செய்யூர் கந்தசாமி கோவில்

27 நட்சத்திர வேதாளங்கள் புடைசூழ எழுந்தருளி இருக்கும் அபூர்வ முருகன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகத்தில் இருந்து 26 கி மீ தொலைவில் அமைந்துள்ள திருப்புகழ் தலம், செய்யூர் கந்தசுவாமி கோவில். கர்ப்ப கிரகத்தில் கந்தசாமி, வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். வெளிப் பிரகாரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்றாக மொத்தம் 27 பூத கண வேதாளங்கள், தனிச் சன்னதியில் கோவிலைச் சுற்றி எழுந்தருளி இருக்கிறார்கள்.

வழக்கமாக சிவதலங்களில் விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை ஆகியோர் கருவறை சுற்றுச்சுவரில் கோஷ்ட தெய்வங்களாக எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், இக்கோவிலில் விநாயகருக்கு பதிலாக நிருத்த ஸ்கந்தரும், தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தில் பிரம்ம சாஸ்தாவும், விஷ்ணு மாடத்தில் பாலஸ்கந்தரும், பிரம்மாவின் இடத்தில் சிவகுருநாதனும், துர்க்கை இருக்கும் இடத்தில் புலிந்தரும் (வேடர் உருவில் இருக்கும் முருகன்) காட்சியளிக்கின்றனர். . இங்கிருக்கும் சூரியனும் முருகனின் அம்சமாகவே கருதப்பட்டு குகசூரியன் என்று அழைக்கப்படுகிறார். இப்படி கோஷ்ட தெய்வங்கள் அனைத்தும் சுப்பிரமணிய ரூபங்களாய் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்

இக்கோவிலில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் வேறு எந்த ஊரிலும் உள்ள கோவில்களில் இல்லாத ஒன்றாகும். அது வெளிப்பிரகாரத்தை சுற்றி அமைந்துள்ள, நட்சத்திர வேதாளங்களாகும். ஆனால், இங்குள்ள வேதாளங்கள் முருகன் சூரபத்மனையும், பிற அரக்கர்களையும் வதைக்கும்போது அவருக்கு துணை புரிந்த சிவகணங்களாகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்றாக, அஸ்வினி முதல் ரேவதி நட்சத்திரம் வரை, மொத்தம் 27 பூத கண வேதாளங்கள் இக்கோவிலைச் சுற்றி அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.

இவ்வேதாளங்கள் பைரவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டவை. எனவேதான், இக்கோவிலில் வேதாளங்கள் மட்டுமின்றி பைரவரும் காணப்படுகின்றார். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் அவரவர் நட்சத்திற்குரிய வேதாளங்களை வழிபட்டு தம் கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தால், அக்கோரிக்கைகளை வேதாளங்கள், பைரவர் மூலமாக முருகனிடம் கொண்டு போய் சேர்த்து, அவை நிறைவேற்றப்படுவதாக ஐதீகம். இப்பூஜை மூலம் பயனடைந்தோர் ஏராளம். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் பல மக்கள் இக்கோவிலை நாடி வருவதே இதற்கு ஒரு நல்ல சான்றாகும்.

தேய்பிறை அஷ்டமி அன்று மாலை 'வேதாள பூஜை' விநாயக சங்கல்பத்துடன் தொடங்குகிறது. பிறகு 5 மணிக்கு ஒவ்வொரு நட்சத்திர வேதாளத்திற்கும் செவ்வரளி பூக்களால் பூஜையும், மாலை 7 மணிக்கு மூலவர் அபிஷேகமும், இரவு 8 மணிக்கு பைரவருக்கு அஷ்ட புஷ்பார்ச்சனையும் நடைபெறுகின்றது.

 
Previous
Previous

சிங்கவரம் ரங்கநாதர் கோவில்

Next
Next

திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோவில்