
திருப்பரங்குன்றம் சத்யகிரீஸ்வரர் கோவில்
பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டியபடி இருக்கும் அபூர்வ அமைப்பு
சிவனுக்கு நேரே மகாவிஷ்ணு இருக்கும் அபூர்வ காட்சி
நந்தி, மூஞ்சூறு, மயில் ஆகிய மூன்று வாகனங்கள் அருகருகே இருக்கும் அரிய காட்சி
மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ.தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருப்பரங்குன்றம் சத்யகிரீஸ்வரர் கோவில். இது ஒரு குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்க்கையம்மன் சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.
பொதுவாக சிவன் கோவில்களில், விநாயகர், முருகன், துர்க்கை, பெருமாள் ஆகியோர் பிரகார தெய்வங்களாகவே இருப்பர். ஆனால், திருப்பரங்குன்றத்தில் சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டியே அருளுகின்றனர். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.
துர்க்கையம்மன் காலுக்கு கீழே மகிஷாசுரனுடன் நின்றகோலத்தில் இருக்கிறாள். இவளுக்கு இடப்புறத்தில் கற்பக விநாயகர் கையில் கரும்பு ஏந்திக்கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி பல ரிஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர். துர்க்கைக்கு வலது புறம் தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் சுப்பிரமணியர் வடக்கு நோக்கி இருக்கிறார். இவருக்கு அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர்.சத்யகிரீஸ்வரர் கிழக்கு பார்த்து தனிக்கருவறையில் இருக்கிறார். இவருக்கு நேரே மகாவிஷ்ணு, பவளக்கனிவாய் பெருமாளாக மகாலட்சுமியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் மதங்க மகரிஷியும் இருக்கிறார். பொதுவாக சிவனுக்கு நேரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு இருக்கிறார். இது அபூர்வமான அமைப்பாகும். எனவே இக்கோயிலை 'மால்விடை கோயில்' (மால் - திருமால், விடை - நந்தி) என்கின்றனர். பெருமாள் தன் மைத்துனராகிய சிவபெருமானுக்கு சேவை செய்வதற்காக நந்தியின் இடத்தில் இருக்கிறார். மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தின்போது, இவரே பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கச் செல்கிறார்.
சிவன் கோவில்களில் நந்தி, விநாயகர் சன்னதியில் மூஞ்சூறு, முருகன் சன்னதியில் மயில் என அந்தந்த சுவாமிகளுக்குரிய வாகனங்கள்தான் சுவாமி எதிரில் இருக்கும். ஆனால் இத்தலத்தில் சிவபெருமான், விநாயகர், முருகன் ஆகிய மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். ஒரு பீடத்தின் நடுவில் நந்தியும், வலதுபுறத்தில் மூஞ்சூறும், இடப்புறம் மயில் வாகனமும் இருக்கிறது. இம்மூன்று வாகனங்களும் தெற்கு நோக்கி இருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசலை பெருமாள் கடந்து செல்லும் ஒரே முருகன் தலம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம், மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார்.
இக்கோவில் ஒரு குடைவரைக் கோவிலாகும். ஆறுபடை வீடுகளில் இத்தலத்தில்தான் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும், முருகப்பெருமானின் கையிலுள்ள வேலுக்கே பால் அபிஷேகமும், மஞ்சன நீராட்டுகளும் நடைபெறுகின்றன. முருகப்பெருமானின் இடப்பக்கம் தெய்வானையும், வலப்பக்கம் நாரதரும் வீற்றிருக்கின்றனர். இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவபெருமான்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி, ஒரே குடவரையில் இங்கு அருளுகின்றனர். குடவரையின் மேற்குப் பகுதியில் சத்தியகிரீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறைக்கு கிழக்குப் பகுதியில் பவளக்கனிவாய் பெருமாள் மேற்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார். அவருக்கு இருபுறமும் மகாலட்சுமி மற்றும் மதங்கமாமுனிவர் திருவுருவங்களும் உள்ளன. இக்கோவிலில் பவளக்கனிவாய் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிப்பது, வேறு எந்த தலத்துக்கும் இல்லாத தனிச்சிறப்பாகும். சிவபெருமானுக்கு எதிரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் பெருமாள் இருப்பதால், இவருக்கு 'மால் விடை' எனும் சிறப்பு பெயரும் உண்டு. இத்தகைய அமைப்பு வேறு எந்த தலத்திலும் இல்லை.
