படவேடு யோகராமசந்திர மூர்த்தி கோவில்
ஒரே கல்லில், ஒரே பீடத்தில் அமர்ந்தபடி இருக்கும் அரிய ராமர், சீதை சிலை
ஆஞ்சநேயருக்கு ஆசிரியராக இருந்து உபதேசம் செய்யும் யோகராமர்
திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே, நடந்துசெல்லும் தூரத்தில் உள்ள வீரக்கோயில் கிராமத்தில் அமைந்துள்ளது யோகராமசந்திர மூர்த்தி கோவில். படவேடு ரேணுகாதேவி கோவில் இணைப்புக் கோவிலாக யோகராமசந்திர மூர்த்தி கோவில் இருக்கிறது.
வால்மீகி இயற்றிய ராமாயணத்தின் முதல் ஸ்லோகத்தில், ராமபிரான் யோக ராமச்சந்திரனாக இருக்கும் அமைப்பைப் பற்றி பாடியுள்ளார். இந்த ஸ்லோகத்தின் பொருளை உணர்த்தும்விதமாக அமைந்த கோவில் இது.
இத்தலத்தில் ராமபிரான் புஷ்பக விமானத்தின் கீழ், வீராசனத்தில் அமர்ந்து, சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்து யோக நிலையில், மாணவனுக்கு பாடம் போதிக்கிற பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். இது போன்ற அமைப்பை காண்பது அரிதாகும். ராமர், சீதை இருவரின் சிலையும் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் அமர்ந்தபடி வடிக்கப்பட்டுள்ளது.
சுவாமிக்கு அருகில், ஆஞ்சநேயர் அமர்ந்து கையில் அடக்க ஒடுக்கமாக அமர்ந்த நிலையில், பனை ஓலைகளை கொத்தாக கையில் பிடித்து, ஓலைச் சுவடியை படிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். ஆஞ்சநேயருக்கு ஆசிரியராக இருந்து உபதேசம் செய்தவர் என்பதால், ராமபிரான் இங்கு குரு அம்சமாக போற்றப்படுகிறார். எனவே, சக்கரவர்த்திக்குரிய போர் ஆயுதங்கள் எதுவும் எதுவும் இல்லை. ஆனால், இளையபெருமாளான லட்சுமணன் வில்லும் கையுமாக நிற்கிறார்.
யோகராமர் உலகின் நிரந்தரமான மெய்ஞான நிலையை உணர்த்தும் கோலத்தில் இருப்பவர் என்பதால், நிலையான இன்பமான மோட்சம் கிடைக்க மட்டுமே இவரை வழிபடுகிறார்கள். இதனால், இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிக்கு விசேஷ பூஜை மட்டும் நடக்கும்.
கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக இத்தல ராமரை வழிபட்டு பலனடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ரகுநாதசமுத்திரம் ஞானராமர் கோவில்
ஓலைச்சுவடியில் வேதத்தை வாசிக்கும் அனுமனுக்கு அதன் பொருளை விளக்கும் ராமர்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் - பெரணமல்லூர் சாலையில் சேத்பட்டிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ரகுநாதசமுத்திரம் ஞானராமர் கோவில்.
இந்தக் கோவிலில், ஸ்ரீராமபிரான் யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். இப்படி யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் இருக்கும் ராமரை நாம் ஒரு சில தலங்களில் மட்டுமே தரிசிக்க முடியும். இத்தலத்துக்கு அருகில் அமைந்துள்ள படைவீடு மற்றும் நெடுங்குணம் ஆகிய திருத்தலங்களிலும் ஸ்ரீ யோக ராமரை நாம் தரிசிக்கலாம்.
கருவறையில் ஸ்ரீராமபிரான் யோகாசனமிட்டு அமர்ந்தவண்ணம் தனது வலது கரத்தை சின்முத்திரையாகக் கொண்டு ஆத்ம ஸ்தானத்தில் வைத்தபடி வீற்றிக்கிறார், அவருக்கு இடதுபுறம் தம்பி லட்சுமணர் வில்லேந்திய கோலத்தில் நின்றருள, வலது பக்கம் சீதா பிராட்டி அமர்ந்து திருவருள் புரிகின்றாள். ரகுநாதசமுத்திரத்தில் மட்டும் ஸ்ரீ ராமபிரானுக்கு வலதுபுறம் மாறியபடி சீதா தேவியும், இடதுபுறத்தில் ஸ்ரீ லட்சுமணரும் திருக்காட்சித் தருவது சிறப்பம்சமாகும்.
