சிங்கவரம் ரங்கநாதர் கோவில்

பாவம் நீக்கும் ரங்கநாதரின் பிரம்மாண்ட பாத தரிசனம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்து வடக்கே நான்கு கி.மீ. தொலைவில், 1500 ஆண்டுகள் பழமையான சிங்கவரம் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. சுமார் 160 படிகளைக் கொண்ட மலைக்கோவில் இது. இந்த ஊர் முற்காலத்தில் விஷ்ணு செஞ்சி என்றும், திருப்பன்றி குன்றம் என்றும், சிங்கபுரம் என்றும் அழைக்கப்பட்டது. தாயார் திருநாமம் ரங்கநாயகி.

பாறையை குடைந்து கட்டப்பட்டுள்ள இந்த குடைவரைக் கோவிலில்,ரங்கநாதர் பிரம்மாண்ட கோலத்தில் சுமார் 14 அடி நீளமுள்ள திருமேனியுடன், போக சயன நிலையில் எழிலோடு காட்சி தருகின்றார். தமது வலது கரத்தினை கீழே தொங்கவிட்ட நிலையில், கீழே அனுமன், மேலே சக்ரத்தாழ்வார், இடது கையில் சின்முத்திரை, அருகே கந்தர்வர், நாபிக் கமலத்தில் பிரம்மன், கருடன், ஜெயவிஜயன், மார்பில் மகாலட்சுமி, திருவடியில் பூதேவி, நாரதர், பிரகலாதன், பிருகு, அத்திரி முனிவர்கள் ஆகியோரும் உடன் இருக்கிறார்கள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரிய திருமேனி உடையவர் இவர். மிகப்பெரிய பெருமாளான இவரை மூன்று வாயில்கள் வழியாகச் சென்று தான் முழுமையாக தரிசிக்க முடியும். முதல் நிலையில் பெருமாள் திருமுகம், மேலிருக்கும் பஞ்சமுக ஆதிசேஷன், வலது திருக்கரம், நாபிக்கமலத்தில் கந்தர்வ பிரம்மா, மார்பில் மகாலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம். மத்திய பாகத்தில் ஸ்ரீகருடன் தரிசிக்கலாம். மூன்றாம் நிலையில் திருவடி, அதன் கீழ் பூமா தேவி, நாரதர், பிரகலாதன், பிருகு, அத்திரி போன்ற முனிவர்களை காணலாம்.எம்பெருமானின் பிரம்மாண்ட பாத தரிசனம் பாவம் நீக்கும் தரிசனம் என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.

பிரார்த்தனை

பெருமாள் இத்தலத்தில் எமனை எச்சரிக்கை செய்வது போல தெற்கு நோக்கி தன் திருமுகத்தை வைத்துள்ளதால், இவரைத் தரிசனம் செய்பவர்களுக்கு எமபயம் கிடையாது. எனவே சஷ்டியப்த பூர்த்தி மற்றும் எண்பதாம் கல்யாணம் நடத்த சிறந்த தலமாக விளங்குகின்றது.

இவரது பாதம் பார்த்து வணங்குபவர்களுக்கு வறுமை நீங்கி செல்வம் சேரும்.

தேசிங்கு ராஜாவால் ஏற்பட்ட வருத்தத்தினால் முகத்தை திருப்பிக் கொண்ட ரங்கநாதர்

செஞ்சியை ஆண்ட தேசிங்கு ராஜனுக்கு இந்த பெருமாளே குலதெய்வம், ஒருமுறை தேசிங்கு தன்னை எதிர்த்த ஆற்காடு நவாப்புடன் போருக்கு செல்லும் முன், இங்கு வந்து பெருமாளை வணங்கினார். ஆனால் பெருமாளுக்கோ, தேசிங்கு ராஜன் போருக்கு செல்வது பிடிக்கவில்லை. அதற்கு பெருமாள் இன்று உன்னுடைய ஜென்ம நட்சத்திர நாள். அதனால் போருக்கு போக வேண்டாம், தோல்வியை தழுவுவாய் என பெருமாள் அசரீரியாக கூறியுதாகவும், அதற்கு தேசிங்குராஜன் நான் சத்திரியன், போருக்கு புறப்பட்டு வந்து விட்டேன், முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன், போருக்கு போய் தீருவேன் என கூறினார். எனவே பெருமாள் தன் முகத்தை திருப்பிக் கொண்டார். இருந்தாலும் தேசிங்கு ராஜன் போருக்கு சென்று எதிரிகளை விரட்டி அடித்து விட்டு வீர மரணம் எய்தினார் என்பது வரலாறு. இப்போதும் ரங்கநாதர் முகம் திரும்பிய நிலையில் இருப்பதை காணலாம்.

 
Previous
Previous

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

Next
Next

செய்யூர் கந்தசாமி கோவில்