சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில்

சலவைக்கல்லில் எழுந்தருளிய நரசிம்மர்

திருச்சி– கரூர் நெடுஞ்சாலையில், குளித்தலையில் இருந்து 12 கி.மீ. தொலைவில், காட்டுப்புத்தூர் அருகில் அமைந்துள்ளது சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில். தமிழகத்தில் உள்ள அஷ்ட நரசிம்மர் கோயில்களில், சிந்தலவாடி யோக நரசிம்மர் இக்கோவிலும் ஒன்று. 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இக்கோவிலில் முதலில் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் மற்றும் அனுமன் ஆகியோர் எழுந்தருளியிருந்தனர். இவர்களைப் பிரதிஷ்டை செய்தவர் ஸ்ரீவியாசராஜர். பின்னாளில்தான் நரசிம்மர் இங்கு எழுந்தருளினார். ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த விக்கிரகங்களின் பெருமை திசையெங்கும் பரவ, பலரும் இங்கு வந்து தங்கி, இறைவழிபாடு நடத்தினர். அப்படி வந்த பக்தர்களில் ஒருவர் ஸ்ரீ முஷ்ணம் ஆர்யாச்சார். இவர் கனவில் தோன்றிய ஸ்ரீ நரசிம்மர் - தான் சிந்தலவாடி யின் அருகில் உள்ள கருப்பத்தூர் என்ற காவிரிக்கரை ஊரில் ஒரு சலவைத் தொழிலாளி, துணிகளைத் துவைக்கப் பயன்படுத்தும் கல்லாக இருப்பதாகத் தெரிவித்து, அங்கு வந்து தம்மை மேற்கு திசையில் எவ்வளவு தொலைவு எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு தொலைவு செல்ல ஆணையிட்டார். எந்த இடத்தில் பாரம் அதிகமாகத் தெரிகிறதோ அந்த இடத்திலேயே தம்மைப் பிரதிஷ்டை செய்யவும் பணித்தார். அதேநேரத்தில் சலவைத் தொழிலாளிக்கும் ஒரு கனவு. வரும் பக்தரிடம் அக்கல்லைக் தந்து விட உத்தரவு கொடுக்கப்பட்டது.

மறுநாள், ஆர்யாச்சார் சிந்தலவாடியில் இருந்து ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ள கருப்பத்தூருக்குச் சென்றார். கனவில் தெரிந்த வழிகளில் பயணம் தொடர, சலவைத் தொழிலாளர்கள் பணி செய்யும் இடம் வந்தது. குறிப்பிட்ட சலவைத் தொழிலாளியும் ஆர்யாச்சாரை அழைத்துச் சென்று அக்கல்லைக் காண்பித்தார். அதைத் திருப்பிப் பார்த்தபோது ஸ்ரீ யோக நரசிம்மரின் சிலா ரூபம் தெரிந்தது. ஸ்ரீ ஆர்யாச்சார் பக்தியாக, அந்த விக்கிரகத்தோடு மேற்கு நோக்கி நடந்தார். சிந்தலவாடி அருகே வந்தபோது, நடை நடுங்கியது; கல் பாரமாகத் தெரிய ஆரம்பித்தது.

ஸ்ரீ நரசிம்மரின் எண்ணம் பக்தருக்குப் புரிந்தது. அங்கேயே ஸ்ரீ யோக நரசிம்மரை இறக்கி, முன்பே இருந்த ஸ்ரீ காளிங்க நர்த்தனக் கோவிலில் நரசிம்மரைப் பிரதிஷ்டை செய்தார்.

பிரார்த்தனை

இக்கோவில் கரூர், குளித்தலை, திருச்சி, முசிறி பகுதிகளில் வாழும் மத்வ சம்பிரதாயக் குடும்பங்களின் குலதெய்வமாக இருந்து வருகிறது. தங்கள் குழந்தைகளுக்கு முடி இறக்குதல், காது குத்துதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை இக்கோவிலில் நடத்துகிறார்கள். இந்த கோவிலுக்கு சென்று நரசிம்மரை வழிபட்டால் சுப யோகமும், தீய சக்திகளின் பிடியில் இருந்து நீக்கமும் கிடைக்கும் என்பது இக்கோவிலின் சிறப்பு அய்சமாகும்.

படம் உதவி : திரு. பார்த்தசாரதி, சிந்தலவாடி

 
Previous
Previous

கார்த்திகை சோமவார விரதம்

Next
Next

கோவில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோவில்