புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்

கிணற்றின் மேல் எழுந்தருளி உள்ள விநாயகர்

விநாயகரை கடலில் தூக்கி போட்டாலும், மீண்டும் தானாக வந்து கோவிலில் அமர்ந்த அதிசயம்

புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில். தொண்டை மண்டலத்தில் வேதபுரி அகஸ்தீசபுரம், வேதபுரம் எனும் பெயர்களோடு இருந்தது இந்த புதுச்சேரி. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் தான் மருவி, மணக்குள விநாயகர் ஆனது.

தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் அமைந்திருக்கின்றது. பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் இப்போதும் நீர் சுரந்து கொண்டிருக்கிறது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவிலலை. இதில் வற்றாத நீர் எப்போதும் உள்ளது. இது முன்காலத்தில் ஒரு குளமாவும் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

ஒயிட் டவுன் எனப்படும் இந்தப் பகுதியின் அருகில் ஒரு குளம் உண்டு; மணற் குளம் சென்று அதற்கு பெயர். இதன் அருகில் கோவில் கொண்டதால், 'மணற்குள விநாயகர்' எனப் பெயர் பெற்றார். 1688-ஆம் வருடம் பிரெஞ்சுக்காரர்கள் இங்கு ஒரு கோட்டை கட்ட திட்டமிட்டனர். அந்தக் கோட்டையின் பின்புறம் மணக்குள விநாயகர் ஆலயம் இருந்தது. அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் இந்த விநாயகருக்குத் தினமும் அபிஷேக ஆராதனைகளுடன் அவ்வப்போது உற்சவங்களையும் நடத்தி வந்தனர். பிரெஞ்சு ஆட்சியாளர்களால் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, ஈஸ்டர் காலம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி உற்சவம் போன்ற வைபவங்களை நடத்தக்கூடாது என்று அப்போதைய பிரெஞ்சு கவர்னர் தடை உத்தரவு பிறப்பித்தார். இதனால் கோபம் அடைந்த அந்தப் பகுதியில் வாழ்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் எவரும் வேலைக்குச் செல்லாமல் இருந்ததுடன், ஊரைவிட்டே வெளியேறவும் முற்பட்டனர். அப்படி நிகழ்ந்தால், வேலை செய்ய ஆட்கள் இல்லாது திண்டாட நேரிடுமே என்ற அச்சத்தில், அவர்களின் போராட்டத்துக்குப் பணிந்தார் கவர்னர். தடை உத்தரவு வாபஸ் ஆனது.

ஆனாலும், மணக்குள விநாயகர் ஆலயத்தை அங்கிருந்து அகற்ற, பிரெஞ்சுக்காரர்கள் திட்டமிட்டனர். கோவிலுக்கு அருகில், பிரெஞ்சுக்காரர் 'மொம்பரே என்பவரின் பூங்கா இருந்தது. அவருக்கும், விநாயகர் கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்து செல்வது பிடிக்கவில்லை. இதையடுத்து, எவரும் அறியாத வண்ணம் இரவோடு இரவாக விநாயகர் சிலையை எடுத்துக் கடலில் போடுமாறு தனது ஆட்களை ஏவினார் மொம்பரே. அவ்வாறே விநாயகர் சிலை கடலில் போடப்பட்டது. ஆனால், மறுநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோவிலில் எந்த இடத்தில் அந்தச் சிலை வைக்கப்பட்டு இருந்ததோ, அதே இடத்தில் மறுபடியும் இருந்தது. மொம்பரே அதிர்ச்சி அடைந்தார். தான் அனுப்பிய ஆட்கள் மீதே அவருக்குச் சந்தேகம் எழுந்தது. மறுபடியும், விநாயகர் சிலையை கடலில் கொண்டு போய் போடும்படி உத்தரவிட்டவர், அந்தமுறை தானும் உடன் சென்றார். மொம்பரேயின் ஆட்கள் சிலையைப் பெயர்த்தெடுத்துக் கடலில் போட முயன்றபோது, திடீரென கண்பார்வை இழந்தார் மொம்பரே. மணக்குள விநாயகரின் மகிமையை உணர்ந்தார். தனது செயலுக்காக வருந்தியதுடன், தன்னுடைய தவறுக்குப் பரிகாரமாக கோவிலை அபிவிருத்தியும் செய்தார். வெள்ளைக்காரருக்கு மனமாற்றம் தந்ததால் இவரை, 'வெள்ளைக்காரப் பிள்ளையார்' என்றும் அழைக்கிறார்கள்.

