வில்வவனேசுவரர் கோவில்
பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்கும் அபூர்வ கோலம்
கும்பகோணம் திருவையாறு சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவைகாவூர். இறைவன் திருநாமம் வில்வவனேசுவரர்
இத்தலத்தில் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்குகிறார்கள். அதனால் இத்தலம் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படுகிறது.
பிரளய காலத்தில் தன்னுடைய ஆக்கும் தொழில் அழியாமல் இருக்க பிரம்மா இங்கே ஒரு கேணி உண்டாக்கி சிவபெருமானை வழிபட்டபின் ஆலய துவாரபாலகனாக ஒருபுறம் அமர்ந்து விட்டார். சலந்திரனை அழிப்பதற்காக அவன் மனைவியிடம் ஒரு பொய் கூறினார் திருமால். இதை அறிந்து கொண்ட அவள் மகாவிஷ்ணுவை சபித்தாள். அச்சாப்ம் தீரவே திருமால் இங்கே துவாரபாலகனாக நின்று தவம் புரிகிறார் என்கிறது தலபுராணம். இப்படி பிரம்மாவும், விஷ்ணுவும் துவாரபாலகர்களாக நிற்பது வேறு எந்த ஆலயத்திலுமே பார்க்க முடியாது.
வீணையுடன் தட்சணாமூர்த்தி
பெருமாள், பிரம்மாவிற்கு அருகில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட 4 அடி உயர தட்சணாமூர்த்தி நின்ற கோலத்தில் கையில் வீணையுடன் அருள்பாலிக்கிறார். இப்படி வீணை ஏந்திய தட்சணாமூர்த்தியை வேறு எங்கும் காண முடியாது
துர்க்கைக்கு எதிரில் இரு சண்டேஸ்வரர் திருமேனிகள் உள்ளன. இதுவும் ஒரு அபூர்வ அமைப்பாகும். நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வில்வவனேசுவரர் கோவில்
பக்தர்களின் குறைகளுக்கு உடனே தீர்வு கூறும் அம்பிகை
கும்பகோணம் திருவையாறு சாலையில் தியாகசமுத்திரம் வழியாக புள்ளபூதங்குடி அடுத்து உள்ளது திருவைக்காவூர் என்னும் தேவாரத்தலம். ஆலயத்தின் மூலவர் வில்வவனேசுவரர், சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கிய சன்னதியில் அமர்ந்து இருக்க அவர் சன்னதியின் இடதுபுறம் வளைக்கைநாயகி எனும் பெயருடன் அம்பாள் தனி சன்னதியில் இருக்கின்றார்.
இந்த கோயிலில் உள்ள அம்பாள் வளைக்கை நாயகி மிகவும் அருள் வாய்ந்தவர். இங்கு அம்பாளுக்கு சர்வஜனரட்சகி என்ற பெயரும் உண்டு. அம்பாளிடம் தங்கள் குறை தீர்க்க தேடி வரும் பக்தர்கள், செவ்வாய் கிழமை, வெள்ளிக் கிழமைகளில் மாலை 6 லிருந்து 7:30 க்குள் அம்பாளுக்கு முதலில் அர்ச்சனை செய்கிறார்கள். பின்னர், தங்கள் குறைகள் எதுவென்றாலும் அதை அம்பாளுக்கு எதிரில் உள்ள ஸ்ரீசக்கரம் அருகில் நின்று பிரார்த்தனை செய்கிறார்கள். இங்கு நின்று வழிபட்டுக்கொண்டிருக்கும்போதே சுவாமி சந்நிதியில் தீபாராதனை காட்டி முடித்து விட்டு அர்ச்சகர், அம்பாள் சந்நிதிக்கு வந்து நம் பிரார்த்தனை இன்னது என்றும் அது இத்தனை நாளில் கை கூடும் என்று கூறிவிடுவார். அவர் கூறியது போலவே எல்லா விஷயங்களும் நிகழ்ந்திருப்பதாக இத்தலத்து பக்தர்கள் கூறுகின்றனர்.
வில்வவனேசுவரர் கோவில்
கலை அம்சத்துடன் காட்சி தரும் சண்முகர்
முருகன் என்றால் அழகு என்ற பொருளும் உண்டு. திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோவிலிலுள்ள சண்முகர் விக்கிரகம் கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ள அற்புதப் பொக்கிஷமுமாகும். சிக்கல், எண்கண், எட்டுக்குடி, பட்டுகுடி ஆகிய தலங்களிலுள்ள கலையழகு மிக்க முருகன் சிலை வடித்த சிற்பியால் செய்யப்பட்ட சிலை இது.
இத்தலத்து சண்முகர் விக்கிரகம், மயில், திருவாசி ஆகியன அனைத்தும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டது ஆகும். முருகன் கையிலுள்ள ரேகைககள், மயிலின் தோகைகள், மயிலின் அலகில் உள்ள நாகத்தின் நளினமான உடல் அனைத்தும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. இந்த விக்ரகத்தில் கை ரேகை, நகம் எல்லாமே மிகத் தெளிவாக தெரியும். பொதுவாக முருகனின் வலது பக்கம் திரும்பியிருக்கும் மயில், இந்த சிற்பத்தில் இடப்புறமாக திரும்பியிருப்பது மற்றுமொரு தனிச்சிறப்பாகும்.
அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.
வில்வவனேசுவரர் கோவில்
மகாசிவராத்திரி வழிபாடு பிறந்த தேவாரத்தலம்
கும்பகோணம் திருவையாறு சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவைகாவூர். இறைவன் திருநாமம் வில்வவனேசுவரர. இறைவி வளைக்கைநாயகி. மகாசிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படும் தலங்களில் திருவைகாவூர் ஒன்றாகும். சிவராத்திரி வழிபாடு பிறந்தது இத்தலத்தில்தான் என்பது ஐதீகம். வேதங்கள் வில்வ மரமாக இருந்து வழிபட்டதால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு 'வில்வவனேசுவரர்' என்றும் பெயர் வந்தது. பெருமாள், பிரம்மா இருவரும், இறைவன் சன்னதியில் துவார பாலகர்களாக உள்ளனர். அதனால் இத்தலம் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படுகிறது.
தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவர் மீது அம்பெய்த முற்பட்டான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து, வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன.
அன்று மகா சிவராத்திரி நாள். ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். யமன் மறுபடி உள்ளே வராமல் இருப்பதற்காக, இங்குள்ள நந்தி இறைவனை நோக்கி இல்லாமல், வாசலைப் பார்த்தபடி இருப்பதாக ஐதீகம்.
சிவராத்திரி விழா, சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன் இங்கு விமரிசையாக நடக்கும். மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, கருவறையில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன், வேடன், வேடுவச்சியும் புறப்பாடாவர்.
கல்யாண வரம், குழந்தை வரம், தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.