தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
சிவப்பு நிற கல்லால் ஆன அபூர்வ நந்தி
இரு முன்கால்களையும் மடக்கி வைத்திருக்கும் அரிய தோற்றம்
திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி. இக்கோவில் திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தேவார வைப்பு தலமாகும்.
இக்கோவில் நந்தியம்பெருமான் பல சிறப்புகளைப் பெற்றவர். இவருடைய திருமேனியானது வழக்கத்திற்கு மாறாக, கருப்பு நிற கல்லுக்கு பதிலாக சிவப்பு நிற நிற கல்லால் ஆனது. வழக்கமாக சிவாலயங்களில் நந்தியம்பெருமான் மூன்று கால்களை மடக்கியும், ஒரு காலை மட்டும் நிமர்த்தியும் அமர்ந்த கோலத்தில் இருப்பார். ஆனால், இக்கோவிலில் நந்தியம்பெருமான் தன் இரு முன்கால்களையும் மடக்கி வைத்திருக்கின்றார். இது ஒரு அரிதான காட்சியாகும். மேலும் அவரது வலது காதும் மடிந்து காணப்படுவதும் சிறப்புக்குரியதாகும். அவர் தன் தலையை சற்றே சாயத்து தன் காதை இறைவன் பக்கம் திருப்பி இருப்பதும் ஒரு வித்தியாசமான தோற்றம் ஆகும்
தொடர்ந்து 11 பிரதோஷங்களில் பங்கேற்று, நந்தியெம்பெருமானை மனமுருகி வேண்டினால், நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும் என்பது பக்தர்களின் கூற்றாக உள்ளது.
தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
தென் கேதார்நாத் என்று போற்றப்படும் தலம்
வேதங்கள், நான்கு தூண்களாக இறைவனின் அருகில் இருக்கும் அபூர்வ அமைப்பு
திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி.
இமயமலை கேதார்நாத் தலத்தில் உள்ள கேதாரீசுவரரை வழிபட்டால் என்ன பலனோ அதே பலன் தரக்கூடிய தலம், தின்னக்கோணம். இத்தலத்து இறைவனின் சிவலிங்கத் திருமேனியானது பசு வடிவில் சுயம்பாக கிழக்கு மேற்காக 7.5 அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்டது. பசுவுக்கு நெற்றியில் திருநீற்றுப்பட்டை, நிறைய மாலைகள், ஆபரணங்கள், வஸ்திரங்கள் உடலை சுற்றி சார்த்தி படுத்திருந்தால் எப்படி இருக்குமோ, அது போல் தான் பசுபதீஸ்வரர் சுயம்புவாக பசு உருவில் காட்சி தருகிறார். மூலவர் பசுபதீசுவரர், கேதார்நாத் இறைவனைப் போல பசுவின் திருமேனி கொண்டு முகவாயைத் தரையில் வைத்து படுத்திருக்கும் நிலையில் அமைந்துள்ளதால், இத்தலம் தென் கேதார்நாத் என்று போற்றப்படுகின்றது. எனவே கேதார்நாத் சிவாலாயத்துக்குச் செல்ல முடியாதவர்கள், தின்னக்கோணம் கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டால், கேதார்நாத் சென்று வந்ததன் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கேதார்நாத் இறைவனைப் போல அமைந்துள்ளதால், இத்தலம் தென் கேதார்நாத் என்று போற்றப்படுகின்றது.
இறைவன் பசுபதீசுவரரின் வலது பக்கத்தில் நான்கு தூண்கள் ஒரே வரிசையில் அமைந்துள்ளன. இப்படி மூலவரின் பக்கத்தில் தூண்கள் அமைந்திருப்பதை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது. இந்த அமைப்பு இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். வேதங்களின் பொருளை சிவபெருமான் விளக்கிக் கொண்டிருந்தபோது பார்வதி தேவியின் கவனம், அருகில் இருந்த காமதேனுவின் மீது சென்றது. அதனால் சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவி, இத்தலத்தில் தவமிருந்து மீண்டும் இறைவனை அடைந்தார். அந்த வகையில் நான்கு வேதங்களின் பெருமைகளையும் உணர்த்தும் வகையில், இக்கோவிலின் கருவறைத் தூண்கள் நான்கும், வேதங்கள் நான்கை எடுத்துரைப்பதாகக் கூறப்படுகின்றன.
பிராத்தனை
பித்ருக்களால் விடப்பட்ட சாபம், தோஷம், களத்ர தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும் பரிகாரத்தலமாக திண்ணக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோவில் விளங்குகிறது. பசுக்கு எதாவது தீங்கு இழைத்து அதனால் சாபம் பெற்றவர்கள், பசுவும் கன்றும் தானம் வழங்க வேண்டிய தலம் இது. திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இங்கு வந்து வழிபடலாம்.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன்
அகிலாண்டேஸ்வரி என்பதற்கு உலகத்தை ஆள்பவள் என்று பொருள். திருவானைக்காவல் பஞ்சபூதத் தலங்களில் அப்புத்(நீர்) தலமாகும் இத்தலத்தில் இருக்கும் ஜம்பு லிங்கம் அம்பிகையால் செய்யப்பட்டது. ஒரு முறை இத்தலத்திற்கு வந்த அம்பிகை, காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் அமைத்து சிவபெருமானை வழிபட்டார். நீரால் செய்யப்பட்டதால் அந்த லிங்கம் ஜம்புகேஸ்வரர் எனப் பெயர் பெற்றது.
அகிலாண்டேஸ்வரி அம்பிகையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள். ஆரம்பத்தில் இத்தலத்தில் அம்பாள் உக்கிரமாக இருந்ததால், பக்தர்கள் மிகவும் அச்சமுற்று கோவிலுக்குள் செல்லாமல் வெளியில் இருந்து வழிபட்டு வந்தனர். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த, ஸ்ரீசக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர். ஆனால், இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்துக்குப் பதிலாக, இரண்டு தாடங்கங்களை, ஸ்ரீசக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்குப் பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். அம்பிகையை மேலும் சாந்தப்படுத்தும் வகையில் அம்பிகைக்கு முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
இத்தலத்தில் தினமும் நடைபெறும் உச்சிக்கால பூஜை தனிச்சிறப்புடையது. அப்போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வார். இது போன்ற பூஜை வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
51 சக்தி பீடங்களில் தண்டநாதபீடம் எனும் வாராஹி பீடமாக இந்த சந்நதி விளங்குகிறது.
குணசீலம் தார்மீகநாதர் கோவில்
இரண்டு கால்களையும் மடித்தபடி காட்சியளிக்கும் அபூர்வ நந்தி
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள குணசீலத்தில் அமைந்துள்ளது தார்மீகநாதர் கோவில். இறைவியின் திருநாமம் ஹேமவர்ணேஸ்வரி.
பொதுவாக சிவாலயங்களில் நந்தியெம்பெருமான் ஒரு காலை சற்றே மடக்கியும், மற்றொரு காலை மடித்தபடியும் காட்சித் தருவார். ஆனால், இக்கோவிலில் தனது இரண்டு கால்களையும் மடித்தபடி காட்சியளிக்கிறார். நந்தியம்பெருமானின் இந்த கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. பொதுவாக சித்தர்கள் நடமாடிய கோவிலிலோ, அவர்கள் கோவில் அமைவதற்கு உதவியிருந்தாலோ, நந்தியெம்பெருமானின் அமைப்பு மாற்றத்துடன் காணப்படுமாம். அந்த வகையில் நந்தியெம்பெருமான் தனது இரண்டு கால்களையும் மடித்தபடி காட்சியளிப்பதால், இக்கோவிலில் சித்தர்கள் நடமாட்டமும் இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்
சுவாமி கருவறையின் மேல் இரட்டை விமானம் இருக்கும் அபூர்வ வடிவமைப்பு
கருவறையில் சிவபெருமானுடன் பார்வதி அருவமாக இருக்கும் ஒரே தலம்
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் ஒப்பிலாநாயகி.
பொதுவாக சிவாலயங்களில் சுவாமி, அம்பிகை சன்னதியின் கருவறையின் மேல் விமானம் இருக்கும். ஆனால் இத்தலத்திலோ சுவாமி விமானத்தின் மேல் இரட்டை விமானம் இருக்கும் வடிவமைப்பு வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாது. மேலும் சிவபெருமானின் லிங்கத் திருமேனியானது கருவறையின் வலது பக்கம் சற்று ஒதுங்கி இருக்கும். இதற்கு காரணம், இறைவன் தனது இடது பக்கத்தில் அருவமாக இருக்கும் பார்வதி தேவிக்கு இடம் கொடுத்திருக்கிறார். சுவாமி, அம்பாளுக்கு தனித்தனி விமானம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான், இந்த கருவறையின் மேல் இரட்டை விமானம் இருக்கின்றது. தமிழகத்தில், இப்படி இரட்டை விமானம் கருவறையின் மேல் இருக்கும் அமைப்பு, வேறு எந்த கோவிலிலும் இல்லை என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
குணசீலம் தார்மீகநாதர் கோவில்
பித்ருதோஷ நிவர்த்திக்கான தலம்
தோல் நோய்களை தீர்க்கும் அம்மனின் குங்குமப் பிரசாதம்
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள குணசீலத்தில் அமைந்துள்ளது தார்மீகநாதர் கோவில். இறைவியின் திருநாமம் ஹேமவர்ணேஸ்வரி.
ஒரு சமயம் இப்பகுதியில் பிரளயம் ஏற்பட்ட போது காவிரி ஆற்றில் ஒரு சிவலிங்கம் அடித்து வரப்பட்டது. இரண்டாகப் பிளந்த அந்த லிங்கத்தின் ஒரு பகுதி வடகரையிலும் (குணசீலத்திலும்) மற்றொன்று தென் கரையிலும் பிரதிஷ்டை ஆனது. அவ்வாறாக உருவானதுதான் குணசீலம் தார்மீக நாதர் மற்றும் திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் கோவில்கள். இறைவனின் பிளவுபட்ட பகுதி பின்புறம் உள்ளதால், சுவாமி தரிசனம் செய்யும்போது நமக்கு எவ்வித வேறுபாடும் தெரியாது.
இத்தலத்து தார்மீகநாதர் பிளவுபட்ட திருமேனியாக காணப்படுவதாலும், இவர் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பதாலும் கேட்டவர்களுக்கு கேட்ட வரங்களை தரும் தெய்வமாக தார்மீகநாதர் திகழ்கிறார். பக்தர்களின் பித்ருதோஷத்தை நிவர்த்தி செய்யும் பரிகார நாயகராக இவர் அருள் புரியுன்றார். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பித்ருதோஷ நிவர்த்தி பரிகாரம் இக்கோவிலில் செய்யப்படுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், பித்ருதோஷ பரிகார நிவர்த்தி வழிபாட்டில் பங்கேற்கின்றனர்.
கோவிலின் மகா மண்டபத்தின் வலதுபுறத்தில் இறைவி ஹேமவர்னேசுவரி அம்மன் சன்னதி உள்ளது. ஹேமவனேசுவரி என்றால் தங்கநிறத்தை உடையவள் என்று பொருள். இங்கு நின்ற திருக்கோலத்தில், இரண்டு கரங்களுடன் அபயஹஸ்த முத்திரைகளுடன், தெற்குத் திசை நோக்கி புன்னகைத் தவழ அம்மன் காட்சியளித்து வருகிறார்.
இந்த அம்மனுக்கு குங்கும் அர்ச்சனை செய்து, வழிபாடு நடத்தி, அப்போது தரப்படும் குங்குமத்தை பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
அனுமனை விழுங்கிய முதலை சிற்பம்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஒரு சிற்பக்கலை பொக்கிஷமாகவும் விளங்குகின்றது. இக்கோவிலில் இருக்கும் மண்டபத் தூண்கள், சிற்பங்கள், வேணுகோபாலன் சன்னதி சிற்பங்கள் நம் முன்னோர்கள் சிற்பக் கலையில் அடைந்திருந்த மகோன்னத நிலையையும், பெருமையையும் உணர்த்துகின்றது.
இக்கோவில் சேசராயர் மண்டபத்தில் பல அழகிய சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அம்மண்டபத்து தூண் ஒன்றில், முதலை ஒன்று அனுமனை விழுங்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சுவாரசியமான, ஒரு ராமாயண நிகழ்ச்சி உள்ளது
ராமாயணத்தில், ராவணன் மகனான இந்திரஜித்துக்கும், லட்சுமணனுக்கும் இடையே போர் நடந்தது இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால் வட்சுமணன் மயங்கி விழுந்தார். இலங்கை அரச மருத்துவரான சுசேனர் இமயமலையில் விளையும் சஞ்சீவினி என்னும் மூலிகையை கொண்டு வந்தால் குணப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். உடனடியாக இமயமலைக்கு விரைந்தார் அனுமன். இதையறிந்த ராவணன், தடைகளை ஏற்படுத்த அவற்றை அனுமன் முறியடித்தார். இமயமலைக்கு காலநேமி என்னும் அசுரனை அனுப்பினான் இந்திரஜித். காலநேமி மாரீசனின் மகன் ஆவார். சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அனுமன் அடைந்த போது, அங்கு முனிவர் வடிவில் நின்றிருந்தான் காலநேமி. முனிவரைக் கண்ட அனுமன் வணங்க, அருகில் இருந்த குளத்தைக் காட்டி, இதில் நீராடி வந்து ஆசி பெற்றுக்கொள். உன் எண்ணம் ஈடேறும் என்றான். அனுமன் நீராடிய போது காலநேமியால் ஏவப்பட்ட மாய முதலை அவரை விழுங்கியது. அதன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு அனுமன் வெளியேறினார். அத்த முதலை ஒரு தேவனாக மாறியது. "என் பெயர் தான்யமாகி. சாபத்தால் முதலையாக குளத்தில் இருந்தேன். உங்களால் சாப விமோசனம் பெற்றேன். நீங்கள் முனிவர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர் ஒரு அசுரன். முனிவர் வேடத்தில் உங்களை கொல்ல திட்டம் தீட்டி இருக்கின்றான் என்று காலநேமியின் சதித் திட்டத்தை அனுமனுக்கு எடுத்துரைத்து, காலநேமியைக் கொன்று விடிவதற்குள் சஞ்சீவினிச் செடிகள் பறித்து லட்சுமணனைக் காக்குமாறு தேவன், அனுமனிடம் கூறினான். அனுமனும் காலநேமியைக் கொன்று சஞ்சீவினி மூலிகைச் செடிகள் வளரும் மலையை கொண்டு வந்து லட்சுமணனின் மூர்ச்சையை தெளிய வைத்தார். ராமாயணத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக விளங்கும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் சேசராயர் மண்டபத்தில் உள்ள தாணில் அழகிய சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பாற்றுறை ஆதிமூலநாதர் கோவில்
நோயற்ற, தீர்க்காயுள் மிக்க குழந்தையை அருளும் தலம்
திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருப்பாற்றுறை. இறைவன் திருநாமம் ஆதிமூலநாதர். இறைவியின் திருநாமம் மேகலாம்பிகை, நித்யகல்யாணி. கொள்ளிடம், காவிரி ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோவில் அமைந்திருக்கிறது. பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி ‘பாற்றுறை நாதர்’ என்றும், தலம் ‘பாற்றுறை' (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.
