ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் நெல் அளவைத் திருநாள்
நெல் அளவை கணக்கிட, படியளக்கும் பெருமாள்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திவ்ய தேசம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். உலகத்து உயிர்களை காத்து ரட்சிப்பவர் பெருமாள். இதைத்தான் 'பகவான் எல்லோருக்கும் படி அளக்கிறான்' என்று வழக்கத்தில் சொல்வார்கள். ஆனால், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே, வருஷத்துக்கு ஏழு தடவை படியளக்கிறார். சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி ,தை ,மாசி மற்றும் பங்குனி என ஏழு மாதங்களில் நெல் அளவை திருநாள், ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வருகிறது.மாதங்களின் பிரம்மோற்சவ காலங்களில் அதன் ஏழாம் திருநாளன்று, நெல் அளவைக் கண்டருளப்படுகிறது.
நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி - பூதேவி துணைவரக் கிளம்புகிறார் நம்பெருமாள்.
நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையில் இருந்து நம்பெருமாள் இந்தப் பட்டத்துக்கு தானிய வரவு எவ்வளவு?; செலவு எவ்வளவு? மீதி இருப்பு எவ்வளவு?... என்று கணக்கிட்டுப் பார்க்க, ஸ்ரீதேவி பூதேவி சகிதமாகக் கிளம்புகிறார். கணவரின் சரிபங்கான மனைவிக்கு எல்லா விஷயமும் தெரிந்திருக்க வேண்டும். தம்பதிகளிடையே எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று நமக்கு உணர்த்துவதற்காகத்தான், நெல் அளவைத் திருநாள் அன்று பூதேவி ஸ்ரீதேவி சகிதமாக எழுந்தருளுகிறார்.
நம்பெருமாள். ஆரியபட்டாள் வாசல் வழியே வந்து செங்கமலத் தாயார் சன்னிதி எனப்படும் திருக்கொட்டாரம் முன்பு நாலு கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அப்போது பாசிப்பயறும் பானகமும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன. செங்கமலத் தாயார் சன்னிதி பூஜை பரிசாரகம் செய்பவர் ஒரு தட்டில் வெற்றிலைப் பாக்கு வைத்து நம் பெருமாளை எதிர் சென்று வணங்கி வரவேற்கிறார். அவருக்கு மரியாதை செய்யப்படுகிறது.
பெருமாள் அருகில் இருக்கும் ஸ்தானிகர் அருளிப்பாடி, கார் அளப்பானை அழைக்கிறார். ஸ்தானிகர் குரல் கேட்டு, 'ஆயிந்தேன் ஆயிந்தேன்' எனச் சொல்லி விரைந்து சென்று பெருமாள் முன்பு மிகப் பணிவாக நிற்கிறார் அளவைக்காரர். அவருக்கு தீர்த்தம், சந்தனம், மஞ்சள்பொடி அளித்து, பரிவட்டம் கட்டி, சடாரி சாத்தி மரியாதை செய்யப்படுகிறது. பெருமாள் பாதமான சடாரி சாத்தினாலே அளவைக்காரருக்கு உத்தரவு வந்துவிட்டது என்று பொருள். உடனே கார் அளப்பான் எனப்படும் அளவைக்காரர், பித்தளை மரக்கால் கொண்டு நெல்லை அளக்கத் தொடங்குகிறார். திருவரங்கம் என சொல்லி முதல் மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார். அடுத்து பெரிய கோயில் எனக் கூறி இரண்டாவது மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார். அதன் பின்னர் வரிசையாக மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என அளக்கப்படுகிறது. ஒன்பது என அளக்கும்போது எங்கிருந்தோ அசரீரியாக ஒரு குரல் கேட்கிறது. ‘நிரவி விட்டு அள’ என்று ஸ்தானிகர்தான் குரல் கொடுக்கிறார். ‘சரியாக அளந்து போடு’ என்று பெருமாளை கட்டளையிடுவதாக இது ஐதீகம்.
அந்தக் காலத்தில் இருந்து எல்லாமே எம்பெருமானின் நேரடி பார்வை நடைபெற்று வந்துள்ளதாக நம்பிக்கை. தெய்வ காரியங்களுக்கு வேண்டிய அனைத்து பொருட்களும் திருக்கொட்டாரத்தில் இருந்து எடுத்து அனுப்பப்படுகிறது. அந்த வகையில் திருக்கொட்டாரம் ஒரு பொக்கிஷம். அங்கு ஆறு தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைந்துள்ளன. நாடு செழிக்கவும் மக்கள் ஆரோக்கியமும், தானிய உற்பத்தி சேமிப்பும் மிக மிக முக்கியம். தற்போதும் அதை வலியுறுத்தி வருகிறது ஸ்ரீரங்கம் கோயிலின் நெல் அளவைத் திருநாள்.
உலகம் யாவுக்கும் படி அளப்பவர் பெருமாள். ஒவ்வொன்றாக எண்ணிப் போட்டால் எந்தக் காலத்தில் எண்ணி முடிப்பது? அதனால் அதன் பின்னர் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம், கோடி, கோடியோ கோடி என அளந்து போடப்படுகிறது. தனது நேரடிப் பார்வையில் 'நெல் அளவை' கண்ட நம்பெருமாள், அதன் பிறகு ஸ்ரீதேவி பூதேவியுடன் இணைந்து பூந்தேரில் எழுந்தருளி வீதி உலா வருகிறார், உலகிற்கெல்லாம் படியளக்கும் பெருமாள். இப்படியாக, ஸ்ரீரங்கத்தில் நெல் அளவை திருநாள் கொண்டாடப்படுகிறது .