கருவறையின் எதிரே ஈசான மூலையில் ஸ்ரீ ஆஞ்சனேயர் சுகப்பிரம்ம மகரிஷி தந்த ஓலைச்சுவடியை பத்மாசனத்தில் அமர்ந்தபடி வாசித்துக் கொண்டிருக்கின்றார். அனுமனின் இந்த கோலத்தின் பின்னணியில் ஒரு நிகழ்ச்சி உள்ளது. ஸ்ரீராமபிரான், ராவணனை வதைத்து, சீதையை மீட்டு, தம்பி லட்சுமணரோடு இப்பகுதியில் வரும்போது சுகபிரம்ம மகரிஷியை சந்திக்கின்றார். அவரிடமிருந்து வேதங்களின் உட்பொருள் அடங்கிய ஓலைச்சுவடியைப் பெற்று, அனுமனை வாசிக்கச் சொல்கின்றார். வேதத்தின் உட்பொருளைக் கேட்டு இன்புற்ற ஸ்ரீராமபிரான் அனுமனுக்கு உபநிஷதங்களில் ஒன்றான முக்திகோபநிஷத்தை உபதேசிக்கின்றார். இந்தத் திருக்கோலத்தையே, இந்தக் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
பிரார்த்தனை
இந்தக் கோவிலில், தொடர்ந்து மூன்று வாரங்கள் ஸ்ரீராமரை சேவித்து கோரிக்கைகளைச் சொல்லி, கருடனின் பாதங்களை வணங்கினால் குழந்தைப் பேறு, திருமண வரம் கிட்டும். ஸ்ரீராமருக்கு திருமஞ்சனம் செய்து, 11 சுமங்கலிகளுக்கு புடைவை மற்றும் மங்கலப் பொருட்களை தானம் தந்து, வேப்ப மரத்தில் தொட்டில் கட்டிச் செல்ல, ஆண் குழந்தை பாக்கியம் கிட்டும்.
அனுமன் சாலிசா
அனுமன் சாலிசாவின் சிறப்புகள்
ஆலயத்துளிகள் தனது நான்காம் ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கின்றது.
வாசகர்களின் ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுகுமார் & பல்லவி
துளசி இராமாயணம் என்பது துளசிதாசர் என்று அழைக்கப்படும் இராம்போலா துபே எழுதிய நூலாகும். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் ராமர் மீதான பக்திக்கு புகழ்பெற்றவர். துளசிதாசர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் கழித்தார். இவர் வாரணாசியில், அனுமன் தனக்கு காட்சி கொடுத்த இடத்தில் சங்கட மோட்ச அனுமன் கோயிலை நிறுவினார்.
துளசிதாசர் காட்டிலே வாழ்ந்து வந்த காலத்தில், இறந்த ஒரு மனிதனை உயிர்மீட்டார். இந்தச் செய்தியானது முகலாய அரசர் அக்பர் செவிக்கும் எட்டியது. இதனால் அக்பருக்கு துளசிதாசரை காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. எவ்வாறேனும், துளசிதாசரை தன் தர்பாருக்கு அழைத்து வந்து, நேரடியாக அவர் செய்யும் அற்புதத்தைக்கண்டு ரசிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார். அரசவைக்கு அழைத்து வரப்பட்ட துளசிதாசரிடம் அக்பர், ராமனின் அருளாலும், உங்களின் அருளாலும், இறந்தவரின் உயிரை மீட்டது போல, என்னுடைய அரசவையிலும் ஒரு அற்புதத்தை நீங்கள் நிகழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு, நான் மாயாஜாலக்காரன் அல்ல. ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே என்று துளசிதாசர் சொல்ல, கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத்தார். எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம் என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர், தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார். இப்படி தினம் ஒரு பாடலாக, சிறையில் இருந்தபோது 40 நாட்கள் அவர் எழுதிய 40 பாடல்கள் தான் அனுமன் சாலிசா.
முகலாய அரசர் அக்பரை பணிய வைத்த அனுமன் சாலிசா
அனுமன் சாலிசாவை துளசிதாசர் எழுதி முடிக்கும் தருவாயில் ஒரு அற்புதமான நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது நகரம் முழுவதும் பெரிய குரங்கு கூட்டம் ஒன்று புகுந்தது. அந்தக் குரங்குகள் சேட்டைகள். அரண்மனை, அந்தப்புரம், கடைவீதிகள், தோட்டத்துரவுகள், மரங்கள், தெருக்கள் என எல்லா இடங்களிலும் தங்கள் சேட்டைகளை செய்யத் தொடங்கின. மக்கள் அலறியடித்து ஓடத் தொடங்கினர். இதனைக் கண்ட அக்பர், செய்வது தெரியாது குழப்பம் அடைந்தார். ஹஜித் என்ற ஒரு பெரியவர், மன்னரிடம் சென்று, 'துளசிதாசரிடம் நீங்கள் கேட்ட அற்புதம் நிகழ்ந்து விட்டது. ராமதூதனுடைய அவதாரமான குரங்குகள் படையெடுப்பின் மூலம், ஒவ்வொரு மக்களுக்கும் ராம தரிசனம் கிடைத்து விட்டது. எனவே துளசிதாசரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்' என்று கூறினார். துளசிதாசரை விடுதலை செய்ய மன்னர் உத்தரவிட்டார். துளசிதாசரிடம், 'குரங்குகள் தொல்லையினால் நகர மக்கள் அவதிப்படுகிறார்கள். குரங்குகள் இங்கிருந்து மீண்டும் காட்டுக்குச் செல்ல தாங்கள் தான் உதவி செய்ய வேண்டும்' அக்பர் கேட்டுக் கொண்டார். உடனே துளசிதாசர் அனுமனிடம் மக்களின் துயரத்தை நீக்குமாறு வேண்டிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்தார். துளசிதாசர் தியானத்தில் ஆழ்ந்திருந்த பொழுது, நகரத்தில் ஆங்காங்கே சேட்டை செய்து கொண்டிருந்த குரங்குகள் மாயமாக மறைந்தன. இதனைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். குரங்குகள் மறைந்ததை எண்ணி, துளசிதாசரின் மகிமையை அக்பர் உணர்ந்தார். ராமனின் பெருமையை அறிந்தார்.
