காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்
காமாட்சி அம்மனின் திருநாமத்தில் உள்ள காம என்பது அன்பையும் கருணையையும், அட்ச என்பது கண்ணையும் குறிக்கும். காமாட்சி அம்மன் தன் அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள்பவர். இவருக்கு, மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீசக்கரநாயகி என்னும் பெயர்களும் உண்டு.
காமாட்சி அம்மன் இருபத்தி நான்கு தூண்கள் தாங்கி நிற்கும் காயத்ரி மண்டபத்தின் நடுவில் பத்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார். தன் நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு, கரும்பு வில் ஏந்தியிருக்கிறார். காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்க்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின்_கண்கள் சிமிட்டுவது போன்ற உணர்வினை ஏற்படுத்துமாம்
இக்கோலிலில் காமாட்சி அம்மன் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்னும் மூன்று வடிவில் இருக்கின்றார். மூலவர் காமாட்சி அம்மன் ஸ்தூல(உருவ) வடிவிலும், அஞ்சன காமாட்சி சூட்சும(உருவமில்லாத) வடிவிலும், காமாட்சி அம்மன் முன் அமைந்துள்ள ஸ்ரீ சக்கரம் காரண(உருவமும், உருவமில்லாத) வடிவிலும் அருளுகிறார்கள. ஸ்ரீ சக்கரம், ஆதிசங்கரரால், எட்டாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார்.
காஞ்சிபுரத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்மனே மூலவர் அம்பாளாக விளங்குகிறார். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்மனுக்கு என தனி சன்னதி கிடையாது.
அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இத்தலம், ஒட்டியாண(அம்பிகையின் இடுப்பு எலும்பு விழுந்த) பீடம் ஆகும்.
திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
கையில் செங்கோலுடன் ராஜ கோலத்தில் காட்சி தரும் பெருமாள்
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் தலம்
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை தாண்டி வரும் படாளம் கூட்டு ரோடில் இருந்து வேடந்தாங்கம் செல்லும் வழியில், நாலு கி.மீ தொலைவில் இருக்கிறது திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். இந்த மலைக்கோயிலுக்கு செல்ல சாலை வசதியும் உண்டு.
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இத்தலம், திருப்பதியில் உள்ளது போல் அமைப்பும் பூஜை முறைகளும் கொண்ட கோவிலாகும்.
மூலவர் பிரசன்ன வெங்கடேசர் பெருமாள், செங்கோலுடன் ராஜ கோலத்தில் காட்சி தருகிறார் . தன் இரு மார்பிலும் இரண்டு மஹாலக்ஷ்மியை ஏந்தியுள்ளார், திருவாசியில் ஆதிசேஷன் இருக்கிறார். .பெருமாள் அஷ்டலக்ஷ்மி ,தசாவதார ஒட்டியாணம் ,சகஸ்ரநாம மாலைகள் அணிந்து மிகவும் அழகாக காட்சி தருகிறார். வியாழன் தோறும் இவைகள் எதுவும் அணியாமல் திருப்பதியில் உள்ளது போல் நேத்திர தரிசனம் தருகிறார் .
தொண்டைமான் மன்னன் ஒருவர், தனக்கு வெற்றி தேடித் தந்த பெருமாளுக்கு நன்றி சொன்னார். அப்போது இம் மலையில், பெருமாள் கையில் செங்கோலுடன் மன்னரின் மனதில் காட்சி கொடுத்தார். அவ்வாறு தன் மனதில் வந்து காட்சி கொடுத்ததால், அவருக்கு பிரசன்ன வெங்கடேசர் என்ற பெயர் வைத்து இதே இடத்தில் வெங்கடாஜலபதிக்கு மன்னன் கோவிலையும் எழுப்பினார்.
வராஹ சுவாமி தரிசனம்
திருப்பதியில் வராஹ சுவாமி பெருமாளை தரிசித்த பிறகே ஸ்ரீனிவாசரை தரிசிக்க வேண்டும் .அதேபோல் இங்கேயும் வராகரை தரிசித்த பிறகே பெருமாளை தரிசனம் செய்யவேண்டும் , வராஹ அவதாரத்தை கருட ஆழ்வார் காணமுடியாமல் போகவே அவரின் வேண்டுகோளை ஏற்று இத்தலத்தில் பெருமாள் கருடனுக்கு வராஹ அவதாரத்தை காட்டினார். இங்கு வராஹர் தனது வலது காலை ஆதிசேஷனின் வால் மீதும், இடது காலை ஆதிசேஷனின் தலையின் மீது வைத்து, லட்சுமி தேவியை மடியில் அணைத்தபடி தரிசனம் தருகிறார் .
திருவோண தீபம்
திருவோணம் நட்சத்திரக்காரர்கள் சென்று தரிசிக்க வேண்டிய கோவிலாகும் . ஒவ்வொரு மாதமும் வரும் திருவோணம் நட்சத்திரம் அன்று ஓண தீபம் ஏற்றுகிறார்கள்
,அன்று காலை பெருமாள் யாக மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அப்போது ஸ்ரீனிவாசருக்கு யாகம் ,திருமஞ்சனம் மற்றும் திருக்கல்யாணம் நடக்கும் .அப்போது பெருமாள் சன்னதியில் அகன்ற தீபத்தில் நெய் ஊற்றி பெருமாளின் காலடியில் வைத்து ஆராதனை செய்கிறார்கள் . திருவோண நட்சத்திரக்காரர்கள் மற்றும் பக்தர்கள் திருமணம் தோஷம் மற்றும் புத்திர தோஷம் உடையவர்கள் நெய் கொடுத்து தீப தரிசனம் காணுகிறார்கள் .
தாமல் வராகீசுவரர் கோவில்
பெருமாளின் சங்கு, சக்கரங்கள் பதிந்த அபூர்வ சிவலிங்கத் திருமேனி
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நுழைவு வாயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாமல். இறைவனின் திருநாமம் வராகீசுவரர், இறைவியின் திருநாமம் கௌரி அம்பாள். காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள சில சிவத்தலங்களை பெருமாள் தசாவதார கோலத்தில் வழிபட்டுள்ளார். அதில் இத்தலம் பெருமாள் வராக மூர்த்தி கோலத்தில் வழிபட்ட தலமாகும். இத்தலத்து சிவலிங்கத் திருமேனியில் பெருமாளின் சங்கு, சக்கரங்கள் பதிந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
ஒரு முறை இரண்யாக்ஷன் என்ற அசுரன், பூமா தேவியைக் கடலுக்கு அடியில் கடத்திச் சென்று மறைத்து வைத்தான். இந்த அசுரன் இரண்யகசிபுவின் சகோதரன் ஆவான். இரண்யாக்ஷனின் இந்த செயலால் பூமியில் வாழ்ந்த உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று பூமியைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர். இதையடுத்து மகாவிஷ்ணு, வராக (பன்றி) அவதாரம் எடுத்து. கடலுக்குள் சென்று இரண்யாக்ஷனை அழித்து பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்தார். அசுரனை அழித்த பின்னரும் வராகரின் அவேசம் அடங்கவில்லை. இதனைக் கண்ட முனிவர்களும், தேவர்களும், மகாவிஷ்ணுவின் கோபத்தை கட்டுப்படுத்தும்படி சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான், வேடன் வடிவில் தோன்றி, வராக அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணுவுடன் மோதினார். வராகத்தின் கொம்பை உடைத்து. அவற்றை தனது அணிகலனாக ஆக்கிக்கொண்டான். இதற்கு பிறகு வராக உருவில் இருந்த திருமாலின் கோபம் தணிந்தது. பின்னர் திருமால், இத்தல சிவபெருமானை வழிபட்ட பேறுபெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது. வராக அவதாரம் எடுத்த திருமாலுடன் மோதிய போது, சிவபெருமானின் திருமேனியில் சங்கு, சக்கரங்கள் பதிந்தன. அதனால் தான் இக்கோவில் சிவலிங்கத் திருமேனியில் சங்கு சக்கரம் பதிந்த அடையாளங்கள் உள்ளன.
இக்கோவிலில் அஷ்ட பைரவர்களும் தூண்களில் எழுந்தருளி உள்ளது தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
இத்தலத்தில் வழிபட்டால் பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். பதவி உயர்வு கிடைக்கும். திருமணத் தடை விலகும்.
