சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்

எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவக் கோவில்

மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள சோழவந்தானில் அமைந்துள்ளது ஜெனகை மாரியம்மன் கோவில். மதுரையைப்போல இவ்வூரையும் கோவில் நகரம் என அழைக்கின்றனர். இந்த மாரியம்மனை ஜனக மகாராஜா வணங்கியதாக தல வரலாறு கூறுகிறது. இதனால் இந்த மாரியம்மன் 'ஜனகை மாரி' என்றழைக்கப்பட்டு பின்னர், 'ஜெனகை மாரி' என்று பெயர் பெற்றாள்.

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் கருவறையில் ஜெனகை மாரியம்மன் இரண்டடி உயர திருமேனியுடன் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். அவருக்குப் பின்புறம் சந்தனமாரியம்மன் ஆக்ரோஷமாக நின்ற நிலையில் எழுந்தருளி இருக்கிறார். சொல்லி வரம் கொடுப்பாள் சோழவந் தான் ஜெனகை மாரி என்பது இவ்வூர் மக்களின் வேதச் சொல் ஆகும். இப்பகுதியில் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஜெனகைமாரி என பெயர் வைத்திருப்பார்கள்

இக்கோவிலில் குடிகொண்டுள்ள ஜெனகை மாரியம்மன், சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 48 கிராம மக்களுக்கும் குல தெய்வமாக உள்ளார். எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவ கோவில் இது. அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத் துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டு அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தம் வாங்கி குடிக்க வேண்டும். இது மஞ்சள் வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும், அம்பாள் கருணையும் கலந்த அபூர்வ தீர்த்தம் ஆகும். அம்மை போட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு குணமடைவது இப்பகுதியில் மிகவும் பிரபலம். குழந்தை பாக்கியம். திருமண வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.

பெண் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி, கோவிலில் தொட்டில் கட்டி பூஜை செய்வது வழக்கம். குழந்தை வரம் கிடைக்கப் பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் கட்டி குழந்தையை எடுத்து கோவிலை சுற்றி வருகின்றனர். விவசாயம் செழிப்படைய வேண்டிக் கொண்டவர்கள் தானியங்களை கொண்டு வந்து கொட்டி அம்மனுக்கு காணிக்கை செய்கின்றனர்.

திருவிழாவின் முடிவில் மழை தூரல் விழும் அதிசய நிகழ்ச்சி

இக்கோவிலில் தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா நடைபெறுவது ஒரு தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் விஜய தசமி அன்று வைகை ஆற்றில் நடக்கும் அம்பு போடுதல் திருவிழாவின் முடிவில், மழை தூரல் விழுவது இத்தல த்தில் இன்றளவும் நடக்கும் அதிசய நிகழ்ச்சியாகும்.

 
Previous
Previous

காரடையான் நோன்பு

Next
Next

சிவபுரி உச்சிநாதர் கோவில்