அனுமன் சாலிசாவின் பலன்கள்
அபிராமி அந்தாதியில் உள்ள 100 பாடல்களுக்கும் , ஒரு நற்பலனை பெற்றுத் தரும் தன்மை உண்டு. அதுபோல, 40 பாடல்கள் கொண்ட அனுமன் சாலிசாவின் ஒவ்வொரு பாடலும், ஒரு குறிப்பிட்ட வரத்தை வழங்குகின்றது, பக்தரின் பக்தி அல்லது சிரத்தையைப் பொறுத்து, ஒவ்வொரு பாடலின் பலனையும் பெறுவார்கள். அனுமன் சாலிசாவின் 38 ஆம் பாடலில், யார் அனுமன் சாலிசாவை 100 நாட்கள், தினமும் 100 தடவை சொல்கிறார்களோ அவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட்டு, அதிக ஆனந்தத்தை அடைவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரியலூர் கோதண்டராமசாமி கோவில்
தேர் போன்ற வடிவில் கருவறை அமைந்திருக்கும் கோவில்
அரியலூர் நகரில் அமைந்துள்ளது மிகப்பழமையான கோதண்டராமசாமி கோவில். இந்த நகரத்தின் பெயர், அரி (விஷ்ணு)+இல் (உறைவிடம்)+ஊர் (பகுதி) . அதாவது, விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்று பொருள். இந்தப் பெயரே, பெயரே காலப்போக்கில் அரியலூர் ஆக மாறியது.
இந்தக் கோவிலில் ஸ்ரீ ராமர், சீதா, லட்சுமணன், அனுமன் ஒரே பீடத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள். இவர்கள் எழுந்தருளி இருக்கும் கருவறையானது தேர் போன்ற வடிவில் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
பெருமாளின் தசாவதார கோலங்கள்
இந்தக் கோவில் தசாவதார மண்டபத்தில் காட்சி அளிக்கும் பெருமாளின் தசாவதாரம் கோலங்கள் நம்மை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும். ஒவ்வொரு தசாவதார கோலமும் ஆறரை அடி உயரத்தில், தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த தசாவதாரம் மண்டபத்தில், நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர்,
இரண்யவத நரசிம்மர், பிரகலாத நரசிம்மர் என்று நான்கு வித தோற்றங்களில் காட்சியளிக்கிறார்.
பிரார்த்தனை
இந்த கோவிலில் உள்ள கோதண்ட ராமரை தரிசித்தால் நம் வாழ்வில் நிம்மதி ஏற்படும். திருமணம் கை கூடாதவர்கள் வழிபட்டால் விரைவில் வரன் கைகூடி வரும்.
ராமேசுவரம் கோதண்டராமர் கோவில்
ராமர், சீதை, லட்சுமணனுடன் விபீஷணர் இருக்கும் அபூர்வ காட்சி
ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில். கருவறையில் ராமர், சீதை மற்றும் லட்சுமணர் காட்சி தருகின்றனர். ராமர் கையில் கோதண்டத்துடன் (வில்) இருப்பதால், 'கோதண்டராமர்' என்றும், தலம் 'கோதண்டம்' என்றும் அழைக்கப்படுகிறது. அருகில் பரிந்துரைந்த ஆஞ்சநேயர் இருக்கிறார். இலங்கையிலிருந்து சீதையை மீட்டு திரும்பிய ராமர், உடன் வந்த விபீஷணருக்கு இலங்கையின் அரசனாக பட்டாபிஷேகம் செய்த புனித தலமாக இப்பகுதி கருதப்படுகிறது. இராமரை ஆஞ்சநேயர் வணங்கும் காட்சியை எல்லாக் கோவில்களிலும் காண முடியும். ஆனால், இங்கு ராமரின் அருகில் விபீஷணன் வணங்கியபடி காட்சியளிக்கிறார். இது ஒரு அபூர்வமான காட்சியாகும்.
