அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்
கர்ப்பிணி கோலத்தில் உள்ள அபூர்வ அம்பிகை
சிவபெருமான் போல் நெற்றிக்கண் உடைய அம்பிகை
தினமும் முப்பெரும் தேவியராக அருள் பாலிக்கும் அம்பிகை
உலக ஜீவராசிகளின் கை ரேகைகளை தன் கரத்தில் கொண்ட அம்பிகை
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப்பெற்ற தலம்.
இத்தலத்து அம்பிகை சௌந்தரநாயகிக்கு, சிவபெருமான் போல் நெற்றியில் மூன்றாவது கண் அமைந்திருக்கின்றது. அம்பிகைக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யும்போது அவருடைய மூன்றாவது கண்ணை நாம் தரிசிக்க முடியும்.
இந்த அம்பிகை அபிஷேக நேரங்களில் கர்ப்பிணி பெண் தோற்றத்தில் காட்சி அளிக்கிறாள். சந்தனாபிஷேகம் செய்யும்போது , ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு இருப்பதுபோன்ற அம்பிகையின் மேடிட்ட வயிற்றை நாம் தரிசிக்க முடியும். இப்படி கர்ப்பிணி தோற்றத்தில் காட்சி அளிக்கும் அம்பிகையை, வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. கர்ப்பிணி கோலத்தில் அம்மன் உள்ளதால், இங்கு உள்ள அம்பாளை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இந்த அம்பிகை காலையில் மஹிஷாசுரமர்த்தினியாக சிவப்பு நிற புடவையிலும், மதியம் லட்சுமியாக பச்சை நிறப்புப் புடவையிலும், மாலையில் சரஸ்வதியாக வெள்ளை நிற புடவையிலும் காட்சி அளிக்கின்றாள்.
இந்த அம்மனின் உள்ளங்கையில், உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் கை ரேகைகளும் அடங்கி இருப்பதாக ஐதீகம். பாலாபிஷேகம் செய்யும் போது அம்மனின் உள்ளங்கை ரேகைகளை நாம் பார்க்கலாம்.
திருமணமாகாத பெண்களும் ஆண்களும் இங்கு வந்து அர்ச்சனை, அபிஷேகம் செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. பிரிந்த கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழக்கூடிய அமைப்பு கிடைக்கும்.