ஆண்டளக்கும் ஐயன் கோவில்

தன்னை நாடி வருவோரின் தகுதிக்கேற்ப, அளந்து அருள் வழங்கும் ஐயன்

கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள திவ்யதேசம் ஆதனூர். .தன்னை நாடி வருவோரின் தகுதிக்கேற்ப, அளந்து அருள் வழங்கும் வள்ளலாக வீற்றிருப்பதால், இத்தல இறைவனுக்கு 'ஆண்டளக்கும் ஐயன்' என்பதே திருநாமமாக விளங்குகிறது.

ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீரங்கனுக்கு திருமதில் எழுப்பும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தார் திருமங்கையாழ்வார். அப்போது அவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. தன் குறை நீங்கி பணி நிறைவு பெற உதவிடுமாறு, ஸ்ரீரங்கநாதனிடம் முறையிட்டார். அன்று அவரின் கனவில்தோன்றிய பெருமாள், ‘கொள்ளிடக்கரையில் வந்து தேவையான பொருளைப் பெற்றுக் கொள்’ என்று கூறினார்.

அதன்படி, கொள்ளிடக்கரை வந்த திருமங்கையாழ்வார், ஒரு வணிகரைச் சந்தித்தார். அந்த வணிகர், ‘உங்களுக்கு உதவி செய்ய எனக்கு கட்டளை வந்துள்ளது. நான் உங்களோடு வருகிறேன். வேலையாட்களுக்கு என்னிடம் உள்ள மரக்காலால் மண்ணை அளந்து தருவேன். உண்மையாக உழைத்தவர்களுக்கு அது பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு மண்ணாகவும் இருக்கும்’ என்று கூறினார்.

அந்த வணிகரிடம் ஒரு மரக்கால், ஏடு, எழுத்தாணி ஆகிய மூன்று பொருட்கள் இருந்தன.

ஸ்ரீரங்கத்தில் திருப்பணி செய்த வேலையாட்களுக்கு மரக்காலால் வணிகர் மணலை அளந்து தர, அது ஒருசிலருக்குப் பொன்னாகவும், சிலருக்கு மணலாகவும் இருந்தது. மணலை கூலியாகப் பெற்றவர்கள் வணிகரை அடிக்க முற்பட்டனர். வணிகர் ஓட, அவர் பின்னால் ஆழ்வாரும் ஓட, இருவரும் கொள்ளிடம் கரையில் உள்ள ஆதனூர் வந்து சேர்ந்தனர். அங்கே வணிகர், பெருமாளாக காட்சியளித்து மறைந்தார். இத்தலமே, இன்றைய ஆதனூர் என தலவரலாறு குறிப்பிடுகிறது.

 
Previous
Previous

கண்ணாயிரநாதர் கோவில்

Next
Next

பிரம்மஞானபுரீஸ்வரர் கோவில்