உத்தமர் கோவில்
சிவபெருமானின் தோஷத்தை நீக்கிய திவ்ய தேசம்
சிவபெருமானின் தோஷத்தை நீக்கிய திவ்ய தேசம்
திருச்சி சேலம் வழியில், சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்ய தேசம் உத்தமர் கோவில். பெருமாளின் திருநாமம் புருசோத்தமன். இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தங்கள் மனைவியருடன் அருள்பாலிக்கிறார்கள். இப்படி மும்மூர்த்திகளையும் ஒரே தலத்தில் தரிசிப்பது அபூர்வம்.
சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம்
ஒரு சமயம், சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாலமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாலத்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாலமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாலம் மட்டும் நிறையவேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் உத்தமர் கோவில் தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாலத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் 'பூரணவல்லி' என்ற பெயரும் பெற்றாள்.மகாவிஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.
மும்மூர்த்திகளின் திருவீதி உலா
கார்த்திகை தீப திருவிழாவன்று, மும்மூர்த்திகளும் ஒன்றாக திருவீதி உலா வருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்..
மும்மூர்த்திகளும் மனைவியருடன் எழுந்தருளி இருப்பதால், தம்பதியர் இங்கு வழிபட்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை. வாரிசு இல்லாமல் தவிப்பவர்கள், கொடிய நோயால் துடிப்பவர்கள், இங்குள்ள புருஷோத்தமனிடம் மனம்விட்டு பிரார்த்தித்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.