திருவண்ணாமலை பூதநாராயணப் பெருமாள் கோவில்

பால பருவத்து கிருஷ்ணன், பூதாகரமாக பெரிய உருவத்துடன் காட்சியளிக்கும் அபூர்வ தோற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் வடக்கு மாட வீதியில் அமைந்துள்ளது பூதநாராயணப் பெருமாள் கோவில். கருவறையில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் பால பருவத்து கிருஷ்ணராக இருந்தாலும், பூதனையிடம் பால் அருந்தியதால் பூதாகரமாக பெரிய உருவத்துடன் காட்சியளிக்கிறார். இடது காலை மடித்து வலது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். வலது கையில் சங்கு மட்டும் உள்ளது. இடது கையை பக்தர்களுக்கு அருள் தரும் அபய முத்திரையாக வைத்திருப்பது தனிச்சிறப்பாகும்.

தல வரலாறு

வாசுதேவர், தேவகிக்கு எட்டாவது குழந்தையாக ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார். அக்குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த கம்சன் அதனைக் கொல்லப் பல வழிகளில் முயற்சித்தான். பூதகி எனும் அரக்கியை அழைத்து, குழந்தையை கொல்லுமாறு கட்டளையிட்டான். அதன்படி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று பூதகி கிருஷ்ணனைத் தனியாக அழைத்துப் பாலூட்டினாள். வந்திருப்பது யாரென்பதை அறிந்து கொண்ட மாயக்கண்ணன் பூதகியின் விஷப்பாலை அருந்துவது போல் பாவித்து, அவளைக் கொன்றான். பின்பொரு சமயம் அரக்கியை வதஞ்செய்த கிருஷ்ணாவதாரக் கோலத்தைத் தனக்கு காட்டியருளுமாறு பிருகு முனிவர், திருமாலிடம் வேண்டினார். அவ்வேண்டுதளுக்குச் செவி சாய்த்து, திருமால் திருவண்ணாமலையில் பூதநாரயணப் பெருமாளாகக் காட்சியளித்து அர்ச்சாரூபமாய் எழுந்தருளினார். காலமாற்றத்தால் அப்பெருமாளை மணல் மூடிற்று. வெகு நாட்களுக்குப் பிறகு அப்பகுதியில் வாழ்ந்து வந்த ஒரு முனிவரின் கனவில் திருமால் தோன்றி, அருகில் உள்ள மணல் புற்றை முழுவதுமாக அகற்றுகையில், திருமாலின் அர்ச்சாரூபம் அங்கு உள்ளதைக் கண்டு, அதை கோவில் கட்டி பிரதிஷ்டை செய்து வணங்கி வரலாயினர்

பிரார்த்தனை

இந்த ஆலய இறைவனை வேண்டிக்கொண்டால், அறிவும், ஞானமும் கிடைக்கும். மேலும் குழந்தைகளுக்கு உள்ள தீராத நோய், கண் திருஷ்டி போன்றவை அகலும். குணமுள்ள குழந்தை பிறக்க, பிறந்த குழந்தைகள் அறிவுப்பூர்வமாக இருக்க இவருக்கு வெண்ணெய், கல்கண்டு படைத்து, துளசி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்

 
Previous
Previous

பவளமலை முத்துகுமார சுவாமி கோவில்

Next
Next

திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவில்