பெரியதிருமங்கலம் அருங்கரை அம்மன் கோவில்
பெண்கள் வந்து வணங்க அனுமதி இல்லாத அம்மன் கோவில்
கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது பெரிய திருமங்கலம். இந்த ஊரில் பாயும் அமராவதி ஆற்றின் கரையில் அம்மன் கோவில் உள்ளது. நல்லதாய் என்று முதலில் பெயர் பெற்றிருந்த இந்த அம்மன், பின்னர் ஆற்றின் கரையில் எழுந்தருளி இருப்பதால் அருங்கரை அம்மன் என்று அழைக்கப்படுகின்றார்.
இந்தக் கோவிலுக்கு உள்ளே செல்ல பெண்களுக்கு அனுமதியில்லை. அவர்கள் வாசலில் நின்று வழிபடலாம். பெண் குழந்தைகள் கூட கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது. வெளியில் நின்று வணங்கும் பெண்கள், அமராவதி ஆற்றில் குளித்துவிட்டு, தலை முடியாமல், ஈரத்துணியுடன் வழிபட வேண்டும். ஆண்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று வழிபடுகின்றனர். மேலும், இங்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே கோயில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடக்கிறது. மற்ற நாட்களில் கோவில் இரவும், பகலும் அடைக்கப்பட்டே இருக்கும்.
மஞ்சள், குங்குமம் பிரசாதத்திற்கு பதிலாக மடப்பள்ளி அடுப்பு சாம்பல் பிரசாதம்
அம்பாள் கோயில்களில் வழக்கமாக தரப்படும் மஞ்சள், குங்கும பிரசாதமும் இங்கு தரப்படுவதில்லை. அவளுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் அடுப்பிலுள்ள சாம்பலையே தருகின்றனர். அம்பாளுக்கு பூஜை முடிந்தபின்பு, படைக்கப்பட்ட பூஜைப் பொருட்கள், மற்றும் நேர்த்திக்கடனாக செலுத்தும் வாழை, தானியங்கள் போன்றவற்றை கோயில் முன் மண்டபத்தில் இருந்து "சூரை' (எறிதல்) விடுகின்றனர். இதனை பெண்கள் தங்களது சேலையில் பிடித்துக் கொள்கின்றனர். அம்பாள் பிரசாத பொருட்களின் வடிவில் பெண்களுக்கு அருளுவதாக நம்பிக்கை.
கோவில் வரலாறு
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த மீனவர்கள், அமராவதி ஆற்றில் வலைவீசிய போது, பெட்டி ஒன்று சிக்கியது. அதற்குள் ஒரு அம்மன் சிலை இருந்தது. ஆற்றங்கரையிலுள்ள மரத்தின் அடியில் அம்பாளை வைத்து வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் அவர்கள் அவ்விடத்தை விட்டு சென்றுவிடவே, மணல் மூடி பெட்டி மண்ணுக்குள் புதைந்து விட்டது. பின்னர் நல்லதாய் என்ற கால்நடைகளை மேய்க்கும் தொழிலைச் செய்து வந்த சிறுமி, ஒரு நாள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது ஒரு பசு மட்டும் மரத்தின் அடியில் இருந்த மணல் மேட்டின் மீது பால் சொரிந்ததைக் கண்டாள் வியப்புற்று அருகில் சென்று பார்த்தபோது ஒரு மேடு இருந்தது அதன் மீது அவள் அமர்ந்தாள் அதன்பின் எழவில்லை. சிறுமியைக் காணாததால் ஊரில் இருந்த ஆண்கள் அவளைத்தேடி இங்கு வந்தபோது சிறுமி மணல் திட்டில் அமர்ந்திருந்ததைக் கண்டனர் அவர்கள் சிறுமியை வீட்டிற்கு வரும்படி அழைத்தனர் அங்கிருந்த வர மறுத்த சிறுமி அவர்களிடம், "நான் இங்கேதான் இருக்க விரும்புகிறேன் என்னைக்கண்ட இந்தநூளில் இதே நேரத்தில் மட்டும் எனக்கு பூஜை செய்து வழிபடுங்கள் என்று சொல்லிவிட்டு ஜோதியாக மாறி மறைந்துவிட்டாள் பின் அவர்கள் சிறுமியை அம்பாளாக எண்ணி உருவம் ஏதுமில்லாமல் வழிபட்டு வந்தனர் பிற்காலத்தில் இங்கு கோயில் கட்டப்பட்டது.
கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோவில்
பக்தர்களின் கோரிக்கைகளை கேட்பதற்காக ஒரு காது பெரிதாக உள்ள நந்தி
சிம்மபுரீசுவரர் கோயில் என்பது கரூர் மாவட்டத்திலுள்ள கருப்பத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சிம்மபுரீசுவரர் என்றும், அம்பிகை குந்தாளம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
கரூர் மாவட்டம் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில், குளித்தலையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் சிம்மபுரீசுவரர். இறைவியின் திருநாமம் குந்தாளம்பாள். நரசிம்மர் பூஜை செய்து பாவம் விலகப்பெற்ற தலம் கருப்பத்தூர். இங்குள்ள இறைவன் நரசிம்மபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டு பின் சிம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படலானார்
இத்தலத்து நந்தியம் பெருமான் ஒரு காதில் பெரிய துவாரமும், மற்றொரு காதினை மூடியவாறும் இருக்கிறார். இவரிடம், பக்தர்கள் தங்களின் குறைகளைச் சொன்னால், இறைவனிடம் அக்கோரிக்கைகளை நந்தி கூறுவார். இரணியனை கொன்ற பாவம் நீங்க, நரசிம்மர் இத்தலத்துக்கு வந்து வழிபட்டார். சிவபெருமான் நரசிம்மரைப் பார்த்து, 'இரணியவதம் செய்ததால் ஏற்பட்ட ரத்தக்கறை, பாவம் இரண்டும் நீங்கப் பெற வேண்டும் என நந்தியின் காது வழியே கூறு. அவைகள் நீங்கிப் பெறுவாய் ' எனக் கூற அதன்படியே நந்தியின் காதில் நரசிம்மர் கூறி, பின் பாவ விமோசனம் அடைந்தார். எனவேதான், பக்தர்கள் இத்தலத்து நந்தியின் மூலம், தங்கள் கோரிக்கைகளை இறைவனிடம் சமர்ப்பிக்கிறார்கள்.
வேலாயுதம்பாளையம் பாலசுப்ரமணியசுவாமி கோவில்
முருகனுக்கு வேலை நேர்த்திக்கடனாக செலுத்தும் திருப்புகழ் தலம்
கரூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது புகழூர். இங்கிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள, வேலாயுதம்பாளையம் என்ற ஊரில் இருக்கும் புகழிமலையின் மேல் அமைந்துள்ளது, பாலசுப்ரமணியசுவாமி கோவில். கோவிலுக்கு செல்ல 315 படிக்கட்டுகள் உள்ளன. இக்கோவில் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகும். சமணர்களுக்குப் புகலிடம் தந்த காரணத்தால் இந்த மலை புகலி மலை என்று அழைக்கப்பட்டு, புகழி மலை என மாறிப் பின்னர் புகழூர் என பெயர் பெற்றது. இம்மலை மைசூர் எல்லையாக இருந்த காலகட்டத்தில்தான், இக்கோவில் கட்டப்பட்ட தாகவும், அதன் அடிப்படையிலேயே இங்கு மைசூர் கோவில்களின் கட்டட பாணியில் கோபுரம் அமைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
கருவறையில்,பாலசுப்ரமணிய சுவாமி கையில் வேலேந்தி நின்ற கோலத்தில் காட்சிதருகிறார். ஒரு கையில் வேலும் மற்றொரு கையில் சேவல் கொடியும் கொண்டு, நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். வஜ்ஜிரம், சக்தி ஆகிய படைக்கலன்களையும் அபயம், வரதம் ஆகிய நான்கு கரங்களுடன் பாலசுப்பிரமணியராக காட்சி நல்குகிறார். முருகனுக்குப் பின்புறம் இடது புறம் தலை சாய்த்தபடி தேவ மயில் உள்ளது. மற்ற திருக்கோயில்களில் உள்ளதைப் போன்று இல்லாமல், இந்தக் கோவிலின் மயில் வாகனத்தின் தலை இடப்புறமாகவும், தோகை வலப்புறமாகவும் திகழ்கிறது. இத்தகைய அமைப்பு சூரசம்ஹாரத்துக்கு முற்பட்ட முருகனின் திருக்கோலத்தை குறிக்கும். இதிலிருந்து இந்தக் கோவிலின் புராதனத்தை அறியமுடிகிறது.
