தேவன்குடி கோதண்ட ராமர் கோவில்
கண் கொடுத்த கோதண்டராமர்
தென் இந்தியாவின் அயோத்தி என்று போற்றப்படும் தலம்
மன்னார்குடிக்கு வடகிழக்கே, காவிரியின் துணை நதி கோரையாற்றின் தென்கரையில் உள்ள தேவன்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது கோதண்ட ராமர் கோவில்..
முற்காலத்தில் தேவர்கள் இந்த கிராமத்தில் வசித்து வந்ததால் இவ்வூர் தேவன்குடி என்னும் பெயரை பெற்றதாகவும். இங்கு இருக்கும் சிவனை இந்திரன் இந்திரலோகத்தில் இருந்து வந்து பூஜித்ததால் இங்கு அருள் பாலிக்கும் சிவன், இந்திரபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் என்றும் தல புராணம் கூறுகின்றது.
ராமாவதாரத்தில் தென்னகம் நோக்கிய பயணத்தில் ஸ்ரீராமர், இளையபெருமாளோடு சீதையைத் தேடி வந்த இடங்களுள் தேவன்குடியும் ஒன்று. இக்கோவிலில். ஸ்ரீசீதா, லட்சுமண, பரத, சத்ருகன, அனுமன் சமேதமாக ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி அருள்பாலித்து வருகிறார். தென் இந்தியாவின் அயோத்தி என்று இத்தலம் போற்றப்படுகிறது.
முற்காலத்தில் இந்த ராமர் கோவிலில் கண் தெரியாத ஒருவர் தினமும் பிரதட்சணம் செயது வந்தார். ஒருநாள் இவ்வாறு வலம் வருகையில் திடீரென்று கண் பார்வை திரும்ப பெற்றதால், தன்னுடைய நிலங்களை இந்த கோவிலுக்கு நன்றியுடன் கொடுத்து விட்டார். அதனால் இந்த ராமருக்கு 'கண் கொடுத்த கோதண்டராமர்' என்ற பெயர் உண்டாயிற்று.
இந்த கோவில் மணி சுமார் 800 கிலோ எடை கொண்டது. மிகப்பெரிய இந்த மணியின் ஒலி அக்கம்பக்கத்து ஆறு, ஏழு கிராமங்களுக்குக் கேட்குமாம்.