முருகப்பெருமானின் திருத்தலத்திலேயே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது திருப்பரங்குன்றத்தில் மட்டும்தான் என்பதும் சிறப்புக்குரியது. வைகுண்ட ஏகாதசி அன்று, இக்கோவிலில் உள்ள கம்பத்துடி மண்டபத்திலிருந்து மடப்பள்ளி மண்டபம் செல்லும் வழியில் உள்ள பெரிய கதவிற்கு சந்தனம் பூசி, மாலைகள் சாற்றப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த பெரிய கதவு தான், சொர்க்கவாசல் ஆக கருதப்பட்டு வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கடந்து செல்கிறார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
கலை நயம் மிக்க நுணுக்கமான சிற்பங்கள் கொண்ட திருப்பரங்குன்றம் கோவில்
மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகும். முருகன் தெய்வானையை திருமணம் புரிந்த தலம் இது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில், ஆன்மீக பக்தர்களுக்கு மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு முக்கிய ஈர்ப்பு தலமாகும். இக்கோவிலில் கலை நயம் மிக்க நுணுக்கமான சிற்பங்கள் பார்ப்பவர்களின் கண்ணுக்கு விருந்தாக அமைகின்றது.
கோவில் வாயிலை அடுத்து உள்ளே அமைந்துள்ளது ஆஸ்தான மண்டபம். இம்மண்டபம் சுந்தர பாண்டியன் மண்டபம் என்றும் வழங்கப்படுகிறது. அழகிய கண்கவர் கலை நயம் கொண்ட சிற்பங்களுடன், 48 தூண்களுடன் இம்மண்டபம் இராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது..
மண்டபத் தூண்களில் யாளிகள், குதிரை வீரர்கள், பத்திரகாளி, துர்க்கை, நர்த்தன விநாயகர், வீரபாகு, சிவனார் திரிபுரம் எரிக்கும் காட்சி, திருமால் மற்றும் மகா லட்சுமியின் சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் செதுக்கப் பெற்றுள்ளன.
பிரம்மன் வேள்வி வளர்த்துத் திருமணச் சடங்குகள் நடத்த, இந்திரன் தேவயானையை முருகனுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க, தேவயானையைக் கைத்தலம் பற்றிய பெருமிதத்துடன், அதே வேளையில் நாணம் கலந்த மகிழ்ச்சியுடன் இருப்பது போன்று முருகப் பெருமானின் திருமணக் கோலம் எழிலுற வடிவமைக்கப் பெற்றுள்ளது.
இக்கோவிலில் திருவாட்சி மண்டபம் என்னும் பெரிய கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்திற்கு ஆறுகால் மண்டபம் என்ற பெயரும் உண்டு. இம்மண்டபத்தின் முன் புறம் ஏறும் படிகளின் இரு பக்கங்களிலும் தேர் இழுக்கும் இரு குதிரைகள் உள்ளன. இவை ஒரே கல்லில் செய்யப்பட்டு கலை நயத்துடன் விளங்குகின்றன. இந்த குதிரைகளின் உடலில் காணப்படும் அணிகலன்கள் மிகுந்த நுணுக்கத்துடன் செய்யப்பட்டுள்ளன.
இம்மண்டபத்தின் தூண்களில் மீனாட்சி அம்மனின் திக்விஜயம், ஹயக்ரீவர், நரசிம்மர், ஆஞ்சநேயர், மன்மதன், ஆலவாய் அன்னல், வராகிஅம்மன் என்று பல்வேறு அழகிய, தெய்வீக சிற்ப சிலைகள் உள்ளன.
