ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில்

தனித்துவமான, திருமேனி வடிவமைப்புள்ள அம்பிகை

மூக்குத்தி போடுவதற்கான துவாரமும், தலைப்பின்னலில் ஜடை குஞ்சத்துடன் இருக்கும் அரிய காட்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் அமைந்துள்ளது சந்திரசூடேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை. பச்சையம்மன், பர்வதம்மன் என்ற பெயர்களும் உள்ளன.

தமிழ்நாட்டில் மலைமீது அமைந்த ஒரு சில சிவாலயங்களில் இந்த சந்திரசூடேஸ்வரர் கோவிலும் ஒன்று. மலை மேல் அமைந்துள்ள இக்கோவிலை அடைய சுமார் 200 படிகள் உள்ளன. வாகனங்கள் செல்ல சாலை வசதியும் உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையானது இத்தலம். ஹொய்சளர்களால் ஆளப்பட்ட இவ்வூர் ஹோசூர் என்ற பெயர் பெற்றது. இம்மாவட்டத்தில் தங்கத்தேர் அமைந்த ஒரே கோவில் இது ஒன்றேயாகும்.

இத்தலத்து இறைவி மரகதப் பச்சை நிறம் கொண்ட திருமேனி உடையவர். ஒரு சமயம் சிவபெருமான், தான் தங்கியிருந்த இத்தலத்திற்கு பார்வதிதேவியை அழைத்துவர ஒரு திருவிளையாடலை நடத்தினார். ஒளிவீசும் உடும்பு வடிவம் கொண்டு கயிலை மலையின் உத்தியான வனத்தில் இருந்த பார்வதிதேவிக்கு அருகே வந்தார். அந்த அதிசய உடும்பைக் கண்ட பார்வதி, அதைப் பிடிக்க தோழிகளுடன் சென்றார். உடும்பானது, அவர்களின் கைகளில் அகப்படாமல் காடு, மலைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தேவி அந்த உடும்பின் வாலை பிடிக்க, அவரது உடல் பச்சை நிறமானது.

கருவறையில் நான்கு கரங்களுடன், நின்ற நிலையில் காட்சி தரும் அம்பிகையின் மூக்கில் மூக்குத்தி போடுவதற்கான துளை அமைந்துள்ளதும், அம்பிகையின் பின்னல் ஜடை ,குஞ்சத்துடன் அமைந்துள்ளதும் அதிசயமான காட்சியாகும். இப்படிப்பட்ட தனித்துவமான வடிவமைப்புள்ள அம்பிகையை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. அம்பிகைக்கு முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீசக்ரத்தின் முன் ஆடி வெள்ளி, தைவெள்ளி, நவராத்திரி நாட்களில் சண்டி ஹோமம் நடைபெறும். அழகு மிளிரும் திருமுகத்துடன் காட்சி தரும் அம்பிகை, பெண்களுக்கு குழந்தை செல்வம், குடும்ப ஐஸ்வர்யம் அளிப்பதில் வல்லவள்.

 
Previous
Previous

அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில்

Next
Next

திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில்