அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் கோவில்
ராமரும் சீதையும் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்
சேலத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் கோவில். ராவணனை வதம் செய்து, சீதையை மீட்டுக் கொண்டு, அயோத்திக்கு முடி சூட்டிக்கொள்ள திரும்பும் வழியில், ராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தந்த தலம் இது.
ராமபிரான், பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளின்படியும், விபீஷ்ணனின் பிரார்த்தனையை ஏற்றும் இந்த இடத்தில், சீதாபிராட்டியுடன் சேர்ந்து பட்டாபிஷேகக் கோலத்தை காட்டியருளினார். ஆக, அயோத்தியில் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருவதற்கு முன்பாகவே, இங்கு முதன்முதலாக பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சி தந்ததால்தான் இவ்வூர் அயோத்தியா பட்டணம் என்று அழைக்கப்படுகின்றது.
கருவறையில் ராமரும் சீதையும் கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றனர். அவர்களின் இத்தகைய தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது. பொதுவாக ராமரின் வலது புறத்தில் எழுந்தருளும் சீதாபிராட்டி, இத்தலத்தில் இடதுபுறம் வீற்றிருப்பது மேலும் ஒரு சிறப்பாகும். ராமர் மற்றும் சீதைக்கு பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோர் சேவை சாற்றியபடியும், அங்கதன், சுக்ரீவன், ஆஞ்சநேயர் ஆகியோர் ராமபிரான்-சீதாதேவியை சேவித்தபடியும் உள்ளனர்.
இக்கோவில் சிற்பங்கள் மிக்க கலை நயமும், அபார அழகும் கொண்டவையாக இருக்கின்றன. இக்கோவில் சிற்ப வேலைப்பாடுகள், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், திருச்செங்கோடு முருகன் கோவில் ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ள அழகிய சிற்ப வேலைப்பாடுகளுக்கு இணையாக உள்ளன. இங்கு இடம்பெற்றுள்ள இசைத் தூண்கள், ராமர் பட்டாபிஷேக சிற்பம், குதிரை, யானை, யாழி, சிங்கம் சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
பிரார்த்தனை
இந்த ஆலயத்துக்கு வந்து கோதண்ட ராமசுவாமியை வணங்கினால், திருமணத் தடை உள்ளவர்களுக்குத் தடை நீங்கி, தாலி பாக்கியம் கிடைக்கும்; ராகு கேது தோஷம் நிவர்த்தி ஆகும்; வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்; சொத்துத் தகராறுகள் நிவர்த்தி ஆகும்; குடும்பப் பூசல்கள் நீங்கும்; குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.