இறைவன் சத்தியகிரீசுவரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்பு கலையம்சங்களும், இதர சிற்ப அம்சங்களும் பிரமிக்கத்தக்கவையாக உள்ளன.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடு திருப்பரங்குன்றம். இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். ஆகவே திருப்பரங்குன்றத்தை, 'திருமணத் திருத்தலம்' என்று கூறுவார்கள். எனவே பக்தர்களில் பெரும்பாலானோர் இந்த தலத்தில் திருமணம் செய்ய விரும்புகிறார்கள். அதனால் தென் மாவட்டத்திலேயே, அதிக திருமண மண்டபங்கள் உள்ள ஊராக திருப்பரங்குன்றம் விளங்குகின்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 15 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, நாள்தோறும் காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் தங்கக்குதிரை, வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களிலும் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5 பங்குனி உத்திரத்தன்று, முருகப் பெருமான் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். ஏப்ரல் 6ல் இரவு 7 மணியளவில் சூரசம்ஹார லீலை, ஏப்ரல் 7ம் தேதி இரவு 7.45 மணியளவில் பட்டாபிஷேகம் நடைபெறும். ஏப்ரல் 8ல், பகல் 12.20 மணியளவில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.
முருகப்பெருமான் திருமணத்தை நடத்தி வைக்க, மதுரையிலிருந்து சுந்தரரேசுவரரும், மீனாட்சி அம்மனும் தனித்தனி பல்லக்கில் புறப்பட்டு திருப்பரங்குன்றத்திற்கு வருகை தருவார்கள். அவர்களை முருகப்பெருமான் வரவேற்று திருப்பரங்குன்றம் கோவிலுக்கு அழைத்து வருவார். பின்னர் முருகப்பெருமான் தெய்வயானை திருமணத்தை, சுந்தரரேசுவரரும், மீனாட்சி அம்மனும் நடத்தி வைப்பார்கள்.
திருக்கல்யாணம் முடிந்ததும், சுமங்கலிப்பெண்கள் புதிய மங்கல நாண் மாற்றிக் கொள்வார்கள். திருக்கல்யாணத்துக்கு. முருகப்பெருமானின் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலையிலிருந்து சீர்வரிசை கொண்டு வரப்படும்.
முருகப்பெருமான் திருக்கல்யாண வைபோகத்துக்கு மீனாட்சி அம்மன் சென்றிருக்கும் வேளையில், மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டு இருக்கும். அப்போது பக்தர்கள் வேறு வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்

சத்தியகிரீஸ்வரர் கோயில்
முருகப்பெருமான் திருமண கோலத்தில் காட்சி தரும் அறுபடைவீடு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இந்தக் கோயில், மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
கோவிலின் கருவறையில் கல்யாண திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.முருகப் பெருமான். அமர்ந்த நிலையில் இடது கையை தொடையில் அமர்த்தி, வலது கையால் அருள்பாலிக்கிறார். இவரது வலது பக்கத்தில் நாரத முனிவர் ஒரு கால் மடக்கி அமர்ந்த நிலையில், முருகப் பெருமானை வணங்கிக் கொண்டு இருக்கிறார். கருவறையில் முருகனின் இடப்பக்கம், தெய்வானை ஒரு கால் மடக்கி அமர்ந்து, கைகளில் மலருடன் காட்சி தருகிறார். இக்கருவறையின் மேலே முருகனைச் சுற்றி சூரியன், சந்திரன், காயத்திரி, சாவித்ரி, வித்தியாதரர்கள்m இந்திரன் முதலானோர் காட்சி தருகின்றனர். தெய்வானை அருகில் திருமனச் சடங்கினை நடத்தும் நான்முகன், கலைமகளுடன் சிறிய உருவில் உள்ளார். முருகன் பாதத்திற்குக் கீழ் மேடையில், யானை, மயில், ஆடு, சேவல் ஆகியவற்றுடன் அண்டாபரணர், உக்கிரமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.
சத்தியகிரீஸ்வரர் கோயில்
முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் இருக்கும் அறுபடை வீடு
அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்தில்தான் அமர்ந்த கோலத்தில் அருள் புரிகிறார்.மற்ற அறுபடை வீடுகளில் அவர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.