பகவதி அம்மன் கோவில்

தேவி கன்னியாகுமரி

இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய முக்கடல் சங்கமிக்கும் இடத்தில், இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது பகவதியம்மன் கோவில். இக்கோவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் கட்டப்பட்டதாகும். தேவியின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக, தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடமாக கருதப்படுகிறது. அம்மனின் சக்தி பீடங்களில் இது குமரி சக்தி பீடம் ஆகும். இத்தலத்தில் குமரி அம்மன் கன்னிப்பெண் வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு

முன்னொரு காலத்தில் அசுரர் தலைவனான பாணாசுரன் என்பவன் தேவர்களுக்கும் ,முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அப்போது தேவர்கள், பாணாசுரனுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று திருமாலிடம் விண்ணப்பித்தனர். திருமாலும் பாணாசுரன் பெற்ற வரத்தின்படி, அவனை கன்னிப்பெண் ஒருவரால் மட்டுமே அழிக்க முடியும். என்றார். அதனால் பார்வதி தேவியிடம் உங்கள் வேண்டுதலை சமர்ப்பியுங்கள் என்று அறிவுறுத்தினார். அதன்படி தேவர்கள், பாணாசுரனை அழிப்பதற்காக பார்வதி தேவியை வணங்கி ஒரு பெரிய வேள்வி செய்தனர். வேள்வியால் மகிழ்ந்த பார்வதி தேவி, தேவர்கள் முன்பாக தோன்றி, பாணாசுரனை அழிப்பதாக உறுதி அளிக்கிறார்.

அதற்காக கன்னியாகுமரி வந்தடைந்த பார்வதி தேவி, அங்கு கடும்தவம் புரிந்தார். சிறிய பெண்ணாக இருந்த கன்னிதேவி, மணப்பருவம் அடைந்ததும், சுசீந்திரத்தில் கோயில் கொண்ட சிவபெருமான் (தாணுமாலவர்), அவரை மணமுடிக்க எண்ணினார். சிவபெருமான் தனது விருப்பத்தை தேவர்களிடம் கூறினார்.

சிவபெருமானுக்கும் கன்னிதேவிக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், ஒரு கன்னிப்பெண்ணால்தான் பாணாசுரனுக்கு அழிவு ஏற்படும் என்பதால், நாரத முனிவர் சற்று யோசித்தார். தேவர்களும், பாணாசுரனை வீழ்த்த வேண்டும் என்றால், அன்னையின் தவம் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நாரதரிடம் கூறினர். அதன்படி நாரதர், சிவபெருமான் – பார்வதி தேவியின் திருமணத்தை தடுத்து நிறுத்த எண்ணினார். அதேநேரத்தில், சிவபெருமானின் எண்ணத்தை மறுத்துரைக்காதபடி செயல்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொண்டார்.

அதனால், நள்ளிரவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று சிவபெருமானிடமும் பார்வதி தேவியிடமும் கூறினார் நாரதர். மேலும் கண்ணில்லா தேங்காய், காம்பில்லா மாங்காய், நரம்பில்லா வெற்றிலை, கணு இல்லா கரும்பு, இதழ் இல்லா மலர் ஆகியவற்றை திருமண சீராக வைக்க வேண்டும் என்று கூறினார்.

நாரதர் கூறிய நிபந்தனைகளை சிவபெருமான் ஏற்றுக் கொள்கிறார். அதன்படி ஒரு குறிப்பிட்ட நாளில், சீதனப் பொருட்களுடன் சுசீந்திரத்தில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்டார் சிவபெருமான். போகும்வழியில் 'வழுக்கம் பாறை' என்ற இடத்தை அடைந்தபோது, நாரதர் சேவல் உருவம் கொண்டு உரக்கக் கூவினார். பொழுது புலர்ந்துவிட்டது, நள்ளிரவு நேரம் கடந்துவிட்டது என்று நினைத்த சிவபெருமான், கன்னியாகுமரி செல்லாமல், சுசீந்திரம் திரும்பினார். பார்வதி தேவியும் கன்னியாகவே தவத்தைத் தொடர்ந்தார்.

திருமணத்துக்கு ஏற்பாடான உணவுகளும் சீதனப் பொருட்களும் மணலாக மாறின. அரிசி போன்ற வெண்மணலும், வெவ்வேறு வண்ண மணலும் குமரிக்கடல் துறையில் மிகுந்து கிடப்பதை இன்றும் காணலாம்.

இதனிடையே, கன்னிதேவியைப் பற்றி கேள்விப்பட்ட பாணாசுரன், தேவியை மணம்புரிய விரும்பினான். தேவி அதற்கு உடன்படாததால், தேவியை கவர்ந்து செல்ல முயன்றான். இதுதான் சமயம் என்று பார்வதி தேவி, தன் சக்கராயுதத்தால் பாணாசுரனை வீழ்த்தினார். மீண்டும் தன் தவத்தை தேவி தொடர்ந்தார்.

அன்னையின் தவக்கோலம்

கன்னியாகுமரி அம்மன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் . இலுப்பைப் பூமாலையை ஒரு கரத்தில் தரித்து, மற்றொரு கரத்தை தன் தொடை மீது வைத்து தவக்கோல நாயகியாக காட்சி தருகிறர். அன்னையின் திருமுடி மீதுள்ள கீரிடத்தில் பிறைமதி அமைந்துள்ளது.

அன்னையின் மூக்குத்தி

பாணாசுரனை அழித்த பின்பு பகவதி அம்மன் மிகவும் உக்கிரமாக இருந்தார். சிவபெருமான் தன்னை மணக்காதது, பாணாசுரன் மீது இருந்த வெறுப்பு ஆகியவை சேர்ந்து மிகவும் கோபம் கொண்டு காணப்பட்டார் பகவதி அம்மன். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அம்மன் தன் கோபத்தை ஒரு மூக்குத்தியில் இறக்கி, சாந்தமானார். அன்னையின் மூக்குத்தி யோகசக்தியாக கருதப்படுகிறது.

கன்னித் தீர்த்தம்

மகாபாரதம், மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதம் முதலானவற்றில் அம்மன் வழிபாடு பற்றி கூறப்பட்டுள்ளது.

இக்கோவிலில் அமைந்துள்ள கன்னித் தீர்த்தம் மிகவும் சிறப்புடையது. 'குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை' என்று மணிமேகலை காப்பியம் உரைக்கிறது. சீதையை மீட்க ராமபிரான் கிளம்பியபோது, இலங்கைக்குச் செல்ல சேதுபாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இந்த சேதுபாலம் கன்னித் தீர்த்தத்தில் இருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது. அதனால் கன்னித் தீர்த்தம் ஆதிசேதுவாகவும் கருதப்படுகிறது. பாணாசுரனை அழிக்க கன்னிதேவி புறப்பட்ட இதே இடத்தில் இருந்து, ராவணனை அழிக்க ராமபிரான் புறப்பட்டுள்ளது சிறப்பு.

இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். தீர்த்தக் கரையில் நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும். காசி போகிறவர்களுக்கு நற்கதி கிடைக்க கன்னியாகுமரிக்கு வர வேண்டும் என்று கூறப்படுவதுண்டு.

புரட்டாசி நவராத்திரி விழா 10 நாட்கள், வைகாசி விசாகத் திருவிழா 10 நாட்கள் இங்கு சிறப்பாக நடைபெறும்.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு விஜயதசமியன்று வெளியான பதிவு

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன்

https://www.alayathuligal.com/blog/z2lt7re82mmwkk8243hldf6pjnk396

 
Previous
Previous

வரசித்தி விநாயகர் கோவில்

Next
Next

கொல்லூர் மூகாம்பிகை கோவில்