புதுவையில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் , இந்த விநாயகரை போற்றி; 'நான்மணிமாலை' என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்ற பாரதியின் கனவுப்படி இந்தக் கோவில் கருவறை விமானம் பொன்னால் வேயப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோவில் இந்த கோவில் மட்டுமே.

பிரார்த்தனை

இக்கோவிலில், இந்து மதம் என்றில்லாமல் முஸ்லிம், கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்களும், வெளிநாட்டினரும் பெருமளவில் வந்து வழிபடுகிறார்கள். திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் முன்னேற்றம் இவற்றிற்காக இங்கு வழிபடுகிறார்கள். 'பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்ற

திருவிழா

விநாயகர் சதுர்த்தி இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். அது தவிர ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தின் பிரமாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவர்கள். இது தவிர மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தின் போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்

Read More
தருமபுரம் யாழ்மூரிநாதர் கோவில்

தருமபுரம் யாழ்மூரிநாதர் கோவில்

காவி உடையுடன் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ கோலம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தேவாரத்தலம் தருமபுரம். இறைவன் திருநாமம் யாழ்மூரிநாதர், தருமபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் தேனாமிர்தவல்லி, மதுர மின்னம்மைமார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன்) வழிபட்ட பதியாதலின் தருமபுரம் என்று பெயர் பெற்றது.

திருஞானசம்பந்தரின் யாழ்முரிப்பதிகம் பெற்ற சிறப்புடையது இத்தலம். யாழை இசைத்து, யாழ்ப்பாணரின் கர்வத்தை அடக்கியவர் என்பதால் இத்தலத்து சிவபெருமான் 'யாழ்மூரிநாதர்' என அழைக்கப்படுகிறார். சிவபெருமான் யாழ் இசைத்த போது, அவரது அம்சமான தட்சிணாமூர்த்தி இசையை விரும்பி கேட்டார். இசையில் மகிழ்ந்த தட்சிணாமூர்த்தி தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும்விதமாக இங்குள்ள தட்சிணாமூர்த்தி பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார். பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம்தான் தட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள். ஆனால், இங்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். தட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை காண்பது அபூர்வம். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால், காவி ஆடை அணிவிப்பதாக சொல்கிறார்கள்.

பிரார்த்தனை

இசை கற்பவர்கள் சிவபெருமான், தட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள்.

Read More
தருமபுரம் யாழ்மூரிநாதர் கோவில்

தருமபுரம் யாழ்மூரிநாதர் கோவில்

கையில் யாழ் இசைக்கருவி உடன் இருக்கும் சிவபெருமானின் அபூர்வ தோற்றம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தேவாரத்தலம் தருமபுரம். இறைவன் திருநாமம் யாழ்மூரிநாதர், தருமபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் தேனாமிர்தவல்லி, மதுர மின்னம்மை. இத்தல இறைவனுக்கு யாழ்மூரிநாதர் என்ற திருநாமம் ஏற்பட்டதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.

எருக்கத்தம்புலியூர் எனும் ஊரில் வசித்த நீலகண்ட யாழ்ப்பாண நாயனார் சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். திருஞானசம்பந்தர் சிவத்தல யாத்திரை மேற்கொண்டு தேவாரப் பதிகங்கள் பாடி வருவதை அறிந்த நீலகண்ட யாழ்ப்பாண நாயன்மாரும், அவரது மனைவி மதங்கசூளாமணியும் திருஞானசம்பந்தருடன் இணைந்து சிவத்தலயாத்திரை மேற்கொண்டனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாட அதற்கேற்ப யாழ்ப்பாணர் இசையமைப்பார். சம்பந்தர் பாடும் அனைத்து பாடல்களுக்கும், இனிமையாக யாழ் இசைக்கருவி இசைக்கும் திறமை பெற்றிருத்ததால் யாழ்ப்பாணர் சற்று கர்வம் கொண்டார். அவரது கர்வத்தை அடக்க சிவன் எண்ணம் கொண்டார் அவர்கள் இத்தலத்திற்கு வந்தபோது சம்பந்தர் பதிகம் பாடினார். யாழ்ப்பாணர் எவ்வளவு முயன்றும் அப்பாடலுக்கு சரியாக இசைக்க முடியவில்லை. கலங்கிய யாழ்ப்பாணர் யாழ் இசைக்கலையில் தான் தோற்றுவிட்டதாக கருதி யாழை முறித்து தன் உயிரை விடச் சென்றார். அப்போது சிவன் அவருக்கு காட்சி தந்து யாழை வாங்கி சம்பந்தரின் பதிகத்திற்கேற்ப வாசித்து, நடனம் ஆடினார். தன் நிலை உணர்ந்த யாழ்ப்பாணர் கர்வம் நீங்கப்பெற்றார்.

