜ மாதங்கி என்றும் அழைக்கப்படுகின்றாள். மாதங்கி அம்மனை வணங்கிவிட்டு தான், கருவறையில் உள்ள பவானி அம்மனை வணங்கத் செல்ல வேண்டுமென்பது ஐதீகம். அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையின் கையில் இருக்கும் கரும்பு வில்லே ராஜ மாதங்கியாக உருவெடுத்தது என்றும் கூறப்படுகிறது.
குபேரரின் கடைக்கண் பார்வையை பெற்றுத் தருவதால் இந்த அம்மனுக்கு ராஜமாதங்கி என்ற சிறப்பு பெயர் வந்தது. கலைமகள், மலைமகள், அலைமகள் என மூவரின் அம்சமும் கொண்டவள் ராஜ மாதங்கி. அம்மன் ஒரு கரத்தில் வீணையும் , மறுகரத்தில் கிளியுடனும் காட்சி தருபவள். வீணையின் அம்சம் கலைகளில் வெற்றியும் , கிளியின் அம்சம் வாக்கு வன்மையும் குறிக்கும் . மதுரை மீனாட்சி அன்னையே ராஜ மாதங்கியின் அம்சம்தான் என்பதால், மீனாட்சியை வணங்குவதே, ராஜ மாதங்கியை வணங்குவது போல்தான். இதனால் அரச பதவி வேண்டுவோர், அன்னை ராஜ மாதங்கியை முக்கிய தெய்வமாக எண்ணி வழிபடத் தொடங்கினர். வெள்ளிக்கிழமை தோறும். ராஜமாதங்கி அம்மனை வழிபட்டால் கலைகளில் மேன்மையும் , ராஜபோக வாழ்க்கையும் கிடைக்கும். இந்த அம்மனை நாம் மனதில் உருகி வழிபட ,செல்வத்திற்கு அதிதேவதையான குபேரரின் கடைக்கண் பார்வையை பெற்றுத்தருவதற்கும்,கல்வி, கலை ,ஞானம்,வீரம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குவதற்கும் பாக்கியம் கிட்டும்.

திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்
ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் அமைச்சராக விளங்கும் ஸ்ரீராஜமாதங்கீசுவரி
சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஸ்ரீராஜமாதங்கீசுவரி. இறைவிக்கு அஞ்சனாட்சி, கடம்பவனவாசினி என்று மேலும் 16 பெயர்கள் உண்டு. அம்பிகை, . ஸ்ரீ சக்கரத்தில் எழுந்தருளி இருக்கும், அரசர்க்கெல்லாம் அரசி என்று போற்றப்படும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் அமைச்சராக விளங்குபவள்.
பிரம்மதேவனின் புதல்வரான மதங்க முனிவரின் மகளாக பிறந்தமையால், மாதங்கி என அழைக்கப்படுகிறார். அம்பிகை மாதங்கி, சிவபெருமானை இத்தலத்துக்கு அருகில் உள்ள திருவெண்காட்டு தலத்தில் திருமணம் புரிந்தாள். அதனால் இங்கு திருமண கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.
சரஸ்வதி தேவிக்கு கல்வி உபதேசம் செய்தவள்
சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் மதங்கீசுவரி. சரஸ்வதி தேவிக்கு குருவாக இருந்து கல்வி உபதேசம் செய்தவள் என்பதால் இவளிடம் வேண்டிக்கொள்ள கல்வியில் சிறக்கலாம் என்பது ஐதீகம். புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை பௌர்ணமி மற்றும் அஷ்டமி தினங்களில் அம்பாள் சன்னதி முன்பு நாக்கில் தேன் வைத்து எழுதி 'அக்ஷராப்பியாசம்' செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் அவர்களது கல்வி சிறக்கும் என்கிறார்கள். பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத் தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குகின்றனர். இந்த அம்பிகையை தரிசிப்பவருக்கு கலை, கல்வி, தேர்வில் தேர்ச்சி, உயர் பதவி, தொழில் மேன்மை, பேச்சு வன்மை அனைத்தும் கிடைக்கப்பெறும்.