பிரார்த்தனை
இங்கே முருகனுக்கு நேர்த்திக்கடனாக வேல் செலுத்தி வழிபடும் வழக்கம் பிரசித்தம். தொடர்ந்து 12 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளிப் பூ மற்றும் செவ்வாழைப் பழம் படைத்து வழிபட்டால், திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும். சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானைத் தரிசித்தால், குழந்தை பாக்கியம் கிட்டும். இத்தலத்து விஷ்ணு, துர்க்கையை 12 வாரம் வேண்டிக்கொண்டு எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றி வணங்கினால் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில்
சலவைக்கல்லில் எழுந்தருளிய நரசிம்மர்
திருச்சி– கரூர் நெடுஞ்சாலையில், குளித்தலையில் இருந்து 12 கி.மீ. தொலைவில், காட்டுப்புத்தூர் அருகில் அமைந்துள்ளது சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில். தமிழகத்தில் உள்ள அஷ்ட நரசிம்மர் கோவில்களில், இக்கோவிலும் ஒன்று. 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இக்கோவிலில் முதலில் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் மற்றும் அனுமன் ஆகியோர் எழுந்தருளியிருந்தனர். இவர்களைப் பிரதிஷ்டை செய்தவர் ஸ்ரீவியாசராஜர். பின்னாளில்தான் நரசிம்மர் இங்கு எழுந்தருளினார். ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த விக்கிரகங்களின் பெருமை திசையெங்கும் பரவ, பலரும் இங்கு வந்து தங்கி, இறைவழிபாடு நடத்தினர். அப்படி வந்த பக்தர்களில் ஒருவர் ஸ்ரீ முஷ்ணம் ஆர்யாச்சார். இவர் கனவில் தோன்றிய ஸ்ரீ நரசிம்மர், தான் சிந்தலவாடியின் அருகில் உள்ள கருப்பத்தூர் என்ற காவிரிக்கரை ஊரில் ஒரு சலவைத் தொழிலாளி, துணிகளைத் துவைக்கப் பயன்படுத்தும் கல்லாக இருப்பதாகத் தெரிவித்து, அங்கு வந்து தம்மை மேற்கு திசையில் எவ்வளவு தொலைவு எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு தொலைவு எடுத்துச் செல்ல ஆணையிட்டார். எந்த இடத்தில் பாரம் அதிகமாகத் தெரிகிறதோ அந்த இடத்திலேயே, தம்மைப் பிரதிஷ்டை செய்யவும் பணித்தார். அதேநேரத்தில் சலவைத் தொழிலாளிக்கும் ஒரு கனவு. வரும் பக்தரிடம் அக்கல்லைக் தந்து விட உத்தரவு கொடுக்கப்பட்டது.
மறுநாள், ஆர்யாச்சார் சிந்தலவாடியில் இருந்து ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ள கருப்பத்தூருக்குச் சென்றார். கனவில் தெரிந்த வழிகளில் பயணம் தொடர, சலவைத் தொழிலாளர்கள் பணி செய்யும் இடம் வந்தது. குறிப்பிட்ட சலவைத் தொழிலாளியும் ஆர்யாச்சாரை அழைத்துச் சென்று அக்கல்லைக் காண்பித்தார். அதைத் திருப்பிப் பார்த்தபோது ஸ்ரீ யோக நரசிம்மரின் சிலா ரூபம் தெரிந்தது. ஸ்ரீ ஆர்யாச்சார் பக்தியாக, அந்த விக்கிரகத்தோடு மேற்கு நோக்கி நடந்தார். சிந்தலவாடி அருகே வந்தபோது, நடை நடுங்கியது; கல் பாரமாகத் தெரிய ஆரம்பித்தது.
ஸ்ரீ நரசிம்மரின் எண்ணம் பக்தருக்குப் புரிந்தது. அங்கேயே ஸ்ரீ யோக நரசிம்மரை இறக்கி, முன்பே இருந்த ஸ்ரீ காளிங்க நர்த்தனக் கோவிலில் நரசிம்மரைப் பிரதிஷ்டை செய்தார்.
பிரார்த்தனை
இக்கோவில் கரூர், குளித்தலை, திருச்சி, முசிறி பகுதிகளில் வாழும் மத்வ சம்பிரதாயக் குடும்பங்களின் குலதெய்வமாக இருந்து வருகிறது. தங்கள் குழந்தைகளுக்கு முடி இறக்குதல், காது குத்துதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை இக்கோவிலில் நடத்துகிறார்கள். இந்த கோவிலுக்கு சென்று நரசிம்மரை வழிபட்டால் சுப யோகமும், தீய சக்திகளின் பிடியில் இருந்து நீக்கமும் கிடைக்கும் என்பது இக்கோவிலின் சிறப்பு அய்சமாகும்.
கல்யாண வேங்கடரமணர் கோவில்
தான்தோன்றிமலையில் திருப்பதி வெங்கடாஜலபதி எழுந்தருளிய கதை
கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் கரூருக்கு தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தான்தோன்றிமலை. இங்கு திருப்பதி வெங்கடாஜலபதியே 'கல்யாண வேங்கடரமண சுவாமி’ எனும் திருப்பெயருடன் குன்றின் மேல் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் தென்திருப்பதி என்று போற்றப்படுகிறது.. குன்றின் மேல்புறம் குடையப்பட்டுள்ள அழகிய குடைவரையில் கல்யாண வேங்கடரமண பெருமாள், மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரம்மாண்ட வடிவம் கொண்ட இந்தப் பெருமாள், லட்சுமியை தனது மார்பில் தாங்கியிருக்கிறார். இதனால் இங்கு தாயாருக்கு தனி சன்னிதி கிடையாது.
மூன்றாம் குலோத்துங்கச் சோழன் அரரசவையில் டங்கணாச்சாரி என்ற சிற்பி இருந்தார். சிறந்த சிவபக்தர். அவரது மனைவி சுந்தராம்பிகை. இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
ஒரு நாள் சுந்தராம்பிகை தனது வீட்டில் தனியாக இருந்தபோது, தெருவில் ஒரு கூட்டம் 'கோவிந்தா... கோவிந்தா' என்று உரக்க கத்திக்கொண்டே சென்றது. அந்த கூட்டத்தின் நடுவில் மஞ்சள் ஆடை அணிந்து மார்பில் துளசி மாலையுடன் நெற்றியில் திருநாமத்துடன் ஐந்து வயது சிறுவன் ஒருவன் தென்பட்டான்.
சுந்தராம்பிகை கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணியிடம் இதுகுறித்து விசாரித்தாள். அதற்கு அந்த பெண்மணி, ‘அந்த சிறுவன் எனது மகன்தான். எனக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. திருப்பதி வேங்கடேசனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டோம். குழந்தை பிறந்தது. ஐந்தாவது வயதில் குழந்தையையும் அழைத்துக் கொண்டு பெருமாளின் சன்னிதியில் வந்து காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தோம். அதை நிறைவேற்றவே இப்போது திருப்பதி செல்கிறோம்’ என்றாள்.
இதனை கேட்ட சுந்தராம்பிகை, தானும் திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டி அதே பிரார்த்தனையை செய்து கொண்டாள். வெங்கடாஜலபதியும் அருள்புரிந்தார். சுந்தராம்பிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு குண்டலாச்சாரி என்று பெயரிட்டாள். குழந்தைக்கு ஐந்து வயதானது. சுந்தராம்பிகை பிரார்த்தனையை நிறைவேற்ற நினைத்தாள். இதுவரை சுந்தராம்பிகை கணவரிடம் பிரார்த்தனை பற்றி கூறவில்லை. தற்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினாள்
அதைக் கேட்ட டங்கணாச்சாரி கோபமடைந்தார். 'சிவபெருமானை தவிர உலகில் வேறு தெய்வம் இல்லை. நான் திருப்பதிக்கு போக மாட்டேன். உன்னையும் போக விட மாட்டேன்' என்று எச்சரித்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார். சுந்தராம்பிகையோ மனம் வருந்தி கண்ணீர் வடித்தாள்.
குண்டலாச்சாரி தனது தாய் அழுவதை கண்டு, காரணத்தைக் கேட்டான். தனது இக்கட்டான நிலையை தனது மகனிடம் சுந்தராம்பிகை கூறினாள். அதைக் கேட்ட குண்டலாச்சாரி, 'அம்மா நீ அழாதே!. திருப்பதி சீனிவாச பெருமாளை, நமது ஊரிலுள்ள மலைக்குன்றுக்கு வரவழைக்கிறேன். நாம் பிரார்த்தனையை இங்கேயே நிறைவேற்றலாம்' என்றான். மகனின் விளையாட்டுப் பேச்சைக் கேட்ட தாய்க்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.
அன்று இரவு எல்லோரும் தூங்கியவுடன் குண்டலாச்சாரி, தனது தந்தை வைத்திருந்த, சிற்பம் செதுக்குவதற்கான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு மலைக்குச் சென்றான். மலையின் மீது ஆலயம் எழுப்ப அடி அளந்து கொண்டு இருந்தான். அப்போது சந்நியாசி ஒருவர், அவன் முன் தோன்றி, 'குழந்தாய்! இங்கு வந்து என்ன செய்கிறாய்?' என்று கேட்டார். குண்டலாச்சாரி, 'நான் இங்கே கோவில் அமைத்து, திருப்பதி சீனிவாச பெருமாளை அழைக்க போகிறேன்' என்று கூறினான்.
இதனை கேட்ட சந்நியாசி, 'உன்னால் இக்காரியம் முடியக் கூடியதல்ல. என்னிடம் ஆட்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களை வைத்து கோவில் அமைத்து விடலாம். நீ நாளைக்கு இங்கே வா!' என்று கூறினார். குண்டலாச்சாரி வீட்டிற்கு திரும்பி உறங்கினான்.
எப் போதும் போல் டங்கணாச்சாரி அதிகாலையில் எழுந்து மலைப்பக்கம் சென்றார். அங்கு ஒரு கோவில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 'ஒரே நாளில் கோவில் அமைப்பது என்பது மன்னனை தவிர வேறு யாராலும் முடியாதே! மன்னன் என்னிடம் சொல்லாமல் இக்கோவிலை கட்டி விட்டாரே' என்று வருந்தினார். காலை விடிந்ததும் அரசவைக்கு சென்று கோவில் அமைக்கப்பட்டிருப்பது பற்றி கேட்டார். மன்னனும் வியப்பில் ஆழ்ந்தான். மலைக்குச் சென்று பார்த்தான். தனக்கே தெரியாமல் விஷ்ணு ஆலயம் கட்டியவனை கண்டுபிடித்து தண்டிப்பதாக கூறிவிட்டு சென்றான்.
டங்கணாச்சாரி, கடும் கோபத்தில் இருந்தார். அன்று இரவு மலைக்குச் சென்றார். கோவில் கட்டியவர்கள் எப்படியும் வருவார்கள் என்பதால் அங்கு பதுங்கி இருந்தார். அப்போது குண்டலாச்சாரி ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் நுழைந்தான். இருட்டில் யார் என்று அறியாமல் டங்கணாச்சாரி, சிறுவன் குண்டலாச்சாரியை வாளால் வெட்டி வீழ்த்தினார்.