ஒரு சிலருக்கு பிறக்கும் குழந்தைகள் தீர்க்க ஆயுளுடன் இருப்பதில்லை. மற்றும் சிலருக்கோ, பிறக்கும் குழந்தைகளை எப்பொழுதும் நோய் வாட்டிக் கொண்டிருக்கும். அத்தகையோர் வழிபட வேண்டிய தலம் திருப்பாற்றுறை.
16 வயதிலேயே மரணத்தை சந்திக்க இருந்த மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் இது. அற்ப ஆயுள் பெற்றிருந்த மார்க்கண்டேயர், ஆயுள்விருத்திக்காக சிவனை வேண்டி யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது லிங்கத்துக்கு பூஜை செய்ய தீர்த்தம் இல்லை. சுற்றிலும் தண்ணீர் கிடைக்காத நிலையில், லிங்கத்தின் தலையில் இருந்து பால் பொங்கி, தானாகவே அபிஷேகமானது.
எமதர்மனின் திசை தென் திசையாகும். அவரது உக்கிரத்தைக் குறைக்க, இத்தலத்தில் அம்பாள் நித்யகல்யாணி தெற்கு நோக்கி அருளுகிறாள். குழந்தைகளை இழந்து, மீண்டும் குழந்தை பாக்கியத்துக்காக வேண்டுவோர், அம்பாளுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர். பௌர்ணமிதோறும் இதற்குரிய விசேஷ பூஜை இவளது சன்னதியில் நடக்கிறது. புதுமணத்தம்பதிகளும் நல்ல குழந்தைகள் வேண்டி இதே நாளில் பூஜை செய்கின்றனர்.சிவராத்திரி அன்று, பாற்றுறைநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டால், நோயற்ற, தீர்க்காயுள் மிக்க மக்கள் செல்வத்தைப் பெறலாம்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
கம்பரின் ராமாயணத்தை கேட்டு தலையாட்டி ரசித்த நரசிம்மர்
கம்பர் நரசிம்மரின் தீவிர பக்தர். அவர் தான் எழுதிய ஶ்ரீராமகாவியம் நூலை ஸ்ரீரங்கம் கோவிலில், நரசிம்மர் சன்னதி எதிரில் அரங்கேற்ற நினைத்தார். ஸ்ரீரங்கம் கோவிலின் வேத பண்டிதர்கள் மற்றுமுள்ள புலவர்களிடம் தன்னுடைய வேண்டுதலை முன்வைத்தார். அதற்கு அவர்கள் தில்லை சன்னதியில் இருக்கும் மூவாயிரம் தீட்சிதர்களிடம் அனுமதி பெற்று, சான்று ஓலையை வாங்கி வந்தால் இங்கு நீங்கள் அரங்கேற்ற அனுமதிக்கிறோம் என்றார்கள்.
தில்லை சென்ற கம்பர். அங்கிருந்த தீட்சிதர்களிடம் ஸ்ரீரங்கம் கோவிலைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட வேண்டுகோளைக் கூறி தாம் இயற்றிய ராமகாவியத்தைச் சரிபார்த்து சான்று தர வேண்டும் என்று கேட்டார். அவர்களோ, நாங்கள் மூவாயிரம் தீட்சிதர்களும் ஒன்றாகக் கூடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. பலர் பல இடங்களில் இருப்பார்கள். ஒருவர் குறைந்தாலும் ஓலையில் முத்திரை பதிக்கப்படாது. ஆகவே வீண் முயற்சி செய்யாதீர்கள். உமது ஊருக்கே சென்றுவிடுங்கள் என்றனர்.
கம்பர் மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பினார். தன்னுடைய ராமகாதையை அரங்கேற்ற முடியவில்லையே என்று வருத்தப்பட்டு பாடல்கள் சிலவற்றை, அந்தாதிகளாக எழுதினார். ஒருநாள் இரவு நித்திரையில் கம்பனின் கனவில் கடவுள் தோன்றி உடனே தில்லை செல்க என்றார். விழித்த கம்பர் உடனே தில்லை விரைந்து சென்றார். அங்கு மூவாயிரம் தீட்சிதர்களும் ஓர் இடத்தில் ஒன்று கூடி இருப்பதை கண்டார் கம்பர். ஆச்சரியத்துடன் அருகில் சென்ற போது ஒரு தீட்சிதரின் மகன் பாம்பு தீண்டி உடனே இறந்ததால் துக்கம் விசாரிக்க அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர் என்றும் தெரிந்து கொண்டார்.
கம்பராமாயணம் நாக படலம் பாடலைப் பாடி, பாம்பு தீண்டிய சிறுவனை உயிர்ப்பித்த கம்பர்
இறைவனின் அற்புதத் திருவிளையாடலை எண்ணி மகிழ்ந்து தாம் எழுதிய ஶ்ரீராமகாதையின் ஓலைக் கட்டிலிருந்து நாகபடலம் பாடல்களின் ஒரு ஓலைச் சுவடியை எடுத்து இறந்து கிடந்த அச்சிறுவனின் நெஞ்சில் வைத்து அப்படியே அப்பாடலை இறைவனை நினைத்துக் கொண்டு பாடினார். உடனே அச்சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். கூடியிருந்த தில்லை அந்தணர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இவர் பாடலின் ஆற்றலைக் கண்ட அனைவரும், ஒரே முகமாக ஒப்புக்கொண்டு அரங்கேற்றத்திற்கான ஒப்புதல் ஓலை அளித்தனர். அதை வாங்கிக் கொண்டு ஸ்ரீரங்கம் திரும்பிய கம்பர் ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சன்னிதிக்கு எதிரிலுள்ள மண்டபத்தில் வீற்றிருக்கும் தனது இஷ்ட தெய்வமான ஶ்ரீநரசிம்மர் பெருமாள் முன்பு தனது ராமகாவியத்தை அரங்கேற்ற முடிவு செய்தார்.
