கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்
அயல்நாட்டில் கல்வி பயிலும் யோகம் அருளும் அஷ்ட தட்சிணாமூர்த்தி தலம்
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள கீழமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது காளஹஸ்தீஸ்வரர் கோவில். இந்தக் கோவிலில் அஷ்ட தட்சிணாமூர்த்திகள் அருள் புரிகிறார்கள்.
இவர்களில் ஸ்ரீஞான தட்சிணாமூர்த்தி கிழக்குத் திசையிலும், ஸ்ரீயோக பட்டாபிராம தட்சிணாமூர்த்தி வட கிழக்கிலும், ஸ்ரீசக்தி தட்சிணாமூர்த்தி தென்கிழக்கிலும், ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி தெற்கிலும், ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி தென்மேற்கிலும், ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி மேற்கிலும், ஸ்ரீஆசிந தட்சிணாமூர்த்தி(பரசுராமருக்கு வில்லும் அம்பும் வழங்கியவர்) வடமேற்கிலும், ஸ்ரீவர தட்சிணாமூர்த்தி (வேதத்துக்கு குரு) வடக்கிலும் எழுந்தருளியிருக்கிறார்கள்.
படிப்பில் மந்த நிலையில் உள்ளவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், அதிக மதிப்பெண் எடுத்து உயர் கல்வியில் சேரத் துடிப்பவர்கள், மேலை நாடுகளுக்குச் செல்ல எண்ணுவோர் இந்தத் தலத்துக்கு வந்து, அஷ்ட தட்சிணாமூர்த்தியரையும் வணங்கினால், உரிய பலன் கிடைக்கும்.
கோயிலின் ஞான கங்கை தீர்த்தக்குளத்தில் 11 வியாழக் கிழமைகள் நீராடி, அஷ்ட தட்சிணாமூர்த்திகளுக்கும் 11 வகை அபிஷேகங்கள் செய்து, எட்டு நெய்த் தீபங்கள் ஏற்றி வைத்து, மஞ்சள் பட்டு மற்றும் மஞ்சள் அரளிப்பூ சார்த்தி வழிபட, தடைப்பட்ட கல்விச் செல்வம் தங்குதடையின்றிக் கிடைக்கும்; விரும்பிய பாடப் பிரிவில் சாதனை படைக்கலாம் என்கின்றனர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அஷ்ட தட்சிணாமூர்த்தியருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். அஷ்ட தட்சிணாமூர்த்தியரின் அருளால் வெளிநாட்டில் கல்வி பயிலும் யோகமும் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. வருடத்திற்கு நான்கு முறை அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்
https://www.alayathuligal.com/blog/8aksam98depeyt9nx7nyan3nc728lh
2. இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்யும் அம்பிகை
https://www.alayathuligal.com/blog/t638e9awnfbxrh8k2wyt4ha975ee4w