சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்
சிற்பத்தின் ஒரு காதிலிருந்து மறு காது வரை மிக நுண்ணிய துளை அமைந்திருக்கும் அதிசயம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள, சுசீந்திரத்தில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோவில். இக்கோவிலில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கிறார்கள். இந்து மதத்தின் முக்கியமான தெய்வங்கள் அனைவருக்கும் இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ வம்சத்தால் கட்டப்பட்டது. பின்னர் திருமலை நாயக்கர் மற்றும் திருவிதாங்கூர் மன்னர்களால் விரிவாக்கங்கள் செய்யப்பட்டன. மதுரை, ஆவுடையார் கோவில், திருநெல்வேலி, கிருஷ்ணாபுரம் கோவில்களைப் போல, இக்கோவிலின் கட்டிடக் கலையும், சிற்பக் கலையும் மிகவும் நுணுக்கமும், அற்புத அழகும் வாய்ந்தவை.
இக்கோவிலில் கலை வேலைப்பாடுகள் மிகுந்த சில மண்டபங்கள் உள்ளன. அவை
1. கலைநயத்துடனான சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம்.
2. இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபம்.
3. திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம்.
4. வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம்.
5. பல இறை வடிவ சிற்பங்களை கொண்ட சித்திர சபை.
கோவிலின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நான்கு இசைத்தூண்கள் ஆகும். 1035 நுணுக்கமாக செதுக்கப்பட்ட தூண்களைக் கொண்ட நடன மண்டபமும் உள்ளது. இம்மண்டபத்து தூண்களில் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ள பாவை விளக்கு சிற்பங்கள் உள்ளன. இப்பாவை விளக்கு சிற்பங்களில் தான் அந்த காலங்களில்,இரவு நேரங்களில் விளக்குகள் ஏற்ற பயன்படுத்தப்பட்டது.
முருகன் சன்னதி மண்டபத்தில் உள்ள தூணில் அமைந்துள்ள தர்மராஜா சிற்பம், அதி அற்புதமான அழகுடனும், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுடனும், ஆச்சரியமும் பிரமிப்பும் அடைய வைக்கும் நம் முன்னோர்களின் விஞ்ஞான தொழில்நுட்பத் திறனையும் விளக்குவதாக அமைகின்றது. இச்சிற்பத்தில் நம்மை வியக்க வைக்கும் அம்சம் என்னவென்றால், ஒரு 0.5 மி.மீ. விட்டமுள்ள சிறிய குச்சியை ஒரு காதின் வழியே நுழைத்தால் அது மறு காது வழியாக வெளியே வருகின்றது. இவ்வளவு மிகச் சிறிய துளையை, சிலையின் முக அகலத்திற்கு ( சுமார் ஒரு அடி) எந்த உபகரணத்தை கொண்டு அமைத்தார்கள் என்பது இன்றுவரை விடை கிடைக்காத கேள்வியாக உள்ளது.
சுப்பிரமணியர் கோவில்
மும்மூர்த்திகளின் சொரூபமாக காட்சி தரும் முருகப்பெருமான்
கன்னியாகுமரியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் ,சுசீந்திரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தலம் மருங்கூர் . இந்த முருகன் சிலையானது மயிலோடு சேர்த்து ஒரே கல்லினால் ஆனது என்பது சிறப்பாகும்.
இத்தலத்தில் முருகன் சுப்பிரமணியர் என்ற திருநாமத்தோடு மும்மூர்த்திகளின் அம்சமாய் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஐப்பசி மாதத்தில் சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் காலையில் முருகன் சிவப்பு வஸ்திரம் அணிந்து நடராஜராகவும், மதியம் வெள்ளை வஸ்திரம் அணிந்து பிரம்மாவாகவும், மாலையில் பச்சை வஸ்திரம் அணிந்து விஷ்ணு சொரூபமாகவும் காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பாகும்.
சாப விமோசனம் அருளும் தலம்
ஒரு சமயம் சாப விமோசனம் பெற இந்திரன் இத்தலத்திற்கு அருகில் உள்ள சுசீந்திரம் வந்து சிவனை வேண்டினான். சிவனும் அவனுக்கு காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார். அப்போது இந்திரனைச் சுமந்ததால், தனக்கும் பாவம் ஒட்டிக்கொண்டதாகக் கருதிய அவனது வாகனமான குதிரையும் சிவனிடம் விமோசனம் கேட்டது. சிவனோ குதிரையை மருங்கூர் தலத்திற்கு வந்து முருகனை வேண்டி சாப விமோசனம் அடையுமாறு பணித்தார். அதன்படி இங்கு வந்த குதிரையும் இங்கிருந்த குன்றின் மீது முருகனை வேண்டி தவமிருந்தது. முருகப்பெருமான் அதற்கு காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினார். குதிரை வழிபட்ட தலம் என்பதால், இத்தல முருகன் விழாக்காலங்களில் மயிலுக்குப் பதிலாக குதிரையில் பவனி வருகிறார்.
இத்தலத்து முருகனை வழிபட்டால் அணைத்து பாவம் மற்றும் சாபங்களிலிருந்து விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தாணுமாலயன் கோவில்
பெண் தோற்றத்தில் காட்சி தரும் விநாயகர்
பெண் தோற்றத்தில் காணப்படும் விநாயகரை விநாயகி, விக்னேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி என்ற பெயர்களில் வழிபடுகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள, சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில், ஒரு தூணில் விநாயகியின் சிற்பமுள்ளது. விநாயகி, அமர்ந்த கோலத்தில் வலக்காலை மடித்து, இடக்காலைத் தொங்கவிட்ட நிலையில் இருக்கின்றார். தலையில் வேலைப்பாடுடன் கூடிய அழகிய மகுடம் விளங்குகிறது. மேற்கைகளில் அங்குச, பாசம் உள்ளன. கீழ்க்கைகள் அபய, வரத ஹஸ்தங்களாக விளங்குகின்றன. கழுத்திற்குக்கீழ் பெண்ணுருவம் கொண்ட இவர், கழுத்தணியும், கால்களில் சிலம்புகளும், இடையில் புடவை அணிந்தும் காட்சி தருகிறார்.
தாணுமாலயன் கோயில்
இந்திரன் நள்ளிரவில் பூஜை செய்யும் ஆலயம்
நாகர்கோவில் அருகிலுள்ள சுசீந்திரத்தில் அருளும் தாணுமாலயன் ஆலயத்தில், தினமும் நள்ளிரவு இந்திரன் வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அதனால் இக்கோவிலில் முதல் நாள் மாலை பூஜை செய்யும் அர்ச்சகரை, மறுநாள் காலை பூஜை செய்ய அனுமதிப்பதில்லை. இக்கோவிலில் அர்ச்சகர்களை நியமிக்கும்போதே, தாங்கள் மூலவர் சன்னதியில் கண்ட காட்சிகளை வெளியில்சொல்லக் கூடாது என்ற உறுதிமொழியை அவர்களிடம் வாங்கிக் கொள்கிறார்கள்.
சுப்பிரமணியர் கோயில்
குதிரை வாகனத்தில் முருகன்
முருகப்பெருமான் விழாக்காலங்களில் பெரும்பாலும் மயில் வாகனத்தில்தான் பவனி வருவார்.ஆனால் மருங்கூர் சுப்பிரமணியர் ஆலயத்தில் உற்சவகாலங்களில் முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் வலம் வருகிறார்.இத்தலம் கன்னியாகுமரியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும்,சசீந்திரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.