கர்ஜனை செய்து, தலையையாட்டிய நரசிம்மர்
ஶ்ரீ ராமகாதையைக் கேட்ட ஸ்ரீரங்கத்துப் புலவர்கள் வால்மீகி எழுதிய நூலான ராமாயணத்தில் ஹிரண்ய வதைப் படலம் இல்லை. ஆனால் நீங்கள் எழுதி இருக்கின்றீர்கள். ஆகவே இது ராமாயணத்தோடு சேராது என்பதால் இங்கே அரங்கேற்றம் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள். அதற்கு கம்பர் தமக்கு இறைவனே அடி எடுத்து கொடுத்து எழுத வைத்திருப்பதால், அதைத் தன்னால் மாற்ற இயலாது என்றும், உங்களுடைய சந்தேகத்திற்கு இறைவன் தான் பதில் சொல்லி அருள வேண்டும் என்றும் கூறினார். அதற்கு அவர்கள் அப்படி என்றால் ஹிரண்ய வதைப் படலத்தை மட்டும் முதலில் அரங்கேற்றுங்கள். இறைவன் அடியெடுத்துக் கொடுத்தது உண்மையாக இருந்தால் இறைவனே வந்து சாட்சி சொல்லட்டும். அதன்பிறகு நாங்கள் முழு ராமகாதையை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள். உடனே கம்பர் ஸ்ரீநரசிம்ம பெருமானை மனதில் வைத்து வேண்டிக் கொண்டு ஹிரண்ய வதைப் படலத்தை ஆரங்கேற்றம் செய்ய ஆரம்பித்தார்.
பாடலின் நடுவே அசுரன் ஹிரண்யன் "ஆரடா சிரித்தார்" என்ற கேட்பது போலக் காட்சி வரும் போது மண்டபத்தின் தூணில் இருந்த நரசிம்மர் கடகடவென பெரிய சிரிப்பொலியுடன் கர்ஜனை செய்து கம்பரின் கூற்று உண்மை என கூறி ஆமோதித்து தன்னுடைய தலையையாட்டினார். இந்த அதிசயத்தை, பயத்தோடு கண்ட புலவர்கள் யாவரும் கம்பரின் ராமகாதையை ஏற்றுக்கொண்டனர். அங்கு சிரித்த ஶ்ரீ நரசிம்மரை, மேட்டழகிய சிங்கர் என்பதாக கூறுவார்கள். இவர் தாயார் சன்னிதி அருகில் தனி சன்னிதியில் இப்போதும் இருக்கிறார். இவரது கையில் சங்கு மட்டும் இருக்கிறது சக்கரம் இல்லை. இன்றும் ராமாயணம் அரங்கேற்றப் பட்ட இடமான இம்மண்டப மேடையைக் காணலாம்.
கம்பராமாயணத்தின் சிறப்புகள்
கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 118 படலங்களையும் உடையது. இதில் 10589 பாடல்கள் உள்ளன. தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி, கம்பரின் காலத்தில் உச்சநிலையினை அடைந்தது என்பர். வால்மீகி ராமாயணம் கம்பராமாயணத்தின் மூலமாக இருந்தாலும், கம்பர் அவற்றை வரிக்குவரி மொழி பெயர்ப்பு செய்யவில்லை. அந்நூலில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் அப்படியே இருந்தாலும் முழுமையாக வால்மீகி ராமாயணம் போல் கம்ப ராமாயணம் இயற்றவில்லை. வால்மீகி ராமாயணத்தில் இல்லாத ராமரின் உணவு பழக்கமும், ராவணனின் திறமையும், ராவணன் சீதையைத் தொடாமல் இருந்த நெறியையும் கம்பராமாயணத்தில் காணலாம். கம்பர் தனக்கே உரித்தான பாணியில் வால்மீகி ராமாயணத்தின் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றி உள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ்ச் சொற்களைத் தனது நூலில் கையாண்ட காரணத்தால் கம்பர் தொல்காப்பிய நெறி நின்றவர் என்று அழியாத ஓர் புகழினைப் பெற்றார்.
கம்பர் தனது ராமகாதையை தொல்காப்பிய நெறிப்படி வல்லினம் மெல்லினம் இடையினம் என்று காட்சிக்கு ஏற்ப தனித்தனியாக பிரித்து சந்தத்தோடு பாடல்களில் தமிழை பயன்படுத்திய பெருமைக்கு உரியவர் ஆவார். உதாரணமாக அரக்கி ஒருத்தி நடந்து வரும் காட்சியில் வல்லின எழுத்துக்களில் ஆரம்பித்து சந்தத்தோடு எழுதியிருப்பார். அழகான பெண் நடந்து வரும் காட்சியில் மெல்லின எழுத்துக்களில் ஆரம்பித்து சந்தத்தோடு எழுதியிருப்பார். குதிரை வரும் காட்சிகளில் குதிரையின் காலடி சத்தம் வருவது போல வார்த்தைகள் வைத்து சந்தத்தோடு எழுதியிருப்பார். அதனை படிக்கும் போது குதிரை சத்தம், ரிதத்துடன் வருவது போலவே இருக்கும்.
கம்பரின் காவியத்தை படித்த 14 மொழிகளில் அறிஞரான மகாகவி பாரதியார் தான் கண்ட கவிஞர்களில் கம்பரைப் போல் வள்ளுவரைப்போல் இளங்கோவைப்போல் வேறு யாரையும் கண்டதில்லை என்று இந்த மூன்று தலைசிறந்த கவிஞர்களில், கம்பரை முதலாவதாகக் குறிப்பிட்டு கூறுகிறார். 'கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்' என்று வழங்கும் மொழிகள் அவரது சிறந்த கவித்திறனைப் பறை சாற்றும். பாரதியார் தம் பாடலில் 'புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்று போற்றியுள்ளார்.
திருப்பாற்றுறை ஆதிமூலநாதர் கோவில்
திருப்பாற்கடலில் சயனம் கொண்டுள்ள சிவபெருமான்
திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருப்பாற்றுறை. இறைவன் திருநாமம் ஆதிமூலநாதர். இறைவியின் திருநாமம் மேகலாம்பிகை, நித்யகல்யாணி. பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி ‘பாற்றுறை நாதர்’ என்றும், தலம் ‘பாற்றுறை’ (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.
திருப்பாற்கடல் என்பது இறைவனின் ஜீவ சக்தியாய், அமிர்த மயமாய் உலக ஜீவன்கள் அனைத்திற்கும் ஆதாரமாய்த் தோன்றியதாகும். அந்த அமிர்த சாகரத்தில் பள்ளி கொண்டவரே எம்பெருமான் ஆவார். ஆதியில், முதன்முதலில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் சிவபெருமானே என்று அகத்திய சித்த கிரந்தங்கள் உறுதிபட உரைக்கின்றன. இந்த சிவ அமிர்த புராணத்தை உலகிற்கு பறைசாற்றிய திருத்தலங்களுள் திருப்பாற்றுறை ஒன்றாகும். ஆதியில் முதன் முதலாக தோன்றிய பாற்கடலில் சிவபெருமான் ஏக மூர்த்தியாக,
திருப்பாற்கடலில் சயன நிலையில் எந்த வாகனமும் இன்றி , ஆதிசேஷனின் படுக்கையும் இன்றி பள்ளி கொண்ட நிலையில் அருள்பாலிக்கும் அற்புத திருக்கோலத்தை இன்றும் திருப்பாற்றுறை திருத்தலத்தில் நாம் தரிசித்திடலாம்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கத்து பெரிய கருடாழ்வார்
ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவைதான். ராமரால் தொழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். கோவில் பெரிதென்பதால் பெரிய கோவில் ஆயிற்று. கோபுரம் ஆசியாவிலேயே பெரிது. இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர், திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். வாத்தியத்திற்கு பெரிய மேளம். பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள். 108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள்.
இந்த வரிசையில், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் சன்னதி எதிரில் அமைந்துள்ள கருடாழ்வார், பிரம்மாண்டமாக 25 அடி உயரத்தில் காட்சி தருகிறார். இவ்வளவு பெரிய திருமேனியுடைய கருடாழ்வாரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இவர் எட்டு விதமான நாகாபரணம் அணிந்துள்ளார். இந்த சிலை இறகுகளை விரித்து பறக்க தயாராக உள்ளது போன்ற நிலையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கருடாழ்வாருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் இவருக்கு கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளால் ஏற்படும் பாதிப்பை நீக்குபவர் இவர் என்பது ஐதீகம்.
திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் கோவில்
தாயை விட அதிக கருணை காட்டும் அம்பிகை
திருச்சி-துறையூர் பேருந்துப் பாதையில் திருப்பைஞ்சீலியிலிருந்து 12 கி.மீ. அமைந்துள்ள தலம் திருத்தியமலை. இறைவன் திருநாமம் ஏகபுஷ்ப பிரியநாதர். இறைவியின் திருநாமம் தாயினும் நல்லாள். 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இத்தலம், தரை மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில் உள்ளது. இறைவனுக்கு ஏகபுஷ்பப் பிரியநாதர் என்ற பெயர் வந்ததற்குச் சுவையான வரலாறு ஒன்று உண்டு. இறைவனால் படைக்கப்பட்ட எத்தனையோ மலர்கள் இறைவனுக்குச் சாத்தப்படுகின்றன. ' தேவ அர்க்கவல்லிப்பூ' என்னும் ஒரு மலரை மட்டுமே இறைவனே காத்திருந்து ஏற்றுக் கொள்வதாக நம்பிக்கை உண்டு. வற்றாத நீர் உள்ள ஒரு சுனையில், பல யுகங்களுக்கு ஒரே முறை தேவ அர்க்கவல்லிப்பூ பூக்கும் சிறப்பு மிக்க சுனை, அமைந்திருக்கும் இடம்தான் திருத்தேசமலை என்னும் திருத்தியமலை. தேவ அர்க்கவல்லிப்பூவை அணிந்து மகிழ்வதற்காக யுக யுகாந்திரமாய் இறைவன் காத்திருப்பதால், இந்த சிவபெருமானின் திருப்பெயர், ஏகபுஷ்பப் பிரியநாதர் என்று வழங்கப்படுகிறது. இறைவனின் இந்த திருநாமம் அபூர்வமான ஒன்று.
இத்தலத்து இறைவன் சற்றே சாய்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். பக்தர்கள் அளிக்கும் மலரை விரும்பி ஏற்றுக் கொள்வதற்கு ஏற்றவாறு சற்றே சாய்ந்த நிலையில் காட்சியளிக்கிறார்.திங்கட்கிழமை தோறும் லிங்கத்திற்கு வில்வ இலை கொண்டும், ஆவுடையாருக்கு துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். 11 வாரங்கள் தொடர்ந்து இவ்வாறு செய்தால் எண்ணிய செயல்கள் எல்லாம் நிறைவேறும்.
இக்கோவிலில் தனிசன்னதி கொண்டு எழுந்தருளியுள்ள இறைவிக்குத் தாயின் நல்லாள் எனப் பெயர். இந்த அம்பிகை ஒரு தாயை விட அதிக கருணை காட்டுவதால் தாயின் நல்லால் என்ற பெயர் பெற்றாள். இந்த அம்மனுக்கு மாத்ரு அதீத கருணாம்பிகா, சுருள் குழல் நாயகி என்ற பெயர்களும் உண்டு. பெண்களால் ஏற்பட்ட சாபங்கள் நீங்க இந்த அம்பிகையை வழிபட வேண்டும். அதனால் பெண்களால் விடப்பட்ட சாபங்கள் நீங்கி, விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆறு வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் போதும். சூரியனைக் கண்ட பனிபோல தடைகள் தானே விலகும். திருமணத்தடை, கல்வித்தடை, மணமக்களிடையே ஏற்படும் பிரச்னைகள் முதலான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து அருளும் அன்னையாகத் திகழ்கிறாள், தாயினும் நல்லாள்.
வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோவில்
மகாலட்சுமி சிவபெருமானிடம் ஐஸ்வர்ய மகுடம் பெற்ற தலம்
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், குணசீலம் கோவிலை அடுத்து, ஆனால் முசிறிக்கு 6 கி.மீ. முன்னால் உள்ள தலம் வெள்ளூர். இத்தலத்து இறைவன் திருநாமம் திருக்காமேஸ்வரர். இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி. திருக்காமேஸ்வரர் பெருமானை வணங்கினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த ஊருக்கு வெள்ளூர் என்ற பெயர் ஏற்பட்டது.
வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாத வகையில், இங்கே மகாலட்சுமி கோவில் கொண்டிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். கோவிலின் குபேர பாகத்தில் மகாலட்சுமி தவம் செய்யும் கோலத்தில், ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்தோடு சிவலிங்கத்துடன் கூடிய ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த ஐஸ்வர்ய மகுடத்தை தலையில் சூட்டியவாறு, அமர்ந்த திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமென எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி அவதாரமெடுத்தார். அசுரர்களை மயக்கி லவண சமுத்திரம் எனும் உப்பு நிறைந்த கடலில் அசுரர்களை மூர்ச்சையாகும்படி செய்துவிட்டு திரும்பும்போது சிவபெருமானின் பார்வையில் மோகினி தென்பட்டாள். மோகினியின் அழகைக்கண்டு சிவபெருமான் மோகிக்க ஹரிஹரபுத்திரர் எனும் ஐயப்பன் அவதரித்தார். இதைக் கேள்விப்பட்ட மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி கோபம் கொண்டாள். உடனே வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகம் வந்தாள். இங்கு வில்வாரண்ய க்ஷேத்திரம் எனும் வெள்ளூரில், மகாலட்சுமி சிவபெருமானை பிரதிஷ்டை செய்து தவம் செய்யலானாள். பல யுகங்களாக தவம் செய்தும் சிவபெருமான் காட்சி தரவில்லை. உடனே மகாலட்சுமி தன்னை வில்வமரமாக மாற்றிக்கொண்டு சிவலிங்கத் திருமேனியில் வில்வமழையாகப் பொழிந்து சிவபூஜை செய்தாள். பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் மகா லட்சுமியின் முன் தோன்றி, ஹரிஹரபுத்திர அவதாரத்தின் நோக்கத்தை விளக்கிக்கூறி மகாலட்சுமியை சாந்தப்படுத்தினார். பின் மகாலட்சுமியை ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்ராமமாக மாற்றி, மகாவிஷ்ணுவின் இதயத்தில் அமரச் செய்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் நிரந்தரமாக இடம் பெற செய்தார்.
வில்வமரமாகத் தோன்றி, வில்வமழை பொழிந்து சிவபூஜை செய்ததின் பலனாக இத்தலத்தில் மகாலட்சுமிக்கு ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை அளித்து மகாலட்சுமியை சகல செல்வத்துக்கும் அதிபதி ஆக்கினார். அதனால் இத்தலத்தில் மகாலட்சுமி, ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்துடன், அதனால் இத்தலத்தில் மகாலட்சுமி, ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்துடன், தல விருட்சமான வில்வ மரத்தடியில் தவக்கோலத்தில் இருந்து திருவருட்பாலிக்கிறாள். இத்தலத்திலேயே தங்கி இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை அருளும்படி கூறினார். இவள் அபய, வரத திருக்கரங்களோடு, மேலிரு கரங்களில் தாமரை மலருடன் காட்சி தருகிறாள். ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்யும் முன் வில்வமரத்துக்கே முதலில் பூஜை செய்கிறார்கள். மகாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை அருளியதால் இத்தல இறைவனுக்கு ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு.
இத்தலத்தின் பிற சிறப்புகள்
சுக்கிரன், ஈசனை வழிபட்டு யோகத்திற்கு அதிபதி ஆனதும், குபேரன் தனாதிபதி ஆனதும் இத்தலத்தில்தான் என தலபுராணம் கூறுகிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் தினமும் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து ஈசனை வழிபடுவதாக ஓலைச்சுவடிகளில் காணப்படுகிறது. ராவணன் சிவவழிபாடு செய்து ஈஸ்வரப் பட்டம் பெற்றதும் இத்தலத்தில்தான். ஈசன் காமனை நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தாலும் அவன் எய்த மன்மத பாணம் அம்பிகை மீதுபட, தேவி சிவகாம சுந்தரியானாள் அவளே இங்கு சிவனுடன் உறையும் நாயகியாய் வீற்றிருக்கிறாள். மகேசன், மன்மதனை மன்னித்து அரூப அழகுடலை அளித்ததால், சிவபிரான் திருக்காமேஸ்வரர் என்றும், மன்மதனுக்கு வைத்தியம் அருளியதால் வைத்தியநாதராகவும் பெயர் பெற்றார்.
பிரார்த்தனை
தங்கம், வெள்ளி நகை செய்பவர்கள் தங்கள் தொழில் அபிவிருத்திக்காக இங்கு வருகிறார்கள். சுக்கிர தோஷம் உடையவர்கள்,வெள்ளிக்கிழமைகளில் 16 வகையான அபிஷேகம் செய்து 16 நெய்தீபம் ஏற்றி, 16 செந்தாமரை மலர்கள் சாத்தி, 16 முறை வலம் வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும். கடன் தொல்லைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் . தாமரை மலர் சாற்றி அட்சய திரிதியை அன்று மஹாலட்சுமியை வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இடையாற்றுமங்கலம் மாங்கலீசுவரர் கோவில்
திருமண தடை நீக்கும் தலம்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அமைந்துள்ளது இடையாற்றுமங்கலம். இறைவன் திருநாமம் மாங்கலீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. திருமண பாக்கியத்தைக் கொடுக்கிற கோயில் இது. அதனால்தான் சுவாமிக்கு மாங்கலீசுவரர் என்றும் அம்பாளுக்கு மங்கலாம்பிகை என்றும் திருநாமம் அமைந்தது என்கிறது தல புராணம். மாங்கல்யேசுவரர் என்பதுதான் மாங்கலீசுவரர் என மருவியது.
மாங்கல்ய மகரிஷி என்பவர் இத்தலத்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். மாங்கல்ய மகரிஷி வேண்டுகோளுக்கு இணங்க, இங்கே தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சிவபெருமான், திருமண பாக்கியத்தை அருளுகிறார். இத்தலத்தில் மாங்கல்ய மகரிஷிக்கு தனி சந்நிதி இருக்கிறது. அவருடைய நட்சத்திரம் உத்திரம். பொதுவாகவே, உத்திர நட்சத்திரம் என்பது மாங்கல்ய வரம் தந்தருளக்கூடியது. அதனால்தான் பங்குனி உத்திரத்தில் பல தெய்வங்களுக்கு திருமண வைபவங்கள் நடந்திருக்கின்றன என்கிறது புராணம். மாங்கல்ய மகரிஷியும் உத்திர நட்சத்திரக்காரர் என்பதால், இந்தத் தலம் கல்யாண வரம் தரும் தலமாகப் போறப்படுகிறது.
திருமண அழைப்பிதழில் கையில் மாலைகளுடன் தேவதைகள் பறப்பது போல் படங்கள் இருப்பதற்கான காரணம்
நமது கல்யாண சம்பிரதாயங்களில், திருமண அழைப்பிதழில் கையில் மாலைகளுடன் தேவதைகள் பறப்பது போல் படங்கள், இரண்டு பக்கமும் அச்ச்சிட்டிருப்பார்கள். அந்த தேவதைகளை திருமண வைபவத்துக்கு அனுப்புபவர் மாங்கல்ய மகரிஷி என்றும் திருமணமாகும் தம்பதிக்கு ஆசியும் அருளும் வழங்குகிறார் என்பது ஐதீகம்.
பிரார்த்தனை
மாங்கலீசுவரர் கோவிலில், எந்த நாளில் வந்து வேண்டுமானாலும் வேண்டிக்கொள்ளலாம். என்றாலும் உத்திர நட்சத்திர நாளில் வந்து, மாங்கல்ய மகரிஷியையும் மாங்கலீசுவரரையும் மங்களாம்பிகையும் தரிசித்து வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட திருமண வரம் விரைவில் நடந்தேறும். அதேபோல், உத்திர நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருக்கோயில் இது. உத்திர நட்சத்திரக்காரர்கள் இங்கே வந்து வணங்கினால், முன் ஜென்ம தோஷம் உள்ளிட்டவை கூட நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
தவம் செய்யும் கோலத்தில் காட்சி தரும் மாங்கல்ய மகரிஷியை நெய் விளக்கேற்றி வழிபட்டு, சிவனாரையும் அம்பாளையும் மனதாரப் பிரார்த்தித்தால், சீக்கிரமே கல்யாண மாலை தோள் சேரும். மகரிஷியின் திருப்பாதத்தில் ஜாதகத்தை வைத்து வேண்டிக்கொள்வதும் இங்கே வழக்கமாக இருக்கிறது. திருமணம் நடந்தேறியதும் இங்கு வந்து சிவனாருக்கும் அம்பாளுக்கும் மாங்கல்ய மகரிஷிக்கும் மாலைகள் சார்த்தி, இனிப்பு வகைகள், தேங்காய் முதலானவற்றை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள்.
இங்கு பிரார்த்தனை செய்து கொண்டால், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார். மாங்கல்ய பலம் பெருகும். கன்னியரின் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார் மாங்கல்ய மகரிஷி. மாங்கலீசுவரர், மங்களாம்பிகை, மாங்கல்ய மகரிஷி மூவருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து, சீப்பு, கண்ணாடி, புடவை அல்லது ரவிக்கை துண்டு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு என மங்கலப் பொருட்களை சுமங்கலிகளுக்கு வழங்கி வேண்டிக்கொண்டால், சகல தோஷங்களும் விலகி, திருமணம் விரைவில் நடைபெறும்.
திருப்பாற்றுறை ஆதிமூலநாதர் கோவில்
நடனமாடிய கோலத்தில் இருக்கும் வீணை தட்சிணாமூர்த்தி
திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருப்பாற்றுறை. இறைவன் திருநாமம் ஆதிமூலநாதர். இறைவியின் திருநாமம் மேகலாம்பிகை, நித்யகல்யாணி. கொள்ளிடம், காவிரி ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோவில் அமைந்திருக்கிறது.
நந்தியும், பலிபீடமும் கோவில் கோபுரத்திற்கு வெளியே இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
தல வரலாறு
இப்பகுதியை ஆண்ட சோழன், இவ்வழியாக வேட்டைக்கு சென்றபோது தன் படைகளுடன் சற்று நேரம் ஓய்வெடுத்தான். அப்போது அருகிலுள்ள புதரில் இருந்து வெண்ணிற அதிசய பறவை பறந்து சென்றது. மன்னன் அப்பறவையின் மீது ஆசைகொண்டு அம்பு எய்தான். ஆனால், தப்பி விட்டது. சிலநாட்கள் கழித்து மன்னன் மீண்டும் இவ்வழியாக சென்றபோது, முன்பு பார்த்த அதே பறவை பறப்பதைக் கண்டான். புதர் தானே அதன் இருப்பிடம், அங்கு வந்ததும் பிடித்து விடலாம் எனக் கருதி மறைந்திருந்தான். அந்த இடம் முழுதும் பால் மணம் வீசியது. பறவை வரவே இல்லை. சந்தேகப்பட்ட மன்னன் புதரை வெட்டினான். ஒரு புற்று மட்டும் இருந்தது. புற்றை தோண்டியபோது, பால் பீறிட்டது. பயந்த மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். அன்றிரவில் அவனது கனவில் அசரீரியாக ஒலித்த சிவன், பால் வெளிப்பட்ட இடத்தில் தான் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோவில் கட்டி வழிபட்டான். பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி ‘பாற்றுறை நாதர்’என்றும், தலம் ‘பாற்றுறை’ (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.
அற்ப ஆயுள் பெற்றிருந்த மார்க்கண்டேயர், ஆயுள்விருத்திக்காக சிவனை வேண்டி யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது லிங்கத்துக்கு பூஜை செய்ய தீர்த்தம் இல்லை. சுற்றிலும் தண்ணீர் கிடைக்காத நிலையில், லிங்கத்தின் தலையில் இருந்து பால் பொங்கி, தானாகவே அபிஷேகமானது.
வீணை தட்சிணாமூர்த்தி
கருவறை சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கிறார். அவரது இடது கால் சற்றே மடங்கி நளினமாக இருக்கிறது. இதனை, வீணையின் இசைக்கேற்ப நடனமாடிய கோலம் என்கிறார்கள். அருகே சீடர்கள் இல்லை. தட்சிணாமூர்த்தியின் இந்த வித்தியாசமான கோலத்தைக் காண்பது மிகவும் அபூர்வம். இசைக்கலைஞர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவில்
எமதர்மன் குழந்தை வடிவில் இருக்கும் அபூர்வ தோற்றம்
திருச்சியில் இருந்து ( வழி - மண்ணச்சநல்லூர் சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருப்பைஞ்ஞீலி. இறைவன் திருநாமம் ஞீலிவனேஸ்வரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. இத்தலத்தில் அருளும் யமதர்மராஜனை சனிக்கிழமைகளில் வழிபட, சனி பகவான் அருள் கிட்டும்.
இத்தலத்தில் எமதர்மனுக்கு என்று அமைந்துள்ள தனிச் சன்னதி, ஒரு குடைவரைக் கோவிலாகும். பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் புடைப்பு சிற்பமாக சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க,சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமதர்மன் இருக்கிறார். இறைவன் பெயர் மிருத்யுஞ்சயர் , தாயார் தாட்சாயணி . மிருத்யுஞ்சயர் என்றால் எம பயம் போக்குபவர் என்று அர்த்தம் அதனால் இந்த சந்நிதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர்.
திருக்கடவூர் தலத்தில், மார்க்கண்டேயனுக்காக எமதர்மனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமிதேவி சிவபெருமானிடம் முறையிட்டாள். சிவபெருமான் அதற்கிணங்கி தைப்பூச நாளன்று மீண்டும் எமதர்மனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து, தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.
எமதர்மன் சனி பகவானுக்கு அதிபதி என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சன்ன உள்ளதாலும் இத்தலத்தில் நவகிரக சன்னதி இல்லை . இத்தலத்தில் அருளும் யமதர்மராஜனை சனிக்கிழமைகளில் வழிபட, சனி பகவான் அருள் கிட்டும். அதனால் சனிபகவானின் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இக்கோவிலுக்கு வந்து பிராத்தனை செய்கின்றனர் .
துடையூர் விஷமங்களேஸ்வரர் கோவில்
பிரம்மாவிற்கும் சரஸ்வதி தேவிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் ஒரே தலம்
திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில், தேவாரத் தலமான திருவாசிக்கு மிக அருகில் அமைந்துள்ள தேவார வைப்புத் தலம் துடையூர், இறைவனின் திருநாமம் விஷமங்களேஸ்வரர் . அம்பிகையின் திருநாமம் வீரமங்களேஸ்வரி என்ற மங்களநாயகி. சுமார் 2,000 வருடப் பழைமை மிக்க கோயில்.
