பிரம்மதேசம் கைலாசநாதர். கோவில்
நம் முன்னோர்களின் கட்டிடக்கலைத்திறனுக்கும், சிற்பத்திறனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில்
திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தொலையில் உள்ள அம்பாசமுத்திரம் என்ற ஊரிலிருந்து, 4 கி.மீ. தூரத்தில் உள்ள தலம் பிரம்மதேசம். இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. ராஜ ராஜ சோழனால் இக்கோவில் கட்டப்பட்டு, பின்னர் விஜயநகர பேரரசர்களால் விரிவாகப்பட்டது. பிரம்மதேசம் கைலாசநாதர் கோவிலுக்கு சென்று வந்தால் காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
முற்காலத்தில் இந்த கோவில் மிகப் பெரிய கோட்டையாக இருந்துள்ளது. ஆக எதிரிகளின் படையெடுப்புகளில் இருந்து தப்பிக்கும் விதமாக இக் கோவிலின் கட்டுமானங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் இராஜ கோபுர கதவுகள் மரத்தால் செய்யப்பட்டது ஆகும். இதின் சிறப்பம்சம் என்ன என்றால், அக்காலத்தில் அந்நியர்கள் படையெடுப்பின் போது, அந்த கதவுகளை யானைகளை கொண்டு முட்டச் செய்து எதிரிகள் திறந்து விடக்கூடாது என்பதற்காக இந்த கதவுகளில் கூர்மையாண ஆணிகள் சிறிய இடைவெளியில் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை யானையை கொண்டு கதவுகளில் மோதச் செய்தால் அந்த ஆணிகள் வெளியேறி முட்டும் யானைகளின் மீது குத்தி காயப்படுத்தும் படி இக்கதவுகளை அமைத்து இருந்தார்கள்.
கோவிலின் மேற்குப் பிரகாரத்தில் உள்ள தாமரை வடிவிலான வட்டவடிவக் கல்லின் மீது நின்று பார்க்கும்போது, கோவிலின் மூன்று கோபுரங்களும் தெரிவது அக்கால கட்டிடக்கலையின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது. ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும், எதிரே உள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பது, கட்டிடக் கலையின் சிறப்பை பறைசாற்றுவதாக உள்ளது.
இக்கோவிலுக்குள் நுழைந்ததும் அழகிய கூரை போன்ற அமைப்புடைய முகப்பு மண்டபம் காணப்படுகிறது. முதன்முதலாகப் இந்தக் கூரையைப் பார்ப்பவர்களுக்கு ஒரு கணம், இது மரக்கூரையோ என்ற ஐயம் கண்டிப்பாக எழும். ஏனெனில், மரத்தில் செய்யப்பட்டது போல, அத்தனை நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டு கல்லால் ஆனதாக இந்தக் கூரை அமைக்கப்பட்டுள்ளது.
இக் கோவிலில் உள்ள திருவாதிரை மண்டபத்தில் கல்லில் செதுக்கிய யாளிகளே தூண்களாக உள்ளன. இந்த மண்டபத்தின் முன்புறம் மேலே குரங்குகள் தாவிச் செல்வதை போன்ற சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தூண்களில் இராமன், வாலியை மறைந்திருந்து தாக்கும் இராமயண சிற்பம் உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இராமன் ஒரு தூணிலும், போர் புரியும் வாலி - சுக்ரீவன் மற்றொரு தூணிலும் இருக்க, ராமன் இருக்கும் தூண் அருகே நின்றால் வாலி -சுக்ரீவன் தெரியும் படியும், வாலி - சுக்ரீவன் இருக்கும் தூண் அருகே நின்றால் ராமர் தெரியாத படியும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள நந்தி ஒரே கல்லில் மிகவும் பிரம்மாண்டமாகவும், கலைநயத்துடனும் செதுக்கப்பட்டது என்ற சிறப்பை கொண்டது. சலங்கை, சங்கிலி மற்றும் ஆபரணங்கள் அணிந்த நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்ததாக இந்த நந்தி காட்சி அளிக்கின்றது. நந்தி உள்ள முகப்பு மண்டபத்தின் மேற்கூரையில், ஒரே கல்லால் ஆன கல் சங்கிலி, அதன் நுனியில் ஒரு மணியும், அதனுடன் மணியின் நாக்கும் காணப்படுகிறது. இது, அக்கால சிற்பக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
வாசகர்களின் கவனத்திற்கு
இப்பதிவில் வரைபடத்திற்கு (Map) கீழ் இடம் பெற்றுள்ள 'நுணுக்கமான சிற்பம்' என்று குறி சொல்லை கிளிக் செய்தால், முந்தைய பதிவுகளில் வெளியான நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோவில்களை பற்றிய தகவல்களைப் படிக்கலாம்.
தெப்பக்குளத்தில் தெரியும் ராஜகோபுரத்தின் நிழல்
கூர்மையாண ஆணிகள் உள்ள கதவு
யாளி தூண்கள்
மரக்கூரையோ என்று எண்ண வைக்கும் கல் கூரை
சலங்கை, சங்கிலி மற்றும் ஆபரணங்கள் அணிந்த நந்தி
ஒரே கல்லால் ஆன கல் சங்கிலி, நுனியில் ஒரு மணி, மணியின் நாக்கு