திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர் கோவில்

தொலைந்த பொருளை மீட்டுத் தரும் அரைக்காசு அம்மன்

புதுக்கோட்டை-திருச்சி சாலையில், புதுக்கோட்டை நகரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது திருக்கோகர்ணம். இறைவன் திருநாமம் கோகர்ணேஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகதாம்பாள் (அரைக்காசு அம்மன்). குடைவரைக்குகைக் கோயிலான இக்கோயில் பல்லவ அரசனான முதலாவது மகேந்திர வர்மன் காலத்தைச் சேர்ந்தது.

புதுக்கோட்டை மன்னர்களில் சிலர் திருக்கோகர்ணம் கோவிலில் உள்ள அன்னை பிரகதாம்பாளைக் குலதெய்வமாகவும், பலர் இஷ்ட தெய்வமாகவும் வணங்கிவந்தனர். அதனால் புதுக்கோட்டையை ஆண்ட அரசர்களின் பெயரில் அடைமொழியாக ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் என்ற சொல் சேர்க்கப்பட்டது.

அந்நாளில் பிரகதாம்பாள் அம்பிகைக்கு நவராத்திரி விழாவினை, புதுக்கோட்டை மன்னர்கள் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அப்போது அன்றைய தினத்திற்கு மட்டுமல்லாமல், பல நாட்களுக்கும் அன்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரிசி, வெல்லம் போன்ற பொருட்களையும், அம்மன் பொறிக்கப்பட்ட, அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த அரைக்காசு ஒன்றையும் சேர்த்து மக்களுக்கு அவர்கள் தானம் செய்து வந்தனர். புதுக்கோட்டை மன்னர்களால் வெளியிடப்பட்ட அந்த அரைக்காசு நாணயம், புதுக்கோட்டை அம்மன் காசு அல்லது அம்மன் சல்லி என அழைக்கப்பட்டது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் பிரகதாம்பாள் அம்மனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் மன்னர் ஒருவரின் முக்கியமான பொருள் ஒன்று தொலைந்துவிட்டது. எங்கு தேடியும் கிடைக்காத அந்தப் பொருள் கிடைக்க வேண்டும் என்று திருக்கோகர்ணம் பிரகதாம்பாளிடம் பிரார்த்தனை செய்தாராம் மன்னர். தான் வணங்கும் இந்த அரைக்காசு அம்மனே அதனை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி பிரார்த்தனையை தீவிரப்படுத்தினார். அவர் பிரார்த்தனை பலித்து, தேடிய பொருள் கைக்கு வந்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வெல்லத்தைப் பிடித்து வைத்து பூஜை செய்துள்ளார். பின்னர் அந்த வெல்லப் பிரசாதத்தைத் தானும் உண்டு, பக்தர்களுக்கும் வழங்கினார். அதனால் அரைக்காசு அம்மனை வேண்டினால் தொலைந்த பொருள் கிடைக்கும் என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. அந்த பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

பத்திரம், நகை, எந்த பொருள் தொலைந்தாலும் இந்த அம்மனை வேண்டிக் கொண்டு காசு எடுத்து வைத்தால் அந்தப் பொருள் கிடைத்து விடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

 
Previous
Previous

கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில்

Next
Next

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்