திருமண தடை நீங்க மட்டை தேங்காயுடன் அர்ச்சனை
திருமணத் தடை உள்ளவர்கள்அஷ்டமி அன்று இவளுக்கு பாசிப்பருப்பு பாயாச நைவேத்யம் படைத்து, மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் தட்டில் வைத்து அன்னைக்கு அர்ச்சனை செய்கின்றனர். பின் அந்த தேங்காயை, 11 மாதங்கள் வீட்டில் வைத்து, மாதந்தோறும் அஷ்டமி அன்று பூஜை செய்து வர வேண்டும். அப்படி செய்தால் 11 மாதங்களுக்குள் அவர்கள் திருமணம் நடைபெறுவது உறுதி என்கிறார்கள். திருமணத்திற்கு பின்னர், தம்பதிகள் ஆலயம் வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சன்னிதியை 11 முறை வலம் வருவார்கள். பிறகு அந்த தேங்காயை அம்மன் சன்னிதிலேயே கட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது.

திரிசூலம் திரிசூலநாதர் கோவில்
மன அமைதி தரும் திரிபுரசுந்தரி அம்மன்
சென்னை விமான நிலையம் எதிரில் அமைந்துள்ள திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திரிசூலநாதர் கோவில். பிரம்மன் வழிபட்ட தலம் இது. நான்கு வேதங்களே, நான்கு மலைகளாக இக்கோயிலைச் சுற்றி இருக்கின்றது. சுரம் என்றால் வளம் நிறைந்த மலை என்று பொருள். மலைகளுக்கிடையே வீற்றிருக்கும் இத்தல இறைவனுக்கு திருச்சுரமுடையார் என்றும் பெயர். இந்த திருச்சுரம் என்பது மருவி. பின்னர் திரிசூலமாகி விட்டது.
இறைவன் திரிசூலநாதர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். சுவாமி அருகில் சொர்ணாம்பிகை கருவறையில் இருக்க, மற்றொரு பிரதான அம்பாள் திரிபுரசுந்தரி தனி சந்நிதியில், தெற்கு நோக்கி எழில்கோலத்துடன் அருள்புரிகிறாள். அம்பிகையின் திருக்கரங்களில் அட்சத மாலையும், தாமரைப் பூவும் திகழ்கின்றன. இதன் மூலம் ஞானத்தையும் செல்வத்தையும் ஒருசேர அருள்பிரசாதமாகத் தருகிறாள் அன்னை திரிபுரசுந்தரி.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரிபுரசுந்தரி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். அன்று அவளை வழிபடுவர்களுக்கு மன அமைதி உண்டாகும் என்பது நம்பிக்கை. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுரசுந்தரிக்கு வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பூப்பாவாடையுடன் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
திரிசூலநாதர் கருவறையில் சொர்ணாம்பிகை எழுந்தருளி இருப்பதற்கு, ஒரு பின்னணி வரலாறு உண்டு. அந்நியர் படையெடுப்பின்போது கோவிலில் இருந்த சொர்ணாம்பிகை தாயாரின் கையில் கட்டைவிரல் சேதமடைந்துவிடுகிறது. அதனால் பின்னப்பட்ட சிலையை வழிபடக்கூடாது என்று கூறி, தனியே வைத்துவிடுகிறார்கள்.அப்போது அர்ச்சகரின் கனவில் வந்து தனது பின்னத்தை சரிசெய்து, மீண்டும் திரிசூலநாதரின் அருகே வைக்குமாறு தாய் அருள் கூற, அதன்படி சிலையின் பின்னப்பட்ட விரலுக்கு பதிலாக தங்கத்தில் விரல் செய்து பின்னர் திரிசூலநாதரின் அருகிலேயே சொர்ணாம்பிகையை இருக்கச் செய்திருக்கிறார்கள்.

அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில்
மூன்று முகங்கள் கொண்ட அபூர்வ விஷ்ணு துர்க்கை
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில். ருத்ராட்சப்பந்தலின் கீழ் இறைவன் அமைந்துள்ளார். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில், இக்கோவிலும் ஒன்றாகும்.
ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சமாக, தனது நான்கு கைகளில் இரண்டில் சங்கமும், சக்கரமும் ஏந்தி காட்சி தருபவள் விஷ்ணு துர்க்கை எனப்படுகிறாள். பதினெட்டு அல்லது எட்டு அல்லது நான்கு கைகளுடனும் ஒவ்வொரு கைகளிலும் கத்தி சூலம் போன்ற ஆயுதங்களுடனும், அசுரர்களை எதிர்த்து போரிடும் உக்கிர சொரூபமாகக் காட்சிக் கொடுப்பவள் சிவதுர்க்கை எனப்படுகிறாள். இந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் விஷ்ணு துர்க்கை மூன்று முகங்களுடன் அபூர்வ கோலத்தில் காட்சி தருகிறாள். இப்படி மூன்று முகம் கொண்ட விஷ்ணு துர்க்கை தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லை.
இந்தக் கோவிலில் எழுந்தருளியுள்ள மூன்று முக விஷ்ணு துர்க்கையைத் தரிசித்தால் முன் ஜன்ம வினைகள் உடனே தீரும். திருமணமாகி மன வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதிகள் இங்கு வந்து, இந்த மூன்று முக துர்க்கையைப் பிரார்த்தித்தால், விரைவில் மன வேறுபாடு நீங்கி ஒன்று சேருவார்கள் என தல வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது. மூன்றுமுக விஷ்ணு துர்க்கைக்குச் சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் வாழ்வு வளம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்
தினமும் குழந்தை, இளம்பெண், பெண் என மூன்று வித தோற்றங்களில் காட்சி தரும் அம்பிகை
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருநாகேஸ்வரம். இறைவன் திருநாமம் நாகநாதசுவாமி. இத்தலத்தில் கிரிகுஜாம்பிகை மற்றும் பிறையணிவாள் நுதல் அம்மை என இரண்டு அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.
கிரிகுஜாம்பாள் அம்பிகை தனிச் சன்னதியில் தவக்கோலத்தில் காட்சியளிக்கின்றாள். கிரிகுஜாம்பிகையின் வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர் . கிரிகுஜாம்பிகை காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாக, பெண்ணாகவும் அலங்கரிங்கப்படுகிறார்.
கிரிகுஜாம்பிகையின் திருவடிவம் சுதையால் ஆனது என்பதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். மார்கழி மாதத்தில் 48 நாட்கள் புனுகு சட்டம் மட்டுமே சாற்றுவது வழக்கம். அந்நாட்களில் அம்பிகையை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை மாதத்தில் அம்பாளுக்கு, புனுகு காப்புத் திருவிழா நடைபெறும். தை கடைசி வெள்ளியன்று அம்மனது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைத்து சிறப்பு பூஜை நடைபெறும்.
இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் ராகுவிற்கான பரிகார தலமாகவும் விளங்குகிறது.

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில்
முப்பெரும் தேவியரும் ஒன்றாய் இணைந்திருக்கும் கோட்டை மாரியம்மன்
திருப்பூர் பிச்சம் பாளையம் பகுதியில் அமைந்துள்ளது கோட்டை மாரியம்மன் கோவில். இக்கோவில் திருப்பூர் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. தாயாய் இருந்து இந்தப் பகுதி மக்களை காப்பதால், இக்கோவிலுக்கு தாய்மை கோவில் என்ற பெயரும் உண்டு. விஜயநகரப் பேரரசு காலத்தில் இங்கு கோட்டை கட்டப்பட்டதாகவும், அதையடுத்து கோட்டைக்குள் அம்மனின் விக்கிரகத்தைப் பிரதிட்டை செய்து கோவில் அமைத்ததாகவும், அதனால் அம்மனுக்கு ஸ்ரீகோட்டை மாரியம்மன் எனத் திருநாமம் அமைந்ததாகவும் சொல்கின்றனர்.
ஸ்ரீதுர்கை, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் ஒருங்கே இணைந்து காட்சி தரும் திருக்கோலத்தில் அமைந்திருக்கிறாள் கோட்டை மாரியம்மன். திருமுகத்தில் லட்சுமி கடாட்சம் பொங்க, யோக நிலை ஸ்ரீசரஸ்வதி தேவியின் அம்சமாகவும், ஆயுதம் ஏந்திய நிலை ஸ்ரீதுர்கையை நினைவூட்டுவதாகவும் இந்த அம்மனின் தோற்றம் விளங்குகின்றது.