இக்கோவில் காளஹஸ்திக்கு இணையான பரிகாரத் தலமாக விளங்குகின்றது, அதனால் ராகு கேது தோஷ நிவர்த்திக்கான பூஜைகள் இங்கே நடைபெறுகின்றன.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்
கருடசேவையின் போது இராபர்ட் கிளைவின் ஆணவத்தை அடக்கிய வரதராஜப் பெருமாள்
வைணவத்தில் கோவில் என்றால் அது திருவரங்கம், மலை என்றால் திருமலை. பெருமாள் கோவில் என்றால் திருக்கச்சி என்பது சிறப்பு. ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒரு சிறப்பு உண்டு, திருமலையிலே ரதோற்சவம், திருவரங்கத்தில் குதிரை வாகன ஒய்யாளி, திருமாலிருஞ்சோலையிலே குதிரை வாகனம் சிறப்பு, திருக்கச்சியில் வரதருக்கு கருட சேவை சிறப்பு.
காஞ்சிபுரம் நகரில் வருடத்திற்கு மூன்று முறை கருட சேவை கொண்டாடப்படுகிறது. வைகாசி பிரம்மோற்சவம், ஆனி மாதம், சுவாதி நட்சத்திரம் கூடிய பெரியாழ்வார் சாற்றுமுறை, ஆடி மாதம் பௌர்ணமி கஜேந்திர மோட்சம் ஆகிய விழாக்களின்போது கொண்டாடப்படுகிறது.
தனது யாகத்தில் தோன்றிய ஸ்ரீமந்நாராயண மூர்த்திக்கு பிரம்மனே உற்சவம் நடத்தியதாகவும், அதன் வழியாக வருடாவருடம் வைகாசி பிரம்மோற்சவம் நடத்தப்படுகின்றது என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேதாந்த தேசிகரை பெருமாள் வைகுந்தத்திற்கு அழைத்தபோது, இங்கு காஞ்சியில் மிகவும் கோலாகலமாக கருட சேவை நடைபெறுவது போல வைகுந்தத்தில் நடைபெறாதே என்று காஞ்சியிலேயே இருக்கின்றேன் என்று பதிலிறுத்தாராம்.
15ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவி காளமேகம் அவர்கள் இந்த அத்தி வரதனின் வைகாசி பிரம்மோற்சவ கருட சேவையின் போது ஓளி மிக்க கருடன் மீது பொன் வண்ணத் திருமேனியுடன் அத்திவரதன் திருவீதி வலம் வரும் அழகைக் கண்டு இகழ்வது போல் புகழும் நிந்தாஸ்துதி வகையில் பாடியுள்ளார்.
இராபர்ட் கிளைவ் (1725 -1774) என்னும் ஆங்கில அதிகாரி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி உருவாக காரணமாக இருந்தவர். காஞ்சிபுரத்தில் ஒரு கருடசேவையின் போது வரதராஜப் பெருமாள், இராபர்ட் கிளைவின் ஆணவத்தை நீக்கி தன் பக்தனாக்கிய நிகழ்வு மிகவும் சுவையானது. ஒரு வருடம், வரதராஜப் பெருமாள் கருடனில் ஆரோகணித்து பக்தருக்கு அருளிக்கொண்டு பவனி வரும் போது குதிரையில் வந்த இராபர்ட் கிளைவ், பவனியை நிறுத்துமாறு ஆணையிட்டான். அதற்கு பட்டர்கள் வெயில் அதிகமாக உள்ளதால் பெருமாளுக்கு ஆகாது. அவர் உடனடியாக திருக்கோவிலுக்கு திரும்ப வேண்டும் என்று பதிலிறுத்தனர். இதைக் கேட்ட இராபர்ட் கிளைவ், எள்ளி நகையாடினான். இது ஒரு சிலை, இதற்கு என்ன வெயில் என்று பரிகாசம் செய்தான். கோபம் கொண்ட ஒரு பட்டர் அவனிடமிருந்து ஒரு துணியைப் பெற்று பெருமாளின் திருமேனியை ஒற்றி அவனிடம் திருப்பித் தந்தார். சொத சொத என்று பெருமாளின் வியர்வையால் நனைந்த அந்த துணியைத் தொட்ட இராபர்ட் கிளைவ், மின்னல் தாக்கியது போல் அதிர்ந்தான். அவன் மனம் மாறியது. பெருமாளின் பக்தனானான். பெருமாளுக்கு ஒரு விலையுயர்ந்த மகர கண்டிகையை சமர்ப்பணம் செய்து வணங்கினான். இன்றும் இந்த மகரகண்டி பெருமாளுக்கு சிறப்பு நாட்களில் அணிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு வைகாசி விசாக கருடசேவை 22.5.2024 புதன்கிழமையன்று நடைபெறுகின்றது.
