திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசலை பெருமாள் கடந்து செல்லும் ஒரே முருகன் தலம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம், மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார்.
இக்கோவில் ஒரு குடைவரைக் கோவிலாகும். ஆறுபடை வீடுகளில் இத்தலத்தில்தான் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும், முருகப்பெருமானின் கையிலுள்ள வேலுக்கே பால் அபிஷேகமும், மஞ்சன நீராட்டுகளும் நடைபெறுகின்றன. முருகப்பெருமானின் இடப்பக்கம் தெய்வானையும், வலப்பக்கம் நாரதரும் வீற்றிருக்கின்றனர். இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவபெருமான்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி, ஒரே குடவரையில் இங்கு அருளுகின்றனர். குடவரையின் மேற்குப் பகுதியில் சத்தியகிரீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறைக்கு கிழக்குப் பகுதியில் பவளக்கனிவாய் பெருமாள் மேற்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார். அவருக்கு இருபுறமும் மகாலட்சுமி மற்றும் மதங்கமாமுனிவர் திருவுருவங்களும் உள்ளன. இக்கோவிலில் பவளக்கனிவாய் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிப்பது, வேறு எந்த தலத்துக்கும் இல்லாத தனிச்சிறப்பாகும். சிவபெருமானுக்கு எதிரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் பெருமாள் இருப்பதால், இவருக்கு 'மால் விடை' எனும் சிறப்பு பெயரும் உண்டு. இத்தகைய அமைப்பு வேறு எந்த தலத்திலும் இல்லை.
முருகப்பெருமானின் திருத்தலத்திலேயே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது திருப்பரங்குன்றத்தில் மட்டும்தான் என்பதும் சிறப்புக்குரியது. வைகுண்ட ஏகாதசி அன்று, இக்கோவிலில் உள்ள கம்பத்துடி மண்டபத்திலிருந்து மடப்பள்ளி மண்டபம் செல்லும் வழியில் உள்ள பெரிய கதவிற்கு சந்தனம் பூசி, மாலைகள் சாற்றப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த பெரிய கதவு தான், சொர்க்கவாசல் ஆக கருதப்பட்டு வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கடந்து செல்கிறார்.
பவளக்கனிவாய் பெருமாள்
சொர்க்கவாசல்