அதன் பிறகு யாரும் வராததால் வீட்டிற்கு வந்து உறங்கினார். மறுநாள் காலையில் தன் மகனை காணாது சுந்தராம்பிகை துடித்தாள். இதற்கிடையில் மலையின் மீது தலை துண்டித்து கிடந்த குண்டலாச்சாரியை, அந்த பகுதி மக்கள் பார்த்து தூக்கி வந்தனர். பெற்றோர் கதறி அழுதனர். அப்போது அங்கு ஒரு சந்நியாசி தோன்றினார். அவர் டங்கணாச்சாரியைப் பார்த்து, 'கொஞ்சம் துளசி இலையைப் பறித்துக் கொண்டு வா!. உன் மகனை பிழைக்க வைக்கிறேன்' என்று கூறினார்.
அதைக் கேட்டதும் டங்கணாச்சாரி, தனது இரு காதுகளையும் பொத்திக்கொண்டு 'நான் துளசியை கையால் தொடமாட்டேன்' என்றார். இதனை கேட்ட மக்கள் கோபம் அடைந்து 'இந்த இக்கட்டான நேரத்திலும் நீர் வைராக்கியம் பேசுவது சரியல்ல' என்று சொல்லவும், அரை மனதுடன் துளசியை பறித்துக் கொண்டு வந்து கொடுத்தார் டங்கணாச்சாரி.
அதை வாங்கிய சந்நியாசி, குண்டலாச்சாரியின் தலையையும் உடலையும் சேர்த்து வைத்து கழுத்து பகுதியில் துளசி சாற்றை பிழிந்து ஊற்றினார். உடனே குண்டலாச்சாரி உயிர் பெற்று எழுந்தான். அதனை கண்டோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். பெருமாளின் பெருமையை போற்றிப் புகழ்ந்தனர்.
சுந்தராம்பிகை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தனது மகனுக்கு உயிர் கொடுத்த சந்நியாசியின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். கோவில் கட்டப்பட்ட நிகழ்ச்சியையும், தான் வெட்டப்பட்ட நிகழ்ச்சியையும் குண்டலாச்சாரி தனது பெற்றோர் முன்னிலையில் எடுத்துக்கூறினான்.
அதனை கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர். சிறுவன், அவனது பெற்றோர், மன்னன் உள்பட பலரும் சந்நியாசியுடன் மலையேறிச் சென்றனர். ஆனால் மலை மீது சென்றவுடன் சந்நியாசி மறைந்து விட்டார்.
குகையின் நடுவே பகவான் திருப்பதி வெங்கடேச பெருமாள் காட்சியளிப்பதை கண்டு அனைவரும் வணங்கினர். அப்போது அசரீரி ஒலித்தது. ;குண்டலாச்சாரி என் மீது கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையைக் கண்டு மகிழ்ந்ததால்தான், நான் இங்கே பிரசன்னமாகி இருக்கிறேன். இனி நீங்கள் உங்களது பிரார்த்தனைகளை இங்கேயே செலுத்துங்கள். நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்' என்று கூறியது.
பாலசுப்ரமணியர் கோவில்
முருகப் பெருமானின் அருள் பிரவாகிக்கும் தலம்
வெண்ணெய்மலை பாலசுப்ரமணியர் கோவில் கரூர் மாவட்டம் சேலம் நெடுஞ்சாலையில் கரூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. படிகள் அதிகம் இல்லாததால் மிகவும் எளிதாக மலை ஏறி முருகனை தரிசித்து வரலாம்.
யோகி பகவன் என்பவர் இம்மலையில் தியானத்தில் இருக்கும்போது, அவருக்கு பாலசுப்பிரமணியன் காட்சிதந்து, தமது அருள் வெண்ணெய்மலையில் உள்ளதாக அனைவரும் அறியச் செய்யுமாறு கட்டளையிட்டார். முருகனின் அருட்கோலம் தரிசித்த பகவன், இது குறித்துக் கருவூர் அரசனிடம் கூறினார். மன்னரும் மலையில் உயர்ந்த கோபுரம், மண்டபம் அமைத்து, முருகன் சிலையைப் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த இக்கோவிலை ஒளவையார் மூவரம்மானையில் பாடியுள்ளார்.
