குற்றாலம் சித்திரசபை கோவில்
சித்திர வடிவில் இறைவனை வழிபடும் ஒரே தலம்
குற்றாலம் சித்திர சபை, பாண்டிய நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்றான குற்றால நாதர் கோவிலுக்குப் அருகில் தனிக்கோவிலாக உள்ளது. குற்றாலத்தின் மெயினருவி போவதற்கான வளைவைத் தாண்டி, ஐந்தருவி போகும் வழியில், தேர் நிலைக்கு பக்கத்தில் அமைந்துள்ளது குற்றால சித்திர சபை. சித்திரசபை பிரமிடுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை தாமிரத் தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
நடராசப் பெருமான் திருத்தாண்டவம் ஆடியுள்ள ஐந்து சபைகளில் ஒன்றுதான் குற்றாலம் சித்திரசபை.
மற்ற நான்கு சபைகள்:
சிதம்பரம் நடராசர் கோவில் - கனகசபை
திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோவில் - இரத்தினசபை
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் - வெள்ளிசபை
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் - தாமிரசபை
பொதுவாக கோவில்களில் விக்கிரக வழிபாடுதான் பிரதானமாக இருக்கும். ஆனால் சித்திர வடிவில் இறைவனை வழிபடுவது உலகிலேயே குற்றாலம் சபையில் மட்டும்தான். சித்திரசபையில் நடராஜப் பெருமான் தேவியுடன் ஓவியமாக எழுந்தருளியிருக்கிறார். பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுரதாண்டவம் இந்த சபையில் நடைபெற்றதாக திருப்பத்தூர் புராணம் கூறுகிறது.
சித்திரசபையில் இறைவன் திருநடனம் புரியும் காட்சியைக் கண்டு பிரம்மதேவன் ஆதி சிவனின் சொரூபங்களைச் சுவரில் எழுதிவைத்தார். இதனால் வியாசர் முதலியோர் இதனைச் சித்திரசபை என்று அழைத்ததாக புராணங்கள் கூறுகிறது. தேவர்கள் தினமும் வந்து சித்திரசபையை தரிசித்து செல்கின்றனர் என்பது நம்பிக்கையாகும். நடராஜப் பெருமான், வடக்கே உள்ள திருவாலங்காட்டை விட்டு தெற்கே குற்றாலத்தை நோக்கி வந்தது இங்கு வீசும் தென்றல் காற்றில் இளைப்பாறவும், தீந்தமிழை அனுபவிக்கவும் என்று பரஞ்ஜோதி முனிவர் கூறுகியிருக்கிறார்.
சித்திரசபையின் உட்சுவற்றில் மதுரை மீனாட்சி கல்யாண வைபவம், முருகரின் அவதாரங்கள், விநாயகர், துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், திருவிளையாடற்புராண வரலாறுகள், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்த கோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகவான், ரதி - மன்மதன் ஆகியவை வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன.
மார்கழி மாதம் திருவாதிரை விழா இங்கு விமர்சையாக நடைபெறும். மார்கழி திருவாதிரை திருவிழாவின்போது முதலில் சித்திரசபையில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே, குற்றாலநாதர் கோவிலில் பூஜைகள் நடத்தப்படும்.
நடராஜருக்கு வருடத்துக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில், மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் முக்கியமான திருவிழாக்கள். இதில் குறிப்பாக, ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், தேவர்கள், நடராஜப் பெருமானுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனி மாதத்தில், எல்லா சிவாலயங்களிலும் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் உத்திர நட்சத்திர நாளில் நடைபெறும். இதுவே ஆனித் திருமஞ்சனம் என்று போற்றப்படும்.
ஆனித் திருமஞ்சனம் இன்று (12.07.2024) நடைபெறுகின்றது.
குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவில்
லட்சுமி, சரசுவதி தேவியருடன் இணைந்து அருள் பாலிக்கும் செண்பகாதேவி அம்மன்
குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. அகத்திய மாமுனிவர் செண்பகாதேவி அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளார். செண்பகாதேவியானவள், துர்க்கை அம்மனின் பிறப்பாக பராசக்தி வடிவில் அருள்பாலிக்கிறார். குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. செண்பகாதேவி அம்மன் கோயில் பெருமையை குற்றால தல புராணத்தில் சிறப்பாக பாடப்பட்டுள்ளது.
இக்கோவில் செண்பகாதேவி அருவி அருகில் அமைந்துள்ளது. இங்கு செண்பகாதேவி அம்மன் கோவில் இருப்பதாலேயே இங்குள்ள அருவிக்கு செண்பகாதேவி அருவி எனப் பெயர் பெற்றது. இந்த ஆலயத்தில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் என்ற அமைப்புகளுடன் உள்ளது. இங்கு லட்சுமி, சரசுவதி தேவியருடன் இணைந்து செண்பகாதேவி அம்மன் கருவறையில் காட்சியளிக்கின்றனர். செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலை சுற்றி விநாயகர் அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களின் சிலை மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட நந்தி சிவலிங்கம் போன்றவையும் உள்ளது. இங்குள்ள அம்மனுக்கு ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி அன்று திருவிழா சிறப்பாக நடைபெறும். சித்திரை மாதம் பௌர்ணமி பூஜையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
குற்றாலநாதர் கோவில்
குற்றாலம் குழல்வாய்மொழி அம்மன்
தென்காசி மாவட்டம்., தென்காசி நகரிலிருந்து மேற்கே சுமார் 5 கி. மீ தொலைவில். ஸ்ரீகுற்றாலநாதர் உடனுறை ஸ்ரீகுழல்வாய்மொழி ஆலயம் அமையப்பெற்றுள்ளது.
இங்குள்ள அம்பிகை குழல்வாய்மொழி. வடமொழியில் வேணுவாக்வாகினி என்றும் அழைக்கப்படுகிறாள். இதற்கு, மூங்கிலால் செய்யப்பட்ட புல்லாங்குழலில் இருந்து எழும் இசையை காட்டிலும் இவளுடைய குரல் இனிமை வாய்ந்தது என்று பொருள்.
உயரமான கருவறையில் அம்பிகை நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறாள். வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடக்கரத்தை கீழே தொங்கவிட்டபடியும் புன்முறுவல் பூத்த முகத்தவளாய் காட்சிதருகிறாள்.
தரணி பீடம்
அம்பிகையின் சக்தி பீடங்களுள் இத்தலம் 'தரணி பீடம்' என்று சிறப்பிக்கப்படுகிறது. அகத்தியர் இங்கு திருமால் தலத்தை, சிவத்தலமாக மாற்றியபோது திருமாலுக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி, குழல்வாய்மொழிநாயகியாகவும், பூதேவி, பராசக்தியாகவும் மாற்றினாராம். பராசக்தி, இங்கு ஸ்ரீசக்ர அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவில் காட்சி தருகிறாள். பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இந்த பீடத்திற்கு, 'தரணி பீடம்' (தரணி – பூமி) என்று பெயர். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த பீடம் இருப்பதாக ஐதீகம். எனவே, பவுர்ணமியன்று இரவில் 'நவசக்தி' பூஜை செய்கின்றனர். அப்போது, பால், வடை பிரதானமாக படைக்கப்படும். இவள் உக்கிரமாக இருப்பதால், இவளுக்கு எதிரே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், 'காமகோடீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார். பவுர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்து, விசேஷ பூஜை செய்து வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் அம்பாளுக்கு சந்தனக்காப்பு செய்யப்படுகிறது.இரவு எண்ணைய் தீப விளக்குகளின் ஒளியில் அம்பிகையின் தரிசனம் பார்ப்பவரை பரவசம் அடையச் செய்யும்.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி நான்காம் நாளன்று வெளியான பதிவு
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்
https://www.alayathuligal.com/blog/wl7ltlrte5zw89gr4xkt4kns3e974y