திருவண்ணாமலை: அருணாச்சலேசுவரர் கோவில்
மரண பயத்தை போக்கும் காலபைரவர்
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் கரையில் காலபைரவர் சன்னதி அமைந்திருக்கிறது. இந்த காலபைரவர் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி கபால மாலைடன் காட்சி அளிக்கிறார். சிவபெருமானின் 64 திருமேனிகளுள் ஒருவரான பைரவர், சனி பகவானின் குருவாகவும், 12 ராசிகள், 8 திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள் மற்றும் காலத்தையும் கட்டுப்படுத்துபவராக விளங்குபவர்.
தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு செய்யப்படும் பூஜைகள் சிறப்பு வாய்ந்தது என்றாலும், செவ்வாய்கிழமை வருகிற அஷ்டமி திதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். காலபைரவருக்கு பச்சரிசி மாவு, அபிஷேக பொடி, பால், சந்தனம், பஞ்சாமிர்தம், எலுமிச்சை சாறு, சந்தனம், தேன், விபூதி, இளநீர் உள்ளிட்டவைகளை கொண்டு மகா அபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து காலபைரவருக்கு வடைமாலை மற்றும் முந்திரி மாலை அணிவிக்கப்படும்
தேய்பிறை அஷ்டமி அபிஷேகத்தின் போது கால பைரவரின் பாதத்தில் வைத்த பச்சையை கட்டினால் கண் திருஷ்டி விலகும், எதிரிகளால் ஏற்படும் தீங்கிலிருந்து பாதுகாக்கும், பைரவர் ரட்சை அணியும் மக்களுக்கு செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். காலபைரவருக்கு பக்தர்கள் பூசணிக்காயில் இலுப்பை எண்ணெய் ஊற்றி விளக்கேற்றியும், தேங்காய் மூடியில் விளக்கேற்றியும் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். தேய்பிறை அஷ்டமி வழிபாடு மரண பயத்தை போக்கும். ஆபத்திலிருந்து காக்கும், தீராத நோய், கடன் தீர்க்கும்.