விபீஷணன் தன் சகோதரன் இராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், சீதையை இராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினார். இராவணன் அதை ஏற்க மறுக்கவே, விபீஷணன் இராமருக்கு உதவி செய்வதற்காக ராமேசுவரத்தில் இராமபிரானிடம் அடைக்கலம் பெற்றார் என்பது ஐதீகம்.
ராமர் விபீஷணனுக்கு இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்த தலம்
விபீஷ்ணன் ராமபிரானைத் தேடி வந்தபோது, ராமருடன் இருந்த வானரப்படையினர். விபீஷணன் மீது சந்தேகம் கொண்டு அடைக்கலம் தரக்கூடாது என்றனர் ஆனால் ஆஞ்சநேயர் ராமனிடம் விபீஷணனின் நடவடிக்கைகளை தான் இலங்கையில் கவனித்து வந்ததாகவும், அவனது சிறப்பியல்புகளையும் எடுத்துக் கூறி அவனை ராமசேவைக்கு அனுமதிக்கும்படி பரிந்துரைத்தார். இதனால் ஆஞ்சநேயர், பரிந்துரைந்த ஆஞ்சநேயர் என பெயர் பெற்றார். இவரிடம் நமது நியாயமான கோரிக்கைகளை தெரிவித்தால், அதை ராமரிடம் பரிந்துரைத்து நிறைவேற்றி வைப்பார் என்பது நம்பிக்கை. விபீஷணர் பட்டாபிஷேகம் ஆனி மாத வளர்பிறை நவமியன்று நடக்கிறது.
பிரார்த்தனை
குறுக்கு வழியில் தலைமைப் பதவி அடைய நினைப்போரை ஒடுக்கி வைப்பவர் இந்த ராமர். தரம் கெட்ட ராவணனுக்குப் பதிலாக ஒழுக்கத்தைக் கடைபிடித்த விபீஷணரை இத்தலத்தில் பதவியில் அமர்த்தியதால், நியாயமான வழியில் தலைமைப்பதவி கிடைக்க இவரை வணங்கலாம். தீயவர் சேர்க்கையிலிருந்து விடுபடவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
கோதண்டராம சுவாமி கோவிலின் சுவர்கள், ராமாயணக் கதையைச் சித்தரிக்கும் அற்புதமான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ராமர் கோவில் தாசரதி கல்யாணராமர் கோவில்
திருமணத்தடை நீங்க சீதா தேவிக்கு மஞ்சள் கிழங்கு மாலை
சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் தொடர்வண்டி பாதையில், கடம்பத்தூரை அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது ராமர் கோவில் என்னும் ஊர். இந்த ஊரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தாசரதி கல்யாணராமர் அமைந்துள்ளது.
ராமரும் அவரது வானரப் படையினரும் சீதையைத் தேடிக் கொண்டிருந்தபோது இத்தலத்துக்கு வந்தனர். அப்போது குஸஸ்தலை ஆற்றங்கரை ஓரத்தில் வானரப்படைகளுக்காக உணவு சமைத்திட மடம் அமைத்து சமைக்கும் பணி நடந்தது. அந்த மடம் அமைந்த இடம் மடத்து குப்பம் என்று இன்று அழைக்கப்படுகிறது. சீதையைத் தேடுவது குறித்து சற்றுத் தொலைவில் கவலையுடன் ராமர் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார். அவ்வாறு ராமர் நின்ற இடமே இன்று ஊராகி, ராமர் கோவில் என வழங்கப்படுகிறது.
ராமாவதாரம் நிறைவடைந்து கிருஷ்ணர் அவதரிக்க வேண்டிய காலம் வந்தது. விசுவாமித்திரர் மற்றும் சப்தரிஷிகள் ராமனின் திருக்கல்யாணக் காட்சியைக் காண விரும்பினர். அதற்காக குஸஸ்தலை ஆற்றின் கரையில் ஒரு பெரிய யாக வேள்வி நடத்தினர். ராமனும் சீதையும் திருமணக் கோலத்தில் காட்சிதர, அருகில் லட்சுமணன் துணை நிற்க, அனுமன் கைபொத்தி வணங்க, அங்கிருந்த அனைவருக்கும் காட்சி தந்தனர். பின்னர் உலக மக்கள் அனைவரும் வழிபட வேண்டி, இத்தலத்திற்கு அருகில் பர்ணசாலையில் தவம் செய்து கொண்டிருந்த சாலிஹோத்ர மஹரிஷி, ஸ்ரீலட்சுமணன் உடனுறை சீதாதேவி சமேத தாசரதி கல்யாணராமர் பிரதிஷ்டை செய்து கோவிலை உருவாக்கினார். முன்பு ராமன் நின்ற அந்த இடம், திருமணக்கோல ராமன் காட்சி தந்த அந்த கிராமமே,பின்பு ராமன் கோவில் என்று ஆனது.