யாழை இசைத்து யாழ்ப்பாணரின் கர்வத்தை அடக்கியவர் என்பதால் இத்தலத்து சிவன், யாழ்மூரிநாதர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் சிவபெருமான் கையில் யாழ் இசைக் கருவியுடன் காட்சி அளிக்கிறார். சிவபெருமானின் இந்த அபூர்வ தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

கருவறையில் லிங்க வடிவில் உள்ள சுவாமி, எப்போதும் வெள்ளிக்கவசத்துடன் தரிசனம் தருகிறார். சிவன் யாழ் இசைத்தபோது அம்பாள் தேனும், அமிர்தமும் சேர்ந்தது போல இனிமையாக பாடி மகிழ்ந்தாளாம். எனவே இவளை, தேனாமிர்தவல்லி என்கின்றனர். குரல் வளம் வேண்டுபவர்கள் இவளுக்கு வஸ்திரங்கள் சாத்தி, பூஜைகள் செய்தும், இசை கற்பவர்கள் சிவபெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள். சிவன் யாழ் இசைத்தபோது குயில்களும் தங்களது குரல்களால் கூவி பாடினவாம். இதனை திருஞானசம்பந்தர் 'எழில் பொழில் குயில் பயில் தரும்புர பதியே' என்று பாடியிருக்கிறார்.

பிரார்த்தனை

எமதர்மன் இங்கு தவம் செய்து வழிபட்டு அருள் பெற்றதால், இத்தலத்தில் ஆயுள் விருத்தி ஹோமமும், சஷ்டியப்தபூர்த்தி செய்வதும் சிறப்பாகும்.

Read More
திருத்தெளிசேரி பார்வதீசுவரர் கோவில்

திருத்தெளிசேரி பார்வதீசுவரர் கோவில்

சிவனும், பார்வதியும் உழவராக பணிபுரிந்து பஞ்சம் தீர்த்த தேவாரத்தலம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகரின் ஒரு பகுதியாக விளங்கும் தேவார தலம் திருத்தெளிசேரி. இறைவன் திருநாமம் பார்வதீசுவரர், இறைவியின் திருநாமம் பார்வதியம்மை.

ஒரு சமயம் உணவு பஞ்சம் சோழநாட்டில் சரிவர மழை பெய்யாததால் உணவு பஞ்சம் ஏற்பட்டது. நாட்டு மக்கள் பசியால் வாடினர். சோழ மன்னன் இத்தல இறைவனிடம் வேண்டினான். இதையேற்ற சிவபெருமான், பார்வதிதேவியுடன் உழவன் வேடத்தில் வந்து, நிலங்களில் விதை தெளித்துச் சென்றார். பயிர் சிறப்பாக விளைந்து பஞ்சம் நீங்கியது. இறைவனே விதை தெளித்து சென்றதால் இத்தலம் 'திருத்தெளிசேரி' ஆனது. இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் விதத்தில் இத்தலத்தில் ஆனி மாதம் விதை தெளிவு உற்சவம் நடைபெறுகின்றது. இறைவனும் இறைவியும் கோவிலுக்கு எதிரே உள்ள சூரிய தீர்த்தத்திற்கு எழுந்தருளி விதை தெளிக்கும் வைபவம் நடைபெறும். அதன் பின்னரே, விவசாயிகள் தங்கள் நிலத்தில் விதை தெளிப்பார்கள்.