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில்
வலது கரத்தில் ஒரு விரலையும், இடது கரத்தில் இரண்டு விரல்களையும் உயர்த்தி அபூர்வ கோலத்தில் காட்சி தரும் பெருமாள்
108 வைணவ திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் திருஊரகம் உலகளந்த பெருமாள் கோவில் 50-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. மூலவரின் திருநாமம் உலகளந்த பெருமாள், திரிவிக்கிரமப் பெருமாள். தாயாரின் திருநாமம் அமுதவல்லி நாச்சியார், ஆரணவல்லி, அம்ருதவல்லி.
கருவறையில் உலகளந்த பெருமாள், 35 அடி உயரமும் 24 அடி அகலமும் கொண்டு, நெடிய திருமேனியுடன் தனது வலது காலை தரையில் ஊன்றி, இடதுகாலை விண்ணோக்கி தூக்கியும், வலது கரத்தில் ஒரு விரலை உயர்த்தியும், இடது கரத்தில் இரண்டு விரல்களை உயர்த்தியும், மேற்கு நோக்கி திரிவிக்கிரம வடிவத்தில் காட்சியளிக்கிறார். இப்படி நெடிதுயர்ந்த திருமேனி கொண்டு, இரு கைகளிலும் விரல்களை உயர்த்திய நிலையில் காட்சி தரும் பெருமாளை நாம் வேறு எங்கும் தரிசிக்க முடியாது. பெருமாளின் இத்தகைய கோலத்திற்கு பின்னணியில் ஒரு வரலாறு உண்டு.
பிரகலாதனின் பேரனும், அசுரர்களின் அரசனுமான மகாபலி, தேவலோக பதவி அடைய வேண்டும் என்பதற்காக யாகம் ஒன்றை நடத்தினான். அப்போது பெருமாள், வாமன ரூபத்தில் வந்து அவனிடம் மூன்றடி நிலம் கேட்டார் .
மகாபலியும் இதற்கு உடன்பட்டு தேவையான அளவு இடத்தை எடுத்துக் கொள்ளக் கூறினான். உடனே திருமால், திரிவிக்கிரம வடிவம் எடுத்து, வானத்திற்கும் பூமிக்கும் வளர்ந்து நின்று, தன்னுடைய ஒரு திருவடியால் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்தார். இத்தலத்தில் பெருமாள் தனது இடது கரத்தில் இரண்டு விரல்களை உயர்த்தி காட்டுவது, பூலோகத்தையும், விண்ணுலகையும் அளந்ததை சுட்டிக் காட்டுவதாகவும், வலது கையில் ஒரு விரலை உயர்த்தி இருப்பது மூன்றாவது அடிக்கு எங்கே தனது திருவடியை வைக்க வேண்டும் என்பது போல் அமைந்துள்ளது.
மூன்றாவது அடிக்கு இடமில்லை என மகாபலியிடம் வாமனர் கூற, அதற்கு மகாபலி அடியேனின் சிரசு இருக்கிறது என்று கூறி தனது தலையைக் கொடுத்தான். திரிவிக்கிரமர் தன் பாதத்தை மகாபலியின் தலையில் வைத்து அழுத்தி அவனை பாதாள லோகத்தில் கொண்டு சேர்த்தார். மீண்டும் மூன்று லோகத்தையும் இந்திரனிடம் இருக்குமாறு செய்தார்.
அப்போது மகாபலி, பகவான் திருக்கோலத்தை முழுமையாகக் காண இயலவில்லை என்றெண்ணி பாதாள உலகத்தில் பெருமாளை நோக்கித் தவம் செய்தான். தவத்துக்கு மகிழ்ந்த பெருமாள், இந்தத் தலத்திலேயே மகாபலிக்கு, உலகளந்த திருக்கோலத்தை மறுபடியும் காட்சியாகத் தந்தார்.
திரு ஊரகத்தான்
மகாபலியோ நிரந்தரமாக, தான் அந்த உருவை தரிசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பேராவல் கொண்டதால், பாதாள உலகத்து ஜீவன்களில் ஒன்றான ஐந்து தலை நாகமாக காட்சி தந்தார் திருமால். இந்த நாகத் தோற்றத்தைத் தான் இந்த கோவில் வளாகத்தில், திரு ஊரகத்தானாக (திவ்ய தேசப் பெருமாளாக) தரிசிக்கிறோம்.
தெற்கு நோக்கி காட்சிதரும் திரு ஊரகத்தானுக்கு பால் பாயசம் நிவேதித்தால் திருமணத் தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், ராகு கேது தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
இக்கோவிலின் பிரகாரத்திலேயே நீரகம், காரகம், கார்வானம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இப்படி ஒரே இடத்தில் 4 திவ்ய தேச பெருமாளைக் காணலாம். இது மிகவும் சிறப்பான ஒன்றாகும். வேறு எங்கும் இதைப்போல் ஒரே கோவிலில் 4 திவ்ய தேசங்களைக் காண முடியாது.
திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவில்
நரசிம்மரின் உக்கிரம் தாங்காமல் கருடாழ்வார் பயந்த நிலையில் காட்சியளிக்கும் திவ்யதேசம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கே ஒரு கி.மீ. தூரத்தில், விளக்கொளிப் பெருமாள் கோவிலுக்கு நேர் எதிரில் உள்ளது, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவில். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிடித்தமான இடம் இருப்பது போல, திருமால் தானே விரும்பி அமர்ந்த இடம் தான் திருவேளுக்கை. வேள் என்றால் விருப்பம். தானாக விருப்பப்பட்டு அமைதியைத் தேடி இத்தலத்தில் யோக மூர்த்தியாக இருப்பதால் வேளிருக்கை என்று ஆகி, காலப்போக்கில் வேளுக்கை என்றாகி விட்டது. மூலவர் முகுந்த நாயகன், நின்ற கோலமாக கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். இவருக்கு அழகிய சிங்கர் நரசிம்மர், ஆள் அரி என்ற பெயர்கள் உண்டு.
ஒரு சமயம் பிரம்மதேவர் யாகம் செய்து கொண்டிருந்தபோது, அரக்கர்கள் அவரது யாகத்துக்கு இடையூறு விளைவித்தனர். பிரம்மதேவர் யாகம் இடையூறு இல்லாமல் நடக்க திருமாலிடம் வேண்டினார். திருமால், முன்பு பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த அதே கோலத்துடன் ஹஸ்திசைலம் என்ற குகையில் இருந்து புறப்பட்டு, பிரம்மதேவனின் யாகத்துக்கு இடையூறு அளித்த அசுரர்களை அவ்விடத்தில் இருந்து விரட்டிச் சென்றார். அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள இந்த இடம் வரை ஓடிவந்தனர். அவர்களைத் துரத்திக் கொண்டு வந்த நரசிம்மப் பெருமாள் குளிர்ச்சியான இயற்கை எழில் மிகுந்த இந்த இடத்திலேயே அமர்ந்து விட்டார். பயந்து ஓடிய அசுரர்கள் மீண்டும் வந்தால் அவர்களை எதிர்க்க இந்த இடமே சிறந்தது என்று நினைத்து, தனது கோப உணர்வுகளை நீக்கி, யோக நரசிம்ம மூர்த்தியாக அருள்பாலித்து தரிசனம் தருகிறார். இதனாலேயே இவரது சந்நிதி 'காமாஷிகா நரசிம்மர் சந்நிதி'என்று பெயர் பெற்றது.
இக்கோவிலில், நரசிம்மருக்கு எதிரில் உள்ள கருடாழ்வார், நரசிம்மரின் உக்கிரம் தாங்காமல் சற்றே தலை சாய்த்து பயத்துடன் இருப்பது மிகவும் அரிய தோற்றம் ஆகும்.
விஜயராகவ பெருமாள் கோவில்
அதிசயமான குதிரை வாகனம் உள்ள திவ்ய தேசம்
காஞ்சிபுரத்திலிருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம் திருப்புட்குழி ஆகும். இத்தலத்தில் உள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமான வாகனம் ஆகும். 'கல் குதிரை' என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புகளைக் கொண்டதாகும். இதைச் செய்த கலைஞா் இனி எவருக்கும் இது போன்ற வாகனம் செய்து கொடுப்பதில்லை என்ற உறுதியினை எடுத்ததுடன், அதனைக் கடைசி வரைக் கடைப்பிடித்து உயிா்துறந்தாராம். இக் கலைஞரது உறுதிக்கும் பக்திக் கும் மதிப்பளிக்கும் விதமாக, திருப்புட்குழி உற்சவப் பெருமான், மாசி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் திருவிழாவின் போது இவரது வீதிக்கு எழுந்தருளிச் சேவை சாதிப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது.மேலும் இந்தக் குதிரை குறித்து அதிசய செய்தி ஒன்றை சொல்கிறார்கள். குதிரையின் தலை, உடல், வால் பகுதி என மூன்றும் தனித்தனியாக மரத்தினால் செய்யப்பட்டதாம். அவை மூன்றையும் இணைத்த பின் உயிர் பெற்ற குதிரை இரவு நேரங்களில் வயற்காட்டை மேய்ந்து தீர்த்ததாம். இதனால் இப்போதும் ஆண்டு முழுவதும் இக்குதிரையின் உடல் மூன்றாக பிரிக்கப்பட்டே வைக்கப்படுகிறது. பிரம்மோற்ஸவத்தின் குதிரை வாகன நாளன்று மட்டும் இணைக்கப்பட்டு அதில் உற்சவமூர்த்தி எழுந்தருளுகிறார்.
கமலவரதராஜப் பெருமாள் கோவில்
வலது பாதத்தில் ஆறுவிரல்கள் உள்ள சுந்தர மகாலட்சுமி
செங்கல்பட்டு - மதுராந்தகம் பாதையில் படாளம் கூட்டு ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது அரசர்கோயில். இந்த ஊரில் அமைந்துள்ளது கமலவரதராஜப் பெருமாள் கோவில். இத்தலத்துப் பெருமாள் தம்முடைய கரத்தில் ஒரு தாமரை மொக்கை வைத்துக்கொண்டு, ஸ்ரீதேவி-பூதேவியோடு நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தாயார் சுந்தர மகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது ஒரு அரிய காட்சியாகும். இத்தல சம்பிரதாயப்படி முதலில் தாயாரையே தரிசிக்க வேண்டும். தாயார் சுந்தர மகாலட்சுமி, பெயருக்கு ஏற்றாற்போல் அழகு சுந்தரியாக காட்சி தருகிறாள். மேலிரு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியிருக்க, கீழிரு கரங்கள் அபய-வரத முத்திரைகள் காட்ட பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். கற்பூர ஆரத்தியின் போது தாயாரின் வலது பாதத்தை தரிசிக்க வைக்கிறார் பட்டர். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் உள்ள வலது பாதத்தில், சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல் அமைந்திருக்கிறது. இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு, சுந்தர மகாலட்சுமி அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருவாள் என்பது ஐதீகம்.
தாயார் சன்னதி முன், ஒரு இசை மண்டபம் உள்ளது. அங்குள்ள தூண்களை நாம் தட்டினால் ஒவ்வொரு தூணும், ஒவ்வொரு ஸ்வரத்தை எழுப்புகிறது. நான்கு வேதங்களைக் குறிக்கும் விதமாக இங்குள்ள தூணிலுள்ள ஒரு சிறு துளையில் குச்சி ஒன்றை உள்ளே செருகினால், அது மறு பக்கம் வெளி வரும் போது நான்கு பாகங்களாகப் பிளந்து வருகிறது.
ஆறு என்பது சுக்கிரனின் எண் ஆகும். இந்த தாயாரிடம் சுக்கிரன் ஐக்கியமானதாக ஐதீகம். எனவே சுக்கிரனால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய தலம் இதுவாகும். அதிக செல்வம் பெற, வீடு வாங்க திருமண பாக்கியம்,பிள்ளைப்பேறு கிடைக்க, இந்தத் தாயாரை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.