பாலசுப்ரமணியர் கோவில்

முருகப் பெருமானின் அருள் பிரவாகிக்கும் தலம்

வெண்ணெய்மலை பாலசுப்ரமணியர் கோவில் கரூர் மாவட்டம் சேலம் நெடுஞ்சாலையில் கரூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. படிகள் அதிகம் இல்லாததால் மிகவும் எளிதாக மலை ஏறி முருகனை தரிசித்து வரலாம்.

யோகி பகவன் என்பவர் இம்மலையில் தியானத்தில் இருக்கும்போது, அவருக்கு பாலசுப்பிரமணியன் காட்சிதந்து, தமது அருள் வெண்ணெய்மலையில் உள்ளதாக அனைவரும் அறியச் செய்யுமாறு கட்டளையிட்டார். முருகனின் அருட்கோலம் தரிசித்த பகவன், இது குறித்துக் கருவூர் அரசனிடம் கூறினார். மன்னரும் மலையில் உயர்ந்த கோபுரம், மண்டபம் அமைத்து, முருகன் சிலையைப் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார்.

இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த இக்கோவிலை ஒளவையார் மூவரம்மானையில் பாடியுள்ளார்.

வெண்ணெய் மலைப் பாறை கடும் வெயிலிலும் குளுமையுடன்இருக்கும் அதிசயம்

முன்னொரு யுகத்தில் பிரம்மதேவனுக்கு,தனது படைப்பு தொழிலில் கர்வம் தோன்றியது. அவருக்குப் பாடம் புகட்ட ஈசன் எண்ணினார். ஒரு கட்டத்தில் பிரம்மனால் படைக்கும் தொழிலை மேற்கொள்ள இயலாமல் போனது.பிழையை உணர்ந்த பிரம்மன், தன் பிழை பொறுக்குமாறு ஈசனிடம் வேண்டினார்.இதற்கு தீர்வாக வஞ்சி வனத்தில் தவம் இயற்ற இறைவன் கூறினார். இந்நிலையில் படைக்கும் தொழிலை தேவலோகப் பசுவான காமதேனுவிடம் இறைவன் ஒப்படைத்தார். தன்னால் உயிரினங்கள்,பசியில்லாமல் வாழ்வதற்காக வெண்ணெயை மலையென குவித்தது.அருகிலேயே தேனுதீர்த்தம் எனும் பொய்கையையும் உருவாக்கியது காமதேனு. இதனால் தான் இன்றும் வெண்ணெய் மலைப் பாறை, கடும் வெயிலிலும் குளுமையுடன் திகழ்கிறது.

மழலைச் செல்வம் அருளும் தலம்

மலையின் அடிவாரத்தில் காமதேனுவால் அமைக்கப்பட்ட தேனுதீர்த்தத்தில் ஐந்து தினங்கள் நீராடி முருகனை வழிபட, பிள்ளையில்லாக் குறை தீர்வதுடன்,தோஷங்களும் தீர்கிறது.

மூர்த்தி , தலம் , தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்பு பெற்ற இத்தலத்திற்கு வந்து வணங்கினால் வளமான வாழ்க்கை அமைகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 
Previous
Previous

பரிமள ரங்கநாதர் கோவில்

Next
Next

திருநோக்கிய அழகியநாதர் கோவில்