கருவறையில் மூலவராக, ஸ்ரீ ராமர், ஸ்ரீலட்சுமணன், சீதாபிராட்டி, அனுமன் ஆகியோர் உள்ளனர். ஆனால் மற்ற ராமர் கோவில்களில் உள்ளது போல் இல்லாமல், இங்கே சீதை ராமனுக்கு வலது புறத்திலும், லட்சுமணன் இடது புறத்திலும், அனுமன் ராமருக்கு இடதுபுறத்தில் தெற்கு நோக்கி அஞ்சலி ஹஸ்தத்துடன் இருக்கிறார். வலது புறத்தில் சீதையுடன் கல்யாணக்கோலத்தில் நின்றதால் தந்தை பெயருடன் சேர்த்து தாசரதி கல்யாணராமன் சந்நிதி என்று அழைக்கிறனர்.
பிரார்த்தனை
இக்கோவிலில் ஒவ்வொரு புனர்பூச நட்சத்திரத்தன்றும் நடைபெறும் திருமஞ்சனத்தில் கலந்து கொள்வோருக்கு திருமணம் கைகூடும். திருமணத் தடை, குடும்பத்தில் கணவன் மனைவியரிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு இங்கு சீதைக்கு மஞ்சள் கிழங்கு மாலை சாற்றி பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். கருவறையில் உள்ள பால ஆஞ்சநேய சுவாமிக்கு செந்தூரக்காப்பு பிராத்தனை செய்து கொண்டால், வெகு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கந்தர்வகோட்டை கோதண்டராமர் கோவில்
சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் மூன்று தினங்கள் ராமபிரானை வழிபடும் அபூர்வ காட்சி
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வ கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில். 1000 ஆண்டுகள் பழமையானது. பல சிவாலயங்களை கட்டிய கண்டராதித்த சோழ மன்னன், ராமாயண நாம கீர்த்தனை கேட்டு, அதனால் ராமபிரான் மேல் பக்திக் கொண்டு கட்டிய கோயில் இது.
கருவறையில் ஸ்ரீ கோதண்ட ராமர் சீதா தேவி, லட்சுமணர் சமேதராக காட்சியளிக்கிறார். சில கோவில்களில் சூரிய பகவான் வருடத்தின் ஒரு சில நாட்களில் மட்டும் கோவில் மூலவரை வழிபடுவது போல் அமைத்திருப்பார்கள். ஆனால் இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும் வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் காலையில் சூரியனின் ஒளி கோதண்ட ராமரின் காலை தொட்டு செல்கிற செல்கிற முறையில் சோழர்கள் காட்டியுள்ளது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
இந்த ராமரை தரிசித்தாலே நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இக்கோவிலில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபட்டால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள ஆஞ்சநேயருக்கு தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் நெய்விளக்கேற்றி, திருமஞ்சனம் செய்து தயிர் சாதம் அல்லது வடைமாலை சாற்றி வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நீங்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கி, வாழ்வில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.
வடுவூர் கோதண்டராமர் கோவில்
ராமர் தன்னுடைய உற்சவத் திருமேனியை தானே உருவாக்கிய தலம்
தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில், மன்னார்குடியில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ள வடுவூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 'பஞ்ச ராம க்ஷேத்ரம் என்று அழைக்கப்படும் தலங்களில் வடுவூரும் ஒன்று. இக்கோவில் தட்சிண அயோத்தி என்று போற்றப்படுகிறது. கரிகால் சோழன் போரில் வென்று ஊர் திரும்பியபோது, மூலிகைகள் நிறைந்த இந்த ஊரில் போரில் அடிபட்ட வீரர்களுக்கு வைத்தியம் பார்த்தார்களாம். வீரர்களின் வடுக்களை ஆற்றிய ஊர் என்பதால் வடுவூர் என்றும் கூறுகின்றனர்.
மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கயாண கோவத்தில் லட்சுமணன், அனுமாருடன் எழுந்தருளியுள்ளார். உற்சவர் ராமர் பேரழகு உடையவர். இந்த ராமனைக் காணக் கண் கோடி வேண்டும். வடுவூர் சிலையழகு, மன்னார்குடி மதிலழகு, திருவாரூர் தேரழகு என்பர். அப்படி கண்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு, இந்தக் கோவிலில் ராமருடைய உற்சவத் திருமேனி விளங்குகின்றது. இந்த உற்சவ மூர்த்தியை, ஸ்ரீ ராமரே உருவாக்கினார் என்பதனால் தான் தனிச்சிறப்புடன் விளங்குகின்றது.