பங்குனி மாதம் நடைபெறும் சூரிய பூஜை

சூரியபகவான் தனது துணைவியான சாயா தேவியிடம் அன்பு செலுத்தாத காரணத்தினால், அவள் மிகுந்த வருத்தமடைந்தாள். இதனை நாரதர் மூலம் அறிந்த அவளது தந்தை, சூரியனை சபித்து விட்டார். இதனால், சூரியன் தனது ஒளியை இழந்து வருந்தி இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி பார்வதீசுவரரை வழிபட்டான். இவனது வழிபாட்டிற்கு மகிழ்ந்த இறைவன் சாபத்தை நீக்கி அருளினார். சூரியன் வழிபட்டதால், இதனை 'பாஸ்கரத்தலம்' என்கின்றனர். . இறைவனை வழிபட்டு சூரிய பகவான் சாபம் நீங்கப் பெற்றதால், ஆண்டு தோறும் பங்குனி மாதம் 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை சூரிய பூஜை வெகு விமரிசையாக இங்கு கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில், அஸ்தமனச் சூரியன் தன் பொன் நிறக்கதிர்களால் இறைவனை ஆராதனை செய்யும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

Read More
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில்

சனி பகவானை வணங்கிய பின் தான் சிவனை வழிபட வேண்டும் என்ற அபூர்வமான நடைமுறை உள்ள தேவார தலம்

சனி பகவான், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு, 20. 12. 2023 அன்று மாலை 5.20 மணிக்கு, பெயர்ச்சி அடைகிறார். சனிபெயர்ச்சி என்றாலே காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். காரைக்காலில் இருந்து 5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள இக்கோவில், தேவாரப் பாடல் பெற்றது. இறைவனின் திருநாமம் தர்ப்பாரண்யேசுவரர், இறைவியின் திருநாமம் பிராணேசுவரி. இறைவன் தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழுப்புடன் உள்ளார். தரப்பாணேஸ்வரரை சனிபகவான பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணம் கூறுகிறது.

பிராணேசுவரி அம்மன் சன்னதிக்கு முன்னால், சனிபகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இக்கோவிலின் வாயிற் காப்பாளராக சனி பகவானே கருதப்படுகிறார். பொதுவாக சிவனை வழிபட்ட பிறகு தான் நவகிரகங்களை வழிபடுவார்கள். ஆனால் இத்தலத்தில் சனீஸ்வரனை வணங்கிய பிறகு தான் சிவனை வழிபட வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. மேலும் சனி பகவானை தவிர, மற்ற எட்டு கிரகங்களும் இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. சனிபகவானது விக்ரகத்தின் கீழே, அவரது சாந்நித்யம் கொண்ட மகாயந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சனி பகவானாலேயே அந்த மகாயந்திரம் அருளப்பட்டதால், அதனுடைய சக்தி அளவிட முடியாதது. அதனாலேயே சனிபகவானின் திருச்சன்னதி மிக்க சிறப்பும், சக்தியும், மூரத்திகரமும் பெறறு விளங்குகிறது.

பிரார்த்தனை

இத்தலத்தில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் தவிர அஷ்டதீர்த்தங்கள் எனப்படும் மொத்தம் 8 தீர்த்தங்கள் உள்ளன. சனித் தொல்லை தீர நள தீர்த்தத்திலும், முன் ஜென்ம சாபவங்கள் விலக பிரம்ம தீர்த்தத்திலும், கலைகளில் தேர்ச்சி பெற வாணி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

சனி பகவானை வழிபடும் போது சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

சனி காயத்ரி மந்திரம் :

காகத் வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்த: ப்ரசோதயாத்

Read More
தருமபுரம்  யாழ்மூரிநாதர் கோவில்

தருமபுரம் யாழ்மூரிநாதர் கோவில்

காவி ஆடை அணியும் தட்சிணாமூர்த்தி

புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தருமபுரம். இறைவன் திருநாமம் யாழ்மூரிநாதர். இறைவியின் திருநாமம் தேனாமிர்தவல்லி, மதுர மின்னம்மை.

ஒரு சமயம் சிவபெருமான் யாழ் இசைத்தபோது, அவரது அம்சமான தெட்சிணாமூர்த்தி இசையை விரும்பிக் கேட்டார். இசையில் மகிழ்ந்த அவர் தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள தட்சிணாமூர்த்தி பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார்.பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம்தான் தட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள். ஆனால், இங்கு அவருக்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு காவி ஆடை அணிவிப்பதாக சொல்கிறார்கள்.தட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை மற்றத் தலங்களில் காண்பது அபூர்வம்.

இங்கு சிவபெருமான் தன் கையில் யாழ் இசைத்த கோலத்தில் காட்சி தருகிறார்.

Read More
காரைக்கால் அம்மையார் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

காரைக்கால் அம்மையார் கோவில்

சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்ட பெண் நாயன்மார்

புதுச்சேரி மாநிலத்திலுள்ள காரைக்காலில் அமைந்துள்ளது காரைக்கால் அம்மையார் கோவில். சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் கூறப்பட்டுள்ள 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் ஒருவர்தான் பெண் இனத்தைச் சேர்ந்தவர். சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்டச் சிறப்புக்குரியவர். இசைத் தமிழால் இறைவனைப் பாடியவர். சிவபெருமானால் மாங்கனி தந்து அவர் ஆட்கொள்ளப்பட்ட வரலாறு, அவர்தம் பக்தியின் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா காரைக்காலம்மையார் கோவிலில் நடைபெறுவது வழக்கம்.

சிவபெருமான் மாங்கனி தந்து காரைக்கால் அம்மையாரை ஆட்கொண்ட வரலாறு

காரைக்காலிலுள்ள குலத்தைச் சேர்ந்த தனதத்தன் என்பவருக்கு மகளாக பிறந்தவர்காரைக்கால் அம்மையார். இவர் இயற் பெயர் புனிதவதி. சிறுவயது முதல் சிவ பக்தியிலும், சிவனடியார்களுக்கு தொண்டு புரிவதிலும் சிறந்தவர். புனிதவதி வளர்ந்து திருமண வயதை அடைந்ததும், பரமதத்தன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்துக்கு பிறகும் புனிதவதி சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வந்தார். ஒரு நாள் பரமதத்தனுக்கு தனக்கு கிடைத்த மாங்கனிகளை தனது வேலையாட்கள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான். அப்போது சிவபெருமான், ஒரு சிவனடியார் வேடத்தில் அங்கு வந்தார் சிவன். தாம் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாவது உணவு தருமாறும் புனிதவதியை வேண்டினார். அப்போது உணவு தயாரகவில்லை என்பதால் தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் இருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு உண்ணக்கொடுத்தார். அதனை உண்ட சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார். மதிய உணவு உண்பதற்காக வீட்டிற்கு பரமதத்தன், தனது மனைவி புனிதவதியிடம் மாங்கனிகளை எடுத்து வா என்று கேட்டார். புனிதவதியோ, சிவனடியாருக்கு கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அக்கனியை உண்ட பரமதத்தன், இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வருமாறு கூறினார்.

வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த புனிதவதியோ,சமைக்க சற்று தாமதமாகும் காத்திருங்கள் என்று கூறினார்.அப்போது புனிதவதியாருக்கு தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் இருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு உண்ணக்கொடுத்தார். அதனை உண்ட சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார். மதிய உணவு உண்பதற்காக வீட்டிற்கு பரமதத்தன், தனது மனைவி புனிதவதியிடம் மாங்கனிகளை எடுத்து வா என்று கேட்டார். புனிதவதியோ, சிவனடியாருக்கு கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அக்கனியை உண்ட பரமதத்தன், இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வருமாறு கூறினார்.

சிவபெருமான் கொடுத்த மாங்கனி

இதைக் கேட்ட புனிதவதி, பூஜை அறைக்கு சென்று சிவபெருமானிடம் மாம்பழம் கொடுத்து அருளுமாறு வேண்டினார். சிவனும் உடனே புனிதவதிக்கு மாங்கனியை அருளினார். அதனை பெற்றுக் கொண்ட புனிதவதி, தன் கணவன் பரமதத்தனிடம் மாங்கனியை கொடுத்தாள். அக் கனியை உண்ட பரமதத்தனுக்கு தான் முன்பு சாப்பிட்ட மாங்கனியை விட இரண்டாவது கனி மிகவும் சிறப்பான சுவையுடன் இருந்ததால், புனிதவதியிடம் மாங்கனி சுவையின் வேறுபாடு பற்றி கேட்டான். கணவனின் கேள்விக்கு பொய் சொல்ல விரும்பாத புனிதவதி நடந்தவற்றை மறைக்காமல் தனது கணவனிடம் தெரிவித்தாள். இதனைக் கேட்ட பரமதத்தன், அப்படியானால் சிவபெரு மானிடம் இருந்து இன்னொரு மாங்கனி பெற்றுத் தருமாறு வேண்டினான். புனிதவதியும் சிவபெருமானை வேண்ட இன்னொரு மாங்கனியும் கிடைத்தது. இதனைக் கண்ட பரமதத்தன் தன் மனைவி ஒரு தெய்வம் என்று எண்ணி அவளது காலில் விழுந்து வணங்கினார். தன் மனைவியை விட்டு விலகி பாண்டிய நாடு வந்த பரமதத்தன், குலசேகரன் பட்டிணத்தில் தங்கி வணிகம் செய்ய ஆரம்பித்தான். பிறகு அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தான். அந்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தனது முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இந்த தகவலை அறிந்த புனிதவதியார் குலசேகரன்பட்டிணம் வந்து, ஊர் எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமர்ந்து கொண்டு கணவனுக்கு அழைப்பு விடுத்தார். தனது இரண்டாவது மனைவி, மகளுடன் வந்து முதல் மனைவியான காரைக்கால் அம்மையார் காலில் விழுந்து வணங்கி, அங்கு கூடியிருந்த மக்களையும் வணங்க வைத்தான்.