இறைவன் கருவறையின் வடபுற சுற்றுச்சுவரில், நான்முகனாராகிய பிரமன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கருவறையின் தென்புறச் சுவரில் பத்மாசன கோலத்தில் குடையின்கீழ், ஞான சரஸ்வதி தேவி கரங்களில் வீணை இல்லாமல், அருள்புரிகிறார். தீச்சுவாலைகளுடன் திகழும் திருவாசி இத்தேவியின் தலைக்குப் பின் திகழ, சடாமகுடத்துடன் அமர்ந்த கோலத்தில், வலக்கரம் சின்முத்திரை காட்ட, தொடைமீது திகழும் இடக்கரத்தில் ஏட்டுச் சுவடி திகழ பின்னிரு கரங்களில் நீர்ச் சொம்பும், மணிமாலையும் ஏந்திய நிலையில் ஞான சரஸ்வதி தேவி, காணப் பெறுகின்றாள்.
வைகாசி விசாக நன்னாளில் இந்த கோயிலில் பிரம்மாவிற்கும் சரஸ்வதி தேவிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். ஹோமங்கள் முடிந்து பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் காலை 4.30 மணிமுதல் 6 மணிக்குள் பிரம்மாவிற்கும், சரஸ்வதி தேவிக்கும் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். இது போல் பிரம்மாவிற்கு கல்யாணம் நடைபெறும்தலம் தமிழ்நாட்டிலேயே இந்த துடையூர் தலம் மட்டும் தான். வேறு எங்கும் நடப்பதில்லை- பிரம்ம முகூர்த்த வேலையில் பிரம்மாவை தரிசிப்பதே பெரும் புண்ணியம். அத்துடன் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி- பிரம்மா திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்வது பெரும் புண்ணியம்.
வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
முயலகன் இல்லாத சதுர தாண்டவ நடராஜர்
திருச்சியில் இருந்து 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது வயலூர். அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் தடுத்தாட்கொண்ட முருகப் பெருமான் முதன்புதலில் வயலூருக்குத்தான் வரச்சொல்லி உத்தரவிட்டார். அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டுதான், முதலில் தனது திருப்புகழ் பாடல்களை பாடத் துவங்கினார்.
முருகப்பெருமானின் சிறப்பு வாய்ந்த தலமாக இது இருந்தாலும், ஆதியில் இது சிவாலயமாகவே உருவானது என்கிறது தலவரலாறு. இத்தலத்து இறைவன் திருநாமம் ஆதிநாதர். தம்மை நாடிவரும் பக்தர்கள் கேட்பதை மறக்காமல் கொடுப்பதால் மறப்பிலி நாதர் என்றும் அக்னி பகவான் வழிபட்டதால் அக்னீஸ்வரன் என்றும்பல நாமங்களால் வணங்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் ஆதிநாயகி.
சிவபெருமான் நடராஜராக ஆடும் ஆனந்த தாண்டவத்தின் போது தனது வலது காலை முயலகன் மீது ஊன்றி, இடது காலைத் தூக்கிய வண்ணம் காட்சி அளிப்பார். ஆனால் வயலூர் தலத்தில் எழுந்தருளியிருக்கும் நடராஜரோ சதுர தாண்டவ கோலத்தில், காலடியில் முயலகன் இல்லாமல் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றியபடி காட்சியளிக்கிறார். நடராஜரின் சதுர தாண்டவ கோலம் என்பது காணக் கிடைத்தற்கரிய காட்சியாகும்.
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்
கைகளில் வீணையோடு நின்ற கோலத்தில் காட்சி தரும் வீணா தட்சிணாமூர்த்தி
திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் வழியில், 23 கி.மீ. தொலைவில் உள்ள தலம் லால்குடி. இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெருதிருப்பிராட்டியார். இவ்வூர் பக்கம் படையெடுத்து வந்த முகமதிய மன்னன் மாலிக் கபூர் இத்திருக்கோவிலின் சிவப்பு கோபுரத்தை கண்டு உருதுமொழியில் லால்குடி (லால் – சிவப்பு, குடி – கோபுரம்) என்று அழைக்க, அதுவே இவ்வூருக்கு பெயராகி அழைக்கபடுகிறது.
இத்தலத்தில் வீணையைக் கையிலேந்தி, சற்றே வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கின்றார் தட்சிணாமூர்த்தி. இவரை 'வீணா தட்சிணாமூர்த்தி' என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது. இசைக்கு தலைவன் சிவபெருமான். இதை உணர்த்தும் வகையில் அழகிய சடை முடியோடும், கைகளில் வீணையோடும், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் இத்தலத்து தட்சிணாமூர்த்தி.
பிரார்த்தனை
இவரை வணங்கினால் உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார். வியாழக் கிழமைகளில் இவருக்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும். வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும். மேலும் இவர்க்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.
உத்தமர் சீலி வேணுகோபால சுவாமி (செங்கனிவாய் பெருமாள்) கோவில்
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அருளும் செங்கனிவாய் பெருமாள்
திருச்சி - கல்லணை செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது உத்தமர் சீலி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது வேணுகோபால சுவாமி (செங்கனிவாய் பெருமாள்) கோவில். தாயார் திருநாமம் அரவிந்தநாயகி.
கருவறையில் குழலூதும் நிலையில், திருவாயில் வெண்ணெயுடன் புல்லாங்குழல் ஏந்தி, புன்முறுவலுடன் புல்லாங்குழல் வாசிக்கும் நிலையில் ருக்மிணி – சத்யபாமா சமேதராக, வேணுகோபால சுவாமி நின்ற கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். இவருக்கு 'செங்கனிவாய்ப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு. இந்த கோவிலை கட்டியவர் சோழ மன்னன் கரிகாலன். இந்தத் தலத்தில்தான் கரிகாலன், மைத்ரேய மகரிஷியிடம் கல்லணை கட்டுவதற்கான ரகசியங்களை உபதேசமாகப் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. சோழ மன்னர்களில் முதலாம் பராந்தக சோழனின் (907-953) நான்கு புதல்வர்களில் ஒருவர் பெயர் உத்தமசீலி. இவர் பெயராலேயே இவ்வூர் உத்தமசீலி என்றும் உத்தமசீலி சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.
பிரார்த்தனை
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் தரிசித்து வழிபட வேண்டிய கோவில் இது. இந்தக் கோவிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைப்பதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். மேலும் வீடு கட்டும் பணியில் தடை ஏற்பட்டால், இங்கு வந்து வேணுகோபால சுவாமியை வேண்டிக் கொண்டு சென்றால், உடனே வீடு கட்டும் பணி நல்லபடியாக முடிவதும் பக்தர்கள் நம்பிக்கையாக இருக்கிறது.