பூமீஸ்வரர் கோவில்
மனிதரைப் போல ரோமம், மச்சம், ரேகை, நகம் ஆகிய அம்சங்கள் உடைய நடராஜர்
திருவிடைமருதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் கோனேரிராஜபுரம். இறைவன் பெயர் பூமீஸ்வரர். இறைவி தேகசௌந்தரி. இங்குள்ள நடராஜர் ஆறடி உயரத்தில், மிக அழகாகவும் கம்பீரமாகவும் காணப்படுகிரார். இத்தல நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம்,மார்பில் மருவும், உடலில் கொழுப்புக் கட்டியும், கையில் மச்சம், கைவிரல் ரேகைகள், நகம் போன்ற அம்சங்கள் இருப்பது அதிசயமாகும். .
இந்த நடராஜர் விக்ரகத்தை அமைக்கும்படி சிவபெருமான், சோழ மன்னனின் கனவில் வந்து உரைத்தார் மன்னன் தன் சிற்பியிடம் பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை, வடித்துத் தர உத்தரவிட்டான் மேலும் அதற்கு காலக்கெடு விதித்து, அதற்குள் சிலையை வடிக்கவில்லை என்றால், தலையை துண்டித்து விடுவதாகவும் எச்சரித்தான்.
சிற்பி, தனது பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறை செய்தாலும், அதில் ஏதேனும் ஒரு குறை ஏற்பட்டு, சிலையை வடிக்க முடியாமல் போனது. மன்னன் குறித்த காலக் கெடு நெருங்க, நெருங்க, சிற்பி கவலை அடைந்தார்,. இறுதி முயற்சியாக, ஒரு நாள் சிற்பி கொதித்துக் கொண்டிருக்கும் உலோக கூழை தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்குத் தயாரானார். அப்போது சிவபெருமான் புலையன் உருவத்தில், கையில் நான்கு வேதங்களையும் நாய்களாக பிடித்துக் கொண்டு வந்தார். அவருடன் அம்பிகை தலையில் கள் குடத்தை சுமந்தபடி முருகப்பெருமானை சிறு குழந்தையாக இடுப்பில் ஏந்தியபடி தோன்றினாள்.
சிவனும், அம்பிகையும் சிற்பியிடம் வந்து தண்ணீர் கேட்டனர். சிற்பியோ, ‘இங்கு தண்ணீர் இல்லை. வேண்டுமென்றால் உலோகக் கூழ் இருக்கிறது, அதைக் குடியுங்கள்’ என்று அதைத் தம்பதிகளிடம் நீட்டினார். அவர்களும் அதனை வாங்கிப் பருகி நடராஜர் சிலையாகவும்,, சிவகாமி அம்பாள் சிலையாகவும் மாறிப் போனார்கள். அப்போது அங்கு வந்த மன்னன் சிலையைப் பார்த்தான். நடராஜரின் சிலையில் நகங்கள், உரோமங்கள் என உயிரோட்டமாக இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்த மன்னன்
சிற்பியைக் கேட்டான். சிற்பியும் நடந்ததைக் கூறினார். சிற்பி பொய் கூறுவதாக நினைத்த மன்னன், அவரை வெட்ட வாளை ஓங்கினான். அப்போது வாள் சிலையின் காலில் பட, அதில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதே நேரம் மன்னனுக்கும் தொழுநோய் உண்டானது. தன் தவறை உணர்ந்த மன்னன், ஈசனிடமும், சிற்பியிடமும் மன்னிப்பு கேட்டான். தன் நோய் குணமாக ஈசனிடம் பரிகாரமும் கேட்டான். மன்னன், ஈசன் கூறிய பரிகாரத்தைச் செய்து குணமடைந்தான். மன்னனின் வாளால் ஏற்பட்ட காயத்தை நடராஜரின் வலது திருப்பாதத்தில் இன்றும் காணலாம். கூடவே கையில் மச்சம், கைவிரல் ரேகைகள் இத்தல நடராஜர் உயிரோட்டமுள்ளவர் என்பதையும் சொல்கின்றன.