காரடையான் நோன்பு

கணவரின் ஆயுள் விருத்திக்காக சுமங்கலிகள் கடைபிடிக்கும் காரடையான் நோன்பு (சாவித்திரி விரதம்)

மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் காரடையான் நோன்பு, அனைத்து சுமங்கலி பெண்களாலும் அனுஷ்டிக்கப்படுகிறது. இதை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்திரி விரதம் என்று கூறுவர். எமதருமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை எப்படிக் காப்பாற்றினாள் என்பது தொடர்பான பண்டிகை இது. இந்த சுமங்கலி நோன்பு தென் இந்தியர்கள் மட்டுமல்ல வட இந்தியர்களாலும் சுக்கிரனின் பலம் நிறைந்த வைகாசி மாதத்தில் பௌர்னமி திதியன்று சுக்கிர வாரத்தில் "வட சாவித்திரி விரதம்" என்ற பெயரில் அனுஷ்டிக்கப்படுகிறது.

காரடையான் நோன்பின் தத்துவம்

கார் என்றால் இருள். இருள் சூழ்ந்திருக்கும் எமப்பட்டினத்தை அடையாதவன் கார்- அடையான் என்று கூறப்பட்டது. இந்த விரதத்தை சுமங்கலிகள் அனுஷ்டித்தால் அவர்களுடைய கணவன்மார்கள் எமப்பட்டினத்தை அடையார் என்பதே இந்த காரடையான் நோன்பின் பெயர் வரக்காரணமாகும்.

மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்து கொள்கிற மஞ்சள் கயிறானது, பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும் கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.

காரடையான் நோன்பிருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி

மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் ஒரே மகள் சாவித்திரி, வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி. மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள்.

சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள். இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார்.

சாவித்திரி சமயோசிதமாக, என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார்.

அன்னை காமாட்சி தேவியை நினைத்து நோன்பிருந்து, தனது கணவர் சத்யவானின் உயிரை, எமதர்ம ராஜாவிடம் போராடி சாவித்திரி மீட்டு கொண்டு வந்த தினமே காரடையான் நோன்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.

காரடையான் நோன்பு முறை

கற்புக்கரசி சாவித்திரி தன் கணவனின் ஆயுள் முடிவதற்கு மூன்று நாட்கள் முன் கௌரி பூஜை செய்து கணவனின் ஆயுளை காப்பாற்றினாள். விரதம் இருக்கும் பெண்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள காமாட்சி அம்பாளின் படம் அல்லது ஏதாவது அம்மன் படத்தின் முன் விளக்கேற்றி வைக்க வேண்டும். ஒரு இலை போட்டு அதன் மீது வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி, பூஜை ஆகிய தாம்பூல பொருட்களை வைக்க வேண்டும். சாவித்திரி நோற்ற நோன்பை குறிக்கும் விதமாக, நோன்பின் போது சுமங்கலிகள் அரிசி மாவும் ,வெல்லப்பாகும் சேர்த்து அடைதட்டி கற்களின் அடையாளமாக காராமணி பயிரை வேக விட்டு கலந்து, கௌரியை வேண்டி விரதமிருந்து நோன்பு கயிறை கட்டி கொண்டால் ,கணவனின் ஆயுள் அதிகரிக்கும் .

'உருக்காத வெண்ணையும், ஓரடையும் நான் படைத்தேன். ஒருக்காலும் என் கணவன் பிரியாதிருக்க வேண்டும்' என்று சொல்லிக்கொண்டே மணமான பெண்கள் நோன்பு சரடு கட்டிக்கொள்ள வேண்டும் .

Previous
Previous

பொன்மார் தியாக வினோதப் பெருமாள் கோவில்

Next
Next

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்