திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

திருவண்ணாமலை கோவிலின் சிறப்புகள்

திருவண்ணாமலைக் கோவில், மிகவும் பழமையான கோவில்களில் ஒன்று. இறைவன் திருநாமம் அருணாசலேசுவரர். இறைவியின் திருநாமம் உண்ணாமுலையாள். இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். மலையே சிவலிங்கமாக உள்ளது எனபது நம்பிக்கை.'அருணம்' என்றால் 'சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு'. 'அசலம்' என்றால் 'மலை'. சிவபெருமான் சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மை கொண்ட மலையாக இருப்பதால் இந்த மலைக்கு 'அருணாச்சலம்' என்று பெயர் ஏற்பட்டது. பஞ்ச பூத தலங்களில் திருவண்ணாமலை அக்னித் தலமாகும். இக்கோவில் பல சிறப்புகளைக் கொண்டது. அவற்றில் சிலவற்றை இப்பதிவில் நாம் காணலாம்.

பார்வதிக்கு சிவபெருமான் தன் இடப்பாகம் அளித்த தலம்

சிவனை நோக்கி தவமிருந்த பார்வதிக்கு தன் இடப்பாகம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராய், கருவறையின் பின் புறம் அமர்ந்தார்.

நினைத்தாலே முக்தி தரும் தலம்

திருவாரூரில் பிறந்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. முதலில் குறிப்பிட்ட நான்கு தலங்களின் மூலம் முக்தி அடைவது என்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பதால், அது எல்லோருக்கும் சாத்தியப்படும் ஒன்றாகும்.

திருவெம்பாவை, திருப்புகழ் போன்ற பக்தி நூல்கள் இயற்றப்பட்ட தலம்

இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

பழமையான மலை

திருவண்ணாமலையில் இருக்கும் மலை 260 கோடி ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. இந்த மலையானது கிருதா யுகத்தில் நெருப்பு மலையாக இருந்தது, திரேதா யுகத்தில் மாணிக்க மலையாக இருந்தது, துவாபர யுகத்தில் தங்க மலையாக இருந்தது. தற்போது கலி யுகத்தில் கல் மலையாக இருக்கின்றது என்பது சைவர்களின் நம்பிக்கை. மெசேஜ் பிரம் அருணாச்சலா எனும் நூலில், பால் பிரண்டன் எனும் பிரிட்டனைச் சேர்ந்த தத்துவஞானி மற்றும் ஆய்வாளார் 'லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை' எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருவண்ணாமலையின் அமைப்பு

திருவண்ணாமலையை கீழ்த்திசையிலிருந்து பார்த்தால் ஏக மலையாகத் (ஒன்றாக) தெரியும். மலை சுற்றும் வழியில் நின்று பார்த்தால் இரண்டாகத் தெரியும். இது அர்த்த நாரீஸ்வர தத்துவத்தைக் குறிக்கும். மலையின் பின்னால் மேற்கு திசையில் இருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். இது சிவன், பிரம்மா, திருமால் மூவரையும் குறிக்கும்.

கோவில் அமைப்பு

அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. இவ்வாலயத்தின் ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை உள்ளன. திருவண்ணாமலை ராஜகோபுரம் தமிழகத்தின் 2வது பெரிய கோபுரமாகும். 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது.

பௌர்ணமி கிரிவலம்

சித்தர்களில் ஆதிசித்தனாகிய சிவபெருமானையும், அன்னை பார்வதியையும் ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தன்றும் சித்தர்கள் அருவமாக வந்து வழிபடுவதாக ஐதீகம். எனவே ஒவ்வொரு பௌர்ணமி இரவன்றும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் 14.7 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மலையை கிரிவலம் வந்து, சிவபெருமானையும் அம்பாளையும் தரிசித்து அவர்களின் அருளையும் சித்தர்களின் ஆசிகளையும் பெறுகின்றனர். 800 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது கிபி 1240ல் இங்கு கிரிவலம் செல்ல ஜடாவர்ம விக்ரம பாண்டியன் பாதை அமைத்து பணி செய்தார். சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கிரிவலம் வந்து, அண்ணாமலையரையும், உண்ணாமுலையம்மனையும் தரிசித்து வணங்குபவர்களுக்கு குல சாபங்கள் நீங்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா

ஆடிப்பூரத்தன்று மாலை. ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான்.

திட்டிவாசல் வழியே வெளிவரும் உற்சவமூர்த்திகள்

திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவரும் நடைமுறை இவ்வாலயத்தில் மட்டும்தான் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

திருவண்ணாமலை மகா தீபம்

திருவண்ணாமலையில் பத்துநாட்கள் கார்த்திகை தீபவிழா நடக்கும். சிவனுக்குரிய மகா தீப விழாவை உமாதேவியே தொடங்கி வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. பத்தாம் நாள் திருவண்ணாமலை மீது ஏற்றும் தீபம், மகா தீபமாகும். திருவண்ணாமலை கார்த்திகை தீப நாள் அன்று அதிகாலை 4 மணி அளவில் மலை அடிவாரத்தில் பரணி தீபம் ஏற்றப்படும் மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றும் விழா நடைபெறும். மகா தீபம் ஏற்ற 3000 கிலோ பசு நெய், 7 அடி உயரம் கொண்ட செப்புக் கொப்பரை, திரியாக பயன்படுத்த சுமார் 1000 மீட்டர் காடாத்துணி மற்றும் 2 கிலோ கற்பூரம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள் தொடர்ந்து 11 நாட்கள் இந்த மகா தீபம் மலை மீது ஒளிரும். இந்த தீபத்தின் ஒளியை 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் வாழும் மக்களும் கண்டு தரிசிக்கும் வகையில் வெளிச்சத்துடன் எரிகிறது. இறைவன் ஜோதி வடிவானவன், அவனுடன் நாம் இரண்டற கலப்பதால் நமது பாவங்கள், கர்மவினைகள், பிறப்பு இறப்பு சுழற்சிகள் அனைத்தும் நீங்குவதை இந்த கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதின் தத்துவம் ஆகும். இந்த கார்த்திகை தீப தரிசனத்தை காண்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கி, அவர்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும், அண்ணாமலையார் மற்றும் இங்கு அருவமாக வாழும் சித்தர்களின் ஆசிகளால் நிறைவேறும்.

அண்ணாமலை மகா தீப தரிசன பலன்

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்தால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேறு எந்த விழாவை தரிசித்தாலும், தரிசிப்பவருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும் அண்ணாமலைக்கு மட்டுமே இந்த தனிச் சிறப்பு உள்ளது.

மகா தீபத்தை தரிசிக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கீடா: பதங்கா: மச காச்ச வ்ருக்ஷா ஜலே ஸ்தலே யே விசரந்தி ஜீவா த்ருஷ்ட் வா ப்ரதீபம் நச ஜன்ம பாகின. பவந்தி நித்யம் ச்வ பசா ஹி விப்ரா

இந்த மகாதீப ஒளிக்காட்சியைக் காணும் மக்கள் தங்கள் வாழ்வில் நலமும் வளமும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

 
Previous
Previous

திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோவில்

Next
Next

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்