பிரார்த்தனை
திருமணத் தடை, தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் பிரச்னை எனத் தவிப்பவர்கள், செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளிலும், மாதாந்திர அஷ்டமி நாட்களிலும் தொடர்ந்து 12 வாரங்கள் வந்து, அம்மனுக்குத் திரிசதி அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபட்டால், கல்யாண வரம், பிள்ளை பாக்கியம் கைகூடும். தொழில் சிறக்கும். குடும்பத்தில் இருந்த கவலைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்! கோவிலில் உள்ள நாகர் சந்நிதி மிகவும் சக்தி வாய்ந்தது . வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில், இங்கு வந்து நாகருக்குப் பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், நாக தோஷம் விலகும். மார்கழி முழுவதும் வந்து அம்மனைத் தரிசித்தால், நிம்மதி தேடி வரும் என்பது ஐதீகம்.

தக்கோலம் ஜலநாதீசுவரர் கோவில்
பிரயோக நிலையில் சக்கரத்தை ஏந்தி இருக்கும் அபூர்வ துர்க்கை
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தக்கோலம். இறைவன் திருநாமம் ஜலநாதீசுவரர். இறைவி கிரிராஜ கன்னிகை.
இக்கோவில் பிரகாரத்தில் எழுந்தருளி இருக்கும் துர்க்கை நான்கு திருக்கரங்களுடன், ஸ்ரீ திரிபங்கி நிலையில் காட்சித் தருகின்றாள். திரிபங்கி நிலை என்பது தலை, இடை, கால்கள் என உடலின் மூன்று பகுதிகளும், வளைவுகளுடன் மிகவும் ஒய்யாரமாக நிற்கும் நிலையாகும். தலையில் சிம்மமுகத்துடன் கூடிய கரண்டமகுடமணிந்துள்ளார். கண்களில் தாய்மை. இதழ்களில் ஒரு புன்னகை. காதுகளில் மகர குண்டலமும், கழுத்தில் அணிகளன்களுடன் கூடிய சரப்பளிகளை நாம் காணலாம். கையில் சங்கு, சக்கரத்துடன் காணப்படுகிறாள். வலது கையில் இருக்கும். பின் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தி இருக்கின்றாள். வலது பின்கையில் உள்ள சக்கரம், பிரயோக நிலையில் இருக்கின்றது. இப்படி பிரயோக சக்கரத்தை ஏந்தி இருக்கும் துர்க்கையை நாம் காண்பது அரிது. இடது முன்கையை எந்த ஒரு முத்திரையும் காண்பிக்காமல் இடது தொடையின் மேல் வைத்துள்ளாள். மார்பில் சன்னவீரம், கொடி இடை, புலிக்கச்சுடன் கூடிய இடை ஆடை. கால்கள் வளைந்த நிலையில் ஸ்வஸ்திகத்தில் உள்ளன. பூத வரியில், பறவை முதற்கொண்டு தலைகீழாக தொங்கும் பூதங்கள், மத்தளம், ஒருகண் சிறுபறை முழக்கும் பூதம், கையில் தாளம் போடும் பூதம், இசை பாடும் பூதம் முதலியவை இருக்கின்றன. துர்க்கை அணிந்திருக்கும் அணிகலன்களின் வேலைப்பாடு நம்மை பிரமிக்க வைக்கின்றது.
துர்க்கை காயத்ரி
துர்க்கை என்றால் துக்கங்களையெல்லாம் போக்குபவள் என்று அர்த்தம். நம் துக்கங்களையெல்லாம் போக்கும் பணியை மேற்கொள்ளும் தேவதைகளில் துர்க்கைக்கு தனியிடம் உண்டு. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவதும் ராகுகாலத்தில் தீபமேற்றி வழிபடுவதும் எண்ணற்ற பலன்களை வழங்கவல்லது. அதேசமயம், தினமும் கீழ்க்கண்ட துர்க்கை காயத்ரியை 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 முறை சொல்வது நல்ல பலனை கொடுக்கும்.
ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்
அதாவது, காத்யாயன மகரிஷியின் மகளாக அவதரித்தவளே. நித்திய குமரியாக திகழ்பவளே. உன்னை வணங்கித் தொழுவதால், என்னுடைய மனதை தெளிவுபடுத்துவாயாக. குழப்பமில்லாத மனதையும் அறிவையும் மேம்படுத்துவாயாக. நற்பலன்களை வாரி வழங்கும் உன்னுடைய பாதங்களைப் பணிகிறேன் என்று அர்த்தம்.