சிவபெருமானிடம் பெற்ற வரம்

காரைக்கால் அம்மையார் குலசேகரபட்டினத்தில் கணவருடன் சேர நினைத்து அது இயலாமல் போகவே, கணவனுக்கு தேவையற்ற இந்த இளமையும், அழகும், தனக்கு வேண்டாம் என இறைவனிடம் கூறி துறவறத்திலேயே யாரும் துணியாத நிலையான பேய் வடிவினை வரமாகக் கேட்டுப் பெற்றார். காரைக்கால் சென்று அம்மை அப்பரை வணங்கிய பின்னர் அங்கிருந்து கயிலாயம் புறப்பட்டுச் சென்றார். காலால் நடப்பது குற்றம் என்று எண்ணிய புனிதவதியார், தனது தலையாலேயே கயிலாயத்தில் நடந்து சென்றார். அப்போது இறைவன், 'அம்மையே! நலமாக வந்தனையோ? நம்மிடம் வேண்டுவது யாது?'' என்று புனிதவதியை நோக்கி கேட்டார். அதற்கு அம்மையார்,'இறைவா! உன்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். அனுதினமும் உன் திருவடியின் கீழ் இருந்து என்றும் உன் திருநாமத்தை பாடிக் கொண்டிருக்கும் வரம் வேண்டும்' என்று கேட்டார். உடனே சிவபெருமான், 'அம்மையே! நீவீர் பூலோகத்தில் உள்ள திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம்' என்று அருளினார். அதன்படி இன்றும் திருவாலங்காட்டில் உள்ள நடராஜப் பெருமானின் ரத்தின சபையில் காரைக்கால் அம்மையார் அமர்ந்து சிவபெருமானின் நடனத்தை கண்டு மகிழ்கிறார் என்பது ஐதீகம். 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார்தான் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

சிவபெருமானைத் துதித்து, காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருஇரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகம் போன்ற நூல்களைப் பாடியுள்ளார்.

பிள்ளை வரம் தரும் மாங்கனித் திருவிழா

இந்த ஆண்டு மாங்கனி திருவிழா ஜூலை மாதம்10 முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 10-ந் தேதி மாப்பிள்ளை அழைப்பும், 11-ந் தேதி திருக்கல்யாணமும், 13-ந் தேதி சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவளக்கால் சப்பரத்தில் வீதியுலாவும் நடக்கிறது. வீதியுலாவின்போது பக்தர்கள், தங்கள் நேர்த்திக்கடனை தீர்க்கும் வகையில், மாங்கனிகளை வாரி இறைப்பார்கள். அப்போது மக்கள் உயரமான இடத்திலிருந்து வீதியில் மாங்கனிகளை வீசுவர். மாடிகளிலிருந்து இறைக்கப்படும் மாம்பழங்கள் வானத்திலிருந்து மாம்பழ மழை பொழிவதைப் போல் தெரியும். இந்த மாங்கனிகளை பிடித்து சாப்பிட்டால் திருமணம் கை கூடும் என்பதும், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும் ஐதீகம் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாங்கனிகளை தங்களது சேலையில் தாங்கி பிடித்துக் கொள்வர்.ஜூலை 14-ந் தேதி, அம்மையாருக்கு, சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

பிள்ளை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை படைத்து வழிபட்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

Read More