திருமலை முத்துக்குமார சுவாமி கோவில்

விசாக நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரில் இருந்து வடக்கு திசையில் 8 கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற ஊர் உள்ளது. இந்த ஊருக்கருகில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு சிறிய குன்றில் திருமலை முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார வைப்புத் தலமான இந்தக் கோவிலுக்கு வாகனங்கள் சென்று வர மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில் முத்துக்குமார சுவாமி, நான்கு கரங்களுடன் மேல்நோக்கிய வலது கையில் சக்தி ஆயுதம், இடது கையில் வச்சிராயுதம் தாங்கியும், கீழ்நோக்கிய வலது கையில் அபயக்கரம், இடது கையில் சிம்ம கர்ண முத்திரையும் காட்டி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

இத்தலத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு, பார்வதிதேவி தன் வாயால் அருளிச் செய்த 'தேவி பிரசன்ன குமார விதி'ப்படி எட்டுக்கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோவிலில் மற்ற கோவில்கள் போன்று பள்ளி யறையில் சுவாமியைப் பாதுகை செய்வது இல்லை. மூலவருக்குப் பால், பழம், ஊஞ்சலுடன் சயனப் பூஜை மட்டுமே செய்யப்படுகிறது.

விசாக நட்சத்திரக்காரர்கள், வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய தலம்

முருகப்பெருமான் அவதரித்த விசாக நட்சத்திரக்காரர்கள் கோவிலாக திருமலை முத்துக்குமரசுவாமி கோவில் உள்ளது.;வி; என்றால் 'மேலான' என்றும், 'சாகம்' என்றால் 'ஜோதி' என்றும் பொருள்படும். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் இங்கு சென்று வழிபட்டு வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும்.

பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த தலம்

இந்த மலைப்டிகள் ஸ்கந்த கோஷ்டப் பித்ருக்கள் வசிக்கும் தேவ படிக்கட்டுக்கள் எனச் சொல்லப்படுகிறது. ஆகையால், இந்த தலத்திற்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால், நம் சந்ததிகளுக்கு நல்ல சிறப்பான வாழ்வு அமையும். நல்ல வாரிசுகள் உருவாகும் என்பது ஐதீகம்.

அருணகிரிநாதர் திருப்புகழில் திருமலை முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

 
Previous
Previous

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்

Next
Next

தலத்தின் தனிச் சிறப்பு