ராமர் உற்சவத் திருமேனியை உருவாக்கிய வரலாறு
ராவண வதத்திற்கு பிறகு, சீதாபிராட்டியை மீட்டு, வனவாசம் முடித்துக்கொண்டு கோடியக்கரை வழியாக அயோத்திக்கு ராமர் திரும்பியபோது, அவரைக் கண்ட ரிஷிகள் ராமரைத் தங்கள் கூடவே இருக்கச் சொல்லிக் கேட்டார்களாம். பரதனைக காண வேண்டிய அவசியத்தை அவரகளுக்குக் கூறிய ராமர் தன்னுடைய உருவத்தை விக்கிரகமாக வடித்து அவர்களுக்குக் கொடுத்து, நானே வேண்டுமா? அல்லது இந்த விக்கிரகம் வேண்டுமா? எனக் கேட்க, அந்த விக்கிரகத்தின் அழகில மயங்கிய ரிஷிகள், ராமருக்கு பதிலாக அந்த விக்கிரகத் திருமேனியே போதும் என்றனராம. தாங்கள் பூஜிக்க அந்த விக்கிரகத்தைத் தரும்படி ரிஷிகள் கேடக, அதன்படி ராமர அவர்களிடம் விக்கிரகத்தைக் கொடுத்துவிட்டு, அயோததி திரும்பினார் என்பது வரலாறு
பிற்காலத்தில் அந்நியப் படையெடுப்பினபோது, பாதுகாப்பிற்காக தலைஞாயிறு என்னும் தலத்தில் இந்த விக்கிரங்களை மறைத்து வைத்தனர். தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னன கனவில் வந்த ராமர தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு, தனக்குக் கோவில் எழுப்பும்படி கூறினார். அதன்படி தலைஞாயிறு சென்ற மன்னர் விக்கிரகங்களை எடுத்துக் கொண்டு தஞ்சையில் பிரதிஷ்டை செய்ட எண்ணிக கொண்டு வரும் வழியில், வடுவூர் வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது. விக்கிரகங்களை வடுவூர் கோவிலில் வைத்துக் கொண்டு, அங்கேயே தங்கினார. அந்த ஊர் மக்கள் ராமரின் அழகில மயங்கி, அங்கேயே ஸ்ரீராமரை விட்டுச் செல்ல மன்னனிடம் வேண்டினர். மன்னன மறுதது விக்கிரகங்களைத்தை எடுக்க முயற்சித்தபோது வைத்த இடத்தில் இருந்து நகர்த்த முடியவில்லை. அதனால் மக்கள் வேண்டியபடி, மன்னன் வடுவூரிலேயே சிலையை விட்டு சென்றார் என்கிறது தல புராணம்.
பிரார்த்தனை
திருமணத் தடை உள்ளவர்கள், இந்தக் கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தைப் பாரத்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. இந்த ராமரிடம் வேண்டிக் கொண்டால் பெற்றோர் சொல் கேட்கும் குழந்தைகள் பிறப்பார்கள் எனவும், நியாய சிந்தனைகள் உண்டாகும் எனவும் நம்பப்படுகிறது.
அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் கோவில்
ராமரும் சீதையும் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்
சேலத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் கோவில். ராவணனை வதம் செய்து, சீதையை மீட்டுக் கொண்டு, அயோத்திக்கு முடி சூட்டிக்கொள்ள திரும்பும் வழியில், ராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தந்த தலம் இது.
ராமபிரான், பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளின்படியும், விபீஷ்ணனின் பிரார்த்தனையை ஏற்றும் இந்த இடத்தில், சீதாபிராட்டியுடன் சேர்ந்து பட்டாபிஷேகக் கோலத்தை காட்டியருளினார். ஆக, அயோத்தியில் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருவதற்கு முன்பாகவே, இங்கு முதன்முதலாக பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சி தந்ததால்தான் இவ்வூர் அயோத்தியா பட்டணம் என்று அழைக்கப்படுகின்றது.
கருவறையில் ராமரும் சீதையும் கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றனர். அவர்களின் இத்தகைய தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது. பொதுவாக ராமரின் வலது புறத்தில் எழுந்தருளும் சீதாபிராட்டி, இத்தலத்தில் இடதுபுறம் வீற்றிருப்பது மேலும் ஒரு சிறப்பாகும். ராமர் மற்றும் சீதைக்கு பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோர் சேவை சாற்றியபடியும், அங்கதன், சுக்ரீவன், ஆஞ்சநேயர் ஆகியோர் ராமபிரான்-சீதாதேவியை சேவித்தபடியும் உள்ளனர்.
இக்கோவில் சிற்பங்கள் மிக்க கலை நயமும், அபார அழகும் கொண்டவையாக இருக்கின்றன. இக்கோவில் சிற்ப வேலைப்பாடுகள், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், திருச்செங்கோடு முருகன் கோவில் ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ள அழகிய சிற்ப வேலைப்பாடுகளுக்கு இணையாக உள்ளன. இங்கு இடம்பெற்றுள்ள இசைத் தூண்கள், ராமர் பட்டாபிஷேக சிற்பம், குதிரை, யானை, யாழி, சிங்கம் சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
பிரார்த்தனை
இந்த ஆலயத்துக்கு வந்து கோதண்ட ராமசுவாமியை வணங்கினால், திருமணத் தடை உள்ளவர்களுக்குத் தடை நீங்கி, தாலி பாக்கியம் கிடைக்கும்; ராகு கேது தோஷம் நிவர்த்தி ஆகும்; வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்; சொத்துத் தகராறுகள் நிவர்த்தி ஆகும்; குடும்பப் பூசல்கள் நீங்கும்; குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
முடிகொண்டான் கோதண்டராமர் கோவில்
அனுமன் உடன் இல்லாமல் ராமர் எழுந்தருளியிருக்கும் தலம்
திருவாரூர் மாவட்டத்தில், தில்லைவிளாகம், வடுவூர், பருத்தியூர், முடிகொண்டான், அதம்பார் ஆகிய தலங்களில் அமைந்துள்ள ராமர் கோவில்கள் 'பஞ்சராமர் க்ஷேத்திரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இதில் முடிகொண்டான் கோதண்டராமர் கோவில் திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில், திருக்கண்ணபுரம் மற்றும் சிறுபுலியூர் திவ்ய தேசங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
கருவறையில், வேறு எங்குமே காண முடியாத வகையில் அனுமன் இல்லாத ராமர் எழுந்தருளி இருப்பதை நாம் இத்தலத்தில் காணலாம். ராமரின் இடது புறம் சீதையும், வலது புறம் லட்சுமணனும் உள்ளனர். ராமர் சீதையை மீட்டுக் கொண்டு அயோத்தி திரும்புகையில் பரத்வாஜ முனிவர் வேண்டுகோளுக்கிணங்க அவர் ஆசிரமத்தில் தங்கி இருந்து விருந்துன்ன சம்மதித்தார். 16 வருடம் முடியப்போவதால் தமக்காக காத்திருக்கும் தம்பி பரதன் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வான் என்று கருதி அனுமனை அயோத்திக்கு அவசரமாக அனுப்பி தாம் கிளம்பி வந்து கொண்டே இருக்கும் தகவலைத் தெரிவித்துவிட்டு வரும்படி ஸ்ரீராமர் உத்தரவிட்டார். அனுமனும் அயோத்தி சென்று பரதனிடம் ராமர் கூறியவற்றை தெரிவித்துவிட்டு இங்கு திரும்பினார். அப்போது ராமர் தான் வருவதற்கு முன்பே விருந்து சாப்பிட்ட செய்தி அறிந்ததும் ஆசிரமத்திற்குள் வராமல் கோபித்துக் கொண்டு வெளியிலேயே உட்கார்ந்து கொண்டாராம். ராமரும் தனக்கு அளிக்கப்பட்ட விருந்தில் பாதியை அனுமனுக்கு அளித்து சாந்தப்படுத்தினார். கோபித்துக் கொண்ட அனுமனுக்கு கோயிலுக்கு நேர் எதிரில் தனியாக சந்நிதி இருப்பதையும் காணலாம்.
ராமருக்கு விருந்தோம்பல் செய்வதில் உற்சாகமடைந்த பரத்வாஜ ரிஷி, ராமரிடம் தனது கிரீடத்துடன் (முடி) தரிசனம் தரும்படி கேட்டுக் கொண்டார். ராமர் தனது தனது குலதெய்வமான ரங்கநாதரின் ஆசீர்வாதத்தைப் பெறாமல் இதைச் செய்ய முடியாது என்று கூறியபோது, பரத்வாஜ ரிஷி தனது சக்தியைப் பிரயோகித்து ரங்கநாதரை இந்த இடத்திற்கு அழைத்து வந்தார். ரங்கநாதர், ஐந்து தேவலோக மலர்களால் ஆன மலர் கிரீடத்தை ராமருக்கு சூட்டினார். ராமர் அந்த மலர் கிரீடத்துடன் பரத்வாஜர் முனிவருக்கு காட்சி தந்ததால் இத்தலத்திற்கு முடிகொண்டான் என்ற பெயர் ஏற்பட்டது.
இத்தலத்து உற்சவமூர்த்தி ராமர் தனது உடலில் மூன்று வளைவுகளுடன், அதாவது முகம் ஒரு திசையில், இடுப்பு. மற்றொன்று மற்றும் மூன்றாவது வளைவில் கால் என்ற நிலையில் காட்சி அளிப்பது தனித்துவமானது. இந்த ஆசனம் 'உத்தம லக்ஷணம்' என்று குறிப்பிடப்படுகிறது.
