ஏடகநாதேஸ்வரர் கோவில்

திருஞானசம்பந்தர் சமணர்களுடன் அனல் வாதம். புனல் வாதம் புரிந்த தலம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் எனும் கிராமத்தில் அமைந்து உள்ளது, ஏடகநாதர் கோவில், திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும். மூலவர் ஏடகநாதேஸ்வரர், தாயார் ஏலவார்குழலி. இக்கோவிலில் இறைவன் மற்றும் இறைவிக்கு தனித்தனியாக ராஜ கோபுரங்கள் உள்ளது. இது ஒரு அரிதான அமைப்பாகும்.

மதுரையை ஆண்ட கூன்பாண்டிய மன்னர், சைவ நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். இவருக்கு நின்றசீர் நெடுமாறன் என்ற பெயரும் உண்டு. இவர் சோழமன்னரின் மகளாகிய மங்கையர்க்கரசியாரின் கணவர். இவர் காலத்தில் சமணர்கள் மிகத் தீவிரமாக சமணசமயத்தைப் பரப்பி வந்தனர். சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசியாரின் அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். இதனால் சமணர்கள் ஆத்திரமுற்று திருஞானசம்பந்தரை அனல் வாதம். புனல் வாதம் புரிய அழைத்தனர்.

சமணர்கள் தாங்கள் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புனல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் திருஞானசம்பந்தர் 'வாழ்க அந்தணர்' என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு கோவில் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற தேவார பாடல் பெற்ற தலம் ஆனது.

இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள கால பைரவர் சன்னதி மிகவும் விசேஷமானது வைகை நதிக்கரையில் பித்ரு காரியங்கள் மற்றும் அவர்கள் இறந்த திதி போன்ற நாட்களில் பூஜைகள் செய்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இத்தலம் காசிக்கு நிகராகக் கருதப்படுவதால் முன்னோர் வழிபாடுகள் இத்தலத்தில் செய்யலாம். நம் முன்னோர்களின் முக்தி அடையை மோட்ச தீபம் ஏற்றும் பழக்கம் இக்கோவிலில் உள்ளது.

இக்கோவில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், சித்த பிரமை நீங்குவது தலத்தின் தனி சிறப்பாகும்.

 
Previous
Previous

சிவலோகத் தியாகேசர் கோவில்

Next
Next

சுப்பிரமணிய சுவாமி கோவில்