வெண்ணெய் மலைப் பாறை கடும் வெயிலிலும் குளுமையுடன்இருக்கும் அதிசயம்
முன்னொரு யுகத்தில் பிரம்மதேவனுக்கு,தனது படைப்பு தொழிலில் கர்வம் தோன்றியது. அவருக்குப் பாடம் புகட்ட ஈசன் எண்ணினார். ஒரு கட்டத்தில் பிரம்மனால் படைக்கும் தொழிலை மேற்கொள்ள இயலாமல் போனது.பிழையை உணர்ந்த பிரம்மன், தன் பிழை பொறுக்குமாறு ஈசனிடம் வேண்டினார்.இதற்கு தீர்வாக வஞ்சி வனத்தில் தவம் இயற்ற இறைவன் கூறினார். இந்நிலையில் படைக்கும் தொழிலை தேவலோகப் பசுவான காமதேனுவிடம் இறைவன் ஒப்படைத்தார். தன்னால் உயிரினங்கள்,பசியில்லாமல் வாழ்வதற்காக வெண்ணெயை மலையென குவித்தது.அருகிலேயே தேனுதீர்த்தம் எனும் பொய்கையையும் உருவாக்கியது காமதேனு. இதனால் தான் இன்றும் வெண்ணெய் மலைப் பாறை, கடும் வெயிலிலும் குளுமையுடன் திகழ்கிறது.
மழலைச் செல்வம் அருளும் தலம்
மலையின் அடிவாரத்தில் காமதேனுவால் அமைக்கப்பட்ட தேனுதீர்த்தத்தில் ஐந்து தினங்கள் நீராடி முருகனை வழிபட, பிள்ளையில்லாக் குறை தீர்வதுடன்,தோஷங்களும் தீர்கிறது.
மூர்த்தி , தலம் , தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்பு பெற்ற இத்தலத்திற்கு வந்து வணங்கினால் வளமான வாழ்க்கை அமைகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கடம்பவனநாதர் கோவில்
ஒரே சன்னதியில் இரட்டை நடராஜர்
கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமான குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில், இரண்டு நடராஜப் பெருமானை தரிசனம் செய்யலாம். ஒரே சன்னிதியில் அருகருகே இரண்டு நடராஜர்களை தரிசனம் செய்வது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இவர்களில் ஒரு நடராஜர் சிரசில் பிறை சூடி இருக்கிறார். ஆனால் அவர் பாதத்தில் முயலகன் இல்லை. இதில் ஒரு நடராஜருக்கு உத்திராயணத்திலும் மற்றவருக்கு தட்சிணாயத்திலும் பூஜைகள் நடக்கின்றன.
இரத்தினகிரீசுவரர் கோவில்
இரத்தினகிரீசுவரர் கோவில்
காகம் பறக்காத தேவாரத்தலம்
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவாட்போக்கி ஆகும். தற்போது 'ஐயர் மலை' என்று அழைக்கப்படுகிறது.
ஆயர் ஒருவர் இறைவனின் அபிஷேகத்திற்கு கொண்டு வந்த பாலை ஒரு காகம் கவிழ்த்து விட்டது. அவர் விட்ட சாபத்தால் அக்காகம் எரிந்து போனது. அதனால் அன்று முதல் இந்த மலையில் காகம் பறப்பதில்லை. மேலும் இம்மலைக்கு 'காகம் பறவா மலை' என்ற பெயரும் ஏற்பட்டது.
காலையில் குளித்தலை, மதியம் ஐயர்மலை, மாலையில் ஈங்கோய்மலை ஆகிய மூன்று தேவாரத் தலங்களையும் ஒரே நாளில் வழிபாட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். அதனால் கார்த்திகை சோமவாரத்தில் இம்மூன்று கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.