பிரார்த்தனை
இத்தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானமும் கீர்த்தியும், புகழும் அடைவர். குறிப்பாக மேல்நாட்டுக் கல்வி படிக்க விரும்புவோர் இத்தலத்தில் வழிபட்டால் அவர்களது பிரார்த்தனை நிறைவேறுகிறது. உயர்கல்வி கற்க விரும்புவர்கள், பாடத்தில் தேர்ச்சி பெற விரும்புவர்கள். கலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலோர் இத்தலத்தில் வந்து வழிபட்டு தங்கள் கலைகளில் சிறந்து விளங்குகின்றனர். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வழிபட்டு மீண்டும் ஒன்று சேர்கின்றனர். மேலும் வேலை வாய்ப்பு தொழில் விருத்தி உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில்
கோவில் கட்டுவதற்காக பக்தன் செலவழித்த பணத்தை நவாபிடம் திருப்பி செலுத்திய ராமன், லட்சுமணன்
தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் , கம்மம் நகரிலிருந்து 120 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில். இக்கோவிலில் ராமர், சீதாபிராட்டியை தனது இடது மடியில் இருத்தி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். தனது நான்கு கரங்களில் இரண்டில் சங்கு, சக்கரமும், மற்ற இரண்டு கரங்களில் வில்லும், அம்பும் ஏந்தி இருக்கிறார். ராமருக்கு இடது பக்கம் லட்சுமணன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
ஆண்டு தோறும் இராமநவமியன்று, இத்தலத்தில் ராமருக்கும், சீதாபிராட்டிக்கும் திருக்கல்யாண உற்சவம் மிகுந்த சிறப்புடன் நடத்தப்படுகிறது.
இந்தக் கோவிலானது பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த கஞ்சர்ல கோபண்ணா என்பவரால் கட்டப்பட்டது. கோபண்ணா என்பவர் பத்ராச்சலத்தில் தாசில்தாராக இருந்தார். அரசின் பணியாளரான இவர், அரசாங்க பணத்தை எடுத்து இந்த கோவிலை கட்டி முடித்து விட்டார். இதை அறிந்த ராஜ்யத்தின் நவாப் தானீஷா, அவருக்கு 12 வருட சிறைத் தண்டனை விதித்து, கோல்கொண்டா சிறையில் அடைத்து விட்டான். கோபண்ணா உடனே ராமனை எண்ணி உருகி அழுதார். தனது பக்தனை காப்பாற்றுவதற்காக ராமர் தனது தம்பி லட்சுமணனுடன், ராமோஜி மற்றும் லக்ஷமோஜி என்ற உருவில் வந்து கோபண்ணா செலவழித்த ஆறு லட்சம் முஹர்களை நவாப் தானீஷாவிடம் திரும்பச் செலுத்தி, பணம் பெற்றுக்கொண்டதற்கான இரசீதினை வாங்கிக்கொண்டு அதை சிறையில் இருந்த கோபண்ணாவின் படுக்கைக்கு அடியில் வைத்து விட்டார்கள். மறுநாள் இதையறிந்த நவாப் தானீஷா, தம்மிடம் வந்து இரசீது பெற்றுச்சென்றது வேறு யாருமல்ல, இராமனும் லட்சுமணனுமே என்று உணர்ந்தார். உடனே கோபண்ணாவை சிறையிலிருந்து விடுதலை செய்தார். கோபண்ணாவைப் பணிந்து வணங்கி மன்னிப்புக் கோரினர். தாம் பெற்ற தங்க முஹர்களை அவர் காலடியில் வைத்துக் காணிக்கையாக்கினார். ஆனால் கோபண்ணாவோ, தங்க முஹர்களை திரும்ப வாங்க மறுத்துவிட்டார். என்றாலும் இரண்டே இரண்டு தங்க நாணயங்களை மட்டும் ராமரின் திருவிளையாடலை நினைவு கூறும் பொருட்டு பெற்றுக் கொண்டார். இந்த இரண்டு தங்க நாணயங்களை இன்றும் பத்திராசலம் கோவிலில் நாம் காணலாம். கோபண்ணா, 'பக்த இராமதாஸ்' என்று எல்லோராலும் போற்றப்பட்டார். அவர் சிறையில் வாடிய போது ராமபிரானை எண்ணி, தெலுங்கில் பல பாடல்களை இராமரைப் போற்றும் வகையில் பாடியுள்ளார். உணர்ச்சி மயமான இந்தப் பாடல்கள், தாசரதி சதகம் மற்றும் கீர்த்தனைகள் என்ற பெயரில் புகழ்பெற்றன.
இராம நவமி திருக்கல்யாண உற்சவத்திற்கு முத்துக்கள் அளித்த நவாப்
இராமனின் சக்தியினை உணர்ந்த கோல்கொண்டா அரசன் தானிஷா, பல்வோஞ்ச பரகானா கிராமத்தில் கிடைக்கும் வருமானத்தை கோவில் பராமரிப்பு செலவுகளுக்கென்று ஒதுக்கி ஆணையிட்டார். இது மட்டுமல்லாமல் கோவிலில் ஸ்ரீ ராம நவமி தினத்தன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தன்று மூலவருக்கு அணிவிக்க சிறப்பு அலுவலர் மூலம் முத்துக்களை யானையில் ஏற்றி அனுப்பி வைத்தார். இன்றும் கூட ஆந்திர அரசு, இராம நவமியன்று